பிரேத பரிசோதனையின் போது பிசிஆர் பரிசோதனை தேவையில்லை என அரசாங்கம் சுற்றறிக்கை விடுத்திருப்பதை ஐக்கிய காங்கிரஸ் கட்சி பெரிதும் வரவேற்பதுடன் இது விடயம் ஜனாஸாக்களை விரைவாக அடக்கம் செய்யும் வகையில் இலகுவாக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
இது பற்றி ஐக்கிய காங்கிரசின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மேலும் தெரிவித்துள்ளதாவது,
வரலாற்றில் ராஜபக்ஷ அரசை போன்ற முஸ்லிம்களுக்கு சாதகமான அரசு எதுவும் இருக்கவில்லை என்பதை பலரும் இன்னமும் புரியவில்லை. ஆனாலும் உண்மை அதுதான்.
கொரோனா நாட்டில் பரவிய போது கொரோனா ஜனாஸா எரிப்பு நடந்தது. அது கொரோனா பற்றிய உலகளாவிய அச்சம் காரணமாக நடந்தது. பின்னர் கொரோனா வைரஸ் நீர் மூலம் பரவாது என்பது உறுதிப்படுத்தப்பட்டதும் முஸ்லிம்களின் உணர்வை மதித்து அரசு பிடிவாதமாக இருக்காமல் கொவிட் ஜனாஸாக்களை ஓட்டமாவடியில் அடக்கம் செய்ய அனுமதித்தது.
இப்போது பிரேத பரிசோதனையில் pcr தேவையில்லை என அரசு அறிவித்திருப்பதன் மூலம் ஜனாஸாக்களை விரைவாக அடக்கம் செய்யலாம் என்பதையும் சொந்த ஊர்களிலேயே அடக்கம் செய்யலாம் என்பதற்கான மறைமுக அனுமதியும் கிடைத்துள்ளது. இந்த சாதகத்தை நாம் புத்திசாலித்தனமாக பாவிக்க வேண்டும்.
எம்மை பொறுத்த வரை கடந்த ரணில், சஜித் ஆட்சியில் முஸ்லிம் சமூகம் அனுபவித்த கொடுமைகளை போன்று பெரும் கொடுமைகள் எதையும் இந்த அரசின் இந்த மூன்று வருட ஆட்சியில் அனுபவிக்கவில்லை என்பது உண்மையாகும். இத்தனைக்கும் மிக சொற்பமான முஸ்லிம்களே இந்த அரசு வர ஒத்துழைத்தார்கள்.
ஆகவே நல்லது செய்வோரை ஆதரித்து நன்றியுடன் இருப்பதன் மூலமே மேலும் பல நன்மைகளை மனிதர்கள் பெற முடியும்.
Mubarak Abdul Majeed
ஐக்கிய காங்கிரஸ் கட்சி.
17.2.2022
Post a Comment