40 வருடங்களில் வடக்கும் சிங்கள மாகாணங்களாக மாறுமெனக் கூறுகிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. இரா.சாணக்கியன்

 


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன்


சிறுபான்மை மக்களின் ஒற்றுமை சீரழிந்தால் இன்னும் 20 வருடங்களில் கிழக்கும், 40 வருடங்களில் வடக்கும் சிங்கள மாகாணங்களாக மாறுமெனக் கூறுகிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. இரா.சாணக்கியன்.

எமக்களித்த விசேட பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது,

கே: உங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி இப்போது யாரிடம் உள்ளது ?

ப: முன்னாள் பொதுச் செயலாளர் துரைராஜசிங்கம் ஐயா தாமாக பதவி விலகினார். அதனையடுத்து உருவான பொதுச் செயலாளர் இடைவெளிக்கு பதில் பொதுச் செயலாளர் அந்த கடமையை செய்வார். இப்போது எமது கட்சியில் பதில் பொதுச் செயலாளர்கள் இருவர் இருக்கிறார்கள். அதில் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன். மற்றவர் டாக்டர் சத்தியலிங்கம். நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு நிறைய கட்சிப்பணிகள் இருப்பதனால் பொதுச் செயலாளர் பணியை செய்ய தலைவரினால் டாக்டர் சத்தியலிங்கம் நியமிக்கப்பட்டு தனது பணிகளை செய்து வருகிறார். தொடர்ந்தும் டாக்டர் சத்தியலிங்கமே பொதுச் செயலாளராக இருப்பதா இல்லை புதிய ஒருவரை நியமிப்பதா என்பது தொடர்பில் கட்சியின் மத்திய குழு மற்றும் பொதுச் சபை என்பன கூடி முடிவெடுக்கும்.










கே: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பிலான தமிழ் மக்களின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள நீங்கள் முஸ்லிம்களுக்காக அதிகம் பேச காரணம் என்ன?

ப: நான் இஸ்லாமிய சகோதரர்களுக்கு மட்டுமல்ல, அநீதி இழைக்கப்பட்ட எந்த இன மக்களாக இருந்தாலும் என்னுடைய நாடாளுமன்ற காலத்தில் குரல்கொடுத்து வந்துள்ளேன். கடந்த ஒன்றரை வருடங்களாக முஸ்லிம் சகோதரர்கள் பல சவால்களுக்கு முகங்கொடுக்கவேண்டிய சூழ்நிலைக்கு இந்த அரசு தள்ளியுள்ளது. கடந்த 30 வருடங்களாக தமிழ் மக்களுக்கு கடந்த கால அரசாங்கங்களினால் வழங்கப்பட்டுவந்த சவால்களைபோன்று இன்று முஸ்லிம்களுக்கு எதிராக நிறைய வன்முறைகள் இந்த அரசால் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்ற அசம்பாவிதங்களின்போது அது பிழையென நாங்கள் குரல்கொடுத்ததுபோன்று இன்று முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் நடைபெறும்போதும் அது பிழையென நாங்கள் குரல் கொடுக்கவேண்டியது கட்டாயம் அவசியமாகிறது. அதைத்தான் நான் தொடர்ந்தும் செய்துவருகிறேன். எதிர்வரும் காலங்களிலும் கிறிஸ்தவ மக்களாக இருந்தாலும் அல்லது எந்த இன மக்களாக இருந்தாலும் அநீதியிழைக்கப்படும் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பேன்.





















வடக்கு, கிழக்கு எனும் இரு மாகாணங்களை பொறுத்தமட்டில் நாங்கள் முஸ்லிம் கள், தமிழர்கள், கிறிஸ்தவர்கள் என்று பிரிந்து நில்லாது தமிழ் பேசும் மக்களென ஒன்றுபட்டால் மட்டுமே எமது நிலங்களையும், சொத்துகளையும் நாங்கள் பாதுகாக்க முடியும். பிரிந்துநின்று தமிழர்கள் பூர்வீகமாக வாழும் நிலத்தை ஏனையவர்களுக்கு தாரைவார்த்துவிட்டால் இன்னும் 2030 வருடங்களில் தமிழர்கள் கிழக்கில் வாழ்ந்த அடையாளமே இல்லாமலாகிவிடும். கடந்த காலங்களில் தமிழர்கள் நிறைந்திருந்த நீர்கொழும்பில் இன்று தமிழர்கள் இல்லாத நிலையே உள்ளது. இன்னும் 20 வருடங்களில் ஏனைய ஏழு மாகாணங்களைபோன்று எட்டாவது மாகாணமாக சிங்கள பெரும்பான்மை இன மக்கள் வாழும் மாகாணமாக கிழக்கு மாகாணம் மாறிவிடும் நிலையே உருவாகியுள்ளது. அதேபோன்று இன்னும் 40 வருடங்களில் வடமாகாணமும் அந்த நிலையைத்தான் அடையும் வாய்ப்புள்ளது. அதனால்தான் நாம் ஒற்றுமையாக வாழ்ந்து எமது பூர்வீக நிலங்களை பாதுகாத்து, தனித்துவத்துடன் வாழ்வது அவசியமாகிறது.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்