BREAKING NEWS

வஹாபி, பராஷி கலகங்கள்

 


நூல் அறிமுகம் (பாகம் 11)

ஆய்வாளர் யோகிந்தர் சிக்கந்த் எழுதிய இறைப்பற்றாளர்களின் அரண்(Bastions of the Believers) என்ற நூலின் இரண்டாவது அத்தியாயம் இந்தியாவில் மதரஸாக்கள்- வரலாற்றுப் பரிணாம வளர்ச்சி என்பதாகும். அதன் உபதலைப்பான உலமாக்களின் செயல்பாட்டு எழுச்சி (Rise of Ulama Activism) என்பதில் முக்கியமான சில செய்திகளை அவர் குறிப்பிடுகிறார்.

முகலாயப் பேரரசின் அதிகாரம் பலமிழந்து கொண்டிருந்தது. அதையொட்டி, மாறிக்கொண்டிருந்த அரசியல் சூழலில், சுல்தான்களின் ஆதரவு பெற்று அரசவையில் இருந்த, உலமாக்களின் இடமும் பலவீனமாகிக் கொண்டிருந்தது. சுல்தான்கள் இஸ்லாத்தின் பாதுகாவலராய், ஒரு பிரதிநிதியாய் நின்றிருந்த இடத்தைச் ‘சாதாரண முஸ்லிம்கள்‘ இட்டு நிரப்பவேண்டிய அரசியல் சூழல் உருவாகியிருந்தது..

ஒவ்வொரு முஸ்லிமும் இஸ்லாத்தின் பாதுகாவலனாக ஆகவேண்டிய நிலை. முஸ்லிம் குடும்பத்தில் பிறந்திருந்தால் மட்டும் போதாது அல்லது முஸ்லிம் பெயரை மட்டும் சுமந்து கொண்டிருந்தால் போதாது. இறை நம்பிக்கை என்ற அம்சமானது, ஒவ்வொரு முஸ்லிமின் சுய ஓர்மையில் பதியவேண்டும் என்ற நிலை அழுத்தம் பெற்றது. அதன்பொருள், இஸ்லாமற்ற அம்சங்கள் ஓரங்கட்டப்பட்டு, ஒவ்வொரு நம்பிக்கையாளரும், நபிகளாரை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்பதாகும்.

சுல்தான்களின் ஆதரவு குறைந்தாலும், இஸ்லாமியச் சமூகத்தின் பிரதிநிதியாகக் கருதிக்கொண்ட, உலமாக்களின் செல்வாக்கானது கூடத்தான் செய்தது. அஷ்ரஃப் பிரிவிலிருந்து பல செல்வாக்குமிக்க உலமாக்கள் தோன்றி, ‘சாதாரண‘ முஸ்லிம்களுடன்‘, அஜ்லஃப் முஸ்லிம் பிரிவினரையும் உள்ளடக்கி, ஒரு சீர்திருத்த இயக்கத்தை ஆரம்பித்தார்கள். அது சரிந்து கொண்டிருந்த அஷ்ரஃப் உலமாக்களின் செல்வாக்கினை மீட்டெடுக்க உதவியது..

ஷரியத்தின் படி வாழ்வதுதான் இலட்சியமான சமூக அந்தஸ்தை குறிக்கும், அதற்கு மாறான சுல்தான்களின் படாடோபமான ஆடம்பர வாழ்க்கையோ, இஸ்லாம் போதிக்கும் வழிக்கு மாற்றானது என்ற விமர்சனத்தை சீர்திருத்தவாதிகள் முன்வைத்தனர். இந்தச் சீர்திருத்த இயக்கத்தினை முற்றிலும் மதரீதியாகப் பார்க்கத் தேவையில்லை.

உதாரணமாக, பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தித்து மீர் (Titu Mir), தோது மியான் (Dudu Miyan) போன்றோரால் வங்காளத்தில் ஆரம்பிக்கப்பட்ட இயக்கத்தில், கிழக்கிந்திய கம்பெனியின் ஆதரவுபெற்ற இந்து உயர் ஆதிக்க சாதி நிலச்சுவான்தாரர்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஏராளமான விவசாயிகளும் இதில் பங்கெடுத்தனர். ஷரியத்தின்படி நடந்தால் உலகியல் துன்பங்களுக்கு, இறைவன் முற்றுப்புள்ளி வைப்பான் என்று சீர்திருத்தக்காரர்களால் சொல்லப்பட்டது.

அப்படியாக இன்றும் தெற்காசியாவில் உள்ள சீர்திருத்தக்காரர்களுக்கு நினைவில் பதிந்து போன இயக்கம் பதான் எல்லைப்பகுதியில் உருவான முஜாகித்தீன் இயக்கமாகும். இந்த இயக்கமானது தனது கருத்தியலுக்கான வேர்களை டில்லி ஆலிமாகவிருந்த ஷா வலியுல்லாவிடமும் (Shah Waliullah),அவரது மகன்களின் ஒருவரான ஷா அப்துல் அஜிஸிடமும் (Shah Abdul Aziz) கண்டது.

அஜிஸ் பிரிட்டிஷாருக்கு எதிராக, இந்தியாவானது இஸ்லாத்துக்கு எதிரான அந்நியர்களால் ஆளப்படும் போராட்டத்துக்கான இடமாகும் - தாருல் ஹர்ப்- என்று ஒரு பத்வாவையே வெளியிட்டார்.

ஷா வலியுல்லாவின் பேரர்களுள் ஒருவரான ஷா இஸ்மாயில்(Shah Ismail,1781-1831), அவரது வழிகாட்டியான ரே பரேலியைச் சார்ந்த சைய்யத் அஹமத்(Sayyed Ahmad, இவர் ஷா வலியுல்லா மகனின் மாணாக்கர் ஆவார்) ஷா அப்துல் காதிர் (Shah Abdul Qadir) ஆகியோர் ஆரம்பித்த இயக்கமானது பல சாமான்ய முஸ்லிம்களை ஈர்த்தது. ஷா இஸ்மாயிலும், சைய்யத் அஹமதும் ஆப்கான் எல்லையோரம் பயணித்து, அவர்கள் நோக்கிலான, ஷரியத்தின் பாற்பட்ட அரசாங்கத்தை ஸ்தாபித்தனர்.

சையத் அஹமது, விசுவாசிகளின் தளபதி ‘அமீருல் மூமினீன்‘ என்று தன்னை அழைத்துக் கொண்டார்.

அங்கிருந்த பதான் இன மக்களால் காலங்காலமாக பேணப்பட்டுவந்த தங்களது மரபான நடவடிக்கைகளை முஜாகித்தீனின் புதிய செயல்பாடுகளானது புறந்தள்ளுவதாக, மீறுவதாக உணரப்பட்டது.

அதனால் பதான் குடிகளுக்கும், முஜாஹிதீன்களுக்கும் மோதல் உருவானது. முஜாஹித்தீன்கள், தங்களது இலட்சியத்தை நிறுவுவதற்காக சீக்கியர்களுக்கு எதிரான ஜிஹாத்தை தொடங்கினார்கள்.

பஞ்சாபில் சீக்கியர்களால் ஒதுக்கப்பட்டுவந்த முஸ்லிம்களின் ஆதரவைக் முஹாஜித்தீன்கள் கோரியபோது, பல பதான் பழங்குடியினர் முஹாஜித்தீன்களை எதிர்ப்பதற்குத் தோதாகச் சீக்கியர்களுடன் சேர்ந்து கொண்டனர்.

பாலகோட்டில் 1831ல் நடந்த பயங்கரமான போரில் ஷா இஸ்மாயில் சையத்தும், இதர முக்கிய முஹாஜித்தீன்களும் கொல்லப்பட்டனர். அப்படியாக முஹாஜித்தீன்கள் ஸ்தாபித்த அரசாங்கம் குறுகிய காலத்துக்குள் முடிவுக்கு வந்தது.

ஆயுதங்கள் ஏந்தி, இராணுவ பலம் கொண்டு மீண்டும் முஹாஜித்தீன் அரசை ஸ்தாபிக்க சையத் அஹமத், ஷா இஸ்மாயில் போன்றோருடைய தொண்டர்கள் விழைந்தார்கள். அந்த முயற்சியானது 1860 வரை தொடர்ந்தது. கடைசியில் பிரிட்டிஷாரால் அவர்களின் செயல்பாடுகள் நசுக்கப்பட்டு விட்டது.

இருந்தும் உண்மையான இஸ்லாமிய அரசாங்கத்தை நிர்மாணிக்கும் முயற்சியானது தொடர்கிறது. இப்போதும் இந்தியாவில், தேவ்பந்ந்(Deobandi), அஹ்ல் இ ஹதீத்(Ahl-i-Hadith) மரபைச் சேர்ந்தவர்கள், ஷா இஸ்மாயிலையும், அவரைப் பின்பற்றுபவர்களின் மரபையும் தாங்கிச் செல்பவர்களாக தங்களைக் கூறிக் கொள்வார்கள்.

.......................................................................................................................................................

சுமார் இரண்டு பக்கஅளவுள்ள இந்த உபதலைப்பில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்து இயக்கம் கண்ட தித்துமீர்(Titu Mir), தோது மியான்(Dudu Miyan) ஆகிய இருவரைப் பற்றி இரண்டு வாக்கியங்களில் சுருக்கமாகக் குறிப்பிட்டுப் போகிறார் யோகிந்தர் சிக்கந்த்.

ஆனால்,அந்த இருவரும் தனிப்பட்ட வரலாறுடையவர்கள். அவர்கள் வங்காளத்தில், கட்டாய வரிவசூல் செய்த ஜமீன்தார்களுக்கு எதிராகவும், ஜமீன்தார்களின் ஒடுக்குமுறைக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்த அரசாங்க நடவடிக்கைகளுக்கு எதிராகவும், அடித்தட்டு விவசாயிகளைத் திரட்டி போராடியவர்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டு முழுக்கவும் வங்கக் கிராமப்புற வரலாற்றில் இந்த இரு இயக்கங்களும் மிகப்பெரும் தாக்கம் செலுத்தியிருக்கின்றன.

தித்து மியான்அல்லது தித்து மீர் எனப் பிரபலமாக அறியப்பட்ட மிர்நிஷார் அலியின் தலைமையில் 1831ல் வஹாபி இயக்கம் நடத்தப்பட்டிருக்கிறது. அவர் மதரஸாவில் பயின்றிருக்கிறார். மல்யுத்தவீராரகவும் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அதே சமகாலத்தில் பதினான்கு வருடங்கள் கழித்து பரீத்பூர் மாவட்டத்தில் ஹாஜி ஷரியத்துல்லாவின் மகனான, தோதுமியான் இயக்கம் நடத்தியிருக்கிறார்.

அவர்கள் நடத்திய போராட்டத்தினை வங்காளத்தின் வஹாபி, பராஷி பிரிவைச் சார்ந்த கலகக்காரர்கள் என்ற தலைப்பில் ஆய்வு செய்திருக்கிறார் நரஹரி கவிராஜ் என்ற ஆய்வாளர்.  அவர் அந்த இரு இயக்கங்களையும் மதப்போர்வையில் நடந்த சீர்திருத்த இயக்கமாகவே மதிப்பிட்டுள்ளார்.(Wahabi And Farazi Rebels of Bengal, Narahari Kaviraj,1982). 

அதை விடியல் பதிப்பகம் தமிழில் வஹாபி, பராஷி கலகங்கள் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது. (விடியல் பதிப்பகம், 11 பெரியார்நகர், மசக்காளிபாளையம், அக்டோபர் 2002, கோயம்புத்தூர். பக்.136)

வஹாபி, பராஷி கலகங்கள் என்ற அந்த நூலிலிருந்து சில தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் தரப்பட்டிருக்கின்றன.

பராசாத் மாகாணத்தில் தற்காலிக இணை நீதிபதியாக பணியாற்றிய ஜே.ஆர். கால்வினின் அறிக்கையிலிருந்த குறிப்புகள் வஹாபி இயக்கத்தினைப் பற்றி குறிப்பிடும் போது -

‘பராசாத்தின் வடக்குப்பகுதியிலும், இப்பகுதியையொட்டி, நாடியா மாவட்ட எல்லைக்குள் இருந்த ஒரு சில கிராமங்களிலும் வசித்து வந்த சாதாரண விவசாயி-நெசவாளி முசுலீம்களே பெரும்பாலும் இந்தக் கலகத்தில் பங்கெடுத்திருந்தனர். மற்றவர்கள் அடித்தட்டு வர்க்க முசுலீம்களாக இருந்தனர். விவசாயிகள் அனைவருமே ஒரு குறிப்பிட்ட சமயச் சீர்திருத்த இயக்கத்தில் இணைந்திருந்தார்கள் என்ற எதார்த்தமானது, அவர்களின் மனவெழுச்சிக்கும், உறுதிக்கும் கூடுதல் வலிவைச் சேர்த்திருந்தது. நியாயமான லட்சியத்திற்காகவே தாங்கள் போரிடுவதாகவும், தங்கள் ஒடுக்கு முறையாளர்களை எதிர்த்து ஜிகாத் புனிதப்போர் நடத்துவதாகவும் அவர்கள் நம்பினார்கள். மரணத்திற்கு சவால் விட்டு தியாகிகள் என்ற முறையில் மரணத்தைத் தேர்ந்தெடுத்தார்கள்......

மதச் சீர்திருத்தத்திற்கான இயக்கமாகத்தான் பராஷி இயக்கமும் தொடங்கியது என்பதில் சந்தேகமில்லை. ஆனால்  அந்த இயக்கமானது விவசாய மக்களிடமிருந்துதான் தன் முக்கிய வலிமையைப் பெற்றிருந்தது. விவசாயிகளின் சில அடிப்படையான மனக்குறைகளுக்கும், அவர்களின் பிரச்சினைகளுக்கும் ஒருதீவிரமான தீர்வை உறுதியாகத் தந்ததாலும், அம்மக்கள் இந்த இயக்கத்தை நோக்கி ஈர்க்கப்பட்டார்கள்……..

வங்காளத்தின் கீழ்மாகாணங்களில் பணிபுரிந்த காவல் துறைக் கண்காணிப்பாளரின் குறிப்புகள்…

பாராஷிகளின் இறைக் கட்டளைகள் நல்லவைதான். உண்மையை உறுதியாகப் பின்பற்றுமாறு அவை போதிக்கின்றன. உருவ வழிபாடு அல்லது மனித வழிபாடு போன்ற அனைத்துச் சடங்குகளிலிருந்தும் விலகி நிற்க வேண்டுமென்றும், குர்ஆனுக்கு மட்டுமே கட்டுப்பட வேண்டுமென்றும் அது போதிக்கிறது“.. தங்களின் மதக்கோட்பாடுகளில் விவசாயத்திட்டமும் ஒரு பகுதி என்பதே பராஷி இயக்கம் விவசாயிகளுக்கு தந்த முக்கிய அறைகூவலாக இருந்த்து.

டாக்கா ஆணையராக இருந்த டன்பர் என்பவர் பராஷி இயக்கத்தைப் பற்றி அரசுக்கு சமர்ப்பித்த அறிக்கையில் இருந்த குறிப்புகள்.

“கடவுள் இந்த உலகை எல்லா மனிதர்களுக்கும் பொதுவாகவே உருவாக்கினார். வரி செலுத்துவது என்பது அவரின் சட்டத்திற்கு முரணானதாகும்..

இந்தப் பூமி இறைவனுக்குச் சொந்தம் மக்களுக்கு அதைத் தந்தது இறைவன்தான் என்ற இறைக்கருத்து பராஷி இயக்கத்துக்கு காரணமாயிருந்தது. இந்தக் கருத்தின்படி ஜமீன்தாரர்களால் கடுமையாக விதிக்கப்பட்ட நிலத்தீர்வை அருவருப்பதானதாகக் கருதப்பட்டது…அது ஒழிக்கப்படும் மகிழ்ச்சியான காலத்தை எதிர்பார்க்கும்படி விவசாயிகளுக்குப் போதிக்கப்பட்டிருந்தது….. பல்வேறு பிரிவுகளைப் பின்பற்றி வந்த முசுலீம்களும் பராஷிகளின் தாக்குதலுக்கு உள்ளானார்கள். மற்ற பிரிவு முசுலீம்களின் வழிபாட்டுக் கூட்டங்களில் தலையிட்டது மட்டுமல்ல, தங்கள் வழியில் உறுதியாக நின்ற அவர்களை பராஷிகள் கடத்திச் சென்றதோடு அவர்கள் சொத்துகளைக் கொள்ளையும் அடித்தனர். வெவ்வேறு பிரிவுகளைப் பின்பற்றி வந்த முசுலீம்கள் சித்ரவதை செய்யப்பட்ட சந்தர்ப்பங்களும் நடந்ததுண்டு. சில நேரங்களில் குரூரமாகக் கொலையும் செய்யப்பட்டதுண்டு.

வஹாபி இயக்கத்தையும் பராஷி இயக்கத்தையும் வேறுபடுத்திக் காட்டும்போது, நரஹரி கவிராஜ் இப்படி எழுதுகிறார்.

பராசாத்திலிருந்த வஹாபி இயக்கம் போலவே, பரீத்பூரை மையமாகக் கொண்ட பராஷி இயக்கமும் ஒரு முசுலீம் மீட்புவாத இயக்கம்தான், பராஷிகளும் இந்து ஜமீன்தார்களின் சட்டவிரோத வரிவிதிப்புகளுக்கு எதிரான போராட்டங்களுக்கே முக்கியக் கவனம் தந்து வந்தார்கள். இம்மாதிரியான ஒற்றுமைகள் இருந்தபோதிலும், இவையிரண்டும், ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத தனித்தனி இயக்கங்கள்தான்.

பராஷி திட்டத்தில் எப்போதுமே சமூக விவசாயச் சீர்திருத்தத்திற்கே அழுத்தம் தரப்பட்டது. அரசாங்கத்தின் மீது யுத்தம் தொடுக்க வஹாபிகள் ஆர்வமாய் இருந்தபோது, பராஷிகள் முடிந்தளவு அரசாங்கத்தோடு சண்டையைத் தவிர்த்தே வந்தனர்.

அடித்தட்டு மக்களின் இயக்கமாக இருந்ததால், கிராமப் பணக்காரர்கள் ஜமீன்தாரர்கள், கந்துவட்டிக்கார்ர்கள் அவுரித்தோட்ட முதலாளிகள் ஆகியோரிடமிருந்து பராஷிகள் பலத்த எதிர்ப்பைச் சம்பாதித்திருந்தார்கள். உள்ளுர் போலீசார் முழுக்கவும் ஜமீன்தார்கள் கட்டுப்பாட்டில் இருந்தார்கள். அதற்கும் மேலாக, இந்த இயக்கம் அரசாங்கத்திற்கு எதிரானதாகவும் நடப்பில் நிலவி வந்த சமூக அமைப்பிற்கு ஒரு சவாலாகவும் கருதப்பட்டதால், அரசாங்க இயந்திரத்தின் முழு வலுவும் இதற்கு எதிராகத் திருப்பப்பட்டது….

விவசாயிகளின் மனக்குறைகள்தான் இந்தக் கலகத்திற்கு அடிப்படையாக இருந்தன என்பதில் எந்த அய்யமுமில்லை. ஆனால் அதே நேரத்தில் இது அரசியல் பண்பு எடுத்தது என்பதை மறுப்பது தவறானதாகவும் என்று சொல்லுகிறார் நரஹரி கவிராஜ்.

மேலும்,  ‘பராசத்தில் நடந்த வஹாபி எழுச்சியோ அல்லது பராஷி கிளர்ச்சியோ வகுப்வுவாகத் கலகத்தின் வகையைச் சார்ந்ததல்ல. என்ற விஷயத்தை தெளிவாக்கிக் கொள்ள வேண்டும். இவை உறுதியாக இந்து மதவெறிக்கு எதிராக எழுந்த முசுலீம் மதவெறி என்ற வகையைச் சேர்ந்ததுமல்ல. அதன் இலக்கு ஜமீன்தார்கள். பெரும்பாலான ஜமீன்தார்கள் இந்துச் சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தார்கள். அதே நேரத்தில் வெகுசிலராக இருந்த முசுலீம் ஜமீன்தார்ர்கள் கூட விட்டு வைக்கப்படவில்லை. விவசாயிகளை மோசமாக ஒடுக்கி வந்த அய்ரோப்பியத் தோட்ட முதலாளிகளும் கூட பாரபட்சமில்லாமல் தாக்கப்பட்டார்கள். இந்த இயக்கத்தின் நிகழ்ச்சிப்போக்கு முழுவதிலும், இந்த விவசாயப்பண்புதான், மதப்பண்பைக்காட்டிலும், முன்னிலையில் இருந்து வந்தது. தொடக்கம் முதல் இறுதிவரை விவசாயப் பண்பே செல்வாக்கு செலுத்தி வந்தது.

மதப் பதாகையின் கீழ்ப் போராட்டம் நடந்து வந்ததால் இந்த இயக்கம் ஒரு மதச் சமூகத்தோடும் (முசுலீம்கள்) ஒரு மதப்பிரிவோடும் (வஹாபிகள் அல்லது பராஷிகள்) நின்று போனது. அந்த வகையில் இந்த இயக்கம் சில அம்சங்களில் வகுப்புவாத குறுங்குழுவாதச் சாய்விலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியவில்லை. சிலநேரங்களில் வர்க்கப் பிரச்சினைகள் வகுப்புவாத, சாதிய, குறுங்குழுவாத பிரச்சினைகளோடு கலந்துவிடும்.

அந்த வகையில், முசுலீம் விவசாயிகளுக்குச் சமமாக இந்து விவசாயிகளும், ஜமீன்தார்களின் ஒடுக்குமுறைகளுக்குப் பலியாகி வந்த போதிலும், இந்து விவசாயிகள் இந்த இயக்கத்தில் இணைவதை இது விலக்கிவிட்டது. பராஷிப் பிரிவைச் சேராத, முசுலீம் விவசாயிகளும்கூட இதில் சேர்க்கப்படவில்லை. இம்மாதிரியான ஒரு குறுங்குழுவாத, பக்குவமற்ற அணுகுமுறை விவசாய மக்களின் விரிந்த முன்னணியாக வளர்ந்து விடாமல், இந்த எழுச்சியைத் தனிமைப்படுத்தி விட்டது. அதன் தவிர்க்கவியலாத வீழ்ச்சிக்கும் இதுதான் காரணமாயும் இருந்தது. என்று தனது ஆய்வு முடிவை வெளிப்படுத்துகிறார் நரஹரி கவிராஜ்.

Mohamed  Shafi 

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar