கல்முனை பிராந்தியத்தில் இன்று வரை 800 ற்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்கள் என கல்முனை சுகாதார மாவட்ட பணிப்பாளர் டொக்டர் ஜி சுகுணன் தெரிவித்துள்ளதன் மூலம் முழு கல்முனை மாவட்டத்தையும் முடக்காமல் கல்முனை பஸார், சந்தை, கல்முனையின் சில முஸ்லிம் பிரிவுகளை மட்டும் முடக்கியது ஏன் என உலமா கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
டொக்டர் ஜி சுகுணன் அவர்களால் கல்முனையில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் பேசும் போது அவர், அக்கரைப்பற்று பிரதேசத்தில் தொற்று நிலை அளவுக்கு அதிகமாக அதிகரித்ததை தொடர்ந்து அங்கு தனிமைப்படுத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அந்த பிரதேசம் தற்போது தொற்று நிலைமையில் இருந்து நீங்கி வருகின்ற நிலையில் உள்ளதாக சுகுணன் தெரிவித்துள்ளார்.
ஆனால் அக்கரைப்பற்று சந்தையில் கொரோனா தொற்றாளர் கண்டு பிடிக்கப்பட்ட போது முழு அக்கரைப்பற்று உட்பட பாலமுனை வரை லொக் டவுன் செய்யப்பட்டதே தவிர அக்கரைப்பற்றின் சில வீதிகளை மட்டும் மூடவில்லை என்பதை டொக்டர் சுகுணன் சொல்ல மறந்து விட்டாரா?
எம்மை பொறுத்தவரை அக்கரைப்பற்று லொக்டவுன் செய்யப்பட்ட போது அதன் வடக்கில் உள்ள முஸ்லிம் ஊர்களும் மூடப்பட்டது போல் தெற்கில் உள்ள திருக்கோவிலும் லொக் செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாததன் காரணமாக பின்னர் திருக்கோவிலிலும் தொற்றாளர் காணப்பட்டனர்.
அதே போல் பேலியகொட மீன் சந்தையில் கொரோனா தொற்றாளர் காணப்பட்ட போது அந்த சந்தைதான் மூடப்பட்டதே தவிர சந்தைக்கு அருகில் உள்ள களனி சந்தையை கருத்திற்கொண்டு மூடப்படவில்லை.
டொக்டர் சுகுணன் பேசும் போது, கல்முனை நகர பிரதேசத்தில் 150 ற்கு மேற்பட்ட தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்கள் என கூறுகின்றார். அவ்வாறு கல்முனை நகர பிராந்தியம் என்றால் அதன் எல்லை எது என கேட்கிறோம். செய்லான் வீதி தொடக்கம் கல்முனை வாடி வீடு வீதி வரை உள்ள பகுதி கல்முனை நகரம் என்பதை அவர் ஏற்றுக்கொண்டுள்ளாரா? அப்படியாயின் பாபுஜீசுக்கு அப்பால் உள்ள பகுதி கல்முனை நகர் இல்லையா?
கல்முனை கொரோனா தடுப்பு என்பது இனவாத ரீதியிலும், பிரதேச வாதரீதியிலும் பார்க்கப்படுகிறதே தவிர மனிதர்கள் அனைவரையும் ஒரே கண்கொண்டு பார்க்கவில்லை என்ற எமது குற்றச்சாட்டை டொக்டர் சுகுணனின் நடவடிக்கை காட்டுகிறதே தவிர அதனை யதார்த்தபூர்வமாக அவரால் மறுக்க முடியவில்லை. அத்துடன் இவ்வாறு கல்முனையை இனரீதியாக மூடுவதற்கு இன்னமும் ஜனாதிபதி செயலணி அனுமதி கிடைப்பதற்கு முன்பாகவே அவை டொக்டர் சுகுணன், கல்முனை மேயர் அவர்களினால் வேண்டுமென்றே அதுவும் மக்களுக்கு சில மணித்தியாலயங்கள் அவகாசம் வழங்காமல் மூடி அநியாயம் செய்துள்ளனர் என்பது தெரிகிறது.
டொக்டர் சுகுணன் நடத்திய ஊடக மாநாட்டில் இத்தகைய மயக்க கருத்துக்களை அவர் தெரிவித்த போது அங்கு கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர், கல்முனை வர்த்தகர்கள் இத்தகைய கேள்விகளை அவரிடம் கேட்டு தெளிவு படுத்தாமல் மௌனமாக இருந்துள்ளமையானது கவலையான விடயமாகும்.
ஆகவே கல்முனை மாவட்டத்தில் உண்மையான கொரோனா இருந்தால் அதனை இனரீதியாக, பிரதேசவாத ரீதியாக பார்க்காமல் அனைத்து மக்களையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்குமாறு உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.
Post a Comment