BREAKING NEWS

සැළසුම්ගම ගම්වාසින්ට නැවුම් බලාපොරත්තුවක්

ஆட்சி மாற்றத்துக்கான பொதுக் கூட்டணி

 


ஆட்சி மாற்றத்துக்கான பொதுக் கூட்டணி ; முன்னாள் ஆளுநர்கள் அசாத்சாலி , மைத்திரி, கீர்த்தி ஐ.தே.க.வுடன் சந்திப்பு..!


நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்றினை கொண்டுவருவதற்கான

 பொதுவான கூட்டணியொன்றினை அமைப்பது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

முன்னாள் ஆளுநர்களான அசாத் சாலி, ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, ரஞ்சித் கீர்த்தி தென்னகோன் உள்ளிட்டோர் இதற்கான பேச்சுவார்த்தைகளை பிரதான கட்சிகளுடன் ஆரம்பித்துள்ளனர். 

இந்த பேச்சுக்களை நடத்தும் குழுவில் சிரேஷ்ட சட்டத்தரணிகளான சிரால் லக்திலக, குணரத்ன வன்னிநாயக்க உள்ளிட்ட சட்டத்தரணிகளும் உள்ளடங்குகின்றனர்.

இந்நிலையில் நேற்று ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தவுக்கு சென்றுள்ள இந்த குழுவினர், பொதுவன கூட்டணி அமைப்பது தொடர்பில் அக்கட்சியுடன் கலந்துரையாடியுள்ளனர். 


இதன்போது பொது வேலைத் திட்டம் ஒன்றுக்கான திட்ட வரைபொன்றினை அவர்கள் கையளித்துள்ளனர். 


ஐ.தே.க.‍ேபிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, செயலர் பாலித்த ரங்கே பண்டார ஆகியோர் இந்த கலந்துரையாடலில் ஐ.தே.க. சார்பில் பங்கேற்றுள்ளதுடன், கலந்துரையாடப்பட்ட விடயங்கள் மற்றும் திட்ட வரைபை தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் சமர்ப்பிப்பதாக அவர்கள் அறிவித்துள்ளதாக அறிய முடிகிறது.


இந் நிலையில் பொதுவான கூட்டணியை அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ள முன்னாள் ஆளுநர்களைக் கொண்ட இந்த விஷேட குழு, அடுத்து வரும் நாட்களில் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்டவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக அறிய முடிகிறது.

ஐக்கிய தேசிய கட்சியினரால் கடந்த 1994 இற்கு பிறகு இந்த நாட்டில் ஜனாதிபதி ஒருவரை உருவாக்க முடியாமலே போகிவிட்டது.

 


இந்த நாட்டை சஜித் பாரமெடுக்க தயாராக இருக்கிறார் : இனவாதமில்லாத அரசை உருவாக்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளது - பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார 


நூருல் ஹுதா உமர் 


இந்த அரசாங்கம் அப்பாவி மக்களை பற்றி சிந்திப்பதில்லை. ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தை பாரமெடுக்க எப்போதும் தயாராக உள்ளோம். அதன் பின்னர் மக்களின் பிரச்சினைகளை சுமூகமாக தீர்த்து வைப்போம். இந்த நாட்டை ஊழலில்லாமல் ஆட்சிசெய்ய ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாசாவினால் முடியும். இனவாதத்தை கிளறி ஆட்சியை கைப்பற்றிய இந்த அரசாங்கம் கொலை, கொள்ளைகளை செய்துவருகிறது என முன்னாள் பிரதியமைச்சரும், குருநாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினருமான நளின் பண்டார தெரிவித்தார். 


சம்மாந்துறை பிரதேச விவசாயிகளின் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஒன்று ஐக்கிய மக்கள் சக்தியின் சம்மாந்துறை தேர்தல் தொகுதியின் பிரதம அமைப்பாளர் எம்.ஏ. ஹஸனலியின் தலைமையில் சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் இன்று (19) மாலை இடம்பெற்றபோது அந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

ஐக்கிய தேசிய கட்சியினரால் கடந்த 1994 இற்கு பிறகு இந்த நாட்டில் ஜனாதிபதி ஒருவரை உருவாக்க முடியாமலே போகிவிட்டது. 1994 இற்கு பின்னர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஸ, மைத்திரிபால சிறிசேன, கோத்தாபாய ராஜபக்ஸ போன்றவர்கள்தான் ஜனாதிபதியாக வந்தார்கள். அவர்கள் விவசாயிகளுக்கு சரியான வசதிகளை செய்துகொடுக்க வில்லை. ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவினால் எவ்வளவு முயன்றும் எமது நாட்டின் ஜனாதிபதியாக வரமுடியாமல் போனது. பிரதமராகத்தான் இறுதியாக அவரால் வர முடிந்தது. ஐக்கிய தேசிய கட்சியின் சார்பிலான ஜனாதிபதியாக இருந்த பலரும் விவசாயிகளுக்கு செய்த நல்ல விடயங்களை போன்று அவரால் கூட கடந்த காலங்களில் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு ஒழுங்கான தீர்வை முன்வைக்க முடியாமல் போனது.  


பசளை, கிருமிநாசிகள் என எதுவுமில்லாது விவசாயிகள் கஷ்டப்படுகின்றனர். இந்த பிரச்சினைகளுக்கு காரணம் கோத்தாபய இந்த நாட்டின் ஜனாதிபதியானதே. அவர் முன்வைக்கும் திட்டங்கள் யாவும் மூடத்தனமாக உள்ளது. நாட்டில் இப்போது எரிவாயு,பால்மா, மரக்கறி, எரிபொருள், டொலர் என எதுவுமில்லை. வரிசையில் நின்று மக்கள் அத்தியாவசிய பொருள் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயம் என்பது நெற்செய்கை மட்டுமல்ல. மரக்கறி முதல் ஏற்றுமதி பயிர்கள் என எல்லாம் அதில் அடங்கும். எதிர்வரும் புதுவருடத்தில் இருந்து சோற்றுக்கு மிகப்பெரிய பஞ்சம் ஏற்படும். சீனி முதல் பல்வேறு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்புள்ளது. கடந்த காலங்களில் சீனியில் பாரிய மோசடி நடந்தது. இப்போது விவசாயிகளை காட்டி இந்த அரசாங்கம் கடுமையாக கொள்ளையடிக்கிறது. 


இலங்கையில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் ஒற்றுமையாகவே வாழ்கிறார்கள். அவர்களின் ஒற்றுமையை சீரழிப்பது அரசியல்வாதிகளே. ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச மக்களை ஒற்றுமையாக வாழச்செய்ய பல்வேறு திட்டங்களை வைத்துள்ளார். விவசாயிகளுக்கு தேவையானவற்றை வழங்க ஐக்கிய மக்கள் சக்தி அரசினால் முடியும். அதனால் ஐக்கிய மக்கள் சக்தியை பலப்படுத்த எல்லோரும் எங்களின் விவசாய அமைப்புக்களுடனும் கட்சியுடனும் இணைந்து பயணியுங்கள் என்று அழைப்பு விடுத்தார். 


இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை முன்னாள் தவிசாளர் சந்திரதாச கலபதி உட்பட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டிருந்ததுடன் கலந்து கொண்ட விவசாயிகள் தமது விவசாயம் சார்ந்த பிரச்சினைகள், அரசினால் வழங்கப்படும் நிவாரணங்களில் உள்ள குளறுபடிகள், சோதன பசளையினால் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் கருத்து தெரிவித்தனர்.

வட மாகாண உள்ளூராட்சி மன்றத் தலைவர்களுக்கான இரு நாள் வதிவிட பயிற்சி

 


வட மாகாண உள்ளூராட்சி மன்றத் தலைவர்களுக்கான இரு நாள் வதிவிட பயிற்சிச் செயலமர்வின் முதல் நாள் நிகழ்வு, இன்று (18) காலை, குக்குலே கங்கை "லயா லெஷர்" கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது


( மினுவாங்கொடை நிருபர் )


   வட மாகாண உள்ளூராட்சி மன்றத் தலைவர்களுக்கான இரு நாள் வதிவிட பயிற்சிச் செயலமர்வின் முதல் நாள் நிகழ்வு, இன்று (18) காலை, குக்குலே கங்கை "லயா லெஷர்" கேட்போர் கூட மண்டபத்தில் ஆரம்பமானது.

   இலங்கை ஆளுகை நிறுவகம் ஏற்பாட்டில், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சின் செயலாளர் டப்ளியூ.எம்.எம்.பி. வீரசேகரவின் தலைமையில், உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பிலான இலங்கை உள்ளூர் ஆளுகை நிறுவகத்தின் பணிப்பாளர் (பி.நி.அ.) கலாநிதி சுரதிஸ்ஸ திசாநாயக்க வழிகாட்டலில், இந்த இருநாள் வதிவிட செயலமர்வு இடம்பெறுகிறது.

   இந்த செயலமர்வில், வட மாகாணத்தைப் பிரதி நிதித்துவப்படுத்தும் வகையில், யாழ்ப்பாண நகர பிதா உள்ளிட்ட வட மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் 50 மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். 

   ஐ.நா. அபிவிருத்தி உதவித் திட்டத்தின் கீழ், ஐரோப்பிய ஒன்றிய நிதி உதவித் திட்டத்தின் கீழ், இந்த இருநாள் வதிவிட செயலமர்வு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

   செயலமர்வின் ஆரம்ப நாள் வரவேற்புரையை, இலங்கை உள்ளூர் ஆளுகை நிறுவக பணிப்பாளர் கலாநிதி சுரதிஸ்ஸ திசாநாயக்க நிகழ்த்தினார். அமைச்சின் செயலாளர் வீரசேகர, பிரதிநிதி ஆர். பெரேரா ஆகியோர் இங்கு உரையாற்றினர். உள்ளூராட்சி மன்றங்களின் சட்டச் சிக்கல்கள் பற்றிய கலந்துரையாடலை, நிறுவகத்தின் சிரேஷ்ட வளவாளர் காமினி குணசேகர நடத்தினார்.

   கொவிட் - 19 தொற்றுப் பரவலுக்குப் பின்னர், உள்ளூராட்சி மன்றங்களின் சவால்களை மேற்கொள்ளல், புதிய வருமான வழி முறைகளை இனங்காணல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

   இலங்கை உள்ளூர் ஆளுகை நிறுவகம் (UNDP/CDLG) கருத்திட்டத்தில் அமுல்படுத்திய நிகழ்ச்சித் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு குறித்தும் இங்கு ஆராயப்பட்டன.

   இரண்டாம் நாளான நாளை 19 ஆம் திகதி, வியாபாரத் திட்டங்களைத் தயார் செய்யும் செயன்முறை நடவடிக்கைகள், வரைவு செய்யப்பட்ட வியாபாரத் திட்டங்களை அந்தந்தக் குழுக்கள் சமர்ப்பித்தல் மற்றும் அவை பற்றி மீளாய்வு செய்தல் உள்ளிட்ட விடயதானங்கள் இடம்பெறவுள்ளன.

   இந்த வதிவிட பயிற்சிச் செயலமர்வின் நான்காம் கட்ட அடுத்த செயலமர்வு, எதிர்வரும் 25 ஆம், 26 ஆம் திகதிகளில் கிழக்கு மாகாணத்தைப் பிரதி நிதித்துவப்படுத்தும் வகையில் இடம்பெறவுள்ளதோடு, இதன் முதலாம் செயலமர்வு வடமேல் மாகாணத்திலும், இரண்டாம் செயலமர்வு ஊவா மாகாணத்திலும் சிறப்பாக இடம்பெற்றதாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


( ஐ. ஏ. காதிர் கான் )

18/12/2021

அமைச்சர்களை பதவி நீக்க வேண்டும் - பசில் வேண்டுகோள்

 


ரசின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் அமைச்சர்களை பதவி நீக்க வேண்டும் - பசில் வேண்டுகோள் - அதன் பின்னரே நாடு திரும்புவார்


அடுத்த வருட ஆரம்பத்தில் அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளதாகவும் அதன் பின்னரே அமெரிக்கா விற்கு தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டுள்ள நிதியமைச் சர் நாடு திரும்புவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிதியமைச்சர் இந்த விடயம் குறித்த தனது உறுதியான நிலைப்பாட்டை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் தெரிவித்த பின்னரே அமெரிக்கா சென்றுள்ளார்.


மக்கள் மத்தியில் பிரபல்யமாவதற்காக அரசாங்கத்தின் செயற்பாடுகளிற்கு முட்டுக்கட்டை விதிக்கும் அமைச்சர் களுடன் இணைந்து பயணிப்பது கடினமான விடயம் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.


குறிப்பாக நாடு தற்போது உள்ள பொருளாதார நிலையில் அரசாங்கம் மக்களின் ஆதரவு கிடைக்காத பல நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டியநிலையில் உள்ளது இந்த சூழ்நிலையில் அரசாங்கத்தின் கூட்டுப்பொறுப்பை ஏற்பதற்கு பதில் அதனை விமர்சிப்பவர்களுடன் இணைந்து செயலாற்றுவது கடினம் என அவர் தெரிவித்துள்ளார்.


அவ்வாறான அமைச்சர்களை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என அவர் ஜனாதிபதி, பிரதமரை கேட்டுக்கொண்டுள்ளார்.


அவ்வாறான அமைச்சர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் பயனில்லை  எனவும் பசில் ராஜபக்ஷ ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் தெரிவித்துள்ளார்.

பேச்சு மூச்சு இன்றி இருக்கிறார் சாணக்கியன் எம்.பி !

 


பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட்டின் விவாத அழைப்பு : பேச்சு மூச்சு இன்றி இருக்கிறார் சாணக்கியன் எம்.பி !


மாளிகைக்காடு நிருபர் 

வரலாறு தெரியாமல் பேசும் சாணக்கியன் என்னுடன் பொதுவெளியில் நேரடி விவாதத்திற்கு வருவாரா..? என்று முன்னாள் கிழக்கு மாகாண சபை முதலமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஹாபீஸ் நஸீர் அஹமட் கடிதமொன்றினூடாக அழைப்பு விடுத்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு இது தொடர்பில் ஹாபிஸ் நசீர் எம்பி எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:


கடந்த 10ஆம் திகதி இடம்பெற்ற வரவுசெலவுத் திட்ட விவாதத்தின் போது "ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம்களுக்கும் காணிப்பிரச்சினை இல்லை. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்கள்  பிள்ளையானுடன் சேர்ந்து காணிப்பிரச்சினை தொடர்பில் நாடகம் ஆடுகிறார்கள்" என்று தாங்கள் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பிலேயே உங்களுடன் பகிரங்க விவாதத்தை நடாத்த நான் தயாராக இருக்கின்றேன்.

மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் காணிகளுக்கு நடைபெற்ற, நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற  அநீதிகள் குறித்தும் சட்டத்திற்கு முரணாக முஸ்லிம் பிரதேச செயலகங்களின் காணி எல்லைகள் கபளீகரமாக பறிக்கப்பட்டது தொடர்பிலும்,  அரச அதிகாரிகள் சிலர் முஸ்லிம் பிரதேசங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பில் மேற்கொண்ட ஓரவஞ்சனையான  செயற்பாடுகள், முஸ்லிம்கள் இழந்த காணிகள், இழந்த கிராமங்கள் மற்றும் முஸ்லிம் பிரதேச காணிகள் கபளீகரம் செய்யப்பட்டமை தொடர்பிலுமே உங்களுடன் பகிரங்க விவாதம் ஒன்றை நடாத்த இந்த அழைப்பு விடுக்கின்றேன்.


மட்டக்களப்பு மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் மாவட்ட முஸ்லிம்களுக்கு காணி தொடர்பில் இழைக்கப்பட்ட அநீதிகளை  இந்நாட்டு மக்களுக்கு வெளிக்கொணர வேண்டிய தேவை மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் எனக்கு ஏற்பட்டுள்ளது. இவ்விடயங்கள் குறித்து உங்களுடைய அறியாமையை உங்களுக்கு தெளிவுபடுத்துவதற்கும் இது தொடர்பாக திறந்தவெளியில் உங்களுடன் விவாதிக்கும் வகையில்   உங்களது சம்மதத்தை நான் எதிர்பார்ப்பதுடன் அதற்குரிய இடம்,  பொருத்தமான நேரம் தொடர்பில் இருவரும்  கலந்தாலோசித்து இந்த பகிரங்க விவாதத்தை நடத்த வேண்டும் என வேண்டுகின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரியந்த குமாரவை காப்பாற்ற போராடிய மாலிக்கை இலங்கை பாராளுமன்றத்துக்கு அழைத்து வரவேண்டும்



 பிரியந்த குமாரவை காப்பாற்ற போராடிய மாலிக்கை இலங்கை பாராளுமன்றத்துக்கு அழைத்து வரவேண்டும் ; பொதுஜன பெரமுன சபாநாயகரிடம் கோரிக்கை


ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)


பிரியந்த குமார கொலை செய்யப்படும்போது, 

தனது உயிரையும் துச்சமென நினைத்து பிரியந்தவுக்காகப் போராடிய பாகிஸ்தான் பிரஜை மாலிக் அட்னான்னை, இலங்கைப் பாராளுமன்றத்துக்கு அழைத்து வரவேண்டும் என ஆளுங்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தது.


பாராளுமன்றத்தின் நேற்றைய வெள்ளிக்கிழமை, நிதி அமைச்சின் விவாதத்தில் உரையாற்றிய வேளையில் ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான ஜயந்த கெட்டகொட மேற்கண்டவாறு கோரிக்கையை முன்வைத்தார்.


அவர் மேலும் கூறுகையில்,


பாகிஸ்தானில் வைத்து இலங்கையரான பிரியந்த குமார படுகொலை செய்யப்பட்டிருந்தார். பிரியந்த குமாரவை கொலைக்காரர்களிடமிருந்து பாதுகாக்க தனது உயிரையும் துச்சமென மதித்து போராடிய அந்நாட்டு பிரஜையான மாலிக் அட்னான்னுக்கு, அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்ட பாக்கிஸ்தான் அரசாங்கம் கௌரவித்துள்ளது.


எனவே மாலிக் அட்னான்னை இலங்கைப் பாராளுமன்றத்துக்கு அழைத்து அரசாங்கம் அவரை கௌரவிக்க வேண்டும் எனவும் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.


இலங்கைப் பாராளுமன்றத்துக்கு அழைத்து கௌரவிக்க வேண்டும் எனவும் இதன்போது சபையில் கோரிக்கை விடுத்தார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் மத்தியில் கௌரவ பிரதமர்-!

 


ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களின் மத்தியில் கௌரவ பிரதமர்-!


பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு கோரி பாராளுமன்ற வளாக நுழைவாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்திக்கு சென்ற கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (06) முற்பகல் அவர்களுடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.


ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்யும் போது இதனைவிட அதகளவிலான உறுப்பினர்களை ஈடுபடுத்த வேண்டும் என கௌரவ பிரதமர் இதன்போது ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.


வரலாற்றில் தன்னுடன் இணைந்து அரசியல் போராட்டங்களில் ஈடுபட்ட உறுப்பினர்களை பார்த்த கௌரவ பிரதமர், கடந்த காலங்களில் இவ்வாறான போராட்டங்களில் ஈடுபட்ட விதம் குறித்து அவர்களுடன் நினைவுகளை பகிர்ந்துக்கொண்டு அவ்விடத்திலிருந்து விலகிச் சென்றார்.


ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன, இம்தியாஸ் பாகிர் மாகர், பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட பலர் இவ்வாறு கௌரவ பிரதமருடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.


பிரதமர் ஊடக பிரிவு

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar