BREAKING NEWS

2015 இல், இச்சமூகங்களால் ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றத்திலும், இவர்களின் பொதுவான பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை

 


கோணல் கள அரசியலில் அறுவடைக்கால ஆதாயம்..!


சுஐப் எம். காசிம் -

புரியாமல் போனதற்காய் இரு துருவங்களாகத் தொலைந்து, சிதைந்து தத்தளித்தவாறுள்ள தமிழ், முஸ்லிம் அரசியல், சிங்களத் தேசியத்தால் தட்டிக்கழிக்கப்படுகிறது. இதற்கு விடிவு தேடிய பயணங்களில் இவ்விரு சமூகத் தலைமைகளும் வெற்றி பெறவோ, விடுதலை பெறவோ இல்லை. இணக்க அரசியலுக்குள் வருவதுதான், இச் சமூகங்களுக்கே உரித்தான பொதுவான பிரச்சினைகளுக்கு தீர்வைத் தருமென்பதை இச்சமூகங்களின் தலைவர்கள் ஏற்றுக்கொள்ளாமலும் இல்லை.

விளக்கை குடத்துக்குள் வைத்து வெளிச்சம் தேடியதைப் போன்றுதான், இவர்களின் இணக்க அரசியலும் இருக்கிறது. அவ்வாறானால், ஏற்கனவே இருந்ததை (புரிந்துணர்வு) தொலைத்தவர்கள் யார்? இக் கேள்விதான் இச் சமூகங்களின் மீளிணைவை தொடர்ந்தும் துருவப்படுத்துகிறது. ஒரே மொழியில் பேச்சு, ஒரே நிலத்தில் வாழிடம், ஒரே சாயலில் கலாசாரம், பொருளாதாரமும் ஒரே வகையைச் சார்ந்ததுதான். தனி இனமாக அடையாளப்படுத்தக் கூடிய நான்கு அடிப்படை அரசியல் அம்சங்களும் இவர்களிடம் உள்ளன. இந் நிலையில், புரியாமை எங்கிருந்து, எப்படி வருகிறது. மதத்தின் பார்வையிலா? அல்லது கடந்த காலக் கசப்பிலிருந்தா? கசப்புக்களாகக் கருதப்படுபவை எவை? இக் கசப்புகளைக் களைய மறுக்கும் அல்லது களையத் தவறிய சக்திகள் எவை? நீறுபூத்த நெருப்பாகத் தொடரும் இந்த சிறுபான்மை அரசியல்தான் சிங்களத் தேசியத்துக்கு வாய்ப்பாகி வருகிறது.

சிங்களத் தேசியத்தை வீழ்த்தி 2015 இல், இச்சமூகங்களால் ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றத்திலும், இவர்களின் பொதுவான பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. இணங்கிச் செல்லும் அரசியல் சாத்தியமற்றது என்பதற்கு இதைவிட வேறெதை, உதாரணமாகக் கொள்வது. கிழக்கு மாகாண ஆட்சியை முஸ்லிம்களிடம் ஒப்படைத்ததாகக் கூறி, தமிழ் தேசியத்தின் சில பகுதி தீவிரமாக விழிப்பூட்டப்பட்டதும், வட மாகாண சபையின் கடைக்கண் பார்வைக்காவது முஸ்லிம்களின் வாழிட சவால்கள் தென்படாதமையும் அரசியல் இடைவெளிகள் நீள்வதற்கான அடித்தளங்கள்தான். ஜெனீவா அமர்வுகளில், தமிழர்களின் நீதி தேடிய சர்வதேச வழிகளிலெல்லாம் முஸ்லிம் அரசியல் முட்டுக்கட்டை போட்டதும், வடகிழக்கில் தமிழ் தேசியம் முறையாகக் கட்டமைக்கப்படுவதற்கு எதிராக, சிங்களத்தோடு தோள் நின்ற முஸ்லிம் அரசியலும் தேடிக்கொண்ட வினைகளின் அறுவடைக் காலமிது. ஆதாயம் அனைத்தையும் சிங்களம் அள்ளி எடுக்கையில், இவ்விரு சமூகங்களின் அரசியல் இலட்சியங்கள் தட்டிக்கழிக்கப்படுகின்றன.

இந்த விடயங்கள் தமிழ், முஸ்லிம் சாதாரண உறவுகள் தவிர்க்க முடியாதென்பதையும் அரசியல் உறவுகள் சாத்தியமற்றது என்ற வேறுபடுதலையுமே விளக்குகிறது. முஸ்லிம் திருமண வீட்டில், சம்பந்தன் கலந்துகொள்வதற்காக அல்லது தமிழரின் புதுமனை புகும் விழாவில் அதாஉல்லா பங்கேற்பதற்காக, கிழக்கைப் பிரிக்க சம்பந்தனோ அல்லது வடக்கோடு இணைக்க அதாஉல்லாவோ விரும்பப் போவதில்லை. ஒருவேளை சமூகங்கள் விரும்பினாலும் சக்திகள் சந்தேகந்தான். இந்த மனநிலைகள் மாறியிருந்தால், கல்முனை வடக்கு விவகாரம், திருகோணமலை ஷண்முகா வித்தியாலயம் உள்ளிட்ட உள்ளூர் பிரச்சினைகள் சிறுபான்மையினர் கொண்டுவந்த நல்லாட்சியில் பெரும் விஷ்வரூபத்தை ஏற்படுத்தியிருக்காதே.

எனினும், ஒன்றுபடல் உணர்வுகள், இச்சமூகங்களின் மௌனமான சிந்தனை வெளியில் இருக்கவே செய்கின்றன. இருப்பினும், அவ்வாறு இருப்பதும் எதற்காக என்ற சந்தேகங்களின் நிழலாடல்களை இல்லாமலாக்கவே இயலாதுள்ளது. மும்மொழி இளமையின் பாராளுமன்ற உரையில் ஆகர்ஷிக்கப்பட்ட முஸ்லிம் வட்டமொன்றின் உணர்வலைகள், ஏற்கனவே சொன்னதைப் போல, மௌன சிந்தனை வெளியின் ஒரு சிறு வெளியாகவே இருக்கிறது. ஆனால், இந்த உணர்ச்சிக் கொந்தளிப்பின் பின்னணிகளைச் சந்தேகப்படுவதால், சகோதர இனத்தின் சிந்தனைவெளி சப்தமில்லாதுள்ளதே. இதைத்தான் சொல்ல விழைகிறோம்.

தனி இனம், சமூகங்களுக்கான அம்சங்கள் இருந்தாலும், ஒவ்வொருவரது மனங்களிலும் மதம் ஆழ வேரூடுருவி உள்ளது. நல்லடக்கத்திற்கு வாய்திறந்த, நாயகனாக மும்மொழி இளமையாளனைப் பார்க்கும் முஸ்லிம் உணர்ச்சியாளர்கள், சுமந்திரன், கஜேந்திரக் குமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், வேலுகுமார் ஆகியோரின் உரிமைக் குரல்களைக் கண்டுகொள்ளாதுள்ளமை, உணர்ச்சிக்கு அடிமையாகும் இவர்களின் பலவீனங்களையே காட்டுகிறது.

சொந்த சமூகத்துக்காகப் பேச வேண்டியவை எத்தனையோ இருக்கையில், சிறுபான்மையினரின் இணக்க அரசியலையே, வேறுபடுத்தும் மத உரிமைக்காகவும் தமிழர்கள் பேசுவது முஸ்லிம் தேசியத்தில் ஆறுதல் அளிக்கின்றது. இன்னும் தமிழர்களின் போராட்டம் மற்றும் ஜெனீவா வலிகள் இந்த மனநிலைக்குள் வந்துள்ளமை இணக்க அரசியலுக்கான எடுத்துக்காட்டு. இந்நிலையில் இவ்விரு சமூகங்களின் சிலரது சிந்தனைகள் கோணல் கள அரசியலுக்கு வித்திடுகின்றமை கவலையளிக்கிறது.

இருந்த போதும், ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக லண்டனில் நடைபெறுகின்ற ஆர்ப்பாட்டத்தில் புலம்பெயர் சகோதரத் தமிழர்களும் கலந்துகொள்கின்றனரே! ஏன்? ஏற்கனவே கூறிய இவ்விரு சமூகங்களுக்கும் பொதுவான பிரச்சினைகளின் ஒரு சாயல்தான் இது. இதைத்தான், முஸ்லிம் உணர்ச்சியாளர்கள் முதலில் புரியவேண்டி உள்ளது.

ஷரிஆச் சட்டம், திருமணச் சட்டம், ஹராம், ஹலால், ஹிஜாப், பர்தா, புர்கா உட்பட அரசியல் மற்றும் பொருளாதாரம், வாழிடம், மீள்குடியேற்றம் உட்பட எத்தனையோ முஸ்லிம் சமூகச் சவால்களை எதிர்கொண்டு, குரல்கொடுத்து, சளைத்துப் போயுள்ள சொந்த சமூகத் தலைமைகளைக் கண்டுகொள்ளாத சில சிந்தனையாளர்கள், சமூகங்களைச் சீண்டிவிடுவோராகவே நோக்கப்படுகின்றனர்.

டயஸ்பொராக்களின் பார்வையைத் தன்பக்கம் ஈர்க்கும் பாணியில்தான், மும்மொழி இளமை முழங்கியிருக்குமோ?என்ற எண்ண அலைகள், தமிழர் தரப்பிலும் எழும்பி மோதுகிறது. இவரது, கடந்த கால அரசியல் பாதைகளிலிருந்த குன்று, குழிகளைச் செப்பனிடும் முயற்சிகளுக்கு முகவரி வழங்கச் சிலர் புறப்பட்டுள்ளதுதான் இன்றையப் புதுமை. இதற்கு முன்னர், எத்தனையோ உரிமை முழக்கங்கள் மற்றும் மின்னல்களைக் கண்ட சபை இது. எனினும் சமூகத்துக்கான உழைப்புக்கள், சந்தை வாய்ப்பின்றிப் போயிற்றே. இந்தக் கற்கைகளிலிருந்துதான் வியூக, மதிநுட்பமுள்ள வழிகளை சிறுபான்மையினர் தேட வேண்டியுள்ளது.

இன்றைய நிலைமைகளைப் பொறுத்தவரை, தனித்தனி வழிகளே சிறந்ததாகத் தென்படுகிறது. 2015 இல், தங்களை வீழ்த்திய சக்திகளை சிங்களத் தேசியம் அடையாளம் கண்டுதான் விழித்தெழுந்துள்ளது. சிறுபான்மையினரின் ஒன்றுபடல், ஆபத்தில்லை என்பதை, தென்னிலங்கை புரிந்துகொள்ளும் வரைக்கும் தனித்தனிப் பயணங்களே, சிறுபான்மைச் சமூகங்களுக்குச் சாலச் சிறந்தது. சிங்களத்தின் தெளிதல், புரிதலின் பின்னர், சிறுபான்மையினரின் ஒன்றுபடல் பற்றி தமிழ், முஸ்லிம் மௌனவெளிகள் சிந்திக்கட்டும்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar