30 வருடங்களாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

 Article 11.07.2021 - Sunday Virakesari

 முஸ்லிம் பிரதிநிதிகளின் மௌன விரதம்

++++++++++++++++++++++++++++++++

எம்.எஸ்.தீன் -

இலங்கை முஸ்லிம்கள் ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள், 30 வருடங்களாக நடைபெற்ற உள்நாட்டு யுத்தம், இனவாத அடாவடித்தனங்கள் போன்றவற்றினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டதொரு சமூகமாக உள்ளனர். முஸ்லிம்களின் பொருளாதாரத்தின் மீது பொறாமை கொண்ட இனவாதிகள் அவர்களின் பொருளாதாரத்தை அழிப்பதற்கு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்கள். அத்தகைய நடவடிக்கைகள் குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும் முஸ்லிம்களுக்குரிய நியாயம் கிடைக்கவில்லை. காலத்துக்கு காலம் ஆட்சியாளர்களுடன் ஒட்டிக் கொள்ளும் பௌத்த இனவாதிகள் முஸ்லிம்களின் பொருளாதாரத்தை குறிவைத்தே முஸ்லிம்களின் மீது வேண்டுமென்று திட்டமிட்டவகையில் குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வந்துள்ளார்கள். 


இந்நிலையில் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் முஸ்லிம்களின் பொருளாதாரம், அரசியல், சமூகக் கட்டமைப்பு ஆகியவற்றின் மீது எதிர்மறைத் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. இத்தாக்குதலின் பின்னர் கூரிய கத்தியில் நடக்க வேண்டியவர்களாக முஸ்லிம்கள் மாறியுள்ளார்கள். இத்தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்று பல முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். முஸ்லிம்களின் மத விவகாரங்களுடன் தொடர்புடைய உடை முதல் பல விடயங்கள் தமது தனித்துவத்தை இழக்க வேண்டிய நிலைமைகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.


இவ்வாறு நாலு பக்கங்களிலும் நெருடிக்கடிகளை எதிர்கொண்டு வருகின்ற முஸ்லிம்களுக்கு குரல் கொடுப்பதற்கு ரவூப் ஹக்கீம், முஜிபுர்ரஹ்மான் ஆகியோர்கள் இருந்தாலும், அவர்களையும் நெருக்கடிகளுக்குள் தள்ளிவிடுவதற்குரிய செயற்பாடுகளையும் அவதானிக்க முடிகின்றன. 


அதே வேளை, பாராளுமன்றத்தில் உள்ள ஏனைய முஸ்லிம்கள் சமூகம் எதிர்கொண்டுள்ள நெருடிக்களைப் பேசுவதற்கு சக்தியற்றவர்களாக இருக்கின்றார்கள். ஒரு சமூகத்தின் பாராளுமன்ற உறுப்பினர் என்பது மிகப் பெரிய அந்தஸ்தாகும். அந்தகைய உயர் முகவரியை தந்த சமூகம் நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டிருக்கின்ற சூழலில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் பலர் மௌனமாக இருந்து கொண்டிருப்பது ஏற்றுக் கொள்ள முடியாததாகும். 


முஸ்லிம்களின் தனியார் சட்டத்தில் ஆட்சியாளர்கள் மாற்றங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளார்கள். இதற்குரிய அங்கிகாரத்தை அமைச்சரவை வழங்கியுள்ளது. இந்நிலையில் அமைச்சரவையின் இந்த முடிவுக்கும் எனக்கும் தொடர்பில்லை. அது குறித்து என்னால் எதுவும் பேச முடியாதென்ற கருத்தை நீதி அமைச்சர் அலிசப்ரி வெளியிட்டுள்ளார்.


இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு மாத்திரம் தனியார் சட்டங்கள் கிடையாது. தமிழ், சிங்கள சமூகங்களுக்கும் தனியார் சட்டங்கள் உள்ளன. முஸ்லிம்களின் தனியார் சட்டம் குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் 'தங்களின் பாராளுமன்றப் பெரும்பான்மையைப் பயன்படுத்தி குறித்த ஒரு சமூகத்தின் விஷேட தனியார் சட்டங்களை நீக்க முடியாது. 


முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருமணத்திற்கான ஆகக்குறைந்த வயது விடயத்தைத் தவிர வேறு விடயங்களில் நான் குறை காணவில்லை. திருமண வயது குறித்த திருத்தமும் கூட முஸ்லிம்களின் முழுமையான இணக்கப்பாட்டின் அடிப்படையில் மட்டுமே செய்யப்பட வேண்டும்.


இந்த நாட்டிலே கண்டியச் சட்டம், தேசவழமைச் சட்டம், முக்குவர் சட்டம் என்றெல்லாம் தனியார் சட்டங்கள் உள்ளன. ஆனால் எல்லோரும் முஸ்லிம் தனியார் சட்டம் பற்றி மட்டுமே விமர்சிக்கின்றனர். அதை ஏற்றுக்கொள்ள முடியாது...' என்று சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.


இவ்வாறு முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்கும் போது அரசாங்கத்தின் சட்ட மூலங்களுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சியுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும், ஆளுங் கட்சியிலுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் மௌனமாக இருந்து கொண்டிருப்பதனை பார்க்கின்ற போது, இத்தகைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாக்களித்த முஸ்லிம் வாக்காளர்கள் மிகப் பெரிய தவறினை செய்துள்ளார்கள் என்றுதான் சொல்லுதல் வேண்டும். முஸ்லிம் தனியார் சட்டத்திற்கும் தங்களுக்கும் எந்தவொரு தொடர்புமில்லை என்பது போல் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் நடந்து கொண்டிருக்கின்றார்கள்.


நச்சற்ற உணவுகளை உற்பத்தி செய்ய வேண்டுமென்ற திட்டத்தில்; உரம் மற்றும் விவசாய இராசாயன வளமாக்கிகளின் இறக்குமதியை அரசாங்கம திடீரென்று நிறுத்தியுள்ளது. இதனால், விவசாயிகள் தமது உற்பத்திகளுக்கு தேவையான உரம் போன்றவற்றை கொள்வனவு செய்வதில் சிரமங்களை எதிர்கொள்கின்றார்கள். வியாபாரிகள் இவற்றினை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து கொண்டிருக்கின்றார்கள். 


விவசாயிகளின் இப்பிரச்சினை குறித்து சிங்கள, தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆளுந் தரப்பு, எதிர்த் தரப்பினர் என்ற வேறுபாடின்றி பேசிக் கொண்டிருக்கின்றார்கள். விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காணுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கைகளை முன் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இப்பிரச்சினை குறித்து ஒரு வார்த்தையேனும் பேசவில்லை.


இதே வேளை, சீன நாட்டவர்கள் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டு வருவதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. அவர்கள் அரச அனுமதியின்றி அட்டை உற்பத்தி போன்றவற்றில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாகவும் பாராளுமன்றத்தில் சிங்கள, தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசியுள்ளார்கள். அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்கள். சீனர்களின் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டிருப்பது இலங்கையரின் பொருளாதாரத்தில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்று சுட்டிக் காட்டப்படுகின்றன. ஆனால், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இது குறித்தும் பேசிவில்லை.


மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட் பதியூதீன் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அத்தோடு இன்னும் பல முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இக்கைதுகள் குறித்து குறிப்பாக மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட் பதியூதீனை விடுதலை செய்வதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டுமென்று சிங்கள , தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் ரவூப் ஹக்கீம், முஜிபுர்ரஹ்மான் ஆகியோர்களும் பேசியுள்ள போதிலும், ஏனைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மௌனமாகவே இருக்கின்றார்கள்.


முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சமூகத்தின் பிரச்சினைகள் குறித்தும், நாட்டின் தேசிய பிரச்சினை குறித்தும், முஸ்லிம் அரசியல் தலைவரின் கைது குறித்தும், விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்தும், முஸலிம் தனியார் சட்டம் குறித்தும் பேசாது பாராளுமன்றக் கதிரைகளை சூடாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் இச்செயற்பாடுகள் குறித்து வாக்களித்தவர்கள்தான் வெட்கப்பட வேண்டும். மிகப் பெறுமதி வாய்ந்த வாக்குகளினால் நாட்டிற்கும், சமூகத்திற்கும் பிரயோசனமில்லாதவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். 


பணத்திற்கும், பொருளுக்கும், கட்சிப் பற்றுக்கும், பிரதேசவாதத்திற்கும் வாக்களித்தமையால்தான் இத்தகையவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயநலத்தில் சாதனை படைப்பவர்களாக உள்ளார்கள். தற்போது அமைச்சர் பதவிகளில் குறிவைத்துச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். 


எதிர்க்கட்சியில் உள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையே நெருங்கிய தொடர்புகள் உள்ளன. அரசாங்கத்தின் சட்ட மூலங்களுக்கு ஆதரவு வழங்கும் உடன்பாடு பசில் ராஜபக்ஷவுடனே செய்து கொண்டார்கள். 20வது திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவு வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்த போது இராஜாங்க அமைச்சர் பதவியை கோரியதாகவும், அதனை தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டதாகவும் புத்தள மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். 


கட்சி மட்டத்தில் பேசி அரசாங்கத்துடன் இணைவதற்குரிய முடிவினை எடுப்பதற்குரிய நகர்வுகளை முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. இத்தகையதொரு கருத்தினை முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் அண்மையில் தனியார் தொலைகாட்சிக்கு தெரிவித்துள்ளார்.


இதே வேளை, அரசாங்கத்துடன் இணையும் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், மக்கள் காங்கிரஸின் பதில் தலைவர் சட்டத்தரணி என்.எம்.சஹீட் ஆகியோர்கள் தெரிவித்துள்ளார்கள். 


பசில் ராஜபக்ஷ அமெரிக்காவுக்கு திடீரென்று சென்ற போது எதிர்க்கட்சியிலுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கவலையில் உறைந்து போனார்கள். தற்போது அவர் நிதி அமைச்சராக நியமனம் பெற்றுள்ளமையால் இந்தப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள். பசில் ராஜபக்ஷவின் உதவியுடன் அமைச்சர் பதவியைப் பெற்றுக் கொள்வதற்குரிய முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஒற்றுமையுடன் செயற்பட்டுக் கொண்டிருந்த முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது அமைச்சர் பதவியை தாம் அடைந்து கொள்ள வேண்டுமென்பதற்காக தனித்துச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இதன் மூலமாக இவர்களின் ஒற்றுமையின் நோக்கத்தையும், சுயநலத்தின் உச்சத்தையும் கண்டு கொள்ளலாம். 


முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த காலங்களில் பல அமைச்சர் பதவிகளை வகித்துள்ளார்கள். ஆனால், அவர்கள் முஸ்லிம் பிரதேசங்களில் பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்ளவில்லை. வீதிகளை அமைப்பதற்கே அமைச்சர் பதவிகளை பயன்படுத்திக் கொண்டார்கள். முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுத் தருவோம் என்று முரசு கொட்டியவர்கள் அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொண்டதும் சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. கடந்த 30 வருடங்களாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறே ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்