சின்னத்தை மாற்ற கால அவகாசம் இல்லாததால் ஐ.தே.க. கூட்டணி யானை சின்னத்திலேயே களமிறங்கும்( மினுவாங்கொடை நிருபர் )

   ஐக்கிய தேசியக் கட்சிக் கூட்டணி யானைச் சின்னத்திலேயே அனைத்துப் பங்காளிக் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு தேர்தலில் களமிறங்கும் என அஜித் மானப்பெரும எம்.பி. தெரிவித்துள்ளார்.
   கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் இந்த யோசனையை 80 வீதத்துக்கு அதிகமானோர் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், அதற்கிணங்க தொடர்ச்சியாக மக்கள் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டுள்ள யானைச் சின்னத்திலேயே தேர்தலில் இறங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
   புதிய கூட்டணி "இதயம்"  சின்னத்தில் தேர்தலில் இறங்குவதற்கு ஒரு சிலரால் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், அதற்கான கால அவகாசமோ மக்கள் அங்கீகாரமோ இல்லாத நிலையில், தேர்தலுக்கான காலமும் இன்னும் சில வாரங்களே உள்ளதாலும், யானைச் சின்னத்திலேயே தேர்தலில் இறங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
   ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையகத்தில் நேற்று முன் தினம் (11)  நடைபெற்ற செய்தியாளர்கள் மாநாட்டின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 
   இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கும்போது, 
    ஐக்கிய தேசியக் கட்சியில் சிறு சிறு பிரச்சினைகள் உள்ளன. அரசாங்கத்தில் உள்ளது போல், பெரும் பிரச்சினைகள் கிடையாது. எமது பிரச்சினைகள் பேசித் தீர்க்கக் கூடியவை. அதற்கான செயற்பாடுகள் தற்போது இடம்பெறுகின்றன. 
எவ்வாறாயினும்,  எக்காரணத்துக்காகவும் கட்சி பிளவு படாமல் ஐக்கிய தேசியக் கட்சியும், அதனோடு இணைந்த கட்சிகளும் ஒன்றிணைந்து, எதிர்வரும் பொதுத்  தேர்தலை எதிர்கொள்வதே கட்சியின் தீர்மானமாகும்.
   ரணில் தரப்பு, சஜித் தரப்பு என எந்தக் குரோதமும் கிடையாது. சஜித் பிரேமதாஸவை, பிரதமர் வேட்பாளராக நிறுத்தி நாம் அரசாங்கத்தை அமைப்பதற்குத் தீர்மானித்துள்ளோம்.
   சின்னம் பிரச்சினை கிடையாது. கட்சியின் யாப்பிற்கிணங்க உடனடியாக வேறு சின்னத்தில் போட்டியிட முடியாது. இந்த நிலையில், மீண்டும் கட்சியின் செயற்குழு கூடி இறுதித் தீர்மானத்தை எடுக்கும் என்றும் என்றார்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்