BREAKING NEWS

2024 ஜனாதிபதி தேர்தலில் SLPP வேட்பாளாராக ராஜபக்ச அல்லாத வேறொருவர் வருவதற்கான வாய்ப்பு?

ஆக்கம்: Mansoor Mohamed 


இலங்கையில் ராஜபக்சகளின் ஆட்சியை (மீண்டும் தலைதூக்க முடியாத அளவுக்கு) தோற்கடிக்க வேண்டுமென விரும்பும்  எந்தவொரு கட்சியும்,  அதற்காக முதலில் செய்ய வேண்டிய காரியம் சிங்கள மக்களுக்கு மத்தியில் ஆழமாக வேரூன்றியிருக்கும்  ராஜபக்ச திருவுரு வழிபாட்டை தகர்த்தெறிவதாகும் (Debunking the Rajapaksa Cult). 


2015 இல் மைத்திரிபால சிறிசேனவை முன்னிறுத்தி 'நல்லாட்சி'  Project  ஐ சந்தைப்படுத்தியவர்கள் விட்ட மிகப் பெரிய தவறு அது தான். அதாவது, இந்த திருவுரு வழிபாட்டை தகர்த்தெறியாமல் வெறுமனே இலஞ்சம், ஊழல் மற்றும்  விலைவாசி உயர்வு  போன்ற வழமையாக தேர்தல்களில் பயன்படுத்தப்படும்  பரப்புரைகளை முன்வைத்து, வெற்றியீட்டியமை. 


ஆனால், அந்த வெற்றி மிகவும் தற்காலிகமானது என்பதனையும்,  ராஜபக்ச ஆதரவு சிங்கள வாக்கு வங்கியில் கணிசமான அளவிலான உடைவுகள் எவையும் ஏற்படாத நிலையிலேயே அந்த வெற்றி ஈட்டப்பட்டிருந்தது என்பதனையும் 2018 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் தெட்டத்தெளிவாக எடுத்துக் காட்டின. அது இலங்கையின் தேர்தல் வரலாற்றில் நிகழ்த்திக் காட்டப்பட்ட ஒரு மௌனப் புரட்சி. 2009 போர் வெற்றியை அடுத்து 'ராஜபக்சகள் எமது மீட்பர்கள்' என்ற விதத்தில் சிங்கள கூட்டு உளவியலில் பொறிக்கப்பட்டிருக்கும் சித்திரம் எவ்வளவு வலுவானது என்பதனை அது எடுத்துக் காட்டியது. அதன் சமூகவியல் பரிமாணங்களை உதாசீனம் செய்தமையால்  (அல்லது கண்டும் காணாமல் இருந்ததால்) தான் எதிர்க்கட்சிக்கு இந்தக் கதி நேர்ந்திருக்கின்றது.


பிரதான எதிர்க்கட்சி இந்த முக்கியமான பாடத்தை இப்பொழுது கற்றுக் கொண்டிருப்பது போல் தெரிகிறது. ராஜபக்ச திருவுரு வழிபாட்டை தகர்த்தெறிவதற்கான பரப்புரைகள் SJB தரப்புக்களால் ஓரளவுக்கும், பல சிங்கள யூடியூப் கருத்துரையாளர்களால் மிகவும் வீரியமான விதத்திலும் இப்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ராஜபக்ச குடும்பத்தைச் சூழவிருக்கும் அந்த மாயக் கவர்ச்சியை களைந்தெறிவதற்கென சமூக ஊடகங்களில் பிரபல்யமான பல பரப்புரையாளர்கள் களமிறக்கப்பட்டிருக்கும் பின்புலத்திலேயே மூன்றாவது ராஜபக்ச சகோதரரின் எழுச்சி நிகழ்ந்திருக்கின்றது என்பது படு சுவாரசியமானது.

 

கொவிட் என்ற வெளியிலிருந்து வந்த அனர்த்தமும், பகுத்தறிவுக்கும், பூகோள - அரசியல் யதார்த்தங்களுக்கும் துளியும் பொருந்தாத விதத்தில் அரசாங்க தரப்புக்கள் செய்து வந்த காரியங்களின் வடிவிலான உள் அனர்த்தமும் சேர்ந்து இப்போது நாட்டை முடக்கிப் போட்டிருக்கின்றன.


'பிச்சைக்காரனுக்கு ஏது சுடு சோறு'  என்பார்கள். கிட்டத்தட்ட - தெரிவுகள் மிகவும் வரையறுக்கப்பட்ட –  அப்படியான திக்கற்ற ஒரு நிலையே இப்பொழுது அரசாங்கத்திற்கும் ஏற்பட்டிருக்கின்றது.


பசிலின் வருகையை தூண்டிய முக்கிய காரணம் அரசாங்கத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் மட்டத் தலைவர்களிடமிருந்து வந்த கடுமையான அழுத்தம். அரசாங்கம் தொடர்ந்தும் மக்களின் வெறுப்பை சம்பாதித்து வருவதை அடிமட்டத்தில் செயற்பட்டு வரும் தலைவர்கள் நன்கு அறிந்திருக்கின்றார்கள். ஜனாதிபதிக்கும் அந்த தலைவர்களுக்குமிடையிலான இடைவெளி அதிகம். பிரதமரும் இப்போது தீவிர அரசியலிலிருந்து  படிப்படியாக ஒதுங்கத் தொடங்கியிருக்கிறார்.


இடைநிலை கட்சித் தலைவர்களுக்கு உடனடியாக அணுகுவதற்கு ஒரு தொடர்புப் புள்ளி தேவை. மேலும் வீரியமாக அரசாங்கத்தை மக்கள் முன்னால் வைக்க வேண்டும். அதன் இமேஜை 'ஒன்றுக்கும் உதவாதது' என்ற தற்போதைய நிலையிலிருந்து, 'உடனடியாக செயல்திறனுடன் காரியங்களை சாதிக்கக் கூடியது' என்ற விதத்தில் மாற்றியமைக்க வேண்டும். உடனடியாக மாய வித்தைகள் எவற்றையும் நிகழ்த்திக் காட்ட முடியாவிட்டாலும் கூட, கட்சியின் வலுவான ஆதரவுத் தளமாக இருந்து வரும் அடிமட்ட மக்களை ஓரளவுக்கேனும் சந்தோஷப்படுத்துவதற்கு ஏதாவது செய்ய வேண்டும். 'பசில் அப்படி ஏதாவது செய்து, மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலை கரைசேர்த்து விடுவார்' என்று பலரும் நம்புகின்றார்கள்.


அரசாங்கம் எதிர்கொண்டு வரும்  மற்றொரு திரிசங்கு நிலை சிறுபான்மைச் சமூகங்களை புறமொதுக்கும் அதன் தற்போதைய  கொள்கையினை தொடர்ந்தும்  முன்னெடுத்துச் செல்ல முடியுமா என்பது. சிறுபான்மையினரை அரவணைத்துச் செல்வதற்கான ஏதேனும் சமிக்ஞைகளைக் காட்டினால் இனவாதிகள் பாய்ந்து   பிராண்டுகிறார்கள். மறுபக்கத்தில், சிறுபான்மைச் சமூகங்களை முற்றிலும் புறமொதுக்கினால் ஜெனீவாவிலிருந்து வரும் கேள்விக் கணைகளுக்கு பதிலளிக்க வேண்டியிருக்கின்றது. GSP+ என்ற கத்தியும் மேலே தொங்கிக் கொண்டிருக்கின்றது. அது மட்டுமல்லாமல், அடுத்த தேர்தல் முடிவுகள் பாதகமாக  அமைந்து விடுமோ என்ற அச்சமும் எட்டிப் பார்க்கின்றது.


வீரவன்ச – கம்மன்பில தரப்பினருக்கு ஒரு வலுவான செய்தியை விடுக்க வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது. அவர்கள் ஒரே நேரத்தில் அரசாங்க ஆதரவு நிலைப்பாட்டையும், அரசாங்க எதிர்ப்பு நிலைப்பாட்டையும் எடுக்க முடியாது என  SLPP  யின் இரண்டாம் மட்டத் தலைவர்கள் கூறி வருவதில் தவறேதும் இல்லை. 'நாய்களுடன் சேர்ந்து வேட்டையாடிக் கொண்டும், முயல்களுடன் சேர்ந்து ஓடிக் கொண்டும்' இருக்க முடியாது. அரசாங்கத்திற்குள் தொடர்ந்து இருந்து  வர வேண்டுமானால் அது எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். இல்லாவிட்டால், வெளியில் போய் தங்கள் சொந்தப் பிழைப்பை பார்த்துக் கொள்ள வேண்டும்.


2019 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரும், அதனையடுத்தும் சாதாரண சிங்கள மக்களை உசுப்பேற்றுவதற்காக பயன்படுத்தப்பட்டு வந்த சுலோகங்கள் இப்போது தமக்கே வினையாக வந்திருப்பதனை பார்த்து கடும் மனக் கிலேசத்திலும், சங்கடத்திலும் ஆழ்ந்து போயிருக்கின்றார்கள் SLPP முன்னணித் தலைவர்கள். இறைமை, பிராந்திய ஒருமைப்பாடு  மற்றும் 'ஒரு சட்டம் ஒரு நாடு'  என்ற விதத்தில் அவர்கள் வாய் கிழிய கத்திய கோஷங்கள் இப்போது தம்மைப் பார்த்து பல்லிளிப்பதை அவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. 'சிரச' போன்ற காட்சி ஊடகங்கள் வலிந்து கட்டமைக்க முயலும் 'பிரமாண்டமான அரசாங்க எதிர்ப்பு அலைக்கு'  பதிலடி கொடுக்கத் திராணியற்ற நிலையும் அவர்களுக்கு  மத்தியில் ஒரு தாழ்வுச் சிக்கலை ஏற்படுத்திருக்கிறது.


பொருளாதார  நெருக்கடி  தமது வாசல் படிக்கு வந்திருக்கும் நிலையில், 'இனிமேலும் இத்தகைய போலிச்  சுலோகங்களை நாங்கள் நம்பத் தயாரில்லை'  என்ற வலுவான செய்தியை மக்கள் தொடர்ந்தும் ஆட்சியாளர்களுக்கு விடுத்தவண்ணமிருக்கின்றார்கள்.


இந்தக் கசப்பான யதார்த்தங்களுக்கு மத்தியில், கடந்த இரண்டு வருட காலமாக SLPP அரசாங்கத்துக்குள் ஓங்கி ஒலித்து வந்த சிங்கள தேசியவாதிகளின்  குரல் கொஞ்சம் கொஞ்சமாக வீரியமிழக்கத் தொங்கியிருக்கின்றது. அக்குரல்களுக்கான 'சந்தை மதிப்பு'  எக்கச்சக்கமாக குறைந்திருப்பது அதற்கான காரணம். 'தேசாபிமானம்' இப்போது அயோக்கியர்களின் ஒரு முகமூடியாக இருந்து வருவதாக  நம்புகிறார்கள்  சாதாரண மக்கள்.


இந்தப் பின்புலத்தில் தான் பசில் ராஜபக்சவின் பிரவேசம் நிகழ்ந்திருக்கின்றது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பஷில் தரப்பு அரசாங்கத்திற்குள் சற்று அடக்கி வாசித்துக் கொண்டிருந்தது. அரசாங்கம் முன்வைத்து வந்த வலுவான சிங்கள – பௌத்த தேசியவாத முகத்தை நிராகரித்துச் செயற்படக் கூடிய திராணி அவர்களுக்கிருக்கவில்லை. ஆனால், பொருளாதார யதார்த்தங்களை உதாசீனம் செய்து, 'இனவாதிகளின்/ தேசியவாதிகளின் கடும் நிலைப்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து வந்தால் நாடு படுபாதாளத்திற்குள் தள்ளப்பட முடியும்' என்ற தெளிவு இப்போது ஓரளவுக்கு எல்லோருக்கும் ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதியும் அதனைப் புரிந்து கொண்டுள்ளார் என்பதன் வெளிப்பாடே பஷிலின் எழுச்சி.


சுருக்கமாக சொன்னால் ராஜபக்ச சகோதரர்கள் தமக்குரிய வேலைப் பங்குகளை தெளிவாக பிரித்துக் கொண்டுள்ளார்கள் என்பதற்கான அடையாளம்  இது.

 

அடுத்து வரும் மாதங்களில் அநேகமாக அரசாங்கத்தின் செல்நெறியில்  முக்கியமான மாற்றங்கள் நிகழலாம். சீனச் சார்பு நிலையிலிருந்து இந்திய - அமெரிக்க முகாமை நோக்கிய ஒரு நகர்வு சிறுகச் சிறுக ஏற்படக் கூடிய வாய்ப்பும் உள்ளது. அதற்கேற்ற விதத்தில் சர்வதேச சமூகத்துடனான உறவுகளில் ஒரு சுமுக நிலையை தோற்றுவிப்பதற்கான முன்னெடுப்புக்கள் ஏற்கனவே முடுக்கி விடப்பட்டிருக்கின்றன. GSP+ போன்ற சலுகைகளை பெற்றுக் கொள்ளும் பொருட்டு விரும்பியோ விரும்பாமலோ அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு ஒரு 'நல்ல பிள்ளை'  முகத்தை காட்ட வேண்டும். அந்தத் திசையை நோக்கிய ஒரு சில காரியங்களை திட்டவட்டமாக நிறைவேற்றி வைக்கவும் வேண்டும்.


பஷில் தரப்பு அரசாங்கத்திற்குள் தனது பிடியை இறுக்கிக் கொண்ட பின்னர் அநேகமாக 2022 இல் தமிழ் மற்றும் முஸ்லிம்  கட்சிகளுடன் அரசியல் பேரங்கள் இடம்பெறக் கூடிய வாய்ப்பும் உள்ளது. அரசாங்கத்திற்குள் இருக்கும் இனவாத / தேசியவாத தரப்பு வலுவாக இருக்கும் வரையில் அதனை நினைத்துப் பார்க்கவும் முடியாது.  பஷில் விசேட நிபுணத்துவ அறிவைக் கொண்டிருப்பதாக  கருதப்படும் அத்தகைய பேரங்களை நடத்தும்  பொருட்டு ஒன்றில் அவர்களை வெளியேற்ற வேண்டும் அல்லது அவர்களின் விஷப் பற்களை பிடுங்க வேண்டும். மிகவும் நிர்ப்பந்தமான ஒரு கட்டத்தில் தீவிர  தேசியவாதிகளின் பற்களை பிடுங்கும் அந்த 'ஒபரேஷனை'  ராஜபக்சகள் ஆரம்பித்திருக்கின்றார்கள் என்பதற்கான குறியீடு தான் பசிலின் வருகை.


இலங்கையின் மைய நீரோட்ட அரசியலில் கடும் தேசியவாத நிலைப்பாடுகள் இனியும் சாத்தியமில்லை என்பதற்கான  பல அறிகுறிகள் ஏற்கனவே தென்படத் தொடங்கியிருக்கின்றன.


''ராஜபக்ச அரசாங்கத்திற்கு வலுவான விதத்தில் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டுமானால் சிங்கள - தமிழ் - முஸ்லிம் - பேர்கர் - மலே ஆகிய எல்லா இன மக்களும் ஒற்றுமையுடன்,  ஓரணியில் இணைய வேண்டும்'' எனக் கூறியிருக்கிறார் எல்லே குணவங்ச தேரர். தனது 20 நிமிட குரல் பதிவில் பல தடவைகள் சிங்கள – தமிழ் – முஸ்லிம் - பேர்கர் -  மலே என்ற சொற்களை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார் அவர். (இதில் அவருடைய உள்நோக்கம் என்னவாக  இருந்து வந்தாலும்)  தீவிர இனவாத  நிலைப்பாட்டில் இருந்து  வந்த முக்கியமான ஒரு பிக்கு என்ற முறையில் அவர் இவ்விதம் இனங்களுக்கிடையிலான ஒற்றுமைக்காக குரலெழுப்புவதனை,  இலங்கையின் இன்றைய சிக்கலான இனத்துவ அரசியலில் நிகழத் தொடங்கியிருக்கும்  ஒரு நேர்மறை மாற்றமாகவே கருத வேண்டியுள்ளது. 


ராஜபக்சகளின் முதன்மை வாக்கு வங்கியான சிங்களப் பெருநிலத்திலும் இத்தகைய குரல்கள் சிறுகச் சிறுக ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன. 'தீவிர இனவாத கோஷங்கள் இறுதியில் எவருக்கும் எந்தப் பிரயோசனத்தையும் தரப் போவதில்லை' என்பதனை மக்கள் உணரத்  தொடங்கியிருக்கின்றார்கள்.  அத்துரலியே ரத்ன தேரர் மற்றும் கலகொட அத்தே ஞானசார தேரர் ஆகியோருக்கிடையிலான பிரச்சினையின் போது சமூக ஊடகங்களில் முன்வைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பின்னூட்டங்கள் இன உறவுகள் தொடர்பான சிங்கள சமூகத்தின் கண்ணோட்டத்தில் ஏற்பட்டு வரும் 'மெதுவான,  ஆனால் உறுதியான ஒரு நகர்வை'  துல்லியமாக எடுத்துக் காட்டுகின்றன.


அதிகம் பார்வையாளர்களை கொண்ட தர்சன ஹந்துன்கொட, சேபால அமரசிங்க மற்றும் உபுல் சாந்த சன்னஸ்கல போன்றவர்களால் நடத்தப்பட்டு வரும் யூடியூப் நிகழ்ச்சிகள் (சிங்கள – பௌத்த பெருமித உணர்வை அடிப்படையாகக் கொண்ட) ராஜபக்சகளின் பிம்பத்தை உடைத்தெறிவதனை நோக்கமாக கொண்டு தொடர்ந்து வலுவான வாதங்களை முன்வைத்து வருகின்றன. 'ராஜபக்ச திருவுருவ வழிபாடு எந்த அளவுக்கு அபத்தமானது' என்பதை நிரூபித்துக் காட்டுவதற்கு அவர்கள் வாதங்களை அடுக்கிக் கொண்டே போகிறார்கள். சிங்கள சமூக ஊடக வெளியில் அந்த உளவியல் போர் ஏற்கனவே தொடங்கியிருக்கின்றது.


எப்படிப் பார்த்தாலும் ஜேவிபி யையும் உள்ளிட்ட அனைத்துத் தரப்புக்களினாலும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் அரச எதிர்ப்புச் செயற்பாடுகளின் விளைவாக இறுதியில் பயனடையப் போவது SJB என்பதில் சந்தேகமில்லை.


அதே வேளையில், தற்போதைய அரசியல் கள நிலவரம் குறித்து கருத்துத் தெரிவிக்கும் சிங்கள தேசியவாதத்தின் பிதாமகர் எனக் கருதப்படும்  பேராசிரியர் நளின் டி சில்வா சுவாரசியமான ஒரு கருத்தை முன்வைத்திருக்கின்றார்.


யூஎன்பி யை போலவே SJB யும் மேலைய சார்பு முதலாளித்துவ கட்சியொன்றாக இருந்து வருவதுடன், இப்பொழுது வெள்ளாளர் (கொவிகம) அல்லாத (வேறு சாதியைச் சேர்ந்த) ஒருவர் அக்கட்சியின் தலைவராக இருந்து வருகிறார்.  சரத் பொன்சேகா, மைத்திரிபால சிரிசேன போன்றவர்கள் யூஎன்பி யில் ஜனாதிபதி வேட்பாளராக வருவது சாத்தியம். ஆனால், SLPP யில் அது ஒரு போதும்  நடக்காது என்கிறார் அவர்.  


அண்மையில் தீவிர அரசாங்க எதிர்ப்புக் கருத்துக்களை தெரிவித்த ஒரு சந்தர்ப்பத்தில், 'இப்பொழுது ஒரு புதிய தலைமையை தெரிவு செய்து கொள்ள வேண்டிய தருணம் வந்திருக்கின்றது'  என்றார் முருத்தெட்டுவே ஆனந்த தேரர். இதற்கு மறைமுகமாக பதிலளிக்கும் விதத்தில்  எழுதியிருக்கும் நளின் டி சில்வா SLPP  போன்ற தேசியவாத அடித்தளத்தை கொண்ட ஒரு கட்சியில் விமல் வீரவன்ச போன்ற ஒருவர் ஒரு போதும்  ஜனாதிபதி வேட்பாளராக வர முடியாது என்று எழுதியிருக்கின்றார். அதாவது, சிங்கள அரசியலில் (எப்பொழுதும் அடிச்சரடாக ஓடிக்கொண்டிருக்கும், ஆனால்) பலரும் பேசத் தயங்கும் சாதியின்  முக்கியத்துவத்தை அவர் இவ்விதம் குறிப்பிட்டிருக்கின்றார்.


SLPP இரண்டாம் மட்டத் தலைவர்களான பிரசன்ன ரணதுங்க போன்றவர்கள் 'ராஜபக்ச குடும்பத்திற்கு வெளியிலும் எங்களுக்கு தலைவர்கள் இருந்து வருகின்றார்கள். அவர்கள் உரிய நேரத்தில் வெளியில் வருவார்கள்'  என்று ஒப்புக்கு கூறினாலும் கூட, பெருமளவுக்கு தங்களது அரசியல் பிழைப்புக்காக ராஜபக்சகளையே அவர்களும் நம்பியிருக்கின்றார்கள். ஆகவே, 2024 ஜனாதிபதி தேர்தலில் SLPP வேட்பாளாராக ராஜபக்ச அல்லாத வேறொருவர் வருவதற்கான வாய்ப்புக்கள் மிக மிகக் குறைவு.


அந்தப் பின்னணியிலும், பசிலின் எழுச்சி முக்கியத்துவம் பெறுகின்றது.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar