சிறந்த ஆளுமைமிக்க மூத்த உலமா ஒருவரை இழந்து தவிக்கிறோம்
- முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா
( மினுவாங்கொடை நிருபர் )
சிறந்த ஆளுமை மிக்க மூத்த உலமா ஒருவரை இன்று இழந்து தவிக்கிறோம். இது எனது மனதை மிகவும் ஆழமாக உறுத்துகிறது என, முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா, தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அந்த அனுதாபச் செய்தியில் அவர் மேலும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சங்கைக்குரிய அப்துல் ஹமீத் பஹ்ஜி ஆலிம் அவர்கள், தனது மார்க்க உபந்நியாசங்களை அடுத்தவர்கள் மிகச் சிறந்தவகையில் படிப்பினை பெறும் விதத்தில் புரிவார்கள். குறிப்பாக, முஸ்லிம் இளைஞர் சமுதாயத்தை சாந்தி, சமாதானம் போன்ற கருத்துக்களை உள்ளடக்கி வழி நடத்தக்கூடியதாக அன்னாருடைய போதனைகள் அமையப் பெற்றிருந்தமை, அல்லாஹ் அன்னாருக்கு வழங்கிய மாபெரும் அருட் கொடை எனக்கூறலாம்.
மிக நீண்ட காலமாக அன்னார் கொழும்பு உம்மு ஸவாயாவில் ஒரு இமாமாகப் பணியாற்றியிருப்பது, அன்னாருடைய மார்க்க உயர் நிலையையும் விழுமியங்களையும் எடுத்துக் காட்டுகிறது.
பல வருட காலம், மார்க்கப் பணி புரிந்திருக்கிறார்கள். எங்கும் எப்பொழுதும் அனைவருடனும் அன்பாகவும் புன் முறுவலுடனும் பழகுவார்கள். சிறு பிள்ளைகள் முதல் பெரியோர் வரை சரி சமமாக நடந்து கொள்ளும் ஒரு சிறந்த குண நல இயல்புள்ளவராக அன்னாரைக் காணலாம்.
இன்று, அன்னாரை இழந்து தவிக்கும் ஷாதுலிய்யா தரீக்கா உள்ளிட்ட அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கும், அன்னாரது குடும்ப உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அன்னாருக்கு மேலான " ஜன்னதுல் பிர்தெளஸ்" எனும் சுவர்க்கம் கிடைக்க வேண்டும் என, எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இரு கரமேந்திப் பிரார்த்திக்கின்றேன்.
( ஐ. ஏ. காதிர் கான் )
09/01/2022
Post a Comment