முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் சகல அரபுக் கல்லூரிகளுக்கும் விடுத்துள்ள அறிவுறுத்தல்
- ஐ. ஏ. காதிர் கான் -
( கம்பஹா மாவட்ட நிருபர் )
அரபுக் கல்லூரிகளினால் வழங்கப்படும் அனைத்து ஆவணங்களும், இலங்கையின் அரச கரும மொழிகளான சிங்களம், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் அமையப் பெற்றிருக்க வேண்டுமென, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அரபுக் கல்லூரிகளின் நிர்வாகங்களை அறிவுறுத்தியுள்ளது.
மேலும் Diploma, Higher Diploma, Higher Studies, Higher Education, Degree, Licentiate போன்ற வாசகங்கள், இலங்கை பல்கலைக் கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரத்தின் அடிப்படையில் மாத்திரமே பயன்படுத்தப்படுவதால், குறிப்பிட்ட வாசகங்கள் மத்ரஸாவினால் வழங்கப்படும் ஆவணங்களில் உள்ளடங்கப்படுவது தவிர்க்கப்படல் வேண்டுமெனவும் கோரியுள்ளது.
இது தொடர்பில், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இப்றாஹிம் அன்ஸார், நாட்டிலுள்ள சகல அரபுக் கல்லூரிகளுக்கும் MRCA/R/08/01/01 எனும் இலக்க சுற்று நிருபம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார்.
அந்த சுற்று நிருபத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அரபுக் கல்லூரிகளினால் வழங்கப்படும் ஆவணங்கள், உரிய விதிமுறைகளுக்கு அமைவாக உட்படாவிட்டால், திணைக்களத்தினால் குறித்த ஆவணங்கள், சான்றிதழ்கள் மற்றும் கல்விச் சான்றிதழ்கள் உறுதிப்படுத்தப்பட மாட்டாது.
கல்லூரிகளினால் வழங்கப்படும் சான்றிதழ்களில், ஒப்பமிடுபவர்கள் தொடர்பிலான பெயர், பதவி மற்றும் மாதிரி ஒப்பங்கள் திணைக்களத்திற்கு வழங்கப்படல் வேண்டும். அத்துடன், இவற்றில் ஏதும் மாற்றங்கள் ஏற்படும் போது அவ்வவ்போது அறிவிக்க வேண்டும்.
கல்லூரிகளினால் தயாரிக்கப்படும் சான்றிதழ்களின் பிரதி ஒன்றினை மாதிரி சான்றிதழ் எனக் குறிப்பிட்டு, திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.
சான்றிதழ்களின் மாதிரிகள் மாற்றப்படுமாயின் திணைக்களத்திற்கு அறிவிக்க வேண்டும்.
கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டது முதல் 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதி வரை பட்டம் பெற்றவர்களின் முழுப்பெயர், முகவரி, தேசிய அடையாள அட்டை இலக்கம் போன்ற தகவல்கள், ஆண்டின் அடிப்படையில் கல்லூரிகளினால் சான்று படுத்தி, திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.
அத்துடன், கல்லூரிகளினால் வழங்கப்படும் சான்றிதழ்களில் (மௌலவி சான்றிதழ்/ ஹிப்ழு சான்றிதழ்) என, பட்டத்தின் தன்மை தெளிவாகக் குறிப்பிடப்படல் வேண்டும்.
இதேவேளை, கல்லூரிகளில் கற்பிக்கப்படும் பாடத்திட்டத்தின் பிரதியொன்றும், திணைக்களத்திற்கு வழங்கப்படல் வேண்டும் என்றும், இந்த விதி முறைகள் கண்டிப்பாகப் பின்பற்றப்படும் என்றும், பணிப்பாளர் இப்ராஹிம் அன்சார், அந்த சுற்று நிருபத்தில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
( ஐ. ஏ. காதிர் கான் )
08/01/2022
Post a Comment