BREAKING NEWS

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுவாரா கம்மன்பில?

 கொரோனா வைரஸின்  கோரத்தாண்டவத்தை கட்டுப்படுத்துவதற்காக இலங்கையில் பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ளது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை உணவைக்கூட முறையாக உண்ண வழியின்றி பலர் விழிபிதுங்கி நிற்கின்றனர். 


இந்நிலையில் திடீரென நேற்றிரவு எரி பொருட்களின் விலை அதிகரித்தது. இது தொடர்பான அறிவிப்பு வெளியான கையோடு அடுத்துவரும் நாட்களில் ஏனைய சில பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை உயரக்கூடும் என்பதை மக்கள் முன்கூட்டியே ஊகித்துக்கொண்டனர். 


இதனால் எரிபொருள் விலை உயர்வுக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டதுடன், அதனை மீளப்பெறுமாறும் வலியுறுத்தினர். எதிர்க்கட்சிகளும் இந்த வலியுறுத்தலை விடுத்துவருகின்றன.


இவ்விவகாரத்தால் அரசுக்கும் பெரும் நெருக்கடி - தலையிடி ஏற்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் அதிருப்தி அலையும் உருவாகியுள்ளது. இந்நிலையில் அரசின் தலைமைக்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்று மாலை அதிரடியாக அறிக்கையொன்றை வெளியிட்டது.


எரிபொருட்களின் விலை தற்போதைய சூழ்நிலையில் அதிகரிக்கப்பட்டமை தவறு எனவும், இவ்வாறானதொரு முடிவை எடுத்த துறைசார் அமைச்சர் முழு பொறுப்பையும் ஏற்று பதவி துறக்க வேண்டும் என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 


அமைச்சுகளை மாற்றுவதற்கும், விடயதானங்களை கைமாற்றுவதற்குமான முழு அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது.தற்கான பரிந்துரையை பிரதமரால்கூட முன்வைக்க முடியும்.  


துறைசார் அமைச்சர் என்ற வகையில் கம்மன்பில தன்னிச்சையாக செயற்பட்டிருந்தால், அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்த சூழ்ச்சி செய்திருந்தால் மேற்படி நடைமுறையை அரச தலைமைகள் கையாளலாம். 


நிலைமை இவ்வாறிருக்க,  திடீரென அதுவும் அரசின் தலைமைக்கட்சியிடமிருந்தே அறிக்கை வெளிவருவது பிரச்சினைகளை திசைதிருப்பவா என்ற கேள்விக்கு வழிவிட்டுள்ளது. 


பிக்பாஸ் வீட்டிலிருந்து போட்டியாளர்களை வெளியேற்றுவதற்கு சக போட்டியாளர்கள் சில யுக்திகளை கையாள்வதுபோல, அரச கூட்டணியிலிருந்து கம்மன்பிலவை கழற்றிவிடுவதற்கு பஸிலின் சகாக்கள், இவ்வாறான நகர்வு மூலம் முயற்சிக்கின்றனரா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. 


தென்னிந்தியாவில் மட்டுமல்ல தமிழர்கள் வாழும் நாடுகளிலெல்லாம் சிறந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக ‘பிக்பாஸ்’ இருந்தது - இருந்துவருகின்றது. 


‘பிக்பாஸ்’ வீட்டுக்குள் நடிகர்கள், வில்லன்கள், காமெடியன்கள், சுயநலவாதிகள், பொதுநலவாதிகள் என பல்வேறு குண அம்வங்களைக்கொண்டவர்கள் போட்டியாளர்கள் இருக்கின்றனர். அதுபோலவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தில் வலதுசாரிகள், இடதுசாரிகள், இனவாதிகள், மதவாதிகள், முற்போக்கு வாதிகள், தேசப்பற்றாளர்கள் என பல்வேறு தரப்பினரும் அங்கம் வகிக்கின்றனர்.


‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் ‘பிக்பாஸ்’ யார் என்பது எவருக்கும் தெரியாது. அது சிதம்பர ரகசியமாக பேணி பாதுகாக்கப்பட்டுவருகின்றது. ஆனால் இலங்கை அரசாங்கத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சதான் ‘பிக்பாஸ்’.  20ஆவது திருத்தச்சட்டம் நிறைவேறிய பின்பு சர்வபலமும் அவருக்கு வந்துவிட்டது. எனவே, எவரும் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது என்ற நிலையும் காணப்படுகின்றது.


அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் கம்மன்பில, விமல்வீரவன்ஸ ஆகிய இருவருக்கும், மொட்டு கட்சியிலுள்ள பஸில் அணி உறுப்பினர்களுக்கும் இடையில் முறுகல் நிலை நீடித்துவருகின்றது. இவ்விருவரும் பஸில் ராஜபக்சவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிவருகின்றமையே முரண்பாட்டுக்கு பிரதான காரணமாகும். 


இந்த பகையால் வாய்ப்பு கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் இவிவிருவரையும் பஸிலின் சகாக்கள் வெளுத்து வாங்குவது வழமை. மொட்டு கட்சியின் தலைமைத்துவம் குறித்து விமல் வீரவன்ஸ வெளியிட்ட கருத்தால் அவரை மன்னிப்பு கேட்டுமாறுகூட கடும் அழுத்தங்களை மொட்டுக்கட்சி பிரயோகித்தது.  பதிலுக்கு விமல் '12' அணியை உருவாக்கினார். 


தற்போது எரிபொருள் விவகாரத்தை பயன்படுத்தி கம்மன்பிலவின் தலை குறிவைக்கப்பட்டுள்ளது.


பிக்பாஸ் வீட்டிலிருந்து அதாவது அமைச்சரவையில் இருந்து கம்மன்பிலவை வெளியேற்ற வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. எனவே, தாமாக முன்வந்து கம்மன்பில பதவி துறப்பாரா, அல்லது வெளியேற்றப்படுவாரா என பலரும் கேட்கின்றனர். 


அதேவேளை, கம்மன்பிலவுக்கு எதிராக எதிர்க்கட்சி நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை முன்வைத்தால்கூட ,அதற்கு மொட்டு கட்சி உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்கும்பட்சத்தில் அது கம்மன்பிலவுக்கு ஆப்பாக அமைந்துவிடும். 


ஆக தருணம்பார்த்து கம்மன்பிலமீது பஸிலின் சகாக்கள் அரசியல் கணைகளைத்தொடுத்துள்ளனர். எனினும், நெருக்கடியான சூழ்நிலைகளில் ஜனாதிபதிக்கு கம்மன்பில விசுவாசமாக செயற்பட்டுள்ளதால் கம்மன்பிலவுக்கு எவ்வித நெருக்கடியும் வராது என  உள்வீட்டுத் தகவல்கள் சொல்கின்றன. 


கம்மன்பில தாமாக பதவி துறந்தால் மட்டுமே வெளியேற வாய்ப்பு உள்ளது. இல்லையேல் அவர் காப்பாற்றப்படுவார். பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பார்.


கம்மன்பிலமீது கைவைத்தால் விமல் குழம்புவார். விமல் குழப்பினால் தேசிய வாத அமைப்புகள் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கும். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அது அரசுக்கு மேலுமொரு அடியாக அமையும். எனவே, கம்மன்பிலவின் பதவிக்கு ஆபத்து வராது என்பது உறுதி. 


எனவே, எரிபொருள் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள பிரச்சினையை திசை திருப்பவா அல்லது தாமாகவே விலை அதிகரிப்பை செய்துவிட்டு , அதனை மீளப்பெற்று மக்கள் நலன் கொண்ட அரசு என காண்பிப்பதற்கான நாடகம் திடீர் அறிக்கைமூலம் அரங்கேற்றப்படுகின்றதா என்ற சந்தேகமும் ஏற்படுகின்றது.  அடுத்துவரும் நாட்களில் நடைபெறும் அரசியல் சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டே உண்மை என்னவென்பதை அறியக்கூடியதாக இருக்கும்.


ஆர்.சனத்

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar