2020 பது காலப்பகுதியில் என்னால் எழுதப்பட்ட கட்டுரை இதுவாகும்...!
காதி நீதிமன்றம் உருவாகிய வரலாறு
,-----------
பாராளுமன்றத்தில் முஸ்லிம் விவாக,விவாவகரத்துச் சட்டத்தை நீக்குவதற்கு,பாராளுமன்ற உறுப்பினர் தனி நபர் பிரேரனை ஒன்றை சமர்ப்பித்திருக்கும் இவ்வேளையில்
காதி நீதிமன்றத்தின் தேவை முஸ்லிம் சமூகத்தால் எப்போது உணரப்பட்டது,எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதை உணர்த்தும் கட்டுரை.
நன்றி:- முனை மருதவன் என்.எச்.எம்.
இப்ராஹிம்
காதி நீதிபதிபதிகளின் அவசியத்தை உணர்த்திய 1925ம் ஆண்டின் வழக்கு..!
இலங்கையின் முஸ்லிம் சட்ட வரலாற்றில் 1925ம் ஆண்டு மிஸ்கின் உம்மா என்ற முஸ்லிம் பெண்மணிக்கு எதிராக அன்றிருந்த அரசாங்கம் தொடுத்த வழக்கின் மூலமாக கிடைத்த தீர்ப்புத்தான் முஸ்லிம் சமூகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது மட்டுமல்ல காதி நீதிபதிகளின் தேவையையும் அந்த தீர்ப்பின் அதிர்வலை உணர்த்தியது என்றால் அது பொய்யாகாது. இந்த தீர்ப்பின் மூலம் ஒரு முஸ்லிம் பெண்மணி அரசாங்கத்தால் கைது செய்யப்படும் நிலைமையும் ஏற்பட்டிருந்தது எனலாம்.
உயர் குடும்பத்தை சேர்ந்த மிஸ்கின் உம்மா என்ற பெண்மணியை முஸ்லிம் முறைப்படி திருமணம் செய்திருந்த வேளையில், அந்தக் கணவன் அந்த பெண்மணியின் பெரும்பாலான சொத்துக்களை செலவு செய்த நிலையில் தலைமறைவாகிவிட்டார். அவர் நீண்டகாலமாக எங்கே இருக்கின்றார் என்று அறிந்துகொள்ள முடியாத அந்த பெண்மணியின் குடும்பத்தாரும் ஊரார்களும் அவர் இறந்திருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தவர்களாக, தென்னிந்தியாவிலிருந்து ஒரு மார்க்க அறிஞர் ஷேய்க்கின் ஆலோசனைப்படி அவரை இறந்துபோன கணவனின் வொலியாக ( பிரதிநிதியாக) நியமித்து அவர் மூலம் அப்பெண்ணுக்கு தலாக் (விவாகரத்து) வழங்கினார்கள். அந்த நேரம் காதி நீதிபதி இல்லாத காரணத்தினால் ஊர் ஜமாஅத்தார் இந்த முடிவை எடுத்திருந்தார்கள்.
விவாகரத்து பெற்ற மிஸ்கின் உம்மா, உரிய காலத்தில் இத்தா என்னும் இஸ்லாமிய கடமையை நிறைவேற்றியதன் பின் புதிய கணவன் ஒருவரை திருமணம் செய்திருந்தார். அதுவரையும் நீண்டகாலம் தலைமறைவாக இருந்த முன்னய கணவன் திடீரென்று தோன்றி கணவன் நான் உயிரோடு இருக்கும்போது நீ செய்துகொண்ட இரண்டாவது திருமணம் செல்லுபடியாகாது என்று பொலிசில் முறைப்பாடு கொடுத்தார். உடனே பொலிசும் ' இருமணவாழ்வு' என்ற குற்றத்தை அந்த பெண்மணிமீது சுமத்தி மிஸ்கின் உம்மாவை கைது செய்தது. பொலிசாரின் இந்த நடவடிக்கையானது இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் பரவி ஒரு நெருக்கடியான சூழ்நிலையை உருவாக்கியிருந்தது.
மாவட்ட நீதிமன்றில் இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி இலங்கைச் சட்டத்தின் கீழ் 'மிஸ்கின் உம்மா செய்தது குற்றமே' என்று தீர்ப்பு வழங்கினார். உடனே மிஸ்கின் உம்மா சார்பில் உயர் நீதிமன்றிக்கு இந்த வழக்கை மேன்முறையீடு செய்திருந்தார்கள். அப்பொழுது அரசாங்க சட்டத்தரணி நாயகமாக கடமையாற்றிய எம்.றி.அக்பர் அவர்கள் இது பொது சட்டத்தின் பார்வையில் குற்றமாக கருதப்பட்டாலும் ஒரு காதிநீதிபதி இல்லாதபட்சத்தில் ஊர் ஜமாஅத்தார் அந்த முடிவை எடுத்ததில் தவறில்லையென்றும், இஸ்லாமிய சட்டப்படி அந்த பெண்மணி குற்றவாளியல்ல என்றும் உயர் நீதிமன்றுக்கு ஆலோசனை வழங்கினார். அந்த ஆலோசனையின் பிரகாரம் அந்த வழக்கு முடிவுக்கு வந்திருந்தது.
இந்த நிலையை சீர்செய்வதற்காக அன்றய முஸ்லிம் தலைவர்கள் அரசாங்கத்திடம் முறையிட்டார்கள். இது சம்பந்தமாக 1926ம் ஆண்டு என்.எச்.எம்.அப்துல் காதர் அவர்கள் முஸ்லிம் திருமண சட்டத்தை மறுபரிசீலனை செய்து சட்டசபைக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்கு ஒரு விசேட குழுவொன்று நியமிக்கபடவேண்டும் என்று சட்டசபையிலே ஒரு பிரேரணையை முன்வைத்தார். அதன்படி குழுவொன்று அமைக்கப்பட்டது அந்த குழுவிலே எம்.றி.அக்பர் தலைவராகவும், என்.எச்.எம்.அப்துல்காதர், கே.பாலசிங்கம், டபிள்யு. துரைசாமி, றி.பி.ஜாயா, சி.டபிள்யு.டபிள்யு.கன்னங்கரா, எச்.என்.மாக்கான் மாக்கார், மொலமுரே, தம்பிமுத்து, ஆகியோர்கள் அங்கத்தவர்களாக நியமிக்கப்பட்டனர்.
இந்தக்குழுவின் அறிக்கையில் முஸ்லிம்களின் விவாக விவாகரத்து விடயங்களில் அநியாயங்கள் நடந்துவிடாமல் இருப்பதற்கு காதி நீதிபதிகள் நியமிக்கப்படவேண்டும் என்று அரசாங்கத்துக்கு அறிக்கை சமர்ப்பித்தார்கள். இதன் காரணத்தை ஏற்றுக்கொண்ட அரசாங்கம், 1929ம் ஆண்டு 'அக்பர் குழுவின்' அறிக்கையின் பிரகாரம் 1888ம்ஆண்டில் அமுலாக்கப்பட்ட முகம்மதிய சட்டக்கோவையை அரசாங்கம் வாபஸ் பெற்றதுடன், 1929ல் கொண்டுவரப்பட்ட 'திருமண- மனமுறிவு பதிவு ' என்ற சட்டக்கோவையை அமுல்படுத்தியது. அதன் மூலம் காதிநீதிபதிகளை நியமிக்கும் வழமை நடைமுறைக்கு வந்தது.
இன்னும் சில வரலாறுகள் தொடரும்..!
~முனைமருதவன்
Post a Comment