சிங்க‌ள‌ இன‌வாத‌ம் ம‌ஹிந்த‌ கால‌த்துக்கும் முன்பே உருவாகி விட்ட‌து.


மொட்டைத் தலைக்கும் முழக்காலுக்கும் முடிச்சா? (Virakesari 19.04.2020 )
சஹாப்தீன் -
2010 ஆண்டில் இருந்து முஸ்லிம் சமூகத்தை சீண்டி வீண் வம்புக்கு இழுக்கும் நடவடிக்கைகளின் மூலமாகவே இலங்கையில் உச்சளவில் இனத்துவ அரசியல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த அரசியலுக்கும், இனவாத செயற்பாடுகளுக்கும் முஸ்லிம்களில் ஒரு சாராரும் துணையாகவே இருந்து கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம் சமூகத்தின் அவலத்தின் மேல் நின்று கொண்டு பேரினவாத அரசியல் தலைவர்களை திருப்திப்படுத்திக் கொள்வதற்கு முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் உடல்கள் மத விழும்மியங்கள் போன்றவைகள் நிராகரிக்கப்பட்டு தகனம் செய்யப்படுகின்றன. இதனால், முஸ்லிம்கள் பெரும் கவலை அடைந்துள்ளார்கள். முஸ்லிம்கள் மரணித்தால் அவர்களின் உடல்கள் மண்ணில் அடக்கம் செய்யப்பட வேண்டுமென்பது இஸ்லாமிய வழிமுறையாகும். கொரோனாவினால் மரணித்த முஸ்லிம்களின் உடலை நல்லடக்கம் செய்வதற்கு தாருங்கள் என்று முஸ்லிம்கள் கோரிய போதிலும், அதனை அரசாங்கம் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. உடலை தகனம் செய்வதே சிறந்ததென்று வைத்தியர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளார்கள் என அரசாங்கம் நியாயம் கற்பித்தது. என்ற போதிலும் இந்த முடிவு உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைக்கு மாற்றமானதாகும்.

முஸ்லிம்கள் எதிர்க்கவில்லை
***************************************
கொரோனா தொற்றினால் மரணித்த முஸ்லிம்களின் உடல் அடக்கம் செய்யப்பட வேண்டுமென்று முஸ்லிம் அரசியல் தலைவர்களில் ரவூப் ஹக்கீம் குரல் கொடுத்தார். ஏனையவர்கள் ரவூப் ஹக்கீமின் கருத்தை ஆமோதித்துக் கொண்டார்கள். முஸ்லிம்களின் பல பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்துக் கொண்டிருந்த றிசாட் பதியூதின் இதில் இன்று வரை மௌனமாகவே இருந்து கொண்டிருக்கின்றார். ரவூப் ஹக்கீம் தகனம் செய்யக் கூடாதென்று குரல் கொடுத்ததும் இனவாதிகளும், இனவாத ஊடகங்களும் ரவூப் ஹக்கீமை இனவாதி என்று காட்ட முற்பட்டன. றிசாட் பதியூதீனும் இணைந்து குரல் கொடுத்து இருந்தால் இனவாத ஊதுகுழல்களின் சத்தம் இன்னும் அதிகமாகவே இருந்திருக்கும் என்பது புரிந்து கொள்ள வேண்டியதாகும்.

ரவூப் ஹக்கீம் கொரோனா தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்ய வேண்டுமென்று கேட்டவுடன் முஸ்லிம்களில் சிலர் உட்பட பேரினவாதிகளும், அதிகாரிகளும் மரணித்த உடலில் அரசியல் செய்யக் கூடாதென்று சொல்லிக் கொண்டார்கள். ஆனால், ரவூப் ஹக்கீமின் குரலில் உள்ள நியாயத்தை புரிந்து கொள்ளவில்லை. உலக சுகாதார அமைப்பு உடலை அடக்கம் செய்யலாம் என்று தெரிவித்துள்ளது. அதே வேளை, முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழ்கின்ற ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்றினால் மரணித்த முஸ்லிம்களின் உடல்கள் மதவிழும்மியங்களின் படி அடக்கம் செய்யப்பட்டுள்ளன. தகனம் செய்தால்தான் கொரோனா வைரஸை அழிக்கலாமென்ற முடிவுக்கு அந்நாடுகள் வரவில்லை.

ஆயினும், முஸ்லிம்கள் இதனை ஒரு பிரச்சினையாகக் கொள்ளவில்லை. அரசாங்கத்தின் முடிவினை எதிர்க்கவில்லை. மரணிக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்வதற்கு தாருங்கள் என்ற கோரிக்கையை அதற்குரிய நியாயங்களின் அடிப்படையில் முன் வைத்தார்கள். நாட்டில் விதைக்கப்பட்டுள்ள இனவாதம் தங்களை மேலும் சாம்பலாக்கிவிடும் என்று முஸ்லிம்கள் மௌனமானார்கள். கொரோனா தொற்றுக்கு எதிராக அரசாங்கம் எடுத்துக் கொண்டிருக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முஸ்லிம்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த விவகாரத்தை சில ஊடகங்களும், ஒரு சில இனவாத அரசியல்வாதிகளும் ரவூப் ஹக்கீமை இனவாதியாக காட்டுவதற்கும், அதன் மூலமாக ஏற்கனவே சூடேறியுள்ள பௌத்த இனவாதிகளை மேலும் சூடேற்றிவிடுவதற்கும் பிரச்சாரங்களை மேற்கொண்டனர். ரவூப் ஹக்கீமின் நியாயத்தில் இனவாதமெனும் ஊஞ்சல் போட்டு ஆடிக் கொண்டார்கள். இன்னும் ஆட்டம் முடியவில்லை. வைத்தியர்கள், அரசியல்வாதிகள், மதவாதிகள், மற்றும் பேரினவாதிகளின் பேரப்பிள்ளைகள் போன்றுள்ள முஸ்லிம்களில் சிலரும் ஆடிக் கொண்டிருக்கின்றார்கள். ரவூப் ஹக்கீமின் தலையில் மிளகாய் அரைத்துக் கொண்டார்கள்.

என்ற போதிலும், கொரோனா தொற்றினால் மேலும்; முஸ்லிம்கள் மரணித்தால் அரசாங்கம் தமது உறுதிப்பாட்டிலிருந்து விடுபட்டு அடக்கம் செய்வதற்குரிய ஏற்பாடுகளை செய்யும் என்ற நம்பிக்கையை முஸ்லிம்கள் கைவிடவில்லை.

ஐ.நாவின் கடிதம்
***********************
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இறந்த ஒருவரின உடலை தகனம் செய்வது தொடர்பில், சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியால் 11ஆம் திகதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டிருக்கிறது. இதன் மூலம் உலக சுகாதார அமைப்பின் ஆலோசனைக்கு அமையவும், ஏனைய உலக நாடுகளில் கொரோனா தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம்களை நல்லடக்கம் செய்வது போன்று இலங்கை அரசாங்கமும் நல்லடக்கம் செய்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று முஸ்லிம்களிடையே காணப்பட்ட நம்பிக்கை வீண் போயுள்ளது.

கொரோனா தொற்றினால் மரணித்த முஸ்லிம்களின் உடலை தகனம் செய்தது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் சமய உரிமைகள் தொடர்பான பிரதிநிதி கடிதமொன்றின் மூலம்  தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

ஐ.நாவின் பிரதிநிதி இலங்கை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உலக சுகாதார அமைப்பின் வழி காட்டுதல்களை ஏற்றுக்கொண்டு, கொரோனா நோயில் இறக்கும் முஸ்லிம் சமூகத்தினரை அடக்கம் செய்யும் உரிமையை மதிக்குமாறும், முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மையினருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஆத்திரமூட்டும் பிரசாரங்களை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும், இது இலங்கை கொண்டுள்ள சர்வதேச பொறுப்பு எனவும்,

கொரோனா வைரஸ் நோய் காரணமாக உயிரிழக்கும் நபர்களை அடக்கம் செய்வது சம்பந்தமாக உலக சுகாதார அமைப்பினால், விசேட நிபுணர்களின் பரிந்துரைகளுக்கு அமைய வழங்கியுள்ள பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுமாறும்,

கொரோனாவில் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வது தொடர்பாக இலங்கை சுகாதார அமைச்சு வெளியிடடுள்ள வழிகாட்டுதல்களை திருத்துமாறும் அப்படி திருத்த முடியாவிட்டால் அதற்கான காரணத்தை தெளிவுப்படுத்துமாறும் ஐ.நாவினால் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளன.

அத்துடன் முஸ்லிம் சமூகம் உட்பட சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் ஆத்திரமூட்டும் கருத்துக்கள் வெளியிடப்படுவதை நிறுத்த அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு தெளிவுப்படுத்துமாறு அக்கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மத சிறுபான்மையினர் தங்கள் சொந்த மரபுகளுக்கு ஏற்ப உறவினர்களின் இறுதி சடங்குகளை செய்வதற்கு உள்ள உரிமையை இலங்கை மதிக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆயினும் இலங்கை அரசாங்கம் தமது நிகழ்ச்சி நிரலில் இருந்து மாறவில்லை.

இதே வேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் இறுதி சடங்குகள் சுகாதாரத்துறையினரின் அறிவுறுத்தல்களுக்கு அமையவே முன்னெடுக்கப்பட வேண்டும். இவ்விடயத்தில் மதத்தையோ அல்லது இனத்தையோ தொடர்புபடுத்தத் தேவையில்லை.  இறுதி சடங்குகள் பற்றி ஐக்கிய நாடுகள் சபை ஆலோசனை தெரிவித்துள்ளதே தவிர அது கட்டளையல்ல என்று ஐ.நாவின் கடிதம் தொடர்பில் அஸ்கிரியபீடம் தெரிவித்துள்ளது.

இதே வேளை, முஸ்லிம்கள் இந்த விவகாரத்தை வர்த்தமானி வெளியிட்டதன் பின்னரும்  தூக்கிப் பிடிக்க வேண்டியதில்லை. இந்த கோரிக்கையை மேலும் முன் வைக்கும் போது அதனை இனவாதமாகக் காட்டுவதற்கு ஒரு கும்பல் வரிந்து கட்டிக் கொண்டிருக்கின்றது. அவர்களின் வலைக்குள் நாம் விழுந்து விடக் கூடாது. அதே வேளை, முஸ்லிம்களின் உடலை தகனம் செய்யாது அடக்கம் செய்வதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று அரசாங்கத்தை கேட்டுக் கொண்டதனை அரசியலாக்க வேண்டியதில்லை. கேட்க வேண்டியது கட்டாயமாகும். அதனை அரசாங்கம் காரணகாரியங்களை சொல்லி மறுத்துள்ளது. இது விடயத்தில் முஸ்லிம்களிடையே கவலையுள்ளது. ஆயினும், அரசாங்கத்தின் அறிவித்தலை ஏற்றுள்ளார்கள்.

முஸ்லிம் கட்சிகளினால் இனவாதம்
*************************************************
ரவூப் ஹக்கீம் குரல் கொடுத்தமையால்தான் கொரோனா தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடலை தகனம் செய்வதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ரவூப் ஹக்கீம் குரல் கொடுக்காது இருந்திருந்தால் இரண்டாவதாக மரணித்தவரின் உடலை அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் அனுமதித்து இருக்கும் என்று முஸ்லிம்களில் சில அரசியல்வாதிகள் சொல்லிக் கொள்கின்றார்கள்.

ரவூப் ஹக்கீம் குரல் கொடுத்தற்காகவே அரசாங்கம் இந்த முடிவினை எடுத்ததென்று சொல்லுவதன் மூலமாக அரசாங்கத்தின் ஆளுமையை கேள்விக்கு உட்படுத்தி, ரவூப் ஹக்கிமில் பிழை காண நினைக்கின்றார்கள். ரவூப் ஹக்கீம் என்பவர் ஒரு முஸ்லிம் கட்சியின் தலைவர். அரசாங்கம் என்பது முழு நாட்டு மக்களுக்குமானது. வாக்களித்தவர், எதிர்த்து வாக்களித்தவர், தேர்தலை புறக்கணித்தவர் எல்லோருக்குமான அரசாங்கமாகும். அதனால்,  ரவூப் ஹக்கீமின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டால், அவர் செல்வாக்கு பெற்றுவிடுவார் என்பதற்காக அரசாங்கம் இவ்வாறு முடிவு எடுத்துக் கொண்டதென்று அரசாங்கத்தின் கொள்கையை கேள்விக்கு உட்படுத்த வேண்டியதில்லை. கொரோனா தொற்றை முழுமையாக ஒழிக்க வேண்டும். நாம் அதனைச் செய்தோம் என்று பெருமை கொள்வதில் அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது. இதற்கு எந்தவொரு கடினமான முடிவினையும் அரசாங்கம் எடுக்கும் என்பதுதான் யதார்த்தமாகும்.

இதே வேளை, கொரோனா தொற்றினால் மரணித்த முஸ்லிம்களின் உடலை தகனம் செய்த போது றிசாட் பதியூதீன் வாய்திறக்கவில்லை என்று ரவூப் ஹக்கீமை விமர்சனம் செய்கின்ற அதே முஸ்லிம் கும்பல் றிசாட்டையும் விமர்சனம் செய்து கொண்டிருக்கின்றது. இதன் மூலமாக முஸ்லிம் அரசியல் தலைவர்களை விமர்சனம் செய்வதே இவர்களின் நிகழ்ச்சி நிரலாகும் என்பது தெளிவாகின்றது.

மேலும், இன்றைய நெருக்கடியான சூழலிலும் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதம் பேசும் நிலை தொடாந்து கொண்டிருக்கின்றன. இதனை தடுக்குமாறு கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம் மற்றும் முஸ்லிம் கவுன்ஸில் உட்பட்ட அமைப்புக்கள் பதில் பொலிஸ்மா அதிபருக்கு கடிதமொன்றினை அனுப்பியுள்ளது.

முஸ்லிம்களுக்கு எதிராக முகநூலில் உயர்பதவிகளில் உள்ளவர்கள் உட்பட சாதாரணமானவர்கள் வரை போலியான செய்திகளை பரப்பி இனவாதத்தை கக்கிக் கொண்டிருக்கின்றார்கள். அண்மையில் இவ்வாறு முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதத்தை தூண்டும் வகையில் முகநூலில் குரல் பதிவொன்றினை வெளியிட்டுள்ள நபர் ஒருவரை அடையாளங் கண்டுள்ளதாகவும், அவரை விரைவில் கைது செய்வதற்குரிய நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளதாகவும் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். ஆனால், இந்த நபர் கைது செய்யப்பட்டாரா என்று தெரியவில்லை. முகநூல் மூலமாக அரசாங்கத்தின் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு மாற்றமாக போலியான தகவல்களை வெளியிடுகின்றவர்களை கைது செய்துள்ளதனைப் போன்று இனங்களுக்கு இடையே வெறுப்புப் பிரச்சாரத்தை மேற்கொள்கின்றவர்களும் கைது செய்யப்பட வேண்டும். அவ்வாறு கைது செய்யப்பட்டால் இனங்களுக்கு இடையே வெறுப்புப் பிரச்சாரத்தை மேற்கொள்கின்றவர்கள் அதிலிருந்து விடுபடுவார்கள். அதனால், அரசாங்கம் இது விடயத்தில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அத்தோடு போலியான முகநூல் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இன்று சமூகத்தில் பல பிரச்சினைகள் தோன்றுவதற்கு முகநூல் பதிவுகளும் முக்கிய காரணியாக இருந்து கொண்டிருக்கின்றன.

இதே வேளை, நாட்டில் இனவாதம் ஏற்படுவதற்கு முஸ்லிம் கட்சிகள்தான் காரணமென்று பேரினவாதிகளின் ஏஜன்டுகள் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். குறிப்பாக இந்தக் குற்றச்சாட்டை முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளின் மீதே சுமத்திக் கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் இலங்கையில் இனவாதம் எவ்வாறு, எப்போது தோன்றியது. அதன் மூலக் காரணி என்னவென்று தெரியாதவர்கள்தான் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த நாட்டின் சுதந்திரத்திற்கும், அபிவிருத்திக்கும், இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை வளர்ப்பதற்கும் முஸ்லிம்கள் பல தியாகங்களை செய்துள்ளார்கள் என்பதற்கு வரலாற்றில் பல சான்றுகள் உள்ளன.

இந்த நாட்டில் சிங்களவர்களும், தமிழர்களும் அரசியல் கட்சிகளை இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே ஆரம்பித்துவிட்டார்கள். லங்கா சமசமாஜக் கட்சி 1935ஆம் ஆண்டும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 1939ஆம் ஆண்டும், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் 1944ஆம் ஆண்டும், ஐக்கிய தேசிய கட்சி 1946ஆம் ஆண்டும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 1951ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டன. இக்கட்சிகள் எதுவும் முஸ்லிம்களின் நலன்களுக்காக ஆரம்பிக்கப்படவில்லை. சிங்களவர்கள், தமிழர்கள், மலையகத் தமிழர்களின் நலன்களுகாகவே ஆரம்பிக்கப்பட்டன. 1937ஆம் ஆண்டு எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டார நாயக்கவினால் சிங்கள மகா சபை அமைக்கப்பட்டது. இது ஒரு அரசியல் கட்சியாகவே செயற்பட்டது. சிங்களவர்களின் நலனைக் காப்பதற்கும், இந்திய தமிழர்களுக்கு எதிரான கருத்துக்களையும் முன் வைத்து செயற்பட்டது. 1945ஆம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு சிங்கள மகா சபை ஆதரவு அளித்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி முஸ்லிம்கள் தமக்கும் ஒரு அரசியல் கட்சி அவசியம் என்று 1981ஆம் ஆண்டுதான் சிந்தித்தார்கள். அது வரைக்கும் முஸ்லிம்கள் தேசிய கட்சிகளில்தான் அரசியல் செய்து கொண்டிருந்தார்கள். ஆனால், முஸ்லிம்களின் மீது பௌத்த இனவாதம் 1915ஆம் ஆண்டிலேயே தமது கொடுரத்தை காட்டியது. முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழிப்பதற்காக 1915ஆம் ஆண்டு முஸ்லிம்களின் மீது கலவரம் உருவாக்கப்பட்டது. அண்மைக்காலமாக நடைபெற்ற அனைத்து கலவரங்களும் முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழிப்பதற்காகவே மெற்கொள்ளப்பட்டன.

1978ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட விகிதாசார தேர்தல் முறை, 1980ஆம் ஆண்டுகளின் பின்னர் நடைபெற்ற இன முரண்பாடுகள் போன்ற பல காரணிகள் செல்வாக்கு செலுத்தியதனால்தான் முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. விகிதாசார தேர்தல் முறை அறிமுக்கப்படுத்தப்பட்ட போது, மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரப் மாவட்ட அடிப்படையிலான விகிதாசார தேர்தல் முஸ்லிம்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தில் வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்று சுட்டிக் காட்டினார். இதற்கு அமரர் லலித் அத்துலத்முதலி சிறுபான்மையினர் தங்களுக்குரிய பிரதிநிதித்துவத்தை தனித்து போட்டியிடுவதன் மூலமாக பாதுகாத்துக் கொள்லாமென்று அறிவுரை கூறி இருந்தார்.

அது மட்டுமன்றி முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே முஸ்லிம்களின் பூர்வீகக் காணிகள் பறிக்கப்பட்டன. 1930ஆம் ஆண்டு நாடு பூராகவும் அதிக பயிர்களை செய்தல் என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது. அதற்கு அமைவாக முஸ்லிம்கள் அரசின் அனுமதியுடன் காடுகளை வெட்டி பயிர்ச் செய்கைகளில் ஈடுபட்டார்கள். அம்பாரை மாவட்டத்தில் அரசாங்கத்தின் எல்.டி.ஓ அனுமதிப் பத்திரத்துடன் தாலிபோட்ட ஆற்றுக்கண்டம், அம்லத்தாறு, சேனைக்கண்டம், வேலாமரத்து வெளி, சோலவட்டை, சீயாத்தரவட்டை, நொறச்சோலை, திராய் ஓடை, பொன்னன்வெளி, குடுவில் வட்டை, கொண்ட வெட்டுவான், மகாகண்டிய, வெள்ளக்கல் தோட்டம் ஆகிய இடங்களில் விவசாய செய்கைகளில் ஈடுபட்டார்கள். சீனிக் கூட்டுத்தாபனம் ஆற்றுப்பள்ளத்தாக்கு அபிவிருத்தி சபையிடம் அனுமதி பெற்றுக் கொண்டு இக்காணிகளிலிருந்து 1965ஆம் ஆண்டு பயிர்ச் செய்கைகளில் ஈடுபட்ட முஸ்லிம்களை பலத்காரமாக வெளியேற்றியது. சுமார் 35 வருடங்களாக பயிர்ச் செய்கைகளில் ஈடுபட்ட முஸ்லிம்களை விரட்டிவிட்டு, அவ்விடங்களில் வெளிமாவட்ட சிங்களவர்களை குடியேற்றினார்கள்.

திருகோணமலை மாவட்டத்தில் தம்பலகாமம் - பொத்தானை பகுதியில் முஸ்லிம்கள் 04 ஆயிரம் ஏக்கர் காணியில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். 1952ஆம் ஆண்டு கந்தளாய் குடியேற்றத் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதில் முஸ்லிம்களுக்கு 50 வீத காணிகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆயினும், 1954ஆம் ஆண்டு முஸ்லிம்களை முழுமையாக வெளியேற்றி விட்டு, வெளிமாவட்ட சிங்களவர்களை குடியேற்றினார்கள். இவ்வாறு பல விடயங்களை குறிப்பிட முடியும். இச்சம்பவங்களின் போது முஸ்லிம்களிடம் அரசியல் கட்சிகள் இருக்கவில்லை.

ஆதலால், முஸ்லிம்களின் மீதான இனவாத நடவடிக்கைகள் என்பது முஸ்லிம் கட்சிகளின் தோற்றத்தினால் ஏற்பட்டதென்று வாதிடுவது வரலாறு தெரியாத அல்லது வரலாற்றை மறைக்க எடுக்கும் ஒரு முயற்சியாகும்.

நாட்டில் முன்னெடுக்கப்பட்ட இனவாத நடவடிக்கைகள், யுத்தம், ஆயுதக் குழுக்களின் எதிர்வினைகள், முஸ்லிம்களுக்கு குரல் கொடுப்பதற்கு யாருமில்லாத நிலைமை ஆகியன காரணமாகவே முஸ்லிம் காங்கிரஸ் தோற்றம் பெற்றது. மர்ஹும் அஸ்ரப் உயிரோடு இருக்கும் போது அக்கட்சி அதன் நோக்கத்தை அடைந்து கொள்வதற்குரிய முயற்சிகளில் ஈடுபட்டது. அவரது மரணத்தின் பின்னர் கட்சியின் பொறுப்பில் இருந்த தலைவர், செயலாளர், தவிசாளர் மற்றும் உயர்பீட உறுப்பினர்கள் கட்சியின் கொள்கையை மாற்றியமைத்துக் கொண்டு செயற்பட்டார்கள். இன்று முஸ்லிம் காங்கிரஸ் ஒரு பிரதேச சபைத் தேர்தலில் கூட தமது சின்னத்தில்; போட்டியிட முடியாத அளவுக்கு பேரினவாத கட்சியுடன் நெருக்கமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஏனைய முஸ்லிம் கட்சிகளின் செயற்பாடுகளில் குறைபாடுகள் உள்ளன. அதற்காக முஸ்லிம் கட்சிகளினால்தான் நாட்டில் இனவாதம் உருவானது என்று மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போட முனையக் கூடாது.
Virakesari 19.04.2020

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்