மருதமுனையில் நிகழ்ந்த மரணம் தொடர்பில் பரப்படும் செய்தியின் உண்மை நிலை என்ன?
Posted by aljazeeralanka.com on April 03, 2020 in | Comments : 0
(ஜெஸ்மி எம்.மூஸா)
அம்பாறை வைத்தியசாலையில் டெங்கினால் மரணித்த மருதமுனையைச் சேர்ந்த தாய்க்கும் சிசுவுக்கும் கொறோனா இருந்ததாகப் பரப்பப்படும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது
இது பற்றித் தெரியவருவதாவது,
ஏழு மாத கர்ப்பிணியான மருதமுனை- பெரியநீலாவணைப் பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான புஹார்த்தீன் ஆதிலா பானூ(30) என்பவர் காய்ச்சல் காரணமாக கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் 31 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டிருக்கிறார்
அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அங்கு மேற்கொள்ளப்பட்ட இரத்தப் பரிசோதனையை அடுத்து நோயாளிக்கு டெங்கு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது
மறுநாள் புதன் கிழமை(1) தாயின் உடல் நிலை மாற்றமடைந்தமையினால் அம்பாறை வைத்தியசாலைக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார். அவ்வாறு மாற்றப்படும் போது காய்ச்சலுடன் இருமலும் இருந்ததாக அஷ்ரஃப் வைத்தியசாலையின் குறிப்பில் அறிவிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது
அம்பாறை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்கு முன்னரே சிசு இறந்திருக்கலாம் என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்
அம்பாறை வைத்தியசாலையில் வியாழக்கிழமை (2) மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையும் பயனளிக்காத போது தாயும் மரணமடைந்துள்ளார்
சிசுவுடன் மரணித்த தாயும் நேற்றைய தினம்(2) பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு சிசு வெளியில் எடுக்கப்பட்ட நிலையில் தாயும் ஏழு மாதம் நிரம்பிய சுசுவும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்
நேற்று இரவு ஏழு மணியளவில் ஜனாசா நல்லடக்கம் செய்யப்பட்டது
இருமல் மற்றும் காய்ச்சல் என்பன தாய்க்கு இருந்தாகக் குறிப்பிடப்பட்ட போதிலும் டெங்கு நோயாளியாகவே அவர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில் வைத்தியசாலை வட்டாரங்களில் எழுந்துள்ள நிருவாக ரீதியான சந்தேகக்களைக் கொண்டு உறுதிப்படுத்தப்படாத பொய்யான தகவல்கள் சிலரால் பரப்பப்படுவதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்
இது ஒரு புறமிருக்க கொழும்பிலிருந்து கொண்டு முஸ்லிம் அரசியல்வாதியொருவர் குரல் பதிவொன்றினை அனுப்பி இது தொடர்பில் விமர்சனங்களை வெளியிட்டுள்ளார்.
விளக்கமில்லாத இவ்வாறான செயற்பாடுகளினால் தேவையில்லாத சந்தேகங்கள் எழும் போது இவ்விடயம் பிழையாக வெளிக்காட்டப்படும் போது எதிர்காலத்தில் பாதிக்கப்படப் போவது யார்?
நோயாளி அனுமதிக்கப்பட்டது முஸ்லிம்கள் வாழும் பிரதேசத்திலுள்ள வைத்தியசாலை. அதன் உச்சகட்ட நிருவாகத் தரப்பினர் முஸ்லிம்கள். அவ்வாறிருக்க முஸ்லிம் ஒருவரை வேண்டுமென்றே சங்கடத்துக்குள்ளாக்க இவ் வைத்தியசாலை நிருவாகத்தினர் விரும்புவார்களா? அவ்வாறு செய்திருந்தால் முதலில் எதிர்ப்புக் குரல் கொடுக்க வேண்டியது யாருக்கு? இவைகளைக் கவனத்தில் எடுக்காமல் பேரினவாதம், வேண்டுமென்றே செய்யப்படுகின்றன என்றெல்லாம் ஒலிப்பதிவுகளை அனுப்பி விடயங்களை ஊதவைத்து அரசியல் குளிர்காயும் அரசியல்வாதிகள் தெளிவில்லாத விடயங்களில் நுழையக் கூடாது என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்
இவ்வாறான விடயங்கள் தொடர்பில் அந்தப் பிரதேசத்திலுள்ள உலமாசபை போன்ற பொறுப்பு வாய்ந்த அமைப்புக்களுடன் பேசி உண்மை நிலை அறிவதே நியாயமானது. அதனை விட்டு விட்டு அறியாத விடயத்தை அரசியலாக்காமல் இருக்குமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்
கடந்த வாரம் அட்டுள்கமவில் திருமணம் முடித்துள்ள மருதமுனையைச் சேர்ந்த ஒருவரின் மனைவியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கொரோனா நோயாளி எனவும் அவர் மருதமுனைப் பிரதேசத்திற்கு வந்துள்ளதாகவும் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட செய்தியொன்றினால் இப் பிரதேசத்தில் கொரோனா பீதி எழுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment