பிரிவினைவாதிகளுக்கும், இனவாதிகளுக்கும், மதவெறியாளர்களுக்கும் தாம் அஞ்சவில்லை என தெரிவித்த எதிர்க் கட்சித் தலைவர், இனவாதம், மதவாதம்,பிரிவுனைவாதங்கள் இந் நாட்டிலிருந்து இல்லாதொழிக்கப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரத்தின் ஏற்பாட்டில் நுவரெலியா சினோசிடா மைதானத்தில் இன்று (16) இடம்பெற்ற தைப்பொங்கல் விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவினால் நாட்டில் முதன் முறையாக தோட்டத் தொழிலாளர் சமூகத்திற்கு குடியுரிமை வழங்கி பிரஜாவுரிமைக்கான கனவை நனவாக்கினார் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களைப் போன்று துன்பப்படும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி அவர்களை ஆற்றல் மிகு குழுவாக உருவாக்கும் பொறுப்பை தாம் ஏற்றுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
மாளிகைகளில் எரிவாயு சிலிண்டர்கள் வெடிக்காது எனவும், பால் மாவில் அவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றும்,ஒரு தட்டில் எல்லாம் அவர்களுக்கு கிடைக்கும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இன்று உர வரிசையில் நிற்பதும், எரிவாயு சிலிண்டர் வெடித்து தவிப்பதும், இருளில் மூழ்குவதும் இந் நாட்டின் அப்பாவி மக்களே என்றும் தெரிவித்தார்.
தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் எதிர்கால அரசாங்கத்தின் நோக்கம் உள்ளிட்ட தோட்டத் தொழிலாளர் சாசனம் ஒன்றை ஐக்கிய மக்கள் சக்தி தற்போது உருவாக்கி வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
Post a Comment