BREAKING NEWS

நல்லாட்சி அரசாங்கத்தில் முஸ்லிம்களின் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட போது அன்றைய அரசாங்கத்திற்கு எதிராக முஸ்லிம் கட்சிகள் எதுவும் ஆர்ப்பாட்டங்களை நடத்தவில்லை.

 அரசியல் நகர்வு சமூகத்திற்கு துரோகம் செய்வதாக அமைந்துவிடக் கூடாது.

++++++++++++++++++++++

இன்றைய அரசாங்கத்தின் பொருளாதார கொள்கையால் நாடு பொருளாதார ரீதியில் பின்னடைவு அடைந்துள்ளது. இதனால் பொருட்களுக்கு நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார். இதனால், பெரும்பான்மையினத்தவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக நாளாந்தம் ஆர்ப்பாட்டங்களை செய்து கொண்டிருக்கின்றார்கள். இன்றைய ஆட்சியாளர்களுக்கு வாக்களித்த பெரும்பான்மையின மக்கள் பலமாக எதிர்ப்புக் காட்டிக் கொண்டிருக்கின்ற நிலையில், நாங்களும் அரசாங்கத்தின் கொள்கையை எதிர்க்கின்றோம் என்று காட்டுவதற்கு எந்தவொரு முஸ்லிம் கட்சிக்கும் தேவையற்ற ஒன்றாகும். அவ்வாறு செயற்படுவது, அதற்காக மக்களை தூண்டி விடுவது புத்திசாதுரியமான நடவடிக்கையல்ல. ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் என்பதை விட அதற்கு முதலே முஸ்லிம்களின் மீது இனவாத தாக்குதல்களும், குற்றச்சாட்டுக்களும் அரசியல் தேவைக்காக பௌத்த இனவாதிகளினால் முன் வைக்கப்பட்டன. 

முஸ்லிம்களின் மீது  பௌத்த இனவாதிகள் முன் வைத்த குற்றச்சாட்டுக்களின் உண்மையில்லை என்பதனை சிங்கள மக்கள் உணரத் தொடங்கியுள்ளார்கள். அவர்கள் தமது நிலைப்பாட்டை மீள்பரிசீலனை செய்து கொண்டிருக்கின்றார்கள். ஆகவே, இத்தகையதொரு மாற்றத்தை முஸ்லிம்கள் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாங்கள் நாட்டுப்பற்றாளர்கள். ஆட்சியாளர்களுக்கு எதிரானவர்கள் அல்லர். எங்களை எங்களின் மத கலாசார விழுமியங்களின் அடிப்படையில் வாழ்வதற்கு அனுமதிக்க வேண்டும். அதுவே எமது நோக்கமாகும். ஏனைய பெரும்பான்மையினர் போன்று எங்களையும் நடத்த வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும். ஆதலால், தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்குரிய திட்டங்கள் வகுக்க வேண்டும். ஆதலால், மு.காவினர் 01ஆம் திகதி மேற்கொள்ளவுள்ள அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்ட பேரணியை மீள்பரிசீலனை செய்வதே முஸ்லிம் சமூகத்திற்கு செய்யும் அரசியல் பணியாகும். நல்லாட்சி அரசாங்கத்தில் முஸ்லிம்களின் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட போது அன்றைய அரசாங்கத்திற்கு எதிராக முஸ்லிம் கட்சிகள் எதுவும் ஆர்ப்பாட்டங்களை நடத்தவில்லை. அடங்கியே கிடந்தார்கள். ஆட்சியில் பங்காளி என்றால் ஒரு சிந்தனையும், எதிராளி என்றால் இன்னுமொரு சிந்தனையும் இருக்க முடியாது. முஸ்லிம்களின் பிரச்சினைகள் குறித்து சர்வதேசம் பேசும் நிலையை உருவாக்க முடியாத தோல்வி அரசியலையே முஸ்லிம் சமூகத்தின் அரசியலாக காட்டிக் கொண்டு இருக்கின்றமையை முஸ்லிம்கள் மறந்துவிடக் கூடாது. எமது எந்தவொரு அரசியல் நகர்வும் சமூகத்திற்கு துரோகம் செய்வதாக அமைந்துவிடக் கூடாது. சமூகத்தை நெருக்கடியில் தள்ளுவதாக இருக்கக் கூடாது. எமது நடவடிக்கைகள் ஊடாக வீழ்ந்து கொண்டிருந்த அதிகார தரப்பினரின் செல்வாக்கை அதிகரிப்பதற்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கவும் முடியாது. பகுத்தறிவுக்கு வேலை கொடுங்கள். 

M.Sahabdeen

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar