நாட்டைவிட்டு ஏன் ஓட வேண்டும் ? தலிபான்கள் கொடூரமானவர்களா ? அன்று விடுதலை புலிகள், இன்று தலிபான்கள் ?
ஆப்கானிஸ்தானின் தலைநகரை தலிபான்கள் கைப்பற்றிய பின்பு காபூல் விமான நிலையத்தின் அவலங்களை பார்க்கின்றபோது தலிபான்கள் கொடூரமான கொலைகாரர்கள் என்பதனால்தான் மக்கள் உயிருக்கு பயந்து தப்பி ஓடுகிறார்கள் என்ற தோற்றப்பாடு உள்ளது.
கடந்த மூன்று மாதங்களாக ஆப்கான் பற்றிய சர்வதேச செய்திகளை அவதானிப்பவர்களுக்கு இதன் உண்மை என்னவென்று புரியும்.
அதாவது அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகளின் கூட்டுப்படைகள் 2001 இல் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதிலிருந்து கடைசிவரைக்கும் மேற்கு நாட்டு படைகளுக்கு மொழி பெயர்ப்பாளர்களாகவும், தலிபான்களின் நடமாட்டங்கள் பற்றி அவ்வப்போது புலனாய்வு தகவல்களை இராணுவத்துக்கு வழங்கிய ஒற்றர்களும், இராணுவ முகாம்களில் பணிபுரிந்தவர்களும்,
மேலும், வடக்கு முன்னணி உட்பட நேட்டோ படைகளுடன் இணைந்து தலிபான்களுக்கு எதிராக போர் செய்த இயக்கங்கள், குழுக்கள், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட ஆப்கான் இராணுவத்தினர், அரச அதிகாரிகளாக இருந்துகொண்டு ஊழல் செய்தவர்களும் அவர்களது குடும்பத்தினர்களும் மற்றும் இலவசமாக அமெரிக்கா சென்று குடியேற ஆசைப்படுகின்றவர்களும் இதில் அடங்கும்.
எதை மன்னித்தாலும் மேற்கு நாட்டு படைகளுக்கு ஒற்றர்களாக செயற்பட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்கும் நிலையில் தலிபான்கள் இல்லை.
ஏனெனில் இவ்வாறு காட்டிக்கொடுக்கப்பட்டதனால் இதுவரையில் ஆயிரக்கணக்கான தலிபான் போராளிகளும், தளபதிகளும் கொலை செய்யப்பட்டார்கள். அத்துடன் அவர்களது தாக்கும் திட்டங்களும் தோல்வியடைந்த சம்பவங்கள் ஏராளம்.
அமெரிக்க படைகள் என்றோ ஒருநாள் நாட்டைவிட்டு சென்றுவிடுவார்கள் என்று இவர்கள் ஒருபோதும் நினைத்ததில்லை. அவர்கள் நிரந்தரமாக தங்கியிருப்பார்கள் என்றே தலிபான்களுக்கு எதிராக செயற்பட்டார்கள்.
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுப்பது போன்று தலிபான்களிடமிருந்து தப்பித்துக்கொள்ளும் நோக்கில் நாட்டைவிட்டு தப்பிச்செல்ல முற்படுகின்றார்கள்.
இந்த நிலையை முன்கூட்டியே உணர்ந்ததனால் நேட்டோவில் உள்ள அனைத்து நாடுகளும் தமது இராணுவங்களுக்காக பணியாற்றியவர்களை சொந்த நாடுகளில் குடியமர்த்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதற்காக தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கப்பட்டது.
அமெரிக்கா தலைமையிலான நேட்டோவின் இறுதி படைப்பிரிவு செல்லும் திகதி 11.09.2021 ஆகும். அதற்கு முன்பாக தங்களுக்காக பணியாற்றிய ஆப்கானியர்கள் அனைவரையும் குடியமர்த்தி முடிப்பது என்று தீர்மானித்திருந்தனர்.
ஆனால் அந்தந்த நாடுகளில் வீசா வழங்குவதில் உள்ள குடிவரவு நடைமுறை காரணமாக கட்டம் கட்டமாக பல ஆயிரம் பேர்கள் ஏற்கனவே குடியமர்த்தப்பட்டனர். எஞ்சியுள்ளவர்களையும் குடியமர்த்தும் பணி முடிவடைவதற்குள் எதிர்பாராத விதமாக தலிபான்கள் விரைவாக ஆட்சியை கைப்பற்றியதனாலேயே இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை கடந்த காலத்தில் இலங்கை அரசியலுடன் ஒப்பிட்டு நோக்குகையில், இந்திய அமைதிப்படையினரின் தயவில் ஆட்சி செய்த அன்றைய வடகிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜ பெருமாளும், இன்று ஆப்கானிஸ்தான் தலைவர் அஷ்ரப் காணி அவர்களும் நாட்டைவிட்டு வெளியேறும்போது கூறிய கருத்துக்களை ஒப்பிட்டு நோக்க வேண்டும்.
அத்துடன் அன்று 1987 தொடக்கம் 1990 மார்ச் மாதம் வரைக்கும் வடகிழக்கில் இந்திய படையினரின் பாதுகாப்பில் விடுதலை புலிகளுக்கு எதிரான இயக்கங்கள் ஆதிக்கம் செலுத்தியதுடன், புலிகளை காட்டிக்கொடுத்தார்கள். பின்பு இந்திய படையினர்கள் நாட்டைவிட்டு சென்றபோது விடுதலை புலிகளுக்கு பயந்து இவர்களும் தப்பியோடினார்கள்.
அதுபோன்றே நேட்டோ படைகளின் துணையுடன் ஆப்கானில் ஆதிக்கம் செலுத்தி தலிபான்களை காட்டிக்கொடுத்தவர்கள் இன்று தலிபான்களுக்கு பயந்து தப்பியோடுவதனை காணக்கூடியதாக உள்ளது.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
Post a Comment