இனத்துவ அரசியல் 1921ம் ஆண்டளவிலேயே ஆரம்பமாகிவிட்டது

 

வை எல் எஸ் ஹமீட்


துருவ அரசியல்

———————-

1920ம் ஆண்டிலிருந்து இலங்கையில் துருவ அரசியல் ஆரம்பித்து விட்டது. ஒரு புறம் இலங்கைத் தேசிய காங்கிரஸ், சேர் பொன் அருணாசலம் மற்றும் அவருடன் இணைந்து கணிசமான தமிழர்களும் வெளியேறியிருந்ததால் அது சகல சமூகங்களும் இணைந்த ஓர் அமைப்பு என்ற அதன் நிலைமை பாதிக்கப்பட்டிருந்தது.  மறுபுறம் தமிழர் அரசியல் சேர் பொன்னம்பலம் ராமநாதன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. 

1921ம் ஆண்டு ஜூன் மாதம் புதிய சட்டசபை கூடியது. அவ்வருடம் டிசம்பர் மாதம் கொழும்பு நகர சட்டசபை அங்கத்தவரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான திரு ( பின்னர் சேர்) ஜேம்ஸ் பீரிஸ் அவர்களால் மேலும் அரசியல் சீர்திருத்தத்திற்கான பிரேரணைகள் முன்வைக்கப்பட்டன.

இவற்றுள் முக்கியமாக சட்டசபை அங்கத்தவர் எண்ணிக்கை  45 ஆக அதிகரிக்கப்பட வேண்டும். அவர்களுள் 6 பேர் அரச அதிகாரிகள் ( official members), 28 பேர் தொகுதி ரீதியாக தெரிவுசெய்யப்படல், சிறிய மாற்றங்களுடன் இனரீதியான சிறுபான்மைப் பிரதிநிதித்துவங்கள் தொடர்ந்தும் இருத்தல், சபாநாயகர் சட்டசபையினால் தெரிவுசெய்யப்பட வேண்டும்; போன்றவை உள்ளடக்கப்பட்டிருந்தன.

அதேநேரம் சேர் பொன் ராமநாதன் சிறுபான்மைத் தலைவர்களுடன் இணைந்து சிறுபான்மையினருக்கும் கணிசமான பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் ஓர் அறிக்கையை பிரித்தானியாவுக்கு அனுப்பி வைத்தார்.

மேலும் அதிகாரம்

—————————

இவ்வாறு பிரேரணைகள் அனுப்பிவைக்கப்பட்டதன் பின்னணியில் 1923ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ம் திகதி (அதிகாரிகளல்லாத) சாதாரண அங்கத்தவர்களுக்கு மேலும் அதிகாரங்கள் வழங்கப்பட்டன. அதில் மீண்டும் சில திருத்தங்கள் 1924ம் ஆண்டு மார்ச் மாதம் 21ம் திகதி செய்யப்பட்டன. 

அதனைத் தொடர்ந்து சட்டசபை கலைக்கப்பட்டு அதே ஆண்டு (1924) ஒக்டோபர் மாதம் 15ம் திகதி புதிய சட்டசபை அமைக்கப்பட்டது. இதில் 12 அதிகாரிகளான அங்கத்தவர்கள் (official members), 37 சாதாரண அங்கத்தவர்கள் (unofficial members), நியமிக்கப்பட்டார்கள். இந்த 37 பேர்களுள் மூவர் ஆளுநரால் நியமிக்கப்பட, 34 பேர் தெரிவுசெய்யப்பட்டார்கள்.


தெரிவுசெய்யப்பட்ட 34 பேருள் 23 பேர் நேரடியாக தொகுதிகளில் இருந்து தெரிவுசெய்யப்பட்டனர். மேல் மாகாணத்திற்கு 5 பேர், வட மாகாணத்திற்கு ஐந்து பேர், தென்மாகாணத்திற்கு 3 பேர், கிழக்கு மாகாணம், மத்திய மாகாணம் மற்றும் சப்ரகமுவ மாகாணம் ஆகியவற்றிற்கு தலா 2 பேர், ஏனைய மாகாணங்களுக்கு ஒவ்வொருவர். ஏனைய 11 பேர் இனரீதியாக தெரிவுசெய்யப்பட்டனர். அவர்களுள் முஸ்லிம்களுக்கு 3 பேர்.

நூர்தீன் ஹாஜியார் அப்துல் காதர், T B ஜாயா, முஹம்மது மாக்கான் மாக்கார் ஆகியோரே 1824 தேர்தலில் தெரிவுசெய்யப்பட்ட அங்கத்தவராவர்.


இத்தேர்தலினூடாகத்தான் திரு டீ எஸ் சேனாநாயக்க முதலாவதாக சட்டசபை அங்கத்தவரானர்.


இனத்துவ/ அடையாள அரசியல்

————————————————————-

1924ம் ஆண்டு தேர்தல் ஒரு முக்கிய தேர்தலாக இருந்தபோதும் இந்தக் காலகட்டத்தில் அரசியல் கட்சிகள் தோற்றம் பெற்றிருக்கவில்லை. அரசியல் இயக்கங்களும் பொதுவான சமூகசார் அமைப்புகளும் அரசியல் சீர்திருத்தங்களுக்கான முன்னெடுப்புகளில் ஈடுபட்ட நிகழ்வுகள்தான் இடம்பெற்றன.


சகல சமூகங்களையும் இணைத்துக்கொண்டு ஓர் பலமான அரசியல் இயக்கமாக சேர் பொன் அருணாசலம் தலைமையில் 1919 இல் உருவான தேசிய காங்கிரஸ், ஒரு வருடம்கூட முடியமுன் அதன் தலைமை திரு ஜேம்ஸ் பீரிசின் கைகளுக்கு மாறிய நிலையில், 1921 ம் ஆண்டு சேர் பொன் அருணாச்சலம் பல தமிழ்த்தலைவர்களுடன் தேசியக் காங்கிரசில் இருந்த வெளியேறி Ceylon Tamil League ஐ உருவாக்கியதை முன்னைய தொடர்களில் பார்த்தோம்.


எனவே, அரசியல் கட்சிகள் இக்காலகட்டத்தில் உருவாகியிராதபோதும் தமிழர்களைப் பொறுத்தவரை தனித்துவ அரசியல் 1921ம் ஆண்டளவிலேயே தோன்றிவிட்டது. இந்நாட்டில் துருவ அரசியலின் தோற்றம் இங்குதான் ஆரம்பமாகியது. 


சேர் பொன் அருணாச்சலம் Ceylon Tamil League இற்கு உரையாற்றும்போது இவ்வமைப்பு அரசியல் தேவைக்காக உருவாக்கப்பட்டபோதும் இதன் இலட்சியம் அதனைவிடவும் உயர்ந்தது; என்றும் தமிழர்கள் ஒரு தேசியம் என்பதையும் அழுத்தமாக இங்கு குறிப்பிட்டிருந்தார்.


மறுபுறம், முஸ்லிம் தலைவர்கள் தொடர்ந்தும் தேசிய அரசியலில் தேசியக்காங்கிரசினூடாகவே பயணித்தனர். குறிப்பாக, முஸ்லிம் தலைவர்களான T B ஜாயா, S L நெய்னாமரைக்கார், M காசிம் இஸ்மாயில் போன்றோர் இக்காலகட்டத்தில் தேசிய காங்கிரசில் இருந்தனர். T B ஜாயா, 1925ம் ஆண்டு தேசிய காங்கிரசின் உப தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டார்.


இன்று இந்த நாட்டில் இனவாத அரசியலை ( தனித்துவ அல்லது இனத்துவ அரசியலுக்கு அவர்கள் வழங்கும் பெயர்) ஆரம்பித்தது முஸ்லிம்களே! என்பதுபோன்ற ஒரு தோற்றப்பாடு கொடுக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் இனத்துவ அரசியல் 1921ம் ஆண்டளவிலேயே ஆரம்பமாகிவிட்டது. அரசியலும் பெரும்பான்மை அரசியல் சிறுபான்மை அரசியல் என அப்போழுதே துருவப்பட ஆரம்பித்துவிட்டது.


எனவே, இந்நாட்டில் முஸ்லிம்கள் இனத்துவ அரசியலை ஆரம்பிக்கவுமில்லை. அவர்கள் மட்டும் இனத்துவ அரசியல் செய்யவுமில்லை. மட்டுமல்ல, இனத்துவ அல்லது அடையாள அரசியல் என்பது வேறு; இனவாத அரசியல் என்பது வேறு. துரதிஷ்ட வசமாக முஸ்லிம்களுக்கு மத்தியிலேயே பலருக்கு இது தொடர்பாக தெளிவில்லை. 


Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்