BREAKING NEWS

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு


நூருல் ஹுதா உமர் 


அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு 


நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நிலையில் இவ்வாறான கைதுகளை செய்கிறார்கள். எங்களின் தலைவர் தவறு செய்தால் அவரை நீதியின் ஊடாக நிரூபித்து தண்டனை வழங்குங்கள். இவ்வாறான முரட்டு வேலைகளை செய்வது கூடாது. பாராளுமன்ற சிறப்புரிமையை மீறி சபாநாயகரிடம் அனுமதி பெறாமல் கைது செய்த இவ்விடயத்தில் ஜனாதிபதி தலையிட்டு உடனடியாக எங்களின் தலைவர் றிசாத்தை விடுதலை செய்ய முன்வரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினரும், மருதமுனை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அமைப்பாளருமான வை. கலீலுர் ரஹ்மான் தெரிவித்தார். றிஷாட்டை கைது செய்வதாயின் அதே காரணத்தை வைத்து சாந்த பண்டாரவையும் கைது செய்ய வேண்டும்.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்.கைத்தொழில் அமைச்சின் செம்பு பித்தளை வழங்குவதில் எந்த விதத்திலும் அமைச்சரோ பிரதி அமைச்சரோ தொடர்புபடுவதில்லை மாறாக அமைச்சின் அதிகாரிகளே தொடர்புபடுவதாக றிசாட் பதியுதீன் அமைச்சர் பதவியிலிருந்து விலகிய காலத்தில் பதில் கேபினட் அமைச்சராக இருந்த புத்திக பதிரான தெளிவாக குறிப்பிட்டுள்ளார். 


அது மாத்திரமன்றி கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்குமாறு பரிந்துரை செய்து கைத்தொழில் அமைச்சுக்கு கடிதம் அனுப்பியிருப்பது முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் ஒருவரான தற்போதைய மொட்டு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார. றிஷாட்டை கைது செய்ய கரணம் கைத்தொழில் அமைச்சின் அதிகாரிகளால் அனுமதியளிக்கப்பட்டு கொலோசியஸ் நிறுவனத்துக்கு பித்தளைகள் வழங்கும்போது  அந்த அமைச்சின் கேபினட் அமைச்சராக அவர் கடமையாற்றியது. 

இதே தருணத்தில் ரிஷாட் அல்லாமல் வேறு ஒருவர் அந்த அமைச்சுக்கு கேபினட் அமைச்சராக கடமை புரிந்திருந்தால் இப்படி ஒரு விசாரணையே நடந்திருக்காது, அப்படி விசாரணை நேர்மையாக நடந்திருக்குமேயானால் இன்று கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்குமாறு பரிந்துரை செய்து கடிதம் அனுப்பிய மொட்டு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டாரவும் ரிஷாட் கைது செய்யப்பட்ட இரவே கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். அது மாத்திரமன்றி கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகள் வழங்க பரிந்துரை செய்த கடிதங்களில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்கள் கையொப்பமிட்டிருப்பதை ஏன் எவரும் கேள்வி எழுப்புவதில்லை. அவ்வாறு கேள்வி எழுப்பினால் றிஷாட் கைது செய்யபோட்டது போன்று அப்போதைய பாதுகாப்பு அமைச்சராக இருந்த முன்னால் ஜனாதிபதியும் கைது செய்யப்பட்டிருக்க வேண்டுமல்லவா. 


இவையெல்லாம் இருக்க கொலோசியஸ் நிறுவனத்துக்கு கைத்தொழில் அமைச்சினால் அவர்களுக்கு தேவையான செம்புகளில் வெறும் 10 வீதத்தையே வழங்கியிருக்கின்றனர். ஏன் எஞ்சிய 90 வீதத்தை வழங்கியவர்களை தேட மாட்டீர்களா. அவ்வாறு தேடினால் எத்தனை அமைச்சர்களை கைது செய்ய வேண்டி வரும். டெலிகாம் நிறுவனத்திலிருந்து அதிகளவில் செம்புகள் கொலோசியஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பதிரான தெரிவிக்கிறார். டெலிகாம் நிறுவனத்தின் தலைவராக முன்னாள் ஜனாதிபதியின் சகோதரரே பதவி வகித்தார் என்பது நாடறிந்த உண்மை அவருக்கும் பயங்கரவாத தடை சட்டத்தில் நடவடிக்கை எடுப்பார்களா ?


ரிஷாட் பதியுதீனை எந்த விதத்திலாவது பொறிக்குள் சிக்க வைக்க வேண்டும் என்ற கோணத்தில் முயற்சித்த இவர்கள் நீதிமன்றத்தை நாடினால் அவரை தொடர்ந்து சிறைப்படுத்த முடியாது என்பதை நன்குணர்ந்து தான். நீதிமன்றம் சென்றும் நீதியை பெற முடியாதவாறு பயங்கரவாத தடை சட்டத்தில் தடுப்பு காவல் வைத்துள்ளனர்.உண்மை ஒரு நாள் வெல்லும் என கல்முனை மாநகர சபை உறுப்பினர் பீ.எம். ஷிபான் தெரிவித்தார். 


முஸ்லிம் சமூகம் பாதிக்கப்படும் போதெல்லாம் முன்வந்து குரல்கொடுக்கும் ஒருவராக முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீன் இருந்தார். இப்படியான அவரின் குரல்வளையை நசுக்கவே இந்த கைது நடவடிக்கை நடந்துள்ளது. முஸ்லிங்களை காட்டி ஆட்சியை பிடித்தவர்கள். இப்போது ஆட்சியை தக்கவைக்க ஆசாத்சாலி, ஹஜ்ஜுல் அக்பர், றிசாத் பதியுதீன், றிப்கான் பதியுதீன் என தொடர்ச்சியாக கைது செய்கிறார்கள். முறையான மதக் கடமைகளுக்கு கூட இந்த அரசில் அனுமதியில்லை என்பது கவலையான விடயமாகும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மருதமுனை மத்தியகுழு தலைவர் கலீல் முஸ்தபா தெரிவித்தார். 


சாதாரணமாக ஒருவரை கைது செய்வதற்கே மனித உரிமைகள் நிறைய இருக்கிறது ஆனால் ஒரு சிறப்புரிமை கொண்ட பாராளுமன்ற உறுப்பினரை இவ்வாறு கைது செய்தது மிலேச்சத்தனமான செயலாகும். சிறுபான்மை மக்களின் குரலாக ஒலித்த ஒருவரின் குரலை நசுக்க காட்டுமிராண்டி தனமாக கைது செய்துள்ளார்கள். அவரது கைதுக்கு முன்னரான ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது. நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த கடந்த காலங்களில் கடுமையாக உழைத்த ஒரு தலைவரே அமைச்சர் றிசாத். கடந்த அரசில் 52 நாள் நடந்த சட்டவிரோத அரசாங்கத்துக்கு ஆதரவளிக்காமையை காரணமாக கொண்டே இந்த நடவடிக்கைகளை செய்கிறார்கள். இன்று எங்களின் தலைவரின் மகனும் வீதியில் இறங்கி தந்தையின் விடுதலைக்காக போராடுகிறார் என்பதை பார்க்கும் போது மிகவும் கவலையாக உள்ளது என கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.ஐ.எம். அப்துல் மனாப் தெரிவித்தார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar