BREAKING NEWS

அம்பாரையில் மீண்டும் ஆசனத்தை இழக்கும் மக்கள் காங்கிரஸ்


அம்பாரையில் மீண்டும் ஆசனத்தை இழக்கும் மக்கள் காங்கிரஸ்

ஏ.எல்.றமீஸ்

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் அவர்களின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கடந்த ஐந்து வருடங்களாக அம்பாரை மாவட்டத்தில் ஆச்சிரியத்தக்க வகையில் பெரும் அசுர வளர்ச்சியை ஏட்டியிருந்த நிலையில் அக்கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் வியூகத்தில் ஏற்பட்ட சறுக்கல் காரணமாக அதே வேகத்தில் பூச்சியத்தை நோக்கி மீண்டும் திரும்பிக் கொண்டு இருப்பதை பார்க்க முடிகிறது.

சாதாரண மக்களின் உழைப்பிலும் வியர்வையில் தொடங்கப்படுகின்ற ஒரு இயக்கம் நிலைத்து நிற்கக் கூடிய தன்மையைக் கொண்டிருக்கும் என்ற உண்மைக்கு எதிரான நிலைப்பாட்டை தகர்த்து பிரமுகர்களைக் கொண்டு பலமான அடித்தளத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை அக்கட்சியின் முக்கிய பிரமுகர்களின் வெளியேற்றத்தால் கட்சி சுக்கு நுர்றாக துண்டாடப்படுகின்றது.

2015ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் சுமார் 33 ஆயிரம் வாக்குகளை பெற்ற போதும் மக்கள் காங்கிரஸால் ஒரு ஆசனத்தை கூட பெற முடியாமல் போய்விட்டது. அம்பாரை மாவட்டத்தின் 33 ஆயிரம் முஸ்லிம் மக்களின்  வாக்குகள் விழலுக்கு இறைத்த நீராக போய்விட்டது.

மக்கள் காங்கிரஸின் 33 ஆயிரம் வாக்குகளை பெறுவதற்கு அன்றைய காலகட்டத்தில் துணையாகயிருந்த சம்மாந்துறை கலாநிதி இஸ்மாயில் எம்.பி, சாய்ந்தமருது ஜெமில் (முன்னாள் மாகாண சபை உறுப்பினர்) அக்கரைப்பற்று தொழிலதிபர் நபீல், ஆகிய முக்கிய பிரமுகர்கள் இக்கட்சியை விட்டு விலகியிருக்கின்றனர். அத்தோடு இனிமேல் ரிஷாட் அவர்களினால் எந்தவிதமான அமைச்சுக்களையும் பெற முடியாது ஆகவே அவரை நம்பி பிரயோசனம் இல்லை என்று கூறும் வாக்காளர்களும் மற்றும் அரசாங்கத்தினால் அவருக்கெதிராக சுமத்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற குற்றச்சாட்டுகள் தம்மீதும் விழுந்துவிடக் கூடும் என்ற அச்சமும் மக்கள் காங்கிரஸின் முக்கிய பிரமுகர்களின் கருத்தாகவுள்ளது.

கடந்த காலங்கிளல் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸிலிருந்து விலகி மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டவர்கள் ஜனாதிபதித் தேர்தலின் தோல்வியால் மனமுடைந்து முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவோடு இணைந்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.

அம்பாரை மாவட்டத்திற்கு ஏழு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் அறிவிக்கப்பட்ட நிலையில் ஒரு பிரதிநிதித்துவத்திற்கு சுமார் 65 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற வேண்டிய போதும் விகிதாசார தேர்தல் முறையின் கீழ் இரண்டாவது சுற்றில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற கட்சிகள்தான் ஒரு ஆசனத்தையாவது பெற வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

பொதுஜன பெரமுன ஒரு இலட்சம் சிங்கள பெரும்பான்மை வாக்குகளோடு பலமாக உள்ளது. இவ்வாக்கு எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதற்கு சில முக்கிய பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த நபர்களையும் தன் கட்சியோடு இணைத்து கொள்வதற்கான வேலைத்திட்டத்தையும் அக்கட்சி ஆரம்பித்துள்ளது. .இதற்கு மேலாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் தயாகமகே அவர்களும் பொதுஜன பெரமுனவோடு இணைந்து தேர்தல் கேட்பதற்கான பேச்சு வார்த்தைகளும் இடம்பெற்று வருகின்றது.அப்படி தயாகமகே இணைந்து கொள்ளும் பட்சத்தில் பெரமுனவின் வாக்கு 125 ஆயிரத்தை எட்டிவிடுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த இலக்கை எட்டும் போது 65 ஆயிரத்துக்கு ஒரு ஆசனமும் இரண்டாவது சுற்றில் 60 ஆயிரத்திற்கு ஒரு ஆசனமும் மாவட்டத்தை வெற்றி கொண்டதற்கு ஒரு போனஸ் ஆசனத்தோடு மொத்தமாக மூன்று ஆசனங்களை அக் கட்சியால் பெற முடியும்.

முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியோடு இணைந்து தேர்தலில் போட்டியிட்டால். ஐக்கிய தேசியக் கட்சியின் சிங்கள,தமிழ்,முஸ்லிம் வாக்குகளோடு முஸ்லிம் காங்கிரஸின் வாக்குகளும்; இணையும் போது சுமார் 1.10.000 ஆயிரம் வாக்குகளை மாத்திரமே பெற்றுவிட முடிவதோடு முதல் சுற்றில் 65 ஆயிரம் வாக்குகளுக்கு ஒரு ஆசனமும் இரண்டாவது சுற்றில் 45 ஆயிரம் வாக்குகளுக்கு இரண்டாவது ஆசனமும் கிடைத்துவிடும்.

அம்பாரை மாவட்டத்தில் சுமார் 80 ஆயிரம் வாக்குகளைக் கொண்ட சிறுபான்மை தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு கடந்தகால புள்ளிவிபரங்களின் படி 55 ஆயிரம் வாக்குளை இம்முறையும் வழங்குவார்கள். இவ் வாக்கு வீதத்தில் சில வேறுபாடுகள் காணப்பட்டாலும் முதலாம் சுற்றில் ஆசனத்தை பெறுவதற்கான வாய்ப்பு நூறுவீதம் இல்லாமல் உள்ளது. ஆனால் இரண்டாம் சுற்றில் 55 வாக்குகளுக்கு ஒரு ஆசனத்தை தமிழ் கூட்டமைப்ப பெற்று தனது இருப்பை தக்க வைத்துவிடும்.

மீதியாக இருக்கின்ற ஒரு ஆசனத்திற்காக தேசிய காங்கிரசும்,மக்கள் காங்கிரசும் வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் போராட வேண்டும். இவ் இரண்டு கட்சிகளையும் உற்று நோக்கும் போது அதன் சாதக பாதகங்கள் கண்முன்னே காணக் கூடியதாகவுள்ளது.

மேலே குறிப்பிட்ட மாதிரி மக்கள் காங்கிரசுக்கு பாதகமான சூழ்நிiயே தொடர்ந்தும் காணப்பட்டு வருகின்றது. தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் அதிகமான உறுப்பினர்கள் வெற்றியை அல்லது ஆளும் கட்சியை நோக்கி பயணிப்பார்கள் என்பது வரலாற்று உண்மை.

 தேசிய காங்கிரஸை பொறுத்தவரைக்கம் ஜனாதிபதித் தேர்தல் வெற்றி அக்கட்சியை தூக்கி எழ வைத்துள்ளது. அக்கரைப்பற்றில் இழந்த பிரதிநிதித்துவத்தை பெற வேண்டும் என்பது மக்களின் தாகமாகவுள்ள அதே வேளை சாய்ந்தமருது நகரசபை,மாற்று கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் தம்மை நோக்கி படையெடுப்பது என பலமான சூழல் ஏற்பட்டு வருகின்ற காரணத்தினால் ஏழாவது பிரதிநிதிக்கான வாய்ப்பு தேசிய காங்கிரஸின் பக்கம் சென்று விடும்.

அம்பாரை மாவட்ட முஸ்லிம்களின் வாக்குகள் கடந்த முறை தேசிய காங்கிரசுக்கு சுமார் 17 ஆயிரம் வாக்ககளையும் ,மக்கள் காங்கிரசுக்கு 33 ஆயிரம் வாக்குகளையும் வழங்கி வீண்விரயம் செய்யப்பட்டது போல இம்முறையும் சுமார் 25 ஆயிரம் தொடக்கம் 30 ஆயிரம் வாக்குகள் மக்கள் காங்கிரசுக்கு அளிக்கப்பட்டு இரண்டாவது தடவையும் பிரயோசனமற்று போன முஸ்லிம் வாக்குகளாக அவை மாறிவிடும் என்பது கசப்பான உண்மை

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar