BREAKING NEWS

வரலாற்றுத் தலைவர்களின் சிந்தனையில் செயலாற்றுவோம் - தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாஹ்


( மினுவாங்கொடை நிருபர் )

   வௌிநாட்டு சக்திகளின் ஆதிக்கத்திலிருந்து எமது தாய் நாடு விடுதலை பெற்ற சுதந்திர தினத்தை அர்த்த புஷ்டி யாக்குவதற்கு அரச திணைக்களங்கள்,தொழிலகங்கள்,
மாத்திரமன்றி நாட்டின் சகல மக்களும் கொண்டாடி மகிழ்வதே, தேசப்பற்றை வளர்க்க வழிகோலும்.   விஷேடமாக வழிபாட்டுத் தலங்களிலும் முடியுமாயின் வீடுகளிலும் தேசிய கொடிகளை ஏற்றி தாய் நாட்டின் சபீட்சத்திற்குப் பிரார்த்தித்து தேசப்பற்றை வௌிப்படுத்து
மாறு, தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லாஹ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.    பெப்ரவரி 04 இல் கொண்டாடப்படவுள்ள நாட்டின் 72 ஆவது சுதந்திர தினம் தொடர்பில் தேசிய காங்கிரஸ் தலைவர் விடுத்துள்ள செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது: 
   அந்நிய சக்திகளின் ஆதிக்கத்தில் பல நூற்றாண்டுகள் சிக்குண்டுக் கிடந்த எமது தாய் நாட்டை நமது முன்னோர்களின் தியாகங்கள், போராட்டங்கள்,விசேடமாக அவர்களின்
ஒற்றுமைகளே சுதந்திர தேசமாக மீட்டெடுத்தன. இன, மத, சமூக அடையாளங்களுக்கு அப்பால் நின்று அவர்கள் தங்கள் தேசப்பற்றை முன்னிறுத்தி செயற்பட்டதாலேயே ஆதிக்க சக்திகளிலிருந்து எம்மால் மீள முடிந்தது. பொது எதிரிகளைத் தோற்கடிப்பதற்கான எமது ஒற்றுமையும், தேசப்பற்றும் இன்று அரசியல் விஷமிகள் சிலரால் சிதைக்கப்பட்டுள்ளன.
   இந்தச் சிதைவுகள்,பிளவுகளைப் பயன்படுத்தி மீண்டும் எமது தாய்நாட்டை அடிமைப்படுத்தவும், எமது மக்களின் வளங்களைச் சூறையாடவும்
சில அந்நிய சக்திகள் செய்த சூழ்ச்சிகளுக்கு இவ்வரசியல் விஷமிகளும் துணைபோனதாலேயே, இன்று நமது நாடு பெரும் சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது.
இவ்வாறானவர்களைத் தோற்கடித்து, மீண்டும் நாம் வரலாற்றுத் தலைவர்களின் சிந்தனையில் செயலாற்ற வேண்டியுள்ளது.
   சுதந்திர தேசத்தின் வரலாற்றுத் தூண்களாகவிருந்த எமது தலைமைகளின் சிந்தனைகள்,
தேசப்பற்றுக்கான அவர்களின் தியாகங்களை இளம் சிறார்களின் உள்ளங்களில் உணர்த்துவதனூடாகவே,
பல்லினத்தவர் வாழும் எமது நாட்டில் "அனைவரும் இலங்கையர்" என்ற உணர்வில் ஒன்றிக்கச் செய்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.
   எனவே, எதிர்வரவுள்ள சுதந்திர தினத்தில் பௌத்த விகாரைகளில் மாத்திரமன்றி, இந்து ஆலயங்கள், முஸ்லிம் பள்ளிவாசல்கள்,கிறிஸ்தவ தேவாலயங்கள், முடியுமானால் வீடுகளிலும் தேசிய கொடிகளைப் பறக்கவிட்டு, நாட்டின் சபீட்சத்துக்காகப் பிரார்த்தித்து, நமது வரலாற்றுப் பொறுப்புணர்வுகளைப் பிரதிபலிக்கச் செய்ய வேண்டும். இதுவே இன்றைய  காலத்தின் தேவையுமாகவுள்ளது.
 பிரிவினைவாதச் சித்தாந்தங்களைப் புறந்தள்ளி, "நாம் இலங்கையர்" என்ற உணர்வில் நாமனைவரும் ஒன்றிப்பதற்கான அரசியல் சிந்தனைகளை உயிரூட்டுவதே, நாடு இன்று எதிர் கொண்டுள்ள இனவாத வேறுபாடுகளையும், வௌி நாட்டுச் சுரண்டல்களின் ஆபத்துக்களையும் இல்லா தொழிக்கும்.
   கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நாட்டுக்குக் கிடைத்த சிறந்த தலைமைத்துவம், இவ்வாறான ஆபத்துக்களை அடியோடு தகர்த்து விடும் என்ற நம்பிக்கையும் எமக்குள்ளது.
எனினும், இத்தருணத்தில் சிறுபான்மைச் சமூகங்களான தமிழர்களும், முஸ்லிம்களும் தேசப்பற்றால் பிணைக்கப்பட்டுள்ளதன் அடையாளத்தை வௌிப்படுத்துவதும் பிரிவினைவாதம், மதத் தீவிரவாதம், பிரதேசவாதங்களைப் பிடுங்கியெறிந்து, இலங்கையராக ஒன்றிணைய ஒத்துழைப்பதுமே, எமது தாயகத்தின் இன்றைய தேவையாகவுமுள்ளது.
இதற்கு ஒரு அரியவாய்ப்பாக, சுதந்திர தினத்தைப் பாவித்து சகல சமூகங்களும் "இலங்கையர்" என்ற உணர்வில் கொண்டாடி, தேசத்தின் பொதுமைப்பாடுகளில் எம்மனைவரையும் ஒன்றிணையச் செய்வோம்.    இதுவே, சிறுபான்மைச் சமூகங்கள் மீது ஏற்பட்டுள்ள சந்தேகங்களைத் துடைத்தெறிய உதவும் என்றும், தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான  அதாஉல்லாஹ் அந்த செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar