இராவணனிடம் விமானம் இருந்ததாகவும், அதில் இந்தியாவுக்கு பறந்து வந்ததாகவும் ராமாயணத்தில் உள்ள குறிப்புகள் குறித்து இலங்கை அரசு ஆய்வு மேற்கொள்ள உள்ளது. இதில், இந்தியாவும் இணைந்து பங்கேற்க அந்நாட்டு ஆய்வாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இலங்கையின் அரசனான இராவணன் விமானம் வைத்து இருந்ததாகவும், அதில் இந்தியாவுக்கு பறந்து வந்து சீதையை கடத்தி சென்றதாகவும், இராமாயணத்தில் குறிப்புகள் உள்ளன. இராமாயணத்தை புனையப்பட்ட இதிகாசம் என சிலர் புறந்தள்ளினாலும், இராவணன் என்ற அரசன் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இலங்கையில் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதையடுத்து, இராவணன் ஆட்சியின் போது இலங்கையில் விமானங்கள் மற்றும் விமான நிலையங்கள் இருந்ததாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்வது குறித்து, கொழும்பு நகரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில், விமான போக்குவரத்து துறை நிபுணர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள், புவியியலாளர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், இராவணன் தன் விமானம் வாயிலாக இந்தியாவுக்கு முதன்முதலாக பறந்து சென்று, மீண்டும் இலங்கை திரும்பியதாக கூறப்பட்டது.இது குறித்து ஆய்வு மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது. இந்த ஆய்வுக்காக இலங்கை அரசு, 20 லட்சம் ரூபாய் நிதியை அப்போது ஒதுக்கியது. கொரோனா பரவல் காரணமாக இந்த ஆய்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.பிரதமர் மகிந்தா ராஜபக்சே தலைமையில் தற்போதுள்ள இலங்கை அரசு, இதை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வாக கருதுகிறது.
இதையடுத்து, அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்த ஆய்வு மீண்டும் தொடங்குகிறது.இலங்கையின் விமான வரலாறு குறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டவரும், அந்நாட்டு விமான போக்குவரத்து ஆணையத்தின் முன்னாள் துணைத் தலைவருமான சசி தனதுங்கே செய்தியாளர்களிடம் கூறியதாவது: இராவணன், இதிகாசத்திற்காக புனையப்பட்ட கற்பனை கதாபாத்திரம் அல்ல. அவர் உண்மையில் வாழ்ந்த அரசன். அவரிடம் விமானங்களும், விமான நிலையங்களும் இருந்தன.
அவை இன்றைய விமானங்களை போல் இருந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவை வேறு தொழில்நுட்பத்தில் இயங்கி இருக்கக்கூடும். அந்த காலத்தில், இலங்கை மற்றும் இந்தியாவில் பல நவீன தொழில்நுட்பங்கள் இருந்துள்ளன. இது குறித்து விரிவான ஆராய்ச்சி மேற்கொள்ள இருக்கிறோம் என்றார்.
Post a Comment