அரசியல்வாதிகள் பூச்சுற்றுவது போதாதென்று நீங்களுமா

 இரட்டை பிரஜாவுரிமை விதியை ஆதரித்து, பஷில் ராஜபக்சவின் நாடாளுமன்ற பிரவேசத்திற்காய் இரண்டாம் சுற்றில் வாக்களித்தராம் நண்பர் முஷர்ரப் எம்பி. 


நண்பரே, திகாமடுல்ல மாவட்ட முஸ்லிம் வாக்காளர் காதுகளில் ஏலவே இருக்கிற ஒரு சில அரசியல்வாதிகள் பூச்சுற்றுவது போதாதென்று நீங்களுமா புதுப் புனைவுடன் பூச்சுற்ற முனைகின்றீர்கள்..?


சினிமாத்தன அரசியல் சோபையிழந்து போய் கண நாளாயிற்று. யதார்த்தங்களை பேச முனையுங்கள். இளம் அரசியல்வாதியாகிய உங்களிடம் மக்கள் உண்மையை எதிர்பார்க்கின்றனர். 


நீங்கள் ஆதரித்தது பற்றி எமக்கு ஆட்சேபனையில்லை. ஆதரித்தமைக்கு சொன்ன காரணம் மிகவும் சப்பையானது. 'பொத்துவில் மண் மலையை காக்க நான் இருபதாம் திருத்த வாக்கெடுப்பு இரண்டாம் சுற்றில் ஆதரித்தேன்' என்று சொன்னாலும் நாம் கண்ணை மூடிக்கொண்டு நம்பி இருப்போம்.


ஆனால், நீங்கள் சொன்ன பஷிலை நாடாளுமன்றம் கொண்டு வர ஆசைப்படுகிறேன் எனும் காரணம் மிகவும் செயற்கைத்தனமானது. அதை விடவும் காமெடி, விமல் வீரவன்ச, விஜயதாச ராஜபக்ஸ போன்ற இனவாதிகளுக்கு செக் வைக்க பஷில் தேவை என்று நீங்கள் சொல்வது.


பஷில் ராஜபக்ஸ எனும் மொட்டின் உயிர் நாடி பற்றி உங்களுக்கு நான் விளக்கி சொல்லத் தேவையில்லை. இந்த அரசின் வெற்றியின் மறைகரம் அவர். காய் நகர்த்தலில், கொள்கை வகுப்பதில், இலக்கை அடைவதில் அவர் அரசியல் சாணக்கியர் என்றே சொல்லலாம். 


அவர் பாராளுமன்றம் வந்து தான் காரியமாற்ற வேண்டும் என்றில்லை. மொட்டு ராஜாங்கத்தின் நிழல் அவர். இருப்பினும் சில காரணங்கள் நிமித்தம் மன்றுக்கு வருவார். அது வேறு விடயம். அதைத்தாண்டி ராஜபக்ஸ சகோதரர்களின் ஒற்றுமை பற்றி உலகறியும். உடைவில்லாத பந்தமிது.


அப்படியிருக்க, "ஆமை ஹராம் ஆமை முட்டை ஹலால்" என்பது போல பஷில் உள்ளிட்ட ராஜபக்ஸக்கள் சேர்ந்து கொண்டு வந்த இருபதாம் திருத்த வரைபை எதிர்த்து வாக்களித்து விட்டு, இரண்டாம் சுற்றில் இரட்டை பிரஜாவுரிமை ஷரத்தை ஏற்கிறேன் என்பது வேடிக்கையானது. 


விமல், விஜயதாச போன்றோர் Dual Citizenship Article தொடர்பாக பஷில் ராஜபக்ஸவை எதிர்க்க நினைத்திருந்தால்  அவர்களும் வாக்களித்திருக்க மாட்டார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.


மேலும், இவ்வரசில் விமலும் ஒரு முக்கிய அங்கம். பிரதமர் மஹிந்தவின் ஆசி பெற்றவர். விமல் போன்ற ஆட்களை அடக்க பஷில் பாராளுமன்றம் நுழைய வேண்டும் என்று நீங்கள் சொல்வது, பிள்ளையை பற்றி தகப்பனிடம் குறை சொல்வது போன்றது.


மொட்டு அரசாங்கத்தின் கேந்திர சுக்கானே பஷில் எனும் பவராக இருக்கும் போது, இருபதின் அம்சங்கள் யாருக்குள்ளால் வந்திருக்கும் என்று ஊகித்து கொள்ளுங்கள். 


நிலைவரம் இப்படி இருக்கும் போது, திருப்பதிக்கே லட்டா..? என்று கேட்கும் வண்ணம் பஷில் ராஜபக்ச பாராளுமன்றத்திற்கு வர வேண்டும் என்று ஆசைப்பட்டு வாக்களித்தேன் என்பதெல்லாம் நம்பியார் காலத்து செண்டிமெண்ட் நண்பரே.


எஸ்.ஜனூஸ்

23.10.2020

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்