BREAKING NEWS

தேர்தல் ஒத்திவைப்பும் எழுந்துள்ள சட்டப்பிரச்சினைகளும்


=================================
வை எல் எஸ் ஹமீட்

தேர்தல் ஜூன் 20ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது. ஏற்கனவே தேர்தல் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் ஜூன் 2ம் திகதி அல்லது அதற்குமுன் புதிய பாராளுமன்றம் அரசியலமைப்புப்படி கூடியாகவேண்டும். அவ்வாறாயின் குறைந்தபட்சம் மே 28இல் தேர்தல் நடாத்தப்படவேண்டும். அவ்வாறு நடாத்துவதற்கு ஏப்ரல் 20ம் திகதியிலிருந்தாவது தாங்கள் தேர்தல் வேலைகளை ஆரம்பிக்கவேண்டும். தற்போதைய சூழ்நிலையில் அது சாத்தியப்படுமா?
எனவே, இது தொடர்பாக உயர்நீதிமன்ற பொருள்கோடலைப் பெறுமாறு கோரியிருந்தது.

அதற்குப்பதிலளித்த ஜனாதிபதியின் செயலாளர் மே 28இல் தேர்தல் நடாத்தமுடியாது; என தற்போது ஆணைக்குழுவால் கூறமுடியாது. எனவே, உயர்நீதிமன்றத்தை நாடவேண்டிய அவசியமில்லை, எனத் தெரிவித்திருந்தார்.

மறுபுறம் சட்டத்தைத் திருத்தி இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் விடுத்தகோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் சட்டப்பிரச்சினைகளுக்கு மத்தியில் தேர்தல் தொடர்பாக தீர்மானம் எடுக்கவேண்டிய முழுப்பொறுப்பும் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இருந்தது.

அதேநேரம், தேர்தல்கள் ஆணைக்குழு மே 28ம் திகதிக்குள் தேர்தலை நடாத்த தீர்மானம் எடுத்தால் அதற்கெதிராக நீதிமன்றம் செல்ல எதிர்க்கட்சிகள் தயாராகிக் கொண்டிருந்தன. மறுபறம் அரசாங்கமோ, எதைப்பற்றியும் கவலையில்லாது தேர்தலை நடாத்துவதில் குறியாயிருந்தது.

மே 28 இல் தேர்தலை நடாத்த ஏப்ரல் 20ம் திகதியிலிருந்தாவது வேலைகளை ஆரம்பிக்க வேண்டும்; எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்திருந்தமையால் ஏப்ரல் 20ம் திகதியிலுருந்தாவது நாடு ஓரளவு சுமுகமான நிலைக்கு வந்துவிட்டது; என்று காட்ட அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க ஆரம்பித்தது. சுமார் ஒரு வாரத்திற்குமுன்பே சுகாதார அமைச்சர் ஏப்ரல் 19ம் திகதியளவில் கொரோனா கட்டுப்பாட்டில் வந்துவிடும்; என முன்னறிவிப்புச் செய்தார்.

ஏப்ரல் 20ம் திகதி ஊரடங்கு சட்டம் பாரிய அளவில் தளர்த்தப்பட்டது. மக்கள் பேருந்துகளில் நெருக்கமாக பிரயாணம் செய்யும் படங்களெல்லாம் வெளியாகின. இந்த ஊரடங்கு தளர்வால் நாடு பெரியதொரு ஆபத்தை எதிர்நோக்குவதாக பலரும் கவலை தெரிவித்தார்கள். ஆனால் அரசுக்கு அவை எதுவும் பொருட்டாகத் தெரியவில்லை. அலுவலகங்கள் திறக்கப்படவேண்டும். அதன்மூலம் தேர்தல்கள் ஆணைக்குழு 20ம் திகதியிலிருந்து வேலைசெய்யவேண்டும்; என்று சொன்னதை நடைமுறைப்படுத்தவேண்டும்.

எதிர்க்கட்சிகள் நீதிமன்றம் சென்றால் தேர்தல்கள் ஆணைக்குழுதான் முதலாவது பிரதிவாதியாக குறிப்பிடப்படும். அப்போது ஆணைக்குழு மே 28ல் தேர்தல் நடாத்தமுடியாது; என்று கூறமுடியாது. ஏனெனில் அவர்கள் கேட்டதுபோல் ஏப்ரல் 20ம் திகதியிலிருந்து தேர்தல் வேலைகளை ஆரம்பிப்பதற்கு அலுவலகங்கள் திறந்துகொடுக்கப்பட்டுவிட்டன.

மே 28இல் தேர்தல் நடாத்தமுடியாது; என்று ஆணைக்குழு கூறமுடியாத நிலையில் எதிர்க்கட்சிகள் ஜனநாயகத்தைப் பாதுகாக்கவேண்டிய, பகிரங்க பொதுக்கூட்டங்கள் நடாத்தவேண்டிய தேவைகளை நீதிமன்றில் முன்வைத்தாலும் அது Doctrine of Necessity ஐ பாவிக்கின்ற அளவு முக்கியத்துவம் பெறுமா? நவீன உலகில் சமூகவலைத்தளங்கள், ஏனைய ஊடகங்களினூடாக பிரச்சாரம் செய்யமுடியாதா? என்ற கேள்விகள் அவ்வாறான முன்வைத்தலின் வலுவைக் குறைக்கலாம்.

Doctrine of Necessity என்பதே, கட்டுங்கடங்காத , மிகவும் இக்கட்டான ஒரு சூழ்நிலையில் சட்டத்தைப் புறந்தள்ளிவைத்துவிட்டு தீர்மானம் எடுக்கும் ஒரு தத்துவம். ஆணைக்குழு தேர்தல் நடவடிக்கைக்கு அவகாசம் போதாது. தேர்லை நடாத்தவே முடியாது; என்றால், ‘நடாத்த முடியாத தேர்தலை’ எவ்வாறு நடாத்தமுடியும்? எனவே, Doctrine of Necessity ஐப் பாவிக்கவேண்டிய சூழ்நிலையாக அது கருதப்படலாம்.

எனவே, ஆணைக்குழு தேர்தல் வேலைகளை செய்ய காலவகாசம் இருக்கவில்லை. தேர்தலை நடாத்தமுடியாது; என்று கூறுகின்ற சந்தர்ப்பத்தை இல்லமலாக்கி தேர்தலை மே 28இற்குள் நடாத்திவிடவேண்டுமென்றுதான் மக்களின் ஆபத்தைப் பொருட்படுத்தாமல் அலுவலகங்கள் திறக்க ஊரடங்கு தளர்த்தப்பட்டது.


நிறைவேற்றுத் துறை V ஆணைக்குழு
———————————————————-
அரசாங்கம் போட்ட தப்புக்கணக்கை தப்பாகச் சென்று சீர்செய்ய ஆணைக்குழு முயற்சித்திருக்கின்றது. பாராளுமன்ற கலைப்பு வர்த்தமானியில் புதிய பாராளுமன்றம் கூடும் திகதி மே 14 என ஜனாதிபதி அறிவித்திருந்தார். அந்நிலையில் தேர்தலை மே 9 அல்லது 10 வரைதான் ஒத்திவைக்கமுடியும். மே 14இல் புதிய பாராளுமன்றம் கூடுவதற்கு மே 28இல் எவ்வாறு தேர்தல் நடாத்தமுடியும்?

ஜனாதிபதி புதிய பாராளுமன்றம் கூடும் திகதியை ஜூன் 2 ஆக இன்றுவரை அறிவிக்கவில்லை. இருந்தாலும் கடந்த ஒரு சில நாட்களாகவே மே 28ஐ ஆணைக்குழு தேர்தல் திகதியாக அறிவிக்கப்போவதாக செய்திகள் அடிபட்டன. அவ்வாறாயின் ஜனாதிபதி புதிய பாராளுமன்றம் கூடும் திகதியை மாற்றாத நிலையில் ஆணைக்குழு மே 28ஐத் தேர்தல் திகதியை அறிவித்திருந்தால் அது ஒரு சட்டமீறலாகத்தான் இருந்திருக்கும்.

அதேநேரம், தேர்தலை ஒத்திவைப்பது ஆணைக்குழுவின் பொறுப்பு. புதிய பாராளுமன்றம் கூடும் திகதியை மாற்றுவது ஜனாதிபதியின் பொறுப்பு. எனவே, ஆணைக்குழு மே 28 இற்கு திகதியை மாற்றியிருந்தால் அது, ஜனாதிபதியின் பொறுப்பை ஜனாதிபதி செய்யட்டும்; தம் பொறுப்பைத் தாம் செய்வோம்; என்ற ஒரு செயற்பாடாகத்தான் இருந்திருக்கும். ஆனாலும் அது பிழையாகும். ஏனெனில் பாராளுமன்றம் கூடுவதற்காக குறிக்கப்பட்ட திகதிக்கு முன்னதாகத்தான் தேர்தல் நடாத்தப்படவேண்டும்.

அதாவது புதிய பாராளுமன்றம் கூடுவதற்கு நிரணயிக்கும் திகதியைக் கருத்தில்கொண்டுதான் புதிய தேர்தல் திகதி தீர்மானிக்கப்படவேண்டும்.

இப்பொழுது ஒரேயடியாக ஜூன் 20ம் திகதிக்குத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது. தற்போதைய நிலையில் புதிய பாராளுமன்றம் கூடும் திகதி மே 14 ஆகும். ஆகப்பிந்தியதாக ஜனாதிபதியால் புதிய பாராளுமன்றம்கூட்டப்பட தீர்மானிக்கக்கூடிய திகதி ஜூன் 2 ஆகும். இவை எல்லாவற்றையும் தாண்டியதுதான் ஜூன் 20 ஆகும்.

ஜூன் 20 இற்குப் பிந்திய ஒரு திகதிக்கு புதிய பாராளுமன்றம் கூடும் திகதியை ஜனாதிபதி தீர்மானிக்கமுடியாது. அது அரசியலமைப்பு மீறலாகும். ஏனெனில் அது மூன்று மாதத்தைத்தைத் தாண்டிவிடும்.

ஆணைக்குழுவைப் பொறுத்தவரை அந்த மூன்றுமாதப் பிரச்சினையெல்லாம் கிடையாது. அவர்களுக்கு தேர்தலை ஒத்திவைக்க அதிகாரமிருக்கிறது. சட்டத்தின் கோணத்தில் ஆணைக்குழு தேர்தலுக்கு திகதி குறிக்கவில்லை, குறிக்கவும் முடியாது. தேர்தலுக்கான திகதியை ஜனாதிபதி ஏப்ரல் 25 ஆக ஏற்கனவே தீர்மானித்துவிட்டார்.

ஆணைக்குழு தேர்தலை ஒத்திவைத்திருக்கிறார்கள். தேர்தலுக்கு திகதி குறித்தலும் தேர்தலை ஒத்திவைத்தலும் வெவ்வேறு விடயங்களாகும். ஆனாலும் அவர்களுக்கு ஒரு கடமை இருக்கிறது; பாராளுமன்றம் கூடுகின்ற திகதிக்கு முன்பதாக தேர்தலை நடாத்துவதற்கு. ஏனெனில் அது ஒரு சில மாவட்டங்களுக்கான ஒத்திவைப்பல்ல. முழு நாட்டுக்குமானது. ஆனால் நாட்டு நிலைமை அதற்கு இடம்கொடுக்கவில்லை.

இந்தப் பிரச்சினை எதுவும் ஏற்பட்டிராது பாராளுமன்றத்தைக்கூட்டி சட்டத்தை திருத்தியிருந்தால் அல்லது உயர்நீதிமன்றத்திடம் ஆலோசனை பெற்றிருந்தால்.

இப்பொழுது பாரிய அரசியலைமைப்புப் பிரச்சினை தோன்றியிருக்கிறது. ஜூன் 20இல் தேர்தல் நடந்தால் அதன்பின் எப்பொழுது பாராளுமன்றத்தைக் கூட்டுவது? யார்கூட்டுவது? பாரிய சட்டப்பிரச்சினை.

ஒன்றில் ஜனாதிபதி பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டம் பிரிவு 113இன் கீழ் தேர்தல் நடாத்தும் திகதியை முற்படுத்தவேண்டும்; உதாரணமாக மே 28 என்று. அவ்வாறு செய்தால் பாரிய மக்கள் அதிருப்தியை அரசு சம்பாதிக்கவேண்டிவரும்.

தேர்தல்  நடந்து ஆனால் ஒரு சில மாவட்டங்களில் தேர்தல் நடக்காதபோதுதான் 113 ஐ ஜனாதிபதி பாவிக்கலாம்; என்ற கருத்தை சிலர் முன்வைக்கிறார்கள். அவ்வாறாயின் தேர்தலை உரிய திகதியில் நடாத்துகின்ற அதேவேளை ஒரு சில மாவட்டங்களில் தவிர்க்கமுடியாத காரணங்களுக்காக ஆணைக்குழு தேர்தலை ஒத்திவைப்பதற்காகத்தான் 24(3) இருக்கின்றது.

24(3) ஐ அதனுடைய உண்மையான வியாக்கியானத்திற்கு மாற்றமாக ஆணைக்குழு முழு நாட்டிற்கும் பாவிக்கமுடியுமென்றால் ஏன் ஜனாதிபதி 113 ஐ முழுநாட்டிற்கும் பாவிக்கமுடியாது. ( 113 முன்னைய ஆக்கத்தில் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது).

அல்லது பாராளுமன்றத்தை 70(7) இன்கீழ் கூட்டி சட்டத்தைத் திருத்தவேண்டும். அல்லது நீதிமன்றத்திடம் தீர்வுபெறவேண்டும். அல்லது ஆணைக்குழு நாட்டின் நிலைமையைக் கருத்தில்கொண்டு சட்டத்தைமீறி தேர்தலை ஒத்திப்போட்டதுபோல் ஜனாதிபதியும் சட்டத்தை மீறி ஜூன் 20 இற்குப் பிந்திய ஒரு திகதியை புதிய பாராளுமன்றம் கூடுவதற்கு குறிப்பிடவேண்டும். ஆனாலும் அது அரசியலமைப்பு மீறலாகும்.

இவற்றிற்கெல்லாம் காரணம் பாராளுமன்றத்தைக்கூட்ட அல்லது நீதிமன்றம் செல்ல அரசு மறுத்ததாகும்.

அரசாங்கம் நாட்டு நிலைமையையோ, சட்டத்தையோ கருத்தில்கொள்ளாது தேர்தலை நடாத்துவதில் குறியாக இருந்தது.

ஆணைக்குழுவோ, அதே சட்டத்தைப் புறக்கணித்து மக்கள் நலனைக் கருத்திற்கொண்டு தேர்தலை ஒத்திவைத்தன்மூலம் அவசரமாக தேர்தல் நடாத்தும் அரசின் திட்டத்தை முறியடித்திருக்கிறது.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar