BREAKING NEWS

கூட்டுசேர்வது என்பதையும் தாண்டி விட்டுக் கொடுக்கவும் தயார் : ஏ.எல்.எம். அதாஉல்லா பகிரங்க அறிவிப்பு


தீர்வை பற்றி சிந்திக்கின்றவர்கள் யாராக இருந்தாலும் கூட்டுசேர்வது என்பதையும் தாண்டி விட்டுக் கொடுக்கவும் தயார் : ஏ.எல்.எம். அதாஉல்லா பகிரங்க அறிவிப்பு !!

நூருல் ஹுதா உமர்


மரம் நடும்போது மக்களுக்கு நன்மை பயக்கும் மரங்களையே நடவேண்டுமே தவிர நஞ்சை தரும் மரங்களை நடமுடியாது. அதுபோலவே எம்.பி ஆசனத்திற்காக தவறான பாதையை தெரிவுசெய்ய முடியாது. போலியான கோசமாகவே முஸ்லிம் கூட்டமைப்பு எனும் கருத்து பேசப்பட்டு வருகிறது. எம்.பி ஆசனங்கள் எனும் சிந்தனையையும் தாண்டி இந்த நாட்டைப்பற்றி, நாட்டு மக்களை பற்றி அவர்களின் வாழ்க்கை முறை, சமூகம் என்பனவற்றின் தீர்வை பற்றி சிந்திக்கின்றவர்கள் யாராக இருந்தாலும் கூட்டுசேர்வது என்பதையும் தாண்டி விட்டுக்கொடுக்கவும் தயார் என தேசிய காங்கிரசின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சமாதான கூட்டமைப்பின் இறக்காமம் பிரதேச அமைப்பாளர் சட்டத்தரணி கே.எல்.சமீம்,  அவர்களும் இன்னும் பல மாற்றுக்கட்சி பிரமுகர்களும் தேசிய காங்கிரஸின் கொள்கைகளை ஏற்று கட்சியில் இணைந்து கொள்ளும் ஊடக சந்திப்பு நேற்று (07) மாலை இறக்காமத்தில் நடைபெற்றபோது ஊடகசந்திப்பில்  கலந்துகொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

கிழக்கின் அதிகமான பிராந்தியங்களிலிருந்து தேசிய காங்கிரசின் கொள்கைகளை ஏற்று பிரமுகர்கள் இணைந்து வருகிறார்கள். அன்று நாங்கள் விதைத்த உண்மைகள் இன்று அறுவடையாகிக்கொண்டு இருக்கிறது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் பல உண்மைகளை கூறிவைத்தோம் அது நடந்துகொண்டே இருக்கிறது.

அதாவுல்லாவுக்கு பாராளுமன்றம் புதிய விடயமல்ல. பாராளுமன்றத்தின் மீது ஆசை கொண்டவன் அதாஉல்லா இல்லை. அந்த பதவியின் மூலம் தான் சாதிக்கமுடியும் என்றுமில்லை. ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்றாலும் அந்த ஒன்றும் ஒழுங்கானதாக அமைந்தால் எல்லாவற்றையும் சாதிக்க முடியும். 1994 ஆம் ஆண்டு தலைவர் அஷ்ரபின் வெற்றிக்காக நாங்கள் அளித்த வாக்குமூலம் ஒரு ஆசனம் மட்டுமே கிடைத்தது. தலைவரின் மரணத்தின் பின்னர்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கொள்கைகளை மறந்து எம்.பி ஆசனங்களை அதிகரிப்பது பற்றி மட்டுமே சிந்திக்க தொடங்கியது. எங்களுக்கு பிரதிநிதித்துவ அரசியலை விட இன்றைய காலத்தின் தேவையாக உள்ள  ஊர்களுக்கான தலைமைகளை அடையாளம் காட்டுவதிலையே கவனம் இருக்கிறது. என்றார்.

ஐக்கிய மக்கள் சமாதான கூட்டமைப்பின் இறக்காமம் பிரதேச அமைப்பாளர் சட்டத்தரணி கே.எல்.சமீம்,  அவர்கள் தேசிய காங்கிரசின் இணையும் தனது நிபந்தனைகளான,
01. இறக்காமம் பிரதேசத்திற்கான ஆதார வைத்தியசாலை.
02. இறக்காமம் பிரதேசத்திற்கான சுற்றுலா நீதிமன்றம்.
03. இறக்காமம் பிரதேசத்திற்கான உப கல்விவலயம்
04.இறக்காமம் பிரதேசத்திற்கான அழகிய நுழைவாயில் தோரணங்கள். என்பவற்றை சபை முன்னிலையில் வாசித்து காட்டியதுடன் அதை நிறைவேற்றித்தர வேண்டும் என தனது கோரிக்கைளை முன்வைத்தார்.

கோரிக்கைகள் பற்றி பேசிய முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா, தனது சொந்த ஊரில் தனக்கான பிரசவம் சுகப்பிரசவமாக அமைய தாய்மார்கள் என்னும் அவர்களின் என்னத்தை நிறைவேற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம். ஊர்களுக்கான அத்தியவசிய தேவைகளை நாங்கள் அறிந்துவைத்துள்ளோம். அண்மையில் கூட இந்த பிரதேச முக்கியஸ்தர்களை சந்தித்த போதும் இப்பிரதேசத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், அழகுபடுத்தும் பொறிமுறைகள் பற்றி ஆழமாக கலந்துரையாடினோம்.

கல்வி மிக முக்கியமானது. கடந்த காலங்களில் இதுபற்றிய தயார்படுத்தல்களின் போது பல கதையாடல்களை நாங்கள் எதிர்கொண்டோம். இருந்தாலும் இந்த இறக்காம மண்ணில் ஆசிரியராக சேவையாற்றிய அனுபவம் எனக்கு இருக்கிறது. இறக்காம பிரதேச கல்வி முன்னேற்றத்திற்க்கு எது தேவையோ அதை பெற நாங்கள் உங்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம். இப்பிரதேச மாணவர்களின் கல்வி முன்னேற்றபடிகளில் நாங்கள் துணையாக இருப்போம்.

முஸ்லிம் கூட்டமைப்பு என்பது எம்.பி ஆசனங்களை மட்டுமே முன்னிறுத்தியதாக இருக்க கூடாது என்பதை வலியுறுத்தி கூற விரும்புகிறேன். கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் வெற்றியடைந்திருந்தால் எமது கிழக்கின் சொத்துக்கள் சூறையாடப்பட்டிருக்கும். அதை நாங்கள் தடுத்திருக்கிறோம். வெளிநாட்டு சக்திகளினதும் உள்நாட்டு அரசியல்வாதிகளினதும் தேவைக்காக யாப்பு மாற்றப்பட்டு நாடு தள்ளாடிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் சிறந்த ஜனாதிபதி ஒருவரையும், அனுபவமுள்ள பிரதமர் ஒருவரையும் தெரிந்து  மிகப்பெரும் பள்ளத்தாக்கில் கிடந்த நாடு இப்போதுதான் மீட்கப்பட்டுள்ளது.

இந்த நாட்டில் பல்லின சமூகமும் நிம்மதியாக வாழும்படியான யாப்பை உருவாக்க வேண்டிய தேவை உள்ள காரணத்தினால் பாராளுமன்ற உணவகத்தில் சாப்பிட வைக்கும் எம்.பிக்களை உருவாக்கும் வேலையை செய்ய முடியாது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற மாவட்ட ரீதியாக எங்களுக்கு எது சரியான முன்னேற்றத்தை தருமோ அந்த வியூகத்தில் அரசின் பங்காளி கட்சியான தேசிய காங்கிரஸ் தேர்தல் கேட்க தயாராக உள்ளோம். சில இடங்களில் பொதுவான சின்னத்திலும் இன்னும் சில இடங்ககளில் குதிரையிலும் தேர்தல் கேட்போம். வேட்புமனு தாக்களுக்கு முன்னர் நல்ல முடிவு அறிவிக்கப்படும்.

 நாங்கள்  சில காலம் மந்தநிலையில் இருக்கின்ற பொழுதுகளில் சிலர் கட்சிகளை உருவாக்கி அவர்களும் ஏதோ செய்யவேண்டும் என்ற நோக்கங்களோடு உலமாக்கள் வாழும் பிரதேசத்தில் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர் ஹதீது செல்வது போல வன்னியிலிருந்து வந்து சட்டி,பானை கொடுத்து அரசியல் செய்கிறார்கள். உணர்ச்சி பொங்க பேசி ஊருக்கு சிலர் என அவர்களும் அம்பாறையில் அரசியல் செய்கிறார்கள். அதில் அதிகமானவர்கள் உண்மையின் பக்கம் திரும்பிவிட்டார்கள் என்றார்.

இன் நிகழ்வில் தேசிய காங்கிரஸின் பிரதி தலைவர் டாக்டர் ஏ. உதுமாலெப்பை, தேசிய காங்கிரஸின் இறக்காமம் மத்திய குழு உறுப்பினர்களும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பாக கடந்த உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட்ட திரு.நசுறுதீன் அவர்களும் இன்னும் பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar