BREAKING NEWS

முஸ்லிம் தமிழ் ஒற்றுமைக்கான சாத்தியங்கள் உண்டா?

 
முஸ்லிம் தமிழ் ஒற்றுமைக்கான சாத்தியங்கள் உண்டா?-முபாறக் அப்துல் மஜீத்த‌லைவ‌ர், உல‌மா க‌ட்சி. இல‌ங்கை ம‌க்க‌ள் முக்கோண‌ இன‌வாத‌ பிர‌ச்சினைக‌ளுக்கு முக‌ம் கொடுக்கின்ற‌ன‌ர்.1. த‌மிழ் ம‌க்க‌ளுக்கெதிரான‌ சிங்க‌ள‌ பேரின‌வாத‌ம்.


2. முஸ்லிம்க‌ளுக்கெதிரான‌ த‌மிழ் பேரின‌வாத‌ம்.


3. முஸ்லிம்க‌ளுக்கெதிரான‌ சிங்க‌ள‌ பேரின‌வாத‌ம்.பொதுவாக‌ சிங்க‌ள‌ பேரின‌வாத‌ம் என்ப‌து மொத்த‌ சிறுபான்மை ம‌க்க‌ளுக்கு எதிரான‌து என்ற‌ நிலையில் சிறுபான்மையான‌ த‌மிழ‌ர்க‌ளும் முஸ்லிம்க‌ளும் முர‌ண்ப‌ட்டு நிற்ப‌து சிங்க‌ள‌ பெரும்பான்மைக்கு மிக‌வும் வ‌ச‌தியாகிவிட்ட‌து என்ப‌தை வ‌ர‌லாற்றில் காண‌லாம். இத‌ற்கு விரும்பியோ விரும்பாம‌லோ த‌மிழ்த்த‌ர‌ப்பு துணை போன‌தால் தமிழ‌ருக்கெதிரான‌ சிங்க‌ள‌த்துக்கு முஸ்லிம்க‌ளும் துணை போகும் நிலை ஏற்ப‌ட்ட‌து.
சிங்கள பேரினவாதத்தை எதிர் கொள்ள தமிழ் , முஸ்லிம் ஒற்றுமை வேண்டும் என்ற கருத்து அடிக்கடி புத்திஜீவிகளாலும் சில‌ த‌மிழ் த‌ர‌ப்பு அர‌சிய‌ல்வாதிக‌ளாலும் முன்வைக்கப்பட்டு வருகிறது.  இக்கருத்து உண்மையானதும், அவசியத் தேவையுமானதாகும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் தமிழ் முஸ்லிம் ஒற்றுமையில் சிதைவு ஏற்பட்டதற்கான காரணங்களை சரிவர உள்வாங்காமல் வெறுமனே தமிழ் முஸ்லிம் உறவு பற்றி பேசுவதில் அர்த்தம் இருப்பதாக தெரியவில்லை. அத்துடன் எவ்வாறு இத்தகைய ஒற்றுமையை மீண்டும் சாத்தியமாக்க‌ முடியும் என்பதற்கான நேர‌டியான‌, திற‌ந்த‌  கருத்தாடல்கள் மிக‌வும் குறைவாகவே இருப்பதனால், அதற்கான முயற்சிகளில் புத்திஜீவிகளும் அர‌சிய‌ல்வாதிக‌ளும் முயற்சிப்பது காலத்தின் தேவையாகும்.அந்த‌ வ‌கையில் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை சீர் குலைந்தமைக்கான பிரதான காரணங்களை வ‌ர‌லாற்று ரீதியில் அறிந்து அவற்றை சீர் செய்யாமல்  இத்தகைய ஒற்றுமை என்பது சாத்தியமாகாது என்ற யதார்த்தத்தின் மீதான புரிதலூடாகவே இது ஆராயப்படவேண்டிய ஒன்றாகும். தமிழ் முஸ்லிம் சமூகங்கள் ஒற்றுமைப்படுவதன் மூலமே சிங்களப் பேரினவாதத்தை எதிர்கொள்ள முடியும் என்பது உண்மைதான். அதே வேளை தமக்கு பல பாதகங்களை ஏற்படுத்தும் தமிழ்ப் பேரினவாதத்தை எதிர்கொள்ள முஸ்லிம்கள் யாருடன் இணைவது என்ற கேள்வியும் பலமாக இங்கு எழுந்து நிற்கிறது . ஆக மொத்தத்தில் தமிழ் முஸ்லிம் ஒற்றுமையின் அவசியம் பற்றி ஆராயும் போது பின் வரும் கேள்விகள் நம் முன் நிற்கின்றன . 
- தமிழ்- முஸ்லிம் ஒற்றுமையின் சீர்குலைவிற்கு யார் என்ன காரணம் ? -முஸ்லிம்களின் எதிரி சிங்கள ஆதிக்கம் மட்டுமா ? - இல‌ங்கை முஸ்லிம்கள் அதிகம் பாதிக்கப்பட்டது யாரால். - முஸ்லிம்களின் சுய நிர்ணய உரிமைகளுக்கு தடையாக இருப்பது சிங்கள பேரினவாதமா? அல்லது தமிழ் ஆதிக்கமா?இத்தகைய கேள்விகளுக்கான விடைகளை நடுநிலை நின்று நாம் முத‌லில் ஆராயவேண்டியது அவசியமாகும். 1. தமிழ் முஸ்லிம் ஒற்றுமை சீர்குலைவதற்கு யார், என்ன காரணம் ? இலங்கை வரலாற்றை ஆராயும் போது தமிழ் மக்களும் - முஸ்லிம் மக்களும் மிக பெரும்பாலும் அந்நியோன்யமாக ஒருவருக்கொருவர் உதவியாக வாழ்ந்து வந்ததை சுத‌ந்திர‌த்துக்கு முந்திய‌ வ‌ர‌லாற்றில் காணமுடிகிறது. இடையிடையே தனிப்பட்ட சிறிய தகராறுகள் இடம் பெற்றாலும் அவை பாரிய இனக்கலவரமாக வெடித்ததில்லை.  முஸ்லிம்க‌ளும் த‌மிழ‌ர்க‌ளும் வ‌ட‌க்கு கிழ‌க்கில் இர‌ண்ட‌ற‌ க‌ல‌ந்து வாழாவிட்டாலும் ஒற்றுமை இருந்த‌து.ஆனாலும், தமிழ் மக்களை எதிரிகளாகப் பார்க்கும் சூழலை முஸ்லிம்களிடம் உருவாக்கியவர் சேர் பொன்னம்பலம் இராமநாதன் என்பதை வரலாறு ந‌மக்கு கட்டிக்காட்டுகிறது . இலங்கையைப் பொறுத்த வரை முதல் மனிதன் இந்தப் பூமியில் கால் வைத்தது முதல் பல்லாயிரம் வருடங்களுக்கு மேலான வரலாற்றைக் கொண்ட முஸ்லிம்கள் முஹம்மது நபியின் வருகைக்குப்பின முஸ்லிம்கள் என்றே அடையாளப்படுத்தப்பட்டு வந்துள்ளனர். இலங்கை முஸ்லிம்கள் தமது சமயத்தை கற்பதற்காக தமிழ்நாட்டு முஸ்லிம்களுடன் நெருங்கி வாழந்ததன் காரணமாக அவர்கள் அர‌பு க‌ல‌ந்த‌ தமிழைப் பேசினாலும், தமிழர் என்ற அடைமொழிக்குள் உட்படுத்தப்படாது முஸ்லிம் என்றே  அனைத்து ச‌மூக‌ங்க‌ளாலும் பார்க்கப்பட்டனர். இதற்காக பல சான்றுகளை நாம் வரலாற்றில் காண முடியும் . இந்நாட்டை ஆக்கிரமித்த போர்த்துகேயர்களின் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்கள் பாரிய இனச் சுத்திகரிப்புக்கு முகம் கொடுத்த போது முஸ்லிம்கள் தமிழ் பேசுவோர் என்பதற்காக இந்து,  கிறிஸ்த‌வ‌ தமிழ் மக்கள் போர்த்துக்கேய‌ர்களால் கொல்லப்படவில்லை . அவ‌ர்க‌ள் முஸ்லிம்க‌ளை த‌னியொரு இன‌மாக‌வே பார்த்து தாக்கினார்க‌ள்.


இதனை வைத்து பார்க்கும் போது போர்த்துக்கேய‌ர் கூட சிங்களவர்,  தமிழர், முஸ்லிம்கள் என்ற மூன்று இன‌ வித்தியாசத்தை உணர்ந்திருந்ததனாலேயே இவ்வாறு தமிழ் மக்களிலிருந்து முஸ்லிம்கள் பிரித்தெடுக்கப்பட்டு அழிக்கப்பட்டனர். அதன்பின் 1915 ம் ஆண்டளவில் சிங்கள - முஸ்லிம் கலவரம் ஏற்பட்ட போதும் முஸ்லிம்க‌ள் தமிழ் பேசுவோர் என்பதற்காக, முஸ்லிம்கள் அல்லாத தமிழ் பேசும் த‌மிழ‌ர்க‌ள் சிங்களவர்களால் பாதிக்கப்படவில்லை. இவை அனைத்தும் முஸ்லிம்கள் தனியான இனம் என்பதை தெளிவாக வலியுறுத்தியும் முஸ்லிம்களை இஸ்லாமியத் தமிழர்கள் எனக்கூறினார் பொன்னம்பலம் இராமநாதன் அவர்கள்.  முஸ்லிம்களை, முஸ்லிம்கள் என விழிக்காமல், இஸ்லாமியத் தமிழர் என அவர் விழித்ததை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ளவில்லை . முஸ்லிம்க‌ளை கொன்ற‌ சிங்க‌ள‌ இன‌வாதிக‌ளை இராம‌நாத‌ன் பிரித்தானிய‌ அர‌சோடு வாதாடி அவ‌ர்க‌ளை ம‌ர‌ண‌ த‌ண்ட‌னையில் இருந்து காப்பாற்றினார்.


இதன் காரணமாக ராமநாதன் பொன்னம்பலம் வேண்டுமென்றே முஸ்லிம்க‌ள் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இவ்வாறு செய்ததாக முஸ்லிம் சமூகம் எண்ணியது . இதனால் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் தமிழ் அரசியல்வாதிகளுக்குமிடையில் முறுகல் எற்பட்டது.  இதனைத் தொடர்ந்து முஸ்லிம்கள், தமிழர்களா,  இஸ்லாமியத் தமிழர்களா என வாதப்பிரதிவாதங்கள் அன்று ஏற்பட்டு, க‌டைசியில் இலங்கை முல்லிங்கள் "சோனகர்கள்" என்ற இனம்  புதிய முத்திரை குத்தப்படும் அள‌வு இப்பிரச்சினை வளர்ந்தது. பின்னர் இலங்கை முஸ்லிம்கள் சோனகர்கள் என அழைக்கப்படலாயினர் . பொன்னம்பலம் இராமநாதன் காலத்தில் ஏற்பட்ட இப்பிரச்சினை தமிழ் முஸ்லிம் அரசியல்வாதிகள் மத்தியில் கசப்புணர்வை ஏற்படுத்தியிருந்தாலும், பொது மக்கள் மத்தியில் பாரிய‌ பிரச்சினைகளை எழுப்பவில்லை.  அவர்கள் தங்களை முஸ்லிம்கள் என்றும் தமிழர்கள் என்றும் உணர்ந்த நிலையிலேயே எவ்வித இன பாகுபாடும் இன்றி வாழ்ந்தார்கள்.இவ்வாறு த‌மிழ் பேசும் ம‌க்க‌ள் பிள‌வுற்றாலும் வ‌ட‌க்கு கிழ‌க்கு  முஸ்லிம்களில் சிலர் த‌மிழ‌ரும் முஸ்லிம்க‌ளும் ஓர் இன‌ம் என்ற‌ வ‌கையில்  தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயற்பட்டதையும் நாம் காண்கிறோம்.  அத்துடன் முஸ்லிம் பெரும்பான்மை பிரதேசங்களில் தமிழரசுக்கட்சி வெற்றி பெற்றதையும் காண்கிறோம்.  ஆனபோதும் , 1960 களில் கல்முனையில் சிறிய தமிழ், முஸ்லிம் கலவரமொன்று ஏற்பட்டு இக்கலவரம் வெறும் அடிதடியோடு முடிந்து விட்டது. ஆனாலும், இதன் காரணமாக கல்முனையிலிருந்த தமிழர்கள் சிலர் இடம் பெயர நேரிட்டது. அதேபோல் 13 ம் கொலணியில் வாழ்ந்த பல முஸ்லிம்கள் தமது வீடு வாசல்களை இழந்து வெளியேறி க‌ல்முனையில் குடியேறியதையும் காண்கிறோம் . இன்று வ‌ரை அந்த‌ வ‌டு உள்ள‌து.அத‌ன் பின் போராட்ட‌ இய‌க்க‌ங்க‌ள் உருவாகும் வ‌ரை த‌மிழ், முஸ்லிம் பாரிய‌ மோத‌ல்க‌ள் உருவாக‌வில்லை.  இவ்வாறு முஸ்லிம்களும் தமிழர்களும் தாங்கள் வெவ்வேறு இனங்கள் என்ற புரிதலின் ஊடாக த‌மிழ் பேசுவோர் என்ற‌ அண்ண‌ன் த‌ம்பி என‌ ஒற்றுமையாகவும் வாழ்ந்தார்கள்.   பொன்னம்பலத்தினால் முஸ்லிம் சமூகம் வஞ்சிக்கப்பட்டதன் காரணமாக முஸ்லிம்களை பொறுத்தவரை தமிழ் உயர் மட்டத்தினர் பற்றிய‌ சந்தேகமே இருந்து வந்தது . ஆனாலும் தந்தை செல்வா போன்ற தூரதிருஷ்டிமிக்க தலைமை காரணமாக முஸ்லிம்கள் தமது சந்தேகங்களிலிருந்து விடுபட்டு, த‌ம‌க்கு த‌மிழ் த‌லைமைக‌ள் நியாய‌ம் பெற்றுத்த‌ரும் என‌ வாழ்ந்து வந்துள்ளார்கள்.  தந்தை செல்வாவின் மறைவைத் தொடர்ந்து தமிழர்களின் ஜனநாயகப் போராட்டம் மேலும் வலுப்பெற்றது.   தமிழர் விடுதலைக் கூட்டணியும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்த்தைப் பெற்ற பின்னர் த‌மிழ் தலைவர்களால் முஸ்லிம் அரசியல்வாதிகள் புறந்தள்ளப்பட்ட நிலையை நாம் காணலாம்.  இதற்கு சிறியதோர் உதாரணத்தைக்கூறமுடியும்.70 களில் கொழும்பிலிருந்து கதந்திரன்,  சுடர் என்ற பத்திரிகைகள் தமிழர் கூட்டணி சார்பாக வெளிவந்து கொண்டிருந்தன. இவை வெளிவரத் தொடங்கிய ஆரம்பத்தில் முஸ்லிம்களின் பிரச்சினைகளையும் சுட்டிக் காட்டிய‌துட‌ன்  முஸ்லிம் எழுத்தாளர்களின் ஆக்கங்களுக்கும், உண‌ர்வுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டன. அப்பத்திரிகைகள் வளர்ச்சி பெற்று தமக்கென தமிழ் முஸ்லிம் வாசகர் தொகையை உருவாக்கிக் கொண்டபின் முஸ்லிம்கள் சம்பந்தமான செய்திகள் பிரகரிப்பதை முற்றாக‌ தவிர்த்துக் கொண்டன. முஸ்லிம் எழுத்தாளர்களின் ஆக்கங்களும் குறையத் தொடங்கின. தமிழின் பெருமை பற்றி யாராவது முஸ்லிம் எழுத்தாளர் கவிதை எழுதினால் அதனை மட்டுமே பிரசுரிக்கக்கூடியதாக அப்பத்திரிகைகள் தமது சுயரூபத்தைக்காட்டின.  இது பற்றி அக்காலப்பகுதியில் வாழ்ந்த முஸ்லிம் எழுத்தாளர்கள், அர‌சிய‌ல்வாதிக‌ள் தாம் சந்தித்துக் கொள்ளும் போது இவ்வாறு தம்மை இப்பத்திரிகைகள் இடையில் களட்டி விட்டதை குறையாகப் பேசிக் கொண்டதையும் காண முடிந்தது . இக்காலப்பகுதியிலேயே தமிழர் அரசியலையும் நம்பமுடியாது,  சிங்கள அரசியலையும் நம்ப முடியாது என்ற சிந்தனை முஸ்லிம் சமூக இளைஞர்கள் மத்தியில் வலுப்பெற தொடங்கியது . இதன் காரணமாக முஸ்லிம் ஐக்கிய முன்னணி போன்ற தனித்துவ அரசியல் இயக்கங்களை முஸ்லிம்கள் தோற்றுவிக்கத்தொடங்கினர். இங்கு இன்னுமொன்றையும் சுட்டிக்காட்ட வேண்டும் . அதாவது , தமிழரசுக்கட்சி மூலம் தேர்தலில் வெற்றி பெற்ற முஸ்லிம் அரசியல் வாதிகள் சிங்கள கட்சிகளுடன் சேர்ந்து கொள்ளும் நிலையும் தொடர்ச்சியாக நடந்துள்ளது . தாம் சொகுசாக‌ வாழ‌ வேண்டும் என்ப‌துட‌ன் அர‌சின் மூல‌ம் அபிவிருத்திக‌ளை பெற‌ வேண்டும் என்ப‌தும் இத‌ற்கு கார‌ண‌மாக‌ இருந்த‌து. இதன் காரணமாக முஸ்லிம்களை நம்ப முடியாது என்ற தோற்றப்பாடு தமிழர் மத்தியில் ஏற்பட்டிருந்தது என்ற‌ நியாய‌த்தை நாம் ஏற்றுக்கொள்கிறோம்.இது ஒரு நியாயமான சந்தேகமேயாகும் . ஆனாலும், முஸலிம் அரசியல்வாதிகள் இவ்வாறு கட்சி மாறியதற்குக் காரணம் முஸ்லிம் அரசியல்வாதிகளின் சுயநலம் மட்டும் காரணமல்ல மாறாக தமது பிரதேசங்களின் அபிவிருத்திக்கு இதுவே சிறந்த வழி என அவர்கள் கருதினார்கள்.  ஆனாலும் த‌மிழ் க‌ட்சிக‌ளில் பிர‌திநிதித்துவ‌ம் பெற்று விட்டு சிங்க‌ள‌ க‌ட்சிக‌ளுக்கு மாறிய‌ இந் ந‌டவடிக்கை நியாயமானதல்ல. தாம் நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்பதற்காக தமிழர் கட்சிக்கான தமிழர்களின் ஆதரவை இவர்கள் பயன்படுத்தியமை நிச்சயமாக மறுக்க முடியாத வரலாற்றுத் தவறாகும். அண்மைக்கால‌ங்க‌ளில் கூட‌ இத்த‌வ‌றுக‌ள் தொட‌ர்ந்த‌ன‌.இவ்வாறான நிகழ்வுகள் காரணமாக தமிழர் - முஸ்லிம்கள் மத்தியில் பரஸ்பரம் ந‌ம்பிக்கை பறி போயிருந்தது . இச்சூழ்நிலைகளில் மட்டக்களப்பு மாவட்டம் வேறாக பிரிக்கப்பட்டு அம்பாறை மாவட்டம் என்ற‌ புதிய‌ மாவ‌ட்ட‌ம்  உருவாக்கப்பட்டு சிங்கள பேரினவாத நில ஆக்கிரமிப்பு முயற்சிகள் வளரத் தொடங்கின ! இதன் காரணமாக தமிழர்களை விட முஸ்லிம்களே அதிகம் பாதிக்கப்பட்டனர்.  அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தவரை முஸ்லிம்களே பெரும்பாலான நிலச் சொந்தக்காரர்களாக இருந்ததால் இப்பாதிப்பை அவர்கள் நேரடியாக அனுபவித்ததோடு முஸ்லிம் பெரும்பான்மை கொஞ்சம்கொஞ்சமாக குறையவும் தொடங்கியது .1980 களில் தமிழர் ஆயுதப் போராட்டம் ஆரம்பித்தபோது முஸ்லிம்களும் தமிழர்களும் இணைந்து சிங்கள பேரின‌வாத‌த்துக்கெதிராக‌ போராடும் இய‌க்க‌ங்க‌ள் உருவாகின. அவ்வியக்கங்கள் ஆயுதம் பெறவும், தமது இயக்க அங்கத்தவர்களின் தேவைகளுக்காகவும் முஸ்லிம் இளைஞர்கள் தமிழ் ஆயுதக் குழுக்களில் இணையத் தொடங்கினர் . போராட்ட‌ க‌ள‌த்திலும் முஸ்லிம்க‌ள் த‌மிழ‌ருட‌ன் இணைந்து நின்ற‌ன‌ர்.ஆனால் 1982க்கு பின் பல ஆயுதக்குழுக்கள் தமிழர் நிதி என்ற பெயரில் கப்பம் பெறத்தொடங்கின. அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தவரை முஸ்லிம்கள் முதலாளிகள், தமிழர்கள் தொழிலாளிகள் என்ற தோற்றப்பாடே பெரும்பாலும் முன்னர் இருந்ததை காணலாம். ஒரு முஸ்லிம் முதலாளியிடம் இருபதுக்கும் மேற்பட்ட தமிழர்கள் தொழிலாளிகளாக கடமையாற்றியதையும் காணலாம் . இத்தொழிலாளிகளில் பலர் ஆயத இயக்கங்களில் இணைந்ததன் காரணமாக ஏற்பட்ட இறுமாப்பின் காரணமாகவும், முன்னர் தாம் கைகட்டி நின்ற முதலாளிகள் இப்போது ஆயுத அச்சம் காரணமாக தம்முன் கைகட்டி , அஞ்சி நிற்பதையும் கண்ட தமிழ் வாலிபர்கள் முஸ்லிம் முதலாளிகளிடம் ஆயுதத்தைக் காட்டி பணம் பெறுவதில் இன்பம் காணத்தொடங்கினர்.  ஆரம்பத்தில் ஏதோ நாமும் இந்த போராட்டத்துக்கு ஒத்துழைக்கத்தான் வேண்டும் என்ற நோக்கில் பல முஸ்லிம் முதலாளிகள் நிதி வழங்கினர். இதனை முஸ்லிம்களின் கோழைத்தனம் என தவறாக புரிந்து கொண்ட தமிழ் ஆயுக்குழுக்கள் தங்களது அடாவடித்தனங்களை தொட‌ராக‌ அவிழ்த்துவிட தொடங்கினர். கப்பம் தராத முஸ்லிமை அடிப்பது , ஊரில் நல்ல செல்வாக்குடன் வாழ்ந்த முதலாளிமாரை வீதியில் நிறுத்தி வைத்து பணம் பெறுவது, ஏதாவது காரணத்தை சொல்லி கன்னத்தில் அறைவது, சிறிய பெட்டிக்கடை வைத்திருக்கும் முஸ்லிமிடமும் துப்பாக்கியைக் காட்டி பணம் பெறுதல் என இவை தொடர்ந்தது . கடைசியில் இந்நிலை சம்மாந்துறை, நிந்தவூர் போன்ற பிரதேசங்களில் வாழும் முஸ்லிம் ஏழைப் பெண்கள், வயலுக்குச் சென்று நெற்கதிர்களைப் பொறுக்கிக் கொண்டு வரும் போது அவை கூட கப்பமாகப் பறிக்கப்படும் கேவலமான நிலைக்கு இட்டுச்சென்றது . இதில் போராட்ட‌ இய‌க்க‌ங்க‌ள் நேர‌டியாக‌ செய‌ல்ப‌ட்ட‌ன‌வா அல்ல‌து க‌ள்வ‌ர்க‌ள் ச‌ந்த‌ர்ப்ப‌த்தை ப‌ய‌ன்ப‌டுத்தின‌ரா என்ப‌து இன்னொரு ப‌க்க‌ பார்வையாக‌ இருப்பினும் இவற்றை க‌ட்டுப்ப‌டுத்த‌ போராட்ட‌ இய‌க்க‌ங்க‌ள் முன்வ‌ர‌வில்லை. இவற்றின் காரணமாக, தமிழர் ஆயுதப் போராட்டத்துக்கு ஒத்துழைப்பதன் மூலம் தாம் சிங்களப் பேரினவாதத்துக்கெதிராக வெல்ல முடியாது. மாறாக தமிழர் மேலாதிக்கத்தை த‌ம்மீது வளர்த்து விட்டதாகவே முடியும் என்ற தெளிவு முஸ்லிம் சமூகத்துள் ஏற்படத் தொடங்கியது. இதன் காரணமாக அம்பாறை , மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் இளைஞர்கள் நேரடியாகவே ஆயுதம் தாங்கிய தமிழ் வாலிபர்களுடன் முறுகத் தொடங்கினர். தமிழ் ஆயுத இயக்கங்களுக்கு முஸ்லிம்கள் கப்பம் வழங்கக் கூடாது என்று முஸ்லிம் இளைஞர்கள் கோரிக்கைகளை முன் வைக்கத் தொடங்கினர். முஸ்லிம் இளைஞர்களின் கோரிக்கைகளுக்கு கட்டுப்பட்டு பல முஸ்லிம் முதலாளிமார் பணம் கொடுக்க மறுத்ததன் காரணமாக அவர்களும் அவர்களது கடைகளும் தாக்கப்பட்டன‌. 1984 ம் ஆண்டு கல்முனை நகரில் இருந்த முஸ்லிம்களின் பல கடைகள் ஆயுதம் தாங்கிய தமிழ் வாலிபர்களினால் எரிக்கப்பட்ட சம்பவத்தை இங்கு நாம் உதாரணமாக கூறலாம்.  இதே போன்ற நிலை கல்முனை அக்கரைப்பற்று சம்மாந்துறை , காத்தான்குடி , வாழைச்சேனை என பல பிரதேசங்களிலும் தொடர்ந்தது. இத்தகைய முறுகல்கள் காரணமாக 1985 ம் ஆண்டு ஈ பி ஆர் எல் எப், ஈ என் டி எல் எஃப் சேர்ந்த‌ ஆயுத‌ம் தாங்கியோர் சாய்ந்த‌ம‌ருது ப‌ள்ளிவாய‌ல் முன்பாக‌ ஜீப்பில் இற‌ங்கி வான‌த்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு முஸ்லிம்க‌ளுக்கு எச்ச‌ரிக்கை விடுத்த‌ன‌ர்.சாய்ந்த‌ம‌ருதின் எல்லைக்கிராம‌ம் காரைதீவு எனும் த‌மிழ் கிராம‌ம். இந்த‌ கிராம‌த்தை தாண்டியே நிந்த‌வூர், ச‌ம்மாந்துறைக்கு செல்ல‌ வேண்டும்.காரைதீவு ச‌ந்தியில் வைத்து அவ்வ‌ழியால் ப‌ய‌ண‌ம் செய்யும் முஸ்லிம்க‌ள் தாக்க‌ப்ப‌டுவ‌தும் ப‌ண‌ம் ப‌றிக்க‌ப்ப‌டுவ‌தும் அன்றாட‌ செய‌லாக‌ இருந்து முஸ்லிம் வாலிப‌ர்க‌ளுக்கு ஆத்திர‌த்தை உண்டாக்கியிருந்த‌து.சாய்ந்த‌ம‌ருது ப‌ள்ளிமுன் ந‌ட‌ந்த‌ துப்பாக்கி சூட்டை தொட‌ர்ந்து இப்ப‌குதி முஸ்லிம்க‌ள் கூடி இத‌ற்கு என்ன‌ தீர்வு என‌ ஆலோசித்த‌ன‌ர்.இந்த‌ நிலையில் அஷ்ர‌ப் த‌லைமையிலான‌ முஸ்லிம் காங்கிர‌சும் உருவாகியிருந்த‌து. அதே போல் வ‌ட‌ மாகாண‌த்தில் முஸ்லிம் புத்திஜீவிக‌ள் புலிக‌ளால் கொல்ல‌ப்ப‌டும் நிக‌ழ்வுக‌ளும் ந‌ட‌ந்து கொண்டிருந்த‌ன‌.முஸ்லிம்க‌ளின் ஆத்திர‌த்தின் ம‌த்தியிலான‌ இந்த‌ ஆலோச‌னைக்கூட்ட‌த்தை அன்றைய‌ அர‌சும் ந‌ன்றாக‌ ப‌ய‌ன்ப‌டுத்திய‌து. த‌மிழ‌ர்க‌ளையும் முஸ்லிம்க‌ளையும் பிரித்தால் ம‌ட்டுமே த‌மிழீழ‌ போராட்ட‌த்தை அட‌க்க‌ முடியும் என‌ புரிந்து செய‌ற்ப‌ட்ட‌து. இத‌ற்கு ஏற்றாற்போல் த‌மிழ் ஆயுத‌ இய‌க்க‌ங்க‌ளும் ந‌ட‌ந்து கொண்ட‌ன‌.இத‌னை தொட‌ர்ந்து சாய்ந்த‌ம‌ருது காரைதீவு க‌ல‌வ‌ர‌ம் தொட‌ங்கிய‌து. அர‌ச‌ ப‌டைக‌ள் புதின‌ம் பார்த்துக்கொண்டிருந்த‌ன‌. முஸ்லிம்க‌ளுக்கு ம‌றைமுக‌ உத‌வியும் செய்திருக்க‌லாம். இக்க‌ல‌வ‌ர‌ம் கார‌ண‌மாக‌ மட்டக்களப்பு அம்பாறை மாவட்டம் மிகப்பெரும் தமிழ் முஸ்லிம் கலவரத்தை க‌ண்ட‌து . இதன் போது காரைதீவு எனும் கிராமத்தின் ஒரு பகுதி முஸ்லிம்களால் அழிக்கப்பட்டது. அங்கிருந்து ம‌ட்ட‌க்க‌ள‌ப்புக்கு த‌ப்பிச் சென்ற‌ த‌மிழ‌ர்க‌ள் முழு காரைதீவும் அழிக்க‌ப்ப‌ட்ட‌தாக‌ வ‌த‌ந்தியை ப‌ர‌ப்பிய‌தால் ஏறாவூர், மட்டக்களப்பில் இருந்த உன்னிச்சை போன்ற முஸ்லிம் கிராமங்களும்,  முஸ்லிம்களும் தமிழர் ப‌டைகளால் இரவோடிரவாக தீயிட்டு எரிக்கப்பட்டனர். இக்கலவரம் சம்பந்தமாக என். நாகரட்ணம் என்ற தமிழ் எழுத்தாளர் " 85 கிழக்கு மாகாண தமிழ் முஸ்லிம் கலவரம் யார் பொறுப்பு ? " என்ற பெய‌ரில் புத்த‌க‌ம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் மிகச்சிறந்த நடு நிலை கண்ணோட்டத்தில் முஸ்லிம் சமூகம் அனுபவித்த கொடுமைகளை விபரித்துள்ளார். எடுத்துக்காட்டாக அந்நூலில் இருந்து சில வரிகள் இங்கு தரப்படுகின்றன : " முஸ்லிம் மக்களின் ஆட்டுப்பட்டி , மாட்டுப்பட்டிகள் கொள்ளையிடப்பட்டன. வயற்புற முஸ்லிம் மக்களின் குடியிருப்புக்கள், சிறு வர்த்தக நிறுவனங்கள், பள்ளிவாசல்கள் அழிக்கப்பட்டன. கிழக்கில் சித்திரை மாதம் விவசாய அறுவடைகள் முடிந்து கொண்டிருந்த காலமென்பதால் முஸ்லிம் மக்களின் வயல் வாடிகளில் குவித்து வைக்கப்பட்டிருந்த நெல்லும் கொள்ளையடிக்கப்பட்டது. சூடு போடுவதற்காய் வைக்கப்பட்ட நெற் சூடுகள், சூடு மிதிக்கப்பட்டு சூறையாடப்பட்டன. கேவலம் முஸ்லிம் மக்களின் இருப்பிடங்களில் இருந்த தென்னை மரங்கள், ஒரு குரும்பை கூட இல்லாமல் மொட்டையடிக்கப்பட்டன. தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்ற வகையில் தமிழரின் பின்புறக் கிராமங்களில் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு முஸ்லிம் மக்களின் உடைமைகளைக் கொள்ளையடித்ததுமல்லாமல் உயிர்க்கொலையும் செய்தனர். ஒருபுறம் தமிழ் மக்கள் அகதிகளாக்கப்பட்டுக் கொண்டிருக்க, மறுபுறம் தமிழர்களின் பின்புறக் கிராமங்களில் கொள்ளை உணர்வு பெருக்கெடுத்து ஓட இறைச்சி விழா கொண்டாடப்பட்டது. பின்புறக் கிராமங்களில் முஸ்லிம் மக்களின் ஆட்டு, மாட்டு இறைச்சிகள் ஏராளமாகக் கிடந்தன.  தமிழ் மக்கள் எந்தவிதக் கட்டுப்பாடுகளுமின்றி செயற்பட்டுக் கொண்டிருந்தனர் . " இத்தகையதொரு சூழலில்தான் இயக்கங்கள் என்ன செய்தன" என்பதை நாம் கவனிக்கவேண்டியுள்ளது. குறிப்பிட்ட இயக்கத்தின் தலைமை முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தவறென பொது துமக்களுக்குப் பகிரங்கமாக பிரசாரம் செய்து கொண்டு இருந்த அதே வேளையில்தான் அதே இயக்கத்தைச் சார்ந்தோர் ஆயுதங்களுடன் முஸ்லிம்களின் உடைமைகளைக் கொள்ளையடித்தனர்.- பெரும்பாலும் டிராக்டர்கள் மூலம் முஸ்லிம்களின் நெற்சூடுகளை மிதித்து சூறையாடியவர்கள் இயக்க அணியின‌ரே. முஸ்லிம் பெண்க‌ள் க‌ற்ப‌ழிக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர், குழ‌ந்தைக‌ள் கொல்ல‌ப்ப‌ட்ட‌ன‌ர். 


இன்னும் முஸ்லிம்க‌ள்  பல‌ருக்கு என்ன நடந்தது என்பது எவருக்கும் தெரியாது. முஸ்லிம்களும் உயிர்க் கொலைகள் செய்தனர். ஆயினும் அது எண்ணிக்கையில் குறைவு. 


இயக்கங்களின் "டம்பிங்" செய்தல் பொதுமக்களுக்கும் தொற்றிக் கொண்டது. முஸ்லிம் வழிப்போக்கர்கள் கடத்தப்பட்டு கொன்று புதைக்கப்பட்டனர். பார்க்க;   85 கிழக்கு மாகாண இனக்கலவரம், எழுதியவர் என் . நாகரட்ணம் ) தமிழ் முஸ்லிம் உறவில் விரிசல் ஏற்பட்டதற்கு யார் என்ன காரணம் என்பதை தெளிவாக கண்டோம். முஸ்லிம்க‌ள் மீதான‌ இர‌க்க‌ம‌ற்ற‌ தாக்குத‌ல்க‌ளே அவ‌ர்க‌ளையும் ப‌ழிவாங்கும் ப‌ட‌ல‌த்துள் த‌ள்ளின‌ என்ப‌து உண்மை.  இவற்றின் காரணமாக முஸ்லிம்கள் வேறு இனம், தமிழர்கள் வேறு இனம் என தமிழர்களாலேயே உணர்த்தப்பட்டது. தமிழ் முஸ்லிம் உறவை சீர்குலைத்த்தில் அரசியல்வாதிகளை விட அதிக பங்கு தமிழ் ஆயுத‌ இயக்கங்களுக்கே உண்டு என்பதை இத்தகைய வரலாற்றுப் பின்னணிகளிலிருந்து நாம் அறியலாம்.  முஸ்லிம்களின் எதிரி சிங்கள பேரினவாதம் மட்டுமா ? 1950 களிலிருந்து 80 வரையான காலப்பகுதியை பார்க்கும் போது முஸ்லிம் சமூகம் குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் சிங்களப் பேரினவாதம் மட்டுமே தமது எதிரி என நினைத்திருந்தனர்.  இக்காலப்பகுதியில் சிங்கள குடியேற்றங்கள், புனித பூமி என்ற பெயரில் முஸ்லிம்களின் நிலங்களை பறித்தல், க‌ரும்புச்செய்கை என்ற‌ பெய‌ரில் முஸ்லிம்க‌ளின் நில‌ங்க‌ளை சுவீக‌ரித்த‌ல் என்பவற்றுக்கு முஸ்லிம்கள் முகம் கொடுக்க நேர்ந்தது. இவற்றைப்பற்றி நாடாளுமன்றத்தில் பேசுவதன் மூலம் தீர்த்துக் கொள்ளலாம் என்றே முஸ்லிம்கள் நினைத்தனர்.  ஆனால், நாடாளுமன்றத்தில் அங்கத்துவம் வகித்த முஸ்லிம் பிரதிநிதிகள் அரச‌ சார்பில் இருந்து வாய்மூடி மௌனிகளாக இருந்ததால் தனித்துவமான முஸ்லிம் அரசியல் கட்சி மூலமே இது சாத்தியமாகும் என்ற சிந்தனை கல்முனை, கொழும்பு பிரதேசங்களில் வாழ்ந்த புத்திஜீவிகள் மத்தியில் வேருண்றியது. பின்னர் 80 களில் தங்கள் எதிரி சிங்களப் பேரினவாதம் மட்டுமல்ல தமிழர் மேலாதிக்கமும்தான் என்பதை முஸ்லிம்கள் உணர்ந்து கொண்டனர். முஸ்லிம்கள் எந்தப்பேரினவாத‌த்தால் அதிகம் பாதிக்கப்பட்டனர் ? 2013க்கு முன் வ‌ரை முஸ்லிம்கள் சிங்கள, தமிழ் இரு பேரினவாதங்களாலும் பாதிக்கப்பட்டாலும் சிங்கள பேரினவாதத்தின் காரணமாக சில நூறு ஏக்கர் காணிகளையும், தமது பெரும்பான்மைப் பிரதேச ஆதிக்கத்தையும் ம‌ட்டுமே இழந்துள்ளார்கள் என்பதை மறுக்க முடியாது.  இதில் அம்பாறை மாவட்ட முஸ்லிம்களே அதிகம் பாதிக்கப்பட்டார்கள்.  கிழக்கின் வேறு பகுதி முஸ்லிம்களோ வடமாகாண முஸ்லிம்களோ சிங்கள பேரினவாதிகளால் பெரிதும் பாதிக்கப்படவில்லை . ஆனால், தமிழ் பேரினவாதம் காரணமாக முஸ்லிம்கள் தமது பல்லாயிரம் ஏக்கர் காணி, நிலங்களை இழந்துள்ளனர்.  பல ஆயிரக் கணக்கான உயிர்களையும், கோடிக்கணக்கான சொத்துக்களையும் இழந்துள்ளார்கள். பல நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கடத்தப்பட்டுள்ளார்கள். வடமாகாண முஸ்லிம்கள் உடுத்த உடையுடன் அனைத்து சொத்துக்க‌ளையும் ப‌றிமுத‌ல் செய்த‌பின் விரட்டப்பட்டார்கள். இவ்வாறு பலகொடுமைகள் த‌மிழ்த்த‌ர‌ப்பால் அனுப‌வித்த‌ன‌ர். இவை அனைத்தையும் பார்க்கும் போது , சிங்களப் பேரினவாதத்தால் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டதை விட 99 வீதமான பாதிப்புக்கள் த‌ம் மொழி ச‌கோத‌ர‌ தமிழ் பேரினவாதத்தினாலேயே நிகழ்ந்துள்ளன என்பது தெளிவாகிறது . முஸ்லிம்களின் சுயநிர்ணய உரிமைகளுக்கு தடையாக இருப்பது யார் ? பொதுவாகப் பார்த்தால் சிங்களப் பேரினவாதத்தினால் பாதிக்கப்பட்ட தமிழினம் தம்மைவிட சிறுபான்மையான முஸ்லிம்கள் விடயத்தில் பெரு மனதுடன் நடந்து கொண்டிருக்க வேண்டும் . ஆனால் வரலாற்றைப் பார்க்கும் போது வ‌ட‌க்கு கிழ‌க்கு தமிழினம், முஸ்லிம்கள் விடயத்தில் குரூர மனப்பானமையுடன் நடந்து கொண்டதைத்தான் காண முடிகிறது. இது கசப்பாக இருந்தாலும் இதனை தமிழர்கள் ஏற்றுத்தான் ஆக வேண்டும் . இதைத்தான் வரலாறு நமக்கு சொல்கிறது. முஸ்லிம் சமூகம் தாம் சிங்கள பேரினவாதத்தாலும் , தமிழ் பேரினவாதத்தாலும் வஞ்சிக்கப்படுவதை உணர்ந்த பிறகே முஸ்லிம்களுக்கான த‌னிக்க‌ட்சி,  தனியலகு, முஸ்லிம் ஊர்காவ‌ல் ப‌டை என‌ கோரிக்கைக‌ள் வ‌லுப்பெற்ற‌ன‌.  இக்கோரிக்கையை முதலில் எதிர்த்தது தமிழ் அர‌சிய‌ல்வாதிக‌ளும் இய‌க்க‌ங்க‌ளும் என்பதுதான் மிகப்பெரிய சோகமாகும்.  முஸ்லிம் மாகாணசபை, முஸ்லிம் அலகு கோரிக்கைக்காக‌ முஸ்லிம்கள் தமிழ் ஆயுக் குழுக்களால் சுடப்பட்டார்கள். கடத்திக் கொல்லப்பட்டார்கள். முஸ்லிம்க‌ளுக்கான‌ மாகாண சபையை ஏற்கவே முடியாது என தமிழ் ஆயுதக் குழுக்கள் பகிரங்கமாக தெரிவித்தன.
 உண்மையில் சிங்கள அரசு முஸ்லிம்களுக்கு ஏதாவது தர நினைத்தாலும் தமழினம் அதற்கு மறுப்புத் தெரிவிப்பது என்பதன் மூலம் தமிழர் ஆதிக்க வெறியை நன்றாக உணரலாம். கடைசியாக க‌ழுதை தேய்ந்து க‌ட்டெறும்பான‌து போல் தென் கிழக்கு அலகு முன் வைக்கப்பட்ட போது அதுவும் விடுதலைப் புலிகளால் நிராகரிக்கப்பட்டது .இதே வேளை 1994 வ‌ரை  முஸ்லிம்க‌ளுக்கெதிரான‌ த‌மிழ் ஆயுத‌க்குழுக்களின் தாக்குத‌ல்க‌ள் 1994ல் த‌லைவ‌ர் அஷ்ர‌ப் அமைச்சு ப‌த‌வியை பெற்ற‌து முத‌ல் குறைய‌த்தொட‌ங்கிய‌து. கார‌ண‌ம் அவ‌ர் ப‌ல‌மிக்க‌ அமைச்ச‌ர் என்ப‌தால் முஸ்லிம்க‌ளை தாக்கினால் ஆயுத‌ப்ப‌டையின் உத‌வி முஸ்லிம்க‌ளுக்கு நேர‌டியாக‌ கிடைக்கும் என்ற‌ அச்ச‌மாகும்.


அத்துட‌ன் அஷ்ர‌ப் அமைச்ச‌ரான‌தும் முஸ்லிம்க‌ள் ம‌த்தியில் இருந்த‌ ஆயுத‌க்குழுக்க‌ள் அனைத்தும் க‌லைக்க‌ப்ப‌ட்ட‌து.  ஜ‌ன‌நாய‌க‌ அர‌சிய‌ல் மூல‌மே ச‌மூக‌த்துக்கான‌ வெற்றியை பெற‌லாம் என‌ அவ‌ர்க‌ளுக்கு சொன்ன‌தால் அத‌னை ஏற்று முஸ்லிம்க‌ள் ஆயுத‌ சிந்த‌னையை கைவிட்டு முஸ்லிம் காங்கிர‌சுக்குள் வ‌ந்து அத‌ன் பின் அத‌ற்குள் உள்வீட்டு ப‌த‌விச்ச‌ண்டைக‌ளில் நேர‌ கால‌த்தை க‌ட‌த்தின‌ர்.அதே வேளை முஸ்லிம் த‌மிழ் உற‌வை சிதைத்து அத‌னை வைத்து முஸ்லிம் காங்கிர‌ஸ் அமைச்சு ப‌த‌விக‌ளை பெற‌ முட்ப‌ட்ட‌து என்ற‌ த‌மிழ் த‌ர‌ப்பு குற்ற‌ச்சாட்டிலும் நியாய‌ம் இருக்க‌லாம்.ஆனாலும் 2001ல் அஷ்ர‌ப் கொல்ல‌ப்ப‌ட்டு மீண்டும் ஐ தே க‌ ஆட்சிக்கு வ‌ந்த‌தும் முஸ்லிம்க‌ள் மீதான‌ புலிக‌ளின் கெடுபிடிக‌ள் மீண்டும் ஆர‌ம்பித்த‌ன‌. கிண்ணியா, மூதூர் தாக்க‌ப்ப‌ட்ட‌து. வாழைச்சேனையில் முஸ்லிம்க‌ளின் இர‌ண்டு ஜ‌னாசாக்க‌ள் இராணுவ‌த்தின் முன்பாக‌ எரிக்க‌ப்ப‌ட்ட‌ன‌. அதே போல் ச‌ந்திரிக்கா ஆட்சியில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான கட்டமைப்பு ஏற்படுத்த‌ப்பட்டபோது முஸ்லிம் சமூகமும் பங்காளியாக ஒப்பமிடுவதற்கும் தமிழர் தரப்பு எதிர்ப்புத்தெரிவித்ததாக செய்திகள் வ‌ந்த‌ன‌. இவ்வாறான செயல்கள் மூலம் முஸ்லிம்களுக்கான சுயநிர்ணய உரிமைகளை சிங்களவர்கள் தர முயன்றாலும் அதனைத் தடுக்கும் சக்திகளாக தமிழினமே இருக்கின்றது என்பதை முஸ்லிம் சமூகம் நன்றாக தெரிந்து வைத்துள்ளது. இத்தகைய யதார்த்த நிலையில் சிங்கள பேரினவாதத்தை எதிர்க்க முஸ்லிம் தமிழ் ஒற்றுமை தேவை எனக்கூறுவதில் என்ன அர்த்தமிருக்கிறது என்ற கேள்வி பலமாக நம் முன் எழுகிறது.  அவ்வாறுகூறுவது முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றும் ஒருசெயலாகவே முஸ்லிம் சமூகம் பார்க்கிறது. ஆனாலும் முஸ்லிம் - தமிழ் ஒற்றுமை என்பது அசாத்தியமான ஒன்றல்ல. இத்தகைய ஒற்றுமையை ஏற்படுத்துவதாயின் தமிழர்கள் பாரிய தியாகங்களையும், விட்டுக் கொடுப்புக்களையும் முஸ்லிம்க‌ளுக்கு செய்தாக வேண்டும். அவற்றைபின்வருமாறு வகுக்கலாம்.01- வட மாகாண முஸ்லிம்கள் சகல நஷ்டயீடுகளும் வழங்கப்பட்டு, அவ‌ர்க‌ளின் வீடு, காணிக‌ள் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்டு நிபந்தனையற்ற முறையில் த‌மிழ் த‌ர‌ப்புக்க‌ள் முன்வ‌ந்து மீள்குடியேற்றம் செய்யப்பட வெண்டும். மீள் குடியேற்ற‌ப்ப‌ட்ட‌ முஸ்லிம்க‌ளுக்கு த‌மிழ் த‌ர‌ப்பு முன்வ‌ந்து முன்ன‌ர் அவ‌ர்க‌ளிட‌ம் ப‌றித்த‌ சொத்துக்க‌ளுக்கு ந‌ஷ்ட ஈடு வ‌ழ‌ங்க‌ வேண்டும்.02. வட மாகாண முஸ்லிம்கள் தமிழர் பெரும்பான்மைக்குள் சுய நிர்ணய தன்மையோடு தமது நிர்வாகங்களை தாமே மேற்கொள்ளக்கூடுய‌ தனியான நிர்வாக‌ கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு தமிழ் சமூகம் அனுமதியளிக்கவேண்டும் 03.கடத்தப்பட்டு கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதை குழிகளாவது தெரியப்படுத்தப்பட வேண்டும். 04- கிழக்கில் முஸ்லிம்களின் வாழ்நிலம், தொழில் நிலம் உள்ளடக்கிய தனியான நிர்வாக சபையை தமிழர் த‌ர‌ப்புக்களே முன்மொழிய வேண்டும். இதனை சிங்கள பேரினவாதம் எதிர்த்தால்,  அதனை எதிர்ப்பதற்கு தமிழினம் முஸ்லிம்களுடன் கைகோர்க்கவேண்டும் . 05 - முஸ்லிம் சமூகத்தின் சமயம் , கலாச்சாரம், அரசியல், பொருளாதாரம் என்பவற்றில் தமிழ் சமூகம் எக்காரணம் கொண்டும் தலையிடுவதை தவிர்க்கவேண்டும்.6. 90 க‌ளில் ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு மாவ‌ட்ட‌த்தில் புலிக‌ளால் முஸ்லிம்க‌ளின் 35 ஆயிர‌ம் ஏக்க‌ர் காணிக‌ளை பிடித்த‌து உண்மை. இது உண்மையா பொய்யா என்ப‌தை த‌மிழ் ந‌டு நிலையாள‌ர்க‌ள்  நேர‌டியாக‌ வ‌ந்து அக்காணிக‌ளை இழ‌ந்த‌வ‌ர்க‌ளை  பேட்டி கண்டு அது உண்மையாயின் அக்காணிக‌ள் கிடைக்க‌ ஏற்பாடு செய்ய‌ வேண்டும்.7. க‌ல்முனை என்ப‌து 100 வீத‌ம் த‌மிழ் பேசும் ம‌க்க‌ள் வாழ்வ‌தாகும். இங்கு முஸ்லிம்க‌ளுக்கு வேறு த‌மிழ‌ர்க‌ளுக்கு வேறு என‌ செய‌ல‌க‌த்தை பிரித்த‌து யார்? முஸ்லிம்க‌ளா? இல்லை. ஆக‌வே க‌ல்முனை உப‌ செய‌ல‌க‌த்தை ர‌த்து செய்து 1987க்கு முன் இருந்த‌து போன்று க‌ல்முனைக்கு ஒரேயொரு த‌மிழ் மொழியிலான‌ செய‌ல‌க‌த்தை உருவாக்க‌ த‌மிழ் அர‌சிய‌ல்வாதிக‌ள் முன் வ‌ர‌ வேண்டும். த‌மிழ் முஸ்லிம் ஒற்றுமைக்கான‌ க‌ல‌ந்துரையாட‌ல்க‌ள்தான் இன்றைய‌ தேவையே த‌விர‌ ஒருவ‌ரை ஒருவ‌ர் விம‌ர்ச‌ன‌ம் செய்வ‌த‌ல்ல‌. ஆனாலும் த‌மிழ் முஸ்லிம் ஒற்றுமை என்ப‌து ஒவ்வொருவ‌ரும் த‌த்த‌ம‌து த‌ள‌த்தில் இருந்து கொண்டே ஒற்றுமையான‌ அர‌சிய‌ல் செய‌ற்பாட்டை நோக்கி செல்வ‌தாகும்.
பழைய‌ன‌வ‌ற்றை க‌ளைய‌ வேண்டும் என்றால் புதிய‌வை ப‌ற்றி சிந்திக்க‌ வேண்டும். இவ்வாறானவற்றை தமிழினம் செய்வதற்கு முன் வருமாயின் நிச்சயமாக முஸ்லிம்களும் , தமிழர்களும் ஒற்றுமைப்பட்டு சிங்கள பேரினவாதத்தை வெற்றி கொள்ள முடியும். ப‌ழைய‌தை தொட‌ர்ந்தும் பேசுவ‌தில் அர்த்த‌மில்லைதான். ஆனாலும் ப‌ழைய‌ அனுப‌வ‌ங்க‌ளை  வைத்தே புதிய‌ ச‌மாதான‌ பாதையை நோக்கி போக‌ வேண்டும்.எது எப்ப‌டியிருப்பினும் இன்றைய இல‌ங்கையில் சிங்க‌ள, முஸ்லிம் ஒற்றுமை அவ‌சிய‌ம் என்ப‌து போல் த‌மிழ், முஸ்லிம் ஒற்றுமை வ‌ட‌க்கு கிழ‌க்கில் மிக‌ அவ‌சிய‌மாகும். எவ்வ‌கை விட்டுக்கொடுப்பிலாவ‌து இந்த‌ ஒற்றுமைக்காக‌ பாடுப‌ட‌ ச‌க‌ல‌ரும் முன் வ‌ர‌ வேண்டும்.


முபாற‌க் அப்துல் ம‌ஜீத்- உல‌மா க‌ட்சி வெளியீடு.


8.12.2020.
Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar