*முஷர்ரப், தன் தூய்மையை நிரூபிக்க ஹரீஸுக்கு எதிராக போர்க்கொடி தூக்குவாரா...?*
பா.உ முஷர்ரபின் நாடகம் வெளிப்பட்ட புள்ளி 20ம் அரசியலமைப்பு சீர் திருத்தத்தின் போதாகும் என்றால் தவறாகாது. அவர் 20ஐ ஆதரித்தாரா, இல்லையா என்பதையே ஒரு விவாத பொருளாக மாற்றியிருந்தார். நீங்கள் இருபதுக்கு ஆதரவளித்தீர்களா என யாராவது கேட்டால், சில இடங்களில் " ஆம் " என்ற பதிலையும், வேறு சில இடங்களில் " இல்லை " என்ற பதிலையும் சந்தர்ப்பத்தை பார்த்து கூறி வருகிறார். இதனை பார்க்கின்ற போது " திரிஷா உனக்கு தான்டா " என்ற திரைப்பட வசனமே நினைவுக்கு வருகிறது.
இவரின் " ஆம் ", " இல்லை " என்ற பதில்களை கூட சகித்துக்கொண்டு கடந்துவிடலாம், நாம் 20ஐ பா.உ முஷர்ரப் ஆதரித்தார் என கூறினால், அவரது ஆதரவாளர்கள் கத்தி, கோடாரியை தூக்கி கொண்டு சண்டைக்கு வந்துவிடுவார்கள். இதனையே தாங்க முடியாதுள்ளது. நாம், அவர் இருபதை ஆதரித்ததாக கூறுவது, அவர் செய்த பிழையை சுட்டிக்காட்டுவதற்கே. இதுவே எதிர்ப்புக்கான காரணம்.
சில இடங்களில் எம்மை தூற்றிய அதே ஆதரவாளர்கள், அவர் 20ஐ ஆதரித்ததாக கூறும் போது மௌனம் காக்கின்றனர். இன்னும் சொல்லப் போனால் மலர் தூவி வரவேற்கின்றனர். அவ்வாறான பல சந்தர்ப்பங்களையும், விடயங்களையும் சுட்டிக்காட்ட முடியுமாக இருப்பினும், ஒரு சந்தர்ப்பத்தை மாத்திரம் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நேற்று பா.உறுப்பினர் ஹரீஸ் 20ஐ ஆதரித்த பா.உறுப்பினர்கள் 7 ( பா.உறுப்பினர் முஷர்ரப் உட்பட ) பேரும் பிரதமரை சந்திக்க போவதாக பதிவிட்டுள்ளார். அச் சந்திப்பு எதற்கான என்பதை இவ்விடத்தில் பேசுவது பொருத்தமற்றது.
நாம் பா.உறுப்பினர் முஷர்ரப் 20ஐ ஆதரித்ததாக கூறும் போது கோபப்படும் யாருமே, பா.உறுப்பினர் ஹரீஸ் கூறிய போது கோபப்படவில்லை. பிரதமரை சந்திப்பது தங்களுக்கு புள்ளி போட்டு கொள்ளும் ஒன்றல்லவா? எவ்வாறு மறுப்பது? இன்னும் சொல்லப் போனால் பிரதமரை சந்தித்ததை பெருமையாகவும் பகிர்ந்துகொள்வார்கள். பிரதமரை சந்திப்பதை பிழை கூற முடியாது. எவ் அடிப்படையில் பிரதமரை சந்திக்கின்றார் என்பதையே இங்கு சுட்டி காட்ட விரும்புகிறேன்.
பா.உறுப்பினர் முஷர்ரப் இருபதை ஆதரித்தவர்கள் என்ற அடிப்படையில் பிரதமரை சந்திக்கவில்லை என்றால், பா.உறுப்பினர் ஹரீஸின் கூற்றை பகிரங்கமாக மறுப்பாரா? ஒரு போதும் மறுக்க மாட்டார். மறுத்தால் வரப்பிரசாதங்கள் நின்று விடும். இதுவே இவருடைய நிலை. யப்பா.... சிவாஜியையும் மிஞ்சிவிடுவாரோ? பா.உறுப்பினர் முஷர்ரப் மக்களை அடி முட்டாள்களாக நினைத்து, ஏமாற்ற முனைவதை நிறுத்த வேண்டும். ஏதாவது ஒரு கொள்கையில் பயணிக்க வேண்டும்.
*துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,*
*சம்மாந்துறை.*
Post a Comment