BREAKING NEWS

பங்காளிகள் கைவிரிப்பு - சகாக்களும் கழுத்தறுப்பு' - அரசின் தலைவிதி?

 


'பங்காளிகள் கைவிரிப்பு - சகாக்களும் கழுத்தறுப்பு' - 

அரசின் தலைவிதி இன்று நிர்ணயம்! பரபரப்புக்கு மத்தியில் கூடுகிறது  பாராளுமன்றம்!!   


ஜனாதிபதி கோட்டாபய  ராஜபக்ச தலைமையிலான அரச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாடு  முழுவதும் தன்னெழுச்சி போராட்டங்கள் வெடித்துள்ள பரபரப்பான சூழ்நிலையில், நாடாளுமன்றம் இன்று (05.04.2022) முற்பகல் 10 மணிக்கு கூடுகின்றது.   


நாடாளுமன்ற நுழைவாயில் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளை போராட்டக்காரர்கள் முற்றுகையிடலாம் என்ற அச்சத்தால், நாடாளுமன்றத்தை சூழ பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான விசேட பாதுகாப்பு கூட்டமொன்று சபாநாயகர் தலைமையில் நேற்று நடைபெற்றுள்ளது. 


மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தோடு ஆட்சியை முன்னெடுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச  தலைமையிலான மொட்டு அரசு கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. ஒரு புறம் மக்கள் கொந்தளிப்பு. மறுபுறத்தில் - நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இழப்பு என இரு முனை தாக்குதலை எதிர்கொண்டுள்ளது.    


ஏற்கனவே மூன்றிலிரண்டு பெரும்பான்மையை இழந்துள்ள அரசு, ஆட்சியை  தக்கவைத்துக்கொள்வதற்கு தேவையான சாதாரண பெரும்பான்மையையும் இன்று இழக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 


ஆளுங்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள்  பலர்  அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொள்ளக்கூடும் என்பதால் இன்றைய நாடாளுமன்ற அமர்வு அதி முக்கியத்துவம் மிக்கதாக கருதப்படுகின்றது. 


" இந்த அரசு பதவி விலக வேண்டும். மாறாக பதவியை தக்க வைத்துக்கொள்ள முற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆளுங்கட்சி உறுப்பினர்கள் 50பேர்வரை சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளனர்." - என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா நேற்று தகவல் வெளியிட்டார்.


அதேவேளை, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி - அரசிலிருந்து வெளியேறி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன சபையில் இன்று விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார்.


அத்துடன், விமல்வீரவன்ச, உதய கம்மன்பில உட்பட 11 கட்சிகளின் பிரதிநிதிகளும் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் அறிவிப்பை விடுக்கவுள்ளனர். மொட்டு கட்சி உறுப்பினர்கள் பலர் இன்று 11 கட்சிகளின் கூட்டணியில் இணையக்கூடும் என்பதால் அரசு சாதாரண பெரும்பான்மையை இழப்பது உறுதியென கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. 


" நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்புக்கு ஆட்சியை ஒப்படைக்க தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவித்தார்." - என நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.


 நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளை வளைத்போட்டு கூட்டரசு - இடைக்கால அரசு அமைக்கும் அரசின் முயற்சி தோல்வி கண்டுள்ளது. பிரதான எதிர்க்கட்சிகள் அமைச்சு பதவிகளை ஏற்பதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டன. இதற்கிடையில் நாடாளுமன்றத்தைக் கலைத்து, காபந்து அரசொன்றை அமைக்குமாறு மகாநாயக்க தேரர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். 


எனவே, அடுத்துவரும் 48 மணிநேரம் இலங்கை அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


அரசு எவ்வாறு சாதாரண பெரும்பான்மையை இழக்கும் என்பது தொடர்பில் ஏப்ரல் 03 ஆம் திகதி பதவிட்டிருந்தேன். அந்த அட்டவணை - புதிதாக ஏற்பட்ட மாற்றங்களுடன் பதிவிடப்படுகின்றது.  


 நாடாளுமன்றத்தில் அரசாங்கம் வசம் -  


✍️ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன -117

✍️ஈபிடிபி - 02  

✍️தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி - 01

✍️அரவிந்தகுமார் - 01

✍️டயானா - 01    - 122 ஆசனங்களே உள்ளன.  


அரசாங்கத்துக்கான ஆதரவை விலக்கிக்கொள்ள 09 பேர் தயார் நிலையில் இருக்கின்றனர்.  


1. சுசில் பிரேமஜயந்த 

2. விஜயதாச ராஜபக்ச  

3. சந்திம வீரக்கொடி 

4. விதுர விக்ரமநாயக்க

5. பிரேமநாத் சீ தொலவத்த

6. நிமல் லான்சா 

7. ரொஷான் ரணசிங்க 

8. சுதர்ஷினி

9. பிரியங்கர


✍️122 - 9 = 113


✍️ஆக -  ஆளுங்கட்சி வசம் தற்போது 113ஆசனங்களே உள்ளன. இந்நிலையில் அரசிலிருந்து வெளியேற தயார் என்ற அறிவிப்பை இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் விடுத்துள்ளது.


✍️ 113-2 = 111   ( அரசு சாதாரணை பெரும்பான்மையை (113 இழந்துவிட்டது)


✍️எனவே, டக்ளஸ்,  பிள்ளையான் ஆகியோர் ( 2+1 = 3) அர சுக்கான ஆதரவை விலக்கிக்கொண்டால் (111- 3 =  108) நாடாளுமன்றத்தில் அரசுக்கான ஆதரவு மேலும் குறையும்.  


✍️மொட்டு கட்சி உறுப்பினர்கள் சிலர் , 11 கட்சிகளின் கூட்டணியுடன் இணைவதால் அரசுக்கான ஆதரவு 100 ஆசனங்களுக்கும் குறைவாகலாம். 


✍️ சிலவேளை, அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (4), அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (02), அலி சப்ரி (புத்தளம்) (01) ஆகியோரின் ஆதரவை பெற்றால் அல்லது ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் எதிரணி எம்.பிக்களை வளைத்து போட்டு ஆட்சியை தக்க வைக்க முற்பட்டால் கடும் எதிர்ப்புகள் கிளம்பும்.  தற்போதைய சூழ்நிலையில் கட்சி தாவல்கள் என்பது சாத்தியப்படுமா என்பது சந்தேகமே!    


✍️கடந்த பொதுத்தேர்தலில் போட்டியிட்டு 145 ஆசனங்களை மொட்டு கட்சி பெற்றது. பங்காளிகளின் ஆதரவுடன் 150 இற்கு மேற்பட்ட ஆசனங்களுடன் பலமான ஆட்சியை நிறுவியது.  அந்த ஆட்சி கட்டமைப்பே இன்று ஆட்டம் கண்டுள்ளது.


ஆர்.சனத்

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar