நிலையான கொள்கையற்ற காங்கிரஸ்

 


இன்றைய வீரகேசரி – 30.05.2021

***************************************


நிலையான கொள்கையற்ற காங்கிரஸ்

எம்.எஸ்.தீன் -


முஸ்லிம் காங்கிரஸிற்கு எந்தவொரு விவகாரத்திலும் நிலையான கொள்கை கிடையாதென்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் பற்றிய பிரச்சினையாக இருந்தாலும், முஸ்லிம்களின் சுயநிர்ணய அதிகாரம் பற்றிதாக இருந்தாலும், நாட்டின் பொருளாதாரம், அரசியல் யாப்பு தொடர்புடையவையாக இருந்தாலும் அக்கட்சிக்கு நிலையான கொள்கை கிடையாது என்பதனை அக்கட்சியின் தீர்மானங்களும், பாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகளும் எடுத்துக் காட்டுகின்றன.


வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்தாலும் அல்லது தனித்தனியே பிரிந்தாலும் முஸ்லிம்களுக்கு தனியான அரசியல் அதிகார அலகு அமைய வேண்டுமென்று கட்சியின் ஆரம்ப காலத்தில் தெரிவிக்கப்பட்டன. ஆயினும், இக்கொள்கை சுருங்கி முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட தென்கிழக்கு அலகு கோரிக்கை முன் வைக்கப்பட்டது. பின்னர் அம்பாரை மாவட்டத்தில் கரையோர பிரதேசங்களை உள்ளடக்கிய கரையோர மாவட்டம் உருவாக்கப்பட வேண்டுமென்று கொள்கை மாறியது. முஸ்லிம்களுக்கு தனிஅதிகார அலகு, தென்கிழக்கு அலகு, கரையோர மாவட்டம் என்பது தேர்தல் காலங்களில் மாத்திரம் பயன்படுத்தப்படும் பதங்களாக அக்கட்சிக்கு இருந்ததேயன்றி, கொள்கையாக இருக்கவில்லை. 

கடந்த பாராளுமன்ற தேர்தலில் கல்முனையை பாதுகாக்க வேண்டுமென்ற கோசத்தை முன் வைத்து முஸ்லிம் வாக்காளர்களுக்கு உணர்ச்சியூட்டினார்கள். எதிர்வரும் தேர்தலுக்கு இன்னுமொரு புதிய கண்டு பிடிப்பாக கோசமொன்றினை முஸ்லிம் காங்கிரஸ் முன் வைக்கும். 


முஸ்லிம்களுக்கு காணி, மதவிழுமியங்களுடன் தொடர்புடைய பல பிரச்சினைகள் உள்ளன. ஆயினும், முஸ்லிம் காங்கிரஸ் மௌனமாகவே இருக்கின்றது. 

அரசியல் யாப்பில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை எடுத்துக் கொண்டால் முஸ்லிம் காங்கிரஸ் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட திருத்தங்களுக்கு ஆதரவு அளித்தே வந்துள்ளது. ஆட்சியாளர்களுடன் நெருக்கமான உறவை வைத்துக் கொள்வதற்கும், அமைச்சர் பதவிகளையும், வேறு சொகுசுகளையும் அனுபவித்துக் கொள்வதற்குமாகவே அரசியல் யாப்பில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு ஆதரவு வழங்கி வந்துள்ளது. இதனால் அக்கட்சிக்கு கொள்கை என்பதனை விடவும் ஆட்சியாளர்களுடன் உறவைப் பேணிக் கொள்வதே கொள்கையாகவுள்ளது. சமூகமும், ஜனநாயகக் கொள்கைளும் சிதைவடைந்து போனாலும் கவலை கொள்ளாததொரு நிலைப்பாட்டிலேயே அக்கட்சியின் அரசியல் இருக்கின்றது.


மாகாண சபைகளின் அதிகாரங்களில் பலவற்றை மத்திய அரசாங்கம் தமதாக்கிக் கொள்வதற்காக கொண்டு வரப்பட்ட திவிநெகும சட்ட மூலத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாக வாக்களித்தது.

1978ஆம் ஆண்டின் அரசியல் யாப்பில் ஜனாதிபதி பதவியில் ஒருவர் இரண்டு தடவைக்கு மேல் பதவி வகிக்க முடியாதென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சரத்தை இல்லாமல் செய்து ஒருவர் எத்தனை தடவையும் ஜனாதிபதிப் பதவியை வகிக்க முடியுமென்று மஹிந்தராஜபக்ஷ ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 18வது திருத்தச் சட்ட மூலத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளித்தது. இதன்போது கண்களை திறந்து கொண்டு பாதாளத்தில் விழுந்தாக ரவூப் ஹக்கீம்; தெரிவித்திருந்தார். 


மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த போது  ஒருவர் இரண்டு தடவைகளுக்கு மேல் ஜனாதிபதி பதவியை வகிக்க முடியாதென்றும், ஜனாதிபதிக்கு இருந்த நிறைவேற்று அதிகாரத்தை குறைத்து, பாராளுமன்றத்திற்கு அதிகாரங்களை வழங்குவதற்காகவும் கொண்டுவரப்பட்ட 19வது திருத்தச் சட்ட மூலத்திற்கும் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளித்தது. 


18வது திருத்தச் சட்ட மூலத்தினால் ஏற்பட்ட பாவத்தை கழுவதற்குரிய பிராயச்சித்தமாகவே 19வது திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவளித்தாக ரவூப் ஹக்கீம் வியாக்கியானம் வேறு செய்திருந்தார். ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் 18வது திருத்தத்தின் போது மஹிந்தவின் அரசாங்கத்தில் பங்காளியாக இருந்ததைப் போன்று, 19வது திருத்தச் சட்ட மூலத்தின் போது மைத்திரியின் அரசாங்கத்தில் பங்காளியாக இருந்தது. இதன் மூலம் முஸ்லிம் காங்கிரஸிற்கு கொள்கை என்பதனை விடவும் தாம் அங்கம் வகிக்கும் அரசாங்கத்தினால் கொண்டு வரப்படும் சட்ட மூலத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டுமென்பதே முதற்பணியாக இருந்துள்ளது என்பது புலனாகின்றது. 

18வது மற்றும் 19வது திருத்தச் சட்டங்களின் போது முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தில் பங்காளியாக இருந்தமையால்தான் அச்சட்ட மூலங்களுக்கு ஆதரவு அளித்து என்பது கூட 20வது திருத்தச் சட்ட மூலத்தின் போது பொய்த்துள்ளது. முஸ்லிம் காங்கிரஸ் ஆளுங் கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் அரசாங்கத்தினால் கொண்டு வரப்படும் சட்ட மூலங்களுக்கு ஆதரவு வழங்கும் என்பது தெளிவாகியுள்ளது. ஒரு சட்ட மூலம் அரசாங்கத்தினால் கொண்டுவரப்படுவதானது முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பல வரப்பிரசாதங்களை கொட்டும் அருளாகவே இருந்து வருகின்றது. 


20வது திருத்தச் சட்ட மூலம் ஜனாதிபதிக்கு மீண்டும் முழுமையான நிறைவேற்று அதிகாரங்களை வழங்குவதற்காக கொண்டு வரப்பட்டது.

20வது திருத்தச் சட்ட மூலத்திற்கு ரவூப் ஹக்கீம் எதிராக வாக்களித்த போதிலும், கட்சியின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்தார்கள். இதனால் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்து கட்சியின் ஆதரவாளர்கள் பலத்த முரண்கருத்துக்களை முன் வைத்தார்கள். தலைவரின் அனுமதியுடனே ஆதரவாக வாக்களித்தோம் என்று பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தார்கள். ஒழுக்காற்று நடவடிக்கை பற்றியும் பேசப்பட்டது. முடிந்தால் எங்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்கலாமென்று பாராளுமன்ற உறுப்பினர்கள் சவால்விடுத்தார்கள். ஒழுக்காற்று நடவடிக்கை என்ற பேச்சு மட்டுமே இருந்தது. எந்தவொரு நடவடிக்கையையும் ரவூப் ஹக்கீம் எடுக்கவில்லை. இதனால், ரவூப் ஹக்கீம் மீது சந்தேகங்கள் முன் வைக்கப்பட்டன. அந்த சந்தேகங்கள் கொழும்புதுறை முகநகர் சட்ட மூலத்தின் பின்னர் வலுத்துள்ளது.

கொழும்புத்துறைமுக நகர் சட்ட மூலத்திற்கு பௌத்த தேரர்களும், பௌத்த அமைப்புக்களும் அரசாங்கத்தில் உள்ளவர்களில் சிலரும், எதிர்க்கட்சியும் பலத்த எதிர்ப்பை தெரிவித்தனர். ரவூப் ஹக்கீம் கூட இச்சட்ட மூலத்தை விமர்சனம் செய்திருந்தார். இதனால், ரவூப் ஹக்கீம் இச்சட்ட மூலத்திற்கு எதிராகவே வாக்களிப்பார் என்று நம்பப்பட்டது. 


இதே வேளை, இச்சட்ட மூலத்திற்கு ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டையே முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்டிருந்தார்கள்.

ஆயினும், முஸ்லிம் காங்கிரஸினால் மேற்படி சட்ட மூலத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்று தீர்மானம் எடுக்கவில்லை. தீர்மானம் எடுப்பதற்கு உயர்பீடம் கூடிய போதிலும், அங்கு ஏற்பட்ட குழப்பநிலையில் முடிவுகள் எடுக்கப்படவில்லை. தலைவரிடம் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டது. இந்நிலையில் கூட ரவூப் ஹக்கீம் கொழும்புத்துறைமுக சட்ட மூலத்திற்கு எதிரான நிலைப்பாட்டையே எடுப்பார். இதனால், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், ரவூப் ஹக்கீமுக்கும் இடையே பலத்த முரண்பாடுகள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும், ரவூப் ஹக்கீமின் முடிவு யாரும் எதிர்பாராத வகையில் அமைந்தது. ரவூப் ஹக்கீம் உட்பட கட்சியின் ஏனைய நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் கொழும்புத்துறைமுக நகர் சட்ட மூலத்தின் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. 


கொழும்புதுறைமுக நகர் சட்ட மூலத்தில் முஸ்லிம்களுக்கு நன்மையானதும், தீமையானதும் உள்ளதால் நாங்கள் நடுநிலை வகித்தோம் என்று முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருந்தார். அப்படியாக இருந்தால் அவற்றை பாராளுமன்றத்தில் தெரிவித்துவிட்டு நடுநிலை வகித்திருக்க வேண்டும். 

ஆனால், அவ்வாறு நடைபெற்றிருக்கவில்லை. ஆகவே, 20வது திருத்தச் சட்ட மூலம் குறித்து முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சொன்னதுதான் உண்மை என்று நம்பும் நிலையை வலுப்பெறச் செய்துள்ளது. 


இதே வேளை, கொழும்புதுறைமுக சட்ட மூலத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் நடுநிலை வகித்தமை மூலமாக ரவூப் ஹக்கீம் பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளார் என்பதை மட்டுமே தற்போதைக்கு புரிந்து கொள்ளலாம். 

இதில் கட்சியின் கொள்கை அடிப்படையிலான தீர்மானங்கள் எதுவுமில்லை.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்