BREAKING NEWS

கல்முனைக்குடியும் கல்முனையும்

 


:::::::::::::*::::::::*::::::::::::::::::::::::::::::::::::::

அரங்கம் இணையத்தளதளத்தில் தம்பியப்பா கோபலகிருஸ்ணன் அவர்கள் எழுதிய கட்டுரையினை வாசித்த போது இந்த கட்டுரையினை எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது...

------------------------------------------------ எம்.எம்.றியாஸ்

            @3.00am

பலர் தொடாத பக்கமாகவும் அரசியல் வாதிகள் அடிக்கடி தொடுகின்ற பக்கமாகவும் கல்முனை விவகாரம் காணப்பட்ட போதிலும் தம்பியப்பாவின் கட்டுரையினை வாசிக்கும் போது எழுந்த கேள்விக் கணைகளுக்கு விடை தேடிப் புறப்பட்டேன்...


கல்முனையும் கல்முனைக் குடியும் ஒன்றா வேறுவேறா? ?


தம்பியப்பாவின் கருத்துப்படி கல்முனை என்பது தாளவட்டுவான் வீதியிலிருந்து தரவைப் பிள்ளையார் வீதி வரை எனக் குறிப்பிடுகின்றார். அதற்கு அவர் வைக்கும் ஆதாரம் கிராம சேவக பிரிவுகளுக்கு வைக்கப்பட்டுள்ள பெயர்கள்.


கல்முனைக் குடி என்பது தரவைப் பிள்ளையார் வீதியிலிருந்து ஸாஹிறாக் கல்லூரி வரையானது என்று கூறும் அவர் கல்முனை வேறு கல்முனைக் குடி வேறு என்று சுட்டிக்காட்டுகிறார்.


இந்த விடயமாக முஸ்லீம்கள் தமது வர்த்தகம் செய்யும் பிரதேசம் கல்முனை என்றும் தாம் குடியிருக்கும் பிரதேசம் கல்முனைக்குடி என்றும் குறிப்பிடுகின்றனர்.


இந்த இரு வேறுபட்ட இரு சமூகத்தவர்களின் கருத்துக்களையும் வரலாற்று ரீதியாகவும் சட்ட ஆவணங்கள் ரீதியாகவும் எடுத்துக் காட்டுக்கள் மூலமாகவும் ஆராய்ந்து பார்ப்போம்.


கல்முனை வஸார் பகுதியில் குடியிருப்புக்கள் பெரிதாக இருக்கவில்லை என்று கூறப்படும் அதேவேளை மக்கள் குடியிருந்த கடற்கரைப் பள்ளிப் பிரதேசத்தில் 1520களில் கடற்கரைப் பள்ளிவாசல் நிரமாணிக்கப்பட்டதாகவும் ஆங்கிலேயரின் ஆட்சிக்குப் பின்னரே கல்முனை பஸார் பிரதேசத்தினை நோக்கி மக்கள் நகரத்தொடங்கியதாகவும் கல்முனையின் தொண்மை வரலாறு கூறுகிறது.


17ம் நூற்றாண்டில் கல்முனை ஒரு சிறிய குடியேற்றமாகவே காணப்பட்டதாகவும் அக்காலத்தில் கத்தோலிக்கர்கள் பெரும் செல்வாக்கு மிக்கவர்களாகவும் திகழ்ந்துள்ளனர்.


முஸ்லீம்கள் வாழும் இடங்களில் தங்களுக்கான பள்ளிவாசல்களை அமைத்து வணங்குபவர்களாகக் காணப்பட்டுள்ளனர். அந்தவகையில் கல்முனை நகர்பள்ளிவாசல் 1834ம் ஆண்டு பக்கீர் தம்பி மரைக்கார் பிச்சை தம்பி மரைக்கார் ஆகிய இரண்டு முஸ்லிம் பெரியார்களின் காணியிலேயே நிர்மாணித்தனர். இதனை 1854ம் ஆண்டின் PP 294ம் இலக்க வரைபடத்தின் மூலம் கண்டு கொள்ளலாம். அதே வேளை இந்த நகர்பகுதியில் தமிழ் மக்களுக்கான எந்த வணக்க வழிபாட்டு தளங்களும் இன்றுவரை இருக்கவில்லை என்பது வரலாற்றினை தேடிப்பார்க்கின்ற போது புலப்படுகிறது. இந்த வரலாற்றுச் சான்று மூலம் பார்க்கும் போது கல்முனை நகர்பகுதி முஸ்லீங்கள் வசமிருந்திருக்கறது என்பது புலப்படுகிறது.


மேலும் 1952ல் இந்தியர் பாக்கிஸ்தானியர் குடிவரவு குடியகல்வு சட்டத்தினை நிறைவேற்றியதன் காரணமாக கல்முனை வசார் பகுதியில் வர்த்தகம் செய்து வந்த இந்தியர்களும் பாக்கி ஸ்தானியர்களை அவர்களது வர்த்தக நிலையங்களையுமய நிலங்களையும் உள்ளூர் வாசிகளிடம் விற்று விட்டு தமது சொந்த நாட்டிற்குச் சென்றனர். இதனால் வியாபார நிலையங்களின் பெரும் பகுதி முஸ்லீம்கள் வசமாகியது என்ற வரலாற்று தடயத்தோடு கட்டுரையாளரின் விடயத்திற்கு வருவோம்...


1897.02.19ம் திகதி அரச வர்த்தமானி மூலம் கல்முனைக்கான சனிட்டரி போட் உருவாக்கப்பட்டது. இதில் கல்முனைக்கான எல்லையாக தாளவட்டுவான் வீதியில் இருந்து சாய்ந்தமருது (ஸாஹிறாக் கல்லூரி) வீதி என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை கட்டுரையாளரும் ஏற்றுக் கொள்கிறார் இதனை திட்டமிட்ட சதி என்கிறார். இந்த சனிட்டரி போட் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபரின் தலைமையில் இயங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆவணத்தில் ஓரிடத்திலும் தரவைப் பிள்ளையார் வீதி கல்முனைக்கான எல்லையாக குறிப்பிடப்படவில்லை.


1920ல் கல்முனை உள்ளூர் சபை (Local Board) உருவாக்கப்பட்டது. இந்த சபையும் ஏற்கனவே குறிப்பிடும் சனிட்டரி போட்டின் எல்லையையே குறிப்பிடுகிறது. இதில் கூட கல்முனையின் எல்லையாக தரவைப் பிள்ளையார் வீதியினைக் குறிப்பிடவில்லை. இந்த சபையும் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபரின் தலைமையில்தான் இயங்கி வந்தது.


1946ல் கல்முனை பட்டின சபை உருவாக்கப்பட்டது அப்போதும் கல்முனையின் எல்லையானது தாளவட்டுவானில் இருந்து ஸாஹிறாக் கல்லூரி வீதி வரை வரையறுக்கப்பட்டிருந்தது. 


இது இவ்வாறிருக்க எப்படி கட்டுரையாளர் ஆதாரமற்ற தகவலைக் கொண்டு கல்முனை வேறு கல்முனைக் குடி வேறு என்று நிறுவ முடியும்.


1946ல் உருவாக்கப்பட்ட இந்த பட்டின சபை ஏழு வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அதில் 5 வட்டாரங்களில் முஸ்லீம்களும் 2 வட்டாரங்களில் தமிழர்களும் வாழ்ந்தனர். இந்த 7 வட்டாரங்களிலும் 6904 பேர் பதிவு செய்யப்பட்டிருந்தனர். இதில் 5131பேர் முஸ்லீம்களும் 1773 பேர் தமிழர்களுமாவர். 


கட்டுரையாளர் காட்ட முனையும் கல்முனையும் கல்முனைக் குடியும் வேறு வேறு என்ற விடயத்திற்கு ஆதாரமாக அவர் கொண்டுவருவது கிராம சேவகப் பிரிவுகளுக்கு இடப்பட்டிருக்கும் பெயரினை கொண்டு என்பது புலனாகிறது. 


1978ற்கு முன்னர் கல்முனையில் மொத்தமாக 17 கிராமசேவகப் பிரிவுகளும் சாய்ந்தமருது 6 கிராமசேவகப் பிரிவுகளும் அடங்கலாக 23 கி.சே.பி காணப்பட்டுள்ளன. 


1989ற்கு பின்னரே கல்முனை சாய்ந்தமருது அடங்கலாக மொத்தமாக 76 கிராம சேவகப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 


கல்முனைப் பிரதேச செயலகப் பிரிவில் "கல்முனை"  எனப் பெயர் குறிப்பிடப்படும் இடம் மட்டும்தான் கல்முனைக்கு சொந்தமானது ஏனைய பெயர்கள் கொண்டு அழைக்கப்படுபவை கல்முனைக்கு சொந்தமற்றவை என கட்டுரையாளர் சொல்ல முனைகிறார். 

 

எடுத்துக்காட்டுக்கா சில பிரதேச செயலகங்களை எடுத்து நோக்கினால்


சம்மாந்துறை 51 கிராமசேவகப் பிரிவுகளைக் கொண்ட ஒரு பிரதேச செயலகம் அங்கு 01 தொடக்கம் 14 வரை சம்மாந்துறை என அழைக்கப்படுகிறது. அதற்காக சம்மாந்துறை என அழைக்கப்படும் கிராமசேவகப் பிரிவு மாத்திரம்தான் சம்மாந்துறைக்கு சொந்தமானது  மற்றயவை சம்மாந்துறைக்கு சொந்தமற்றவை எனக் கூற முடியுமா?

அதில் மட்டக்களப்பு தரவை என்ற பெயருடனும் கிராம சேவகப் பிரிவு அழைக்கப்படுகிறது. ஆகவே இந்த கிராம சேவகப் பிரிவு மட்டக்களப்புக்குச் சொந்தமானது அது சம்மாந்துறைக்கு சொந்தமானதல்ல எனக் கூற முடியுமா?


இதில் ஒன்றைக் கவனிக்க வேண்டும் கல்முனையின் எல்லை தாளவட்டுவானில் இருந்து ஸாஹிறாக் கல்லூரி வரை என்கிறது முஸ்லிம் தரப்பு.  இல்லை தாளவட்டுவானில் இருந்து தரவைப் பிள்ளையார் கோயில் வரை எனக் கூறுகிறது தமிழ்த் தரப்பு.


எப்போதும் ஆட்சி செய்பவன் நிருவாகம் செய்ய விரும்புபவன் ஒரு பெரும் நிலப்பினையே கோருவான்.  ஆனால் கல்முனையில் அது விசித்திரம். பெரும் நிலப்பரப்பு வேண்டாம் தரவைப் பிள்ளையார் வீதியுடன் போதும் எனக் ஒரு நிருவாகப் பரப்பினைக் குறுக்கிக் கொள்வதில்தான் இந்தப் பிரச்சனையின் தொடக்கப்புள்ளி உள்ளது.


இரு சமூகத்தவர்களும் இந்தளவுக்கு முட்டி மோதுவதற்கு காரணம் கல்முனை சந்தை உட்பட கல்முனை பசார் யாருக்கு சொந்தம்.  என்பதுதான் இங்குள்ள பிரச்சினை.


தரவப் பிள்ளையார் வீதியிலிருந்து தாளவட்டுவான் வரையான பிரதேசத்தில்தான் கல்முனை பஸார் உட்பட கல்முனை பிரதேசசெயலகம் கல்முனை பொலிஸ் நிலையம். கல்முனை உயர் நீதிமன்றம், ரெலிகொம், கல்முனை ஆதார வைத்தியசாலை, கல்முனை உப பிரதேச செயலகம், கார்மேல் பாத்திமா கல்லூரி,உவெஸ்லி உயர்தரப் பாடசாலை,கல்முனை நூலகம், கல்முனை மாநகரசபை,மாகாண சுகாதார பிராந்திய காரியாலயம், வலயக் கல்வி அலுவலகம், மாகாண நீர்ப்பாசனத்  திணைக்களம், மத்திய நீர்ப்பாசனத் திணைக்களம், கடற்றொழில் மீன்பிடித் திணைக்களம், சிறுவர் நன்னடத்தை திணைக்களம், கூட்டுறவுத் திணைக்களம், சந்தாங்கேணி மைதானம், பஸ் இஸ்ராண்ட்,பஸ் டிபோ, காணிப்பதிவகம், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை வங்கிகள் அத்தனையும் இவ்வாறு ஒரு பிரதேசத்தின் அரச தனியார் நிறுவனங்கள் அத்தனையும் இங்கு குறிப்பிடப்படும் இரண்டு சமூகங்களும் கோரி நிற்கும் பிரதேசத்தில்தான் அமைந்துள்ளன. இதனால் இந்தப் பிரதேசத்தினை இரு சமூகங்களும் விட்டுக் கொடுக்க தயாரில்லாத நிலையில் இருக்கும் நிலையினை கருத்தில் கொண்டு இதனை அரசியல் வாதிகள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.


அப்படியானால் கல்முனையைப் பிரிக்க முடியாதா? இது தொடர் கதையா என்றால் அதுதான் உண்மை...


சரி இவை தவிர கல்முனையினைப் பிரிப்பதற்கான வேறுதடைகளும் உண்டா? எனக் கோட்பின் ஆம் என்றே கூற முடியும்.


இன ரீதியாக பிரிப்பதில் உள்ள தடைகள்...


கல்முனைப் பிரதேசத்தினைப் பொறுத்தவரை ஒரு சரியான இயற்கை நியதிகளுடன் கூடிய எல்லைப் பிரிப்பு இல்லை.


தெற்கு எல்லையான தரவைப் பிள்ளையார் கோயில் என்பது கல்முனை அக்கரைப்பற்று வீதிக்கு மேற்காக அமையப்பெற்றுள்ளது. ஆனால் பிரதான வீதியின் மறுபுறத்தில் கிழக்கு நோக்கி கோயிலுக்கு முன்னால் இந்த தரவப் பிள்ளையார் வீதி அமைந்துள்ளது.  இந்த வீதியில் எந்த தமிழ்க் குடும்பமும் இல்லை. இந்த வீதியில்தான் கல்முனை கடற்கரை பள்ளிவாசலும் அமைந்துள்ளது. இந்த வீதியினை தமிழர்கள் தரவைப் பிள்ளையார் வீதி என அழைக்கின்றனர். முஸ்லீம்கள் கடற்கரை பள்ளிவீதி என அழைக்கின்றனர் ஒரு வீதி இரு பெயர்...


ஆளுக்காள் 29 கிராம சேவகப் பிரிவுகளைப் பிரித்துக் கொண்டு ஆழுகிறார்கள். ஆனால் அவை அனைத்தும் கற்பனைக் கோடுகளே...


தமிழ் மக்கள் அனைவரும் கல்முனை உப பிரதேச செயலகத்தாலும் முஸ்லிம் மக்கள் அனைவரும் கல்முனை பிரதேச செயலகத்தாலும் நிருவகிக்கப்படுகிறார்கள் ஆனால் இரண்டு பிரதேச செயலக எல்லைக் கிராம சேவகப் பிரிவுகளில் மக்கள் இரண்டறக் கலந்து வாழ்கிறார்கள்.  இன ரீதியாக பிரிந்து நிருவகிக்கப்பட்டாலும் நில ரீதியாக பிரிக்கப்படாமல் வாழ்கிறார்கள். 

இது ஏனைய பிரதேசங்கள் போல் இலகுவாக பிரிக்கக் கூடிய விடயமும் அல்ல


எப்படி குடியிருப்பு நிலங்களை தனித்தனியே பிரிக்க முடியாதோ அதே போன்றே வயல் நிலங்களையும் பிரிக்க முடியாதுள்ளது. இரண்டு சமூகத்தவர்களின் வயல் நிலங்களும் மாறி மாறி காணப்படுகின்றன.


எந்தளவுக் கெனின் இரண்டு ஏக்கர் வயற்காணி தமிழ் மகனின் பெயரிலும் முஸ்லிம் மகனின் பெயரிலும் எழுதப்பட்டிருக்கும் தமிழ் சகோதரன் வயலைச் செய்யும் போது முஸ்லிம் சகோதரன் இருவருக்கும் சொந்தமான வேறு ஒரு வயலைச் செய்வார். அடுத்த முறை தமிழ் சகோதரன் செய்த வயலை முஸ்லிம் சகோதரனும் முஸ்லிம் சகோதரன் செய்த வயலை தமிழ் சகோதரனும் மாறி மாறி வேளாண்மை செய்வார்கள் இருவருக்குக்கு பிரிக்க முடியாத இரு வயலும் சொந்தமானதாகக் காணப்படும். இதனை "தட்டுமாறும் வயல்" என அழைப்பர். இந்த நடைமுறை அன்றிருந்து இன்றுவரை தொடர்கிறது. இந்த நடைமுறை வேறு பிரதேசங்களில் இல்லை.


 கல்முனைப் பிரந்திய மாகாண சுகாதாரப் பணிமனையில் ஒரு தமிழ் அதிகாரி நிருவகிக்கிறார். அதே போல் கல்முனை வலயக் கல்வி அதிகாரியாக ஒரு தமிழ் மகன் நிருவகிக்கிறார். இதற்காக முஸ்லீம்கள் யாரும் போர்க்கொடி தூக்க வேண்டிய அவசியமில்லை. அரச நிறுவனங்களில் அரசாங்கம் நியமிக்கும் அதிகாரிகள் நிருவகிப்பர் இதற்கு இனவாத சாயம் பூசுவது மடமைத்தனம்.


ஆகவே அண்ணன் தம்பிகளாக வாழும் இரு சமூகத்தினையும் அதிகார வேட்கையில் பிரித்துவிடாமல் எல்லோரும் சேர்ந்து ஒற்றுமையாய் வாழ வழியைத் தேடுவோம் இல்லை பிரியத்தான் வேண்டுமென்றால் இன ரீதியாக பிரிக்காமல் அவ்வாறு பிரித்தால் இரண்டு பிரதேச செயலகங்களும் நிலத்தொடர்பற்ற பிரதேசங்களாக மாறுவதுடன் இரண்டு இனங்களும் அடிகடி மோதிக் கொள்ளும் மயான பூமியாகவும் மாறும்.  


ஆகவே இரண்டு சமூகங்களும் மனந்திறந்து போசி ஒரு இயற்கையான எல்லையினால் இரண்டாக பிரிப்பதோடு இரண்டு சபைகளுக்குள்ளும் இரண்டு சமூகங்களும் சுமூகமாக வாழ வழியைத் தேடுவதோடு எந்த சமூகத்திற்கும் பாதிப்பு வந்திடாமல் இந்த முரண்பாட்டினை அடுத்த சந்ததிக்கும் கடத்தாமல் முடிவுக்கு கொண்டுவர அனைவரும் பாடுபடுவோம்....

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar