BREAKING NEWS

மனோ கணேசன் இம்முறை தடைகளைத் தாண்டிவிடுவாரா?!


“...மனோ கணேசன் தன் முன்னாலுள்ள தடைகளை இம்முறை தாண்டிக் குதித்துவிடுவாரா? கொழும்பு ஒரு தமிழரையாவது பாராளுமன்றத்துக்கு அனுப்புமா?” என்றொரு கேள்வி அண்மையில் என்னுடைய கொழும்பு நண்பர் ஒருவரால் எழுப்பப்பட்டது.

120,000க்கும் அதிகமான தமிழ் வாக்குகளைக் கொண்ட கொழும்புத் தேர்தல் மாவட்டத்தில் இருந்து தமிழ் மக்கள் சரியாகத் திட்டமிட்டு வாக்களித்தால் குறைந்தது இரண்டு உறுப்பினர்களையாவது பாராளுமன்றத்துக்கு அனுப்ப முடியும். 2004 பொதுத் தேர்தலை அதற்கு உதாரணமாகவும் கொள்ளலாம். அந்தத் தேர்தலில் மனோ கணேசனும், மறைந்த தியாகராஜா மகேஸ்வரனும் தமிழ் வாக்குகளினால் வெற்றிபெற்று பாராளுமன்றம் சென்றிருந்தார்கள். நிலைமை அப்படியிருக்க, இம்முறை ஒரு பாராளுமன்ற உறுப்பினரையாவது வெற்றிகொள்ள முடியுமா? என்கிற சந்தேகம் தோன்றியிருப்பது மிகப்பெரிய அவலமாகும்.

கொழும்பில் தொடர்ச்சியாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு விழுந்து வருகின்ற தமிழ் வாக்குகள், இம்முறை ஒரு குழப்பமான விகிதத்தில் ரணில்- சஜித் இடையே பிரிவடையும் சந்தர்ப்பம் இருக்கின்றது. ரணிலின் யானைச் சின்னத்தில் கடந்த காலங்களில் போட்டியிட்ட மனோ கணேசன், இம்முறை சஜித்தின் தொலைபேசியில் வருகிறார்.

வடக்கு – கிழக்கு தவிர்ந்த ஏனைய அனைத்துத் தேர்தல் மாவட்டங்களிலும் ராஜபக்ஷக்களே மிகப்பெரிய வெற்றியைப் பெறும் சூழல் இருக்கின்றது. அப்படியான நிலையில், சஜித் தரப்பினால் அதிகபட்சம் 6 ஆசனங்களை கொழும்பில் வெற்றிகொள்ள முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த 6 ஆசனங்களுக்குள் ஒருவராக மனோவோ, அவரோடு போட்டியிடும் இன்னொரு தமிழ் வேட்பாளரோ மேலெழ வேண்டும். அதற்கு குறைந்தது 70,000 விருப்பு வாக்குகளுக்கும் மேலாக தேவைப்படலாம்.

ஆனால், மனோவாலோ, அவரோடு சேர்ந்தோடும் வேட்பாளராலோ 70,000 வாக்குகளைப் பெற முடியுமா? ஏனெனில் கடந்த காலத்தில் மனோவோடு இருந்தவர்களும், தற்போது மனோவோடு சேர்ந்திருப்பவர்களும்தான் அவருக்கான வாக்கு இழப்பை செய்யும் நபர்களா தெரிகிறார்கள்.

மனோவோடு கடந்த காலத்தில் பயணித்த சண்.குகவரதன் இம்முறை அவரை விட்டுப் பிரிந்து, ரவி கருணாநாயக்கவோடு இணக்கமாகி யானையில் சவாரி செய்கிறார். குகவரதனுக்கு மாற்றீடாக மனோ, ஜனகன் விநாயகமூர்த்தியை களத்தில் இறக்கியிருக்கிறார். ஆனால், ஜனகன் மீதான நல் அபிப்பிராயம் என்பது, அவ்வளவு ஒன்றும் நல்ல நிலையில் இல்லை.

கடந்த பொதுத் தேர்தலை இலக்கு வைத்து ஜனகன் தோற்றுவித்த அரசியல் கட்சியொன்று நகைப்புக்கிடமான அரசியலை வன்னியில் செய்ய எத்தனித்திருந்தது. எப்படியாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒரு ஆசனத்தைப் பெற வேண்டி அவர், கூட்டமைப்பின் எல்லாப் பங்காளிக் கட்சிகளின் பின்னாலும் அலைந்து திரிந்திருந்தார். ஆனால், அது சாத்தியப்படாத புள்ளியில், ரிஷாட் பதியுதீனுக்கு பலம் சேர்க்கும் வகையில் ஐ.தே.க.வில் போட்டியிட்டு 3000 வாக்குகளையும் பெற்றிருந்தார். அவரின் அவசர அரசியல் வரலாறு அப்படித்தான் இருக்கின்றது.

அப்படியான நிலையில், மனோவை தொடர்ச்சியாக ஆதரித்து வந்த இளைஞர்களிடம், ஜனகனை மனோ என்ன அடிப்படிடையில் தன்னோடு இணைத்துக் கொண்டார், இவ்வளவு முக்கியத்துவம் வழங்கினார் என்கிற கேள்வி எழுந்தது. ஏனெனில், ஜனகன் வன்னியில் முன்னெடுத்த அரசியல் எந்தவித அடிப்படைகளும் சார்ந்ததாக இருக்கவில்லை. மாறாக, கொப்பிகளை வழங்கி வெற்றிபெறும் குறுகிய - சுயநல அரசியலை நோக்கமாக கொண்டிருந்தது. அப்படியான ஒருவரைக் காட்டி நம்பிக்கையளிக்கும் அரசியலை மனோ எவ்வாறு கோர முடியும்.

மற்றப்பக்கம், மனோவோடு இருந்த குகவரதன், ஜனகன் மனோவோடு இணக்கமான தருணத்தில் வெளியேறுகிறார். ரவி கருணாநாயக்கவோடு இணக்கமாகிறார். ஒரு உறையில் இரு கத்திகள் இருக்க முடியாது என்ற நிலைப்பாட்டின் போக்கில் இந்த விடயத்தை சிலர் நோக்கலாம். ஆனால், ஜனகன் மனோவோடு இணந்த சமயத்தில், குகவரதன் மாத்திரமல்ல, இளையோர் இணையத்து இளைஞர்கள் பலரும் மனோவை விட்டு விலகிச் சென்றார்கள். இம்முறை யானையில் போட்டியிடவும் செய்கிறார்கள். இதற்கான காரணங்களாக ஒவ்வொரு தரப்பும் ஊடக சந்திப்புக்களை நடத்தி விளக்கமளித்திருக்கின்றன. தனிப்பட்ட தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவு நாடாக்களை வெளியிட்டு இரண்டாம் கட்ட அரசியலையும் செய்கின்றன.

இவ்வாறான நிலைகளையெல்லாம் கண்டு நின்றுதான், கொழும்பு தமிழ் பாராளுமன்ற உறுப்புரிமையைப் பற்றி பேச வேண்டியிருக்கின்றது. மனோவை விட்டுப் பிரிந்தவர்களுக்கு ரவியோடு இணைவதைத் தவிர வேறு மார்க்கம் மேல் மாகாண அரசியலைப் பொறுத்தளவில் இல்லை என்பது நிலை. ஆனால், ரவியின் கடந்த கால கறை படிந்த வரலாறு அவர்களைக் காப்பாற்றுமா என்றால், அதுவும் இல்லை. குகவரதன் தரப்பு, அதிகபட்சம் ரவிக்கு சில ஆயிரம் வாக்குகளை பெற்றுக் கொடுக்கும் கருவிகளாகவே இருக்கப் போகிறார்கள். அது, மனோவின் வெற்றியை சிலவேளை அசைத்துப் பார்த்தும் விடலாம்.

இன்னொரு பக்கம், மனோ தன்னோடு இணைத்துக் கொண்டு முன்னிறுத்தும் எந்த நபருக்கும் எந்தவொரு அரசியல் ஒழுக்கமும் நெறியும் இல்லை என்பதுதான் எரிச்சலூட்டும் விடயம். அதற்கான பொறுப்பை, மனோவும் ஏற்றுக்கொள்ள வேண்டும். தன்னுடைய கட்சிக்குள் தனக்கு அடுத்த நிலையில், நம்பிக்கையான தகுதிவாய்ந்த ஒருவரையும் அவர் வளர்த்தெடுத்திருக்கவில்லை. ஒரு சாக்குக்காக சிலரை அவர் முன்னிறுத்துகிறார். ஒரு காலத்தில் நல்லையா குமரகுருபரனை முன்னிறுத்தினர். அவர், ஒரு கட்டத்தில் மனோவை விட்டுப் பிரிந்து, பிரபா கணேசனோடு சென்று, திரும்ப குகவரதனோடு இணக்கமாகி, பின்னர் மீண்டும் இப்போது மனோவிடம் வந்து சேர்ந்திருக்கிறார். குமரகுருபரனைக் காணும் யாராவது அவரை நம்பி ஒரு கட்சிக்கு வாக்களிக்கும் எண்ணம் தோன்றுமா? அப்படியான நிலையில், மனோ தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டிய கட்டங்கள் உண்டு.

இன்னொரு பக்கம், கொழும்பு தமிழ் மக்களிடையே வாக்களிக்கும் முறையிலும் சில பின்னடைவான அம்சங்கள் உண்டு. அது, ஈழத் தமிழர்கள், இந்திய வம்சாவளித் தமிழர்கள் என்கிற அடிப்படைகளுக்குள் வருகின்றது. இந்த நிலை, நீடிக்காமல், தூர நோக்கிலான வாக்களிப்புக்கு கொழும்பு தமிழ் வாக்காளர்கள் வர வேண்டும். அப்படியான நிலையொன்று இல்லாது போனால், சில தசாப்தங்களாக காணாமற்போயிருந்த கண்டிக்கான தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் போல, கொழும்பின் நிலையும் மாறிவிடும். கடந்த முறை மீட்கப்பட்ட கண்டி தமிழ் பிரதிநிதித்துவத்தை மீட்ட பெருமை மனோவுக்கு உண்டு. அதனை அவர் கொழும்பில் இம்முறை பறிகொடுக்காது காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

மனோ இந்தப் பொதுத் தேர்தலில் வென்றாலும் தோற்றாலும் அரசியலில் நீடிப்பார். அதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், அவரைச் சுற்றியுள்ளவர்கள் இருப்பார்களோ என்று தெரியாது. அப்படியான நிலையை ஒரு கட்சித் தலைவர் எதிர்கொண்டிருப்பது என்பது, மிகப்பெரிய துரதிஷ்டம். அந்தக் கட்டத்தை மனோ இனியாவது சரியாக கடக்க வேண்டும். தகுதியானவர்களை தன்னோடு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

முன்னாள் கொழும்பு வாக்காளனாக நண்பர் மனோவிடமும், கொழும்புத் தமிழ் வாக்காளர்களிடமும் சொல்லிக் கொள்ள என்னிடம் இருப்பது இதுதான்....!l
Purishothaman

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar