பாதாளக் குழுக்கள் உள்ளிட்ட தவறான பாதைகளில் பயணிப்போரை இல்லாதொழிப்பதே எமது பிரதான இலக்காகும்

 பாதாளக் குழுக்கள் உள்ளிட்ட தவறான பாதைகளில் பயணிப்போரை  இல்லாதொழிப்பதே எமது பிரதான இலக்காகும்

- கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வில் அமைச்சர் சரத் வீரசேகர திட்டவட்டம்


( ஐ. ஏ. காதிர் கான் )


   இந்த நாட்டிலுள்ள மக்களுக்கு எவ்விதமான அச்சமும் இல்லாது வாழக்கூடிய ஒரு பாதுகாப்பான சூழ்நிலையை  ஏற்படுத்திக் கொடுப்பேன். மக்கள் அமைதியாகவும்,  நிம்மதியாகவும், சந்தோஷமாகவும்  வாழவேண்டும். இதுதான், என்னுடையதும் அரசாங்கத்தினதும் உண்மையான நோக்கமாகும். 

   இதன் பின்னணியில், நான் இன்று மிகவும் முக்கியம்  வாய்ந்த அமைச்சொன்றைப் பொறுப்பேற்றுள்ளேன். இதன்மூலம், எனக்கு வழங்கப்பட்டுள்ள சகல கடமைகளையும், மிகப்பொறுப்போடு நின்று மக்களுக்காக முன்னெடுத்துச் செல்வேன் என, புதிய மக்கள் பாதுகாப்பு அமைச்சராக நியமனம் பெற்றுள்ள அட்மிரல் கலாநிதி சரத் வீரசேகர தெரிவித்தார்.

    புதிய மக்கள் பாதுகாப்பு கெபினட்  அமைச்சராக, ஜனாதிபதி முன்னிலையில் (26) சத்தியப் பிரமாணம் செய்துகொண்ட  அமைச்சர் கலாநிதி சரத் வீரசேகர, (30) திங்கட்கிழமை முற்பகல், பத்தரமுல்லையிலுள்ள மக்கள் பாதுகாப்பு அமைச்சில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். இதன்போது கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.    அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ், ஜனக்க பண்டார தென்னகோன், பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும்  பாதுகாப்பு அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், அமைச்சு அதிகாரிகள் எனப்பலரும்  கலந்துகொண்டிருந்த இந்நிகழ்வில், உதவி பொலிஸ் அதிகாரி சசித்ர வீரசேகர, தனது தந்தையான அமைச்சருக்கு மரியாதை செலுத்தியது விசேட அம்சமாக இருந்தது. 

   இந்நிகழ்வில் அமைச்சர் மேலும் பேசும்போது, 

   "இந்த நாட்டில் வாழும் மக்களுக்கு எவ்விதமான அச்ச உணர்வும் ஏற்படாத வகையிலான பாதுகாப்பும் அமைதியுமிக்க  ஒரு சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்" என்று, ஜனாதிபதி எனது சத்தியப் பிரமாண வைபவத்தின்போது எனக்கு ஆலோசனை வழங்கினார். இந்நிலையில்,  இதுபோன்ற நாட்டில் இனிமேல்  அச்சமின்றி வாழவேண்டுமென்றால், பாதாளக்கோஷ்டி இருக்க முடியாது. கப்பம் பெறவோ, கொடுக்கவோ முடியாது. போதை வஸ்துப் பாவனையோ, விற்பனையோ இருக்க முடியாது. கொள்ளையடித்தலோ, கொலை செய்வதோ இருக்க முடியாது. பெண்களையோ, சிறுவர்களையோ துஷ்பிரயோகம் செய்வது இருக்க முடியாது. எனவேதான், இவ்வாறான இழி நிலையிலான செயல்களை எமது நாட்டிலிருந்து எந்த வகையிலாவது இல்லாதொழிப்பதற்கான முயற்சிகளை  மேற்கொள்வதையே எனது பிரதான கடமையாக உணர்கிறேன். 

   இவ்வாறான தகாத செயல்களில் எவராவது ஈடுபடுவது தெரிந்தால், இது தொடர்பிலான அனைத்து தகவல்களையும் எவ்வித அச்சமும் கொள்ளாமல்  தந்துதவுமாறும் பொதுமக்களிடம் வினயமாகக் கேட்கின்றேன். முடியுமானால், இவ்வாறானவர்களைப் பிடித்து எம்மிடம் ஒப்படைக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.  அரசாங்கம் என்ற வகையில், அதற்கான நடவடிக்கைகளை எடுப்போம். அவ்வாறு இல்லாதுவிடத்து, இவ்வாறானவர்களை முற்றிலும் ஒழித்துக்கட்டுவோம். இதை, நாம் நாட்டு மக்களின் நலன் கருதியே செய்கிறோம். நாட்டு மக்களும் கரிசணையோடு ஒன்றுபட்டு, இது விடயத்தில் எமக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என நம்புகிறோம்.

   எமது உண்மையான நோக்கம், மக்களைப் பாதுகாப்பதேயாகும். இவ்வாறு நாம் பொறுப்புணர்ச்சியுடன் செயற்படுவதால், எமக்கு எந்தப் பாவமும் கிட்டாது  என்பது எமது நம்பிக்கையாகும். 

   மக்களின் பாதுகாப்புக் கருதி, மிகத்திறமை வாய்ந்த பொலிஸ் குழுவினரை இவைகளுக்காக நியமிக்க உத்தேசித்துள்ளோம்.

   இது தவிர, வாகன நெறிசல், போக்குவரத்து ஒழுங்கு விதிமுறை மற்றும் தண்டப்பணம் அறவிடப்படும்  தொடர்பிலான விதிமுறைகள் என்பனவும், எமது அமைச்சுக்குக் கீழ் வருவதால், பொதுமக்கள் மற்றும் பயணிகளின் நலன் கருதி இவைகளுக்குத் தேவையான அவசிய ஒழுங்குகளை மேற்கொள்ளவும், பொலிஸாருடன் இணைந்து பரந்தளவிலான சேவைகளைச் செய்யத் திட்டமிட்டுள்ளோம்.

   குறிப்பாக, பாதாளக் குழுக்கள் உள்ளிட்ட தவறான பாதைகளில் பயணிப்போரை இலங்கையிலிருந்து முற்றாக ஒழிப்பதே எமது பிரதான இலக்காகும் என்றார்.


( ஐ. ஏ. காதிர் கான் )

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்