BREAKING NEWS

தேர்தல் மறுசீரமைப்பை விட நல்லிணக்க சமிக்ஞைகளே இலங்கையை ஆசியாவின் ஆச்சரியம் ஆக்கும் - நாடாளுமன்றில் அலி ஸாஹிர் மௌலானா M.P.

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

எமது நாட்டின் இன்றைய சூழ்நிலையில் நாட்டை சுபீட்சத்தை கொண்டு செல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் எதிர்வரும் காலங்களில் ஜனநாயக விழுமியங்களை மதித்து அனைத்து மக்களும் சமமான அனுகூலங்களை, இலங்கையர் என்ற அடிப்படையில் தத்தம் மத, மொழி, கலாச்சார உரிமைகள் அனைத்தும் மதிக்கப்பட்டு, சம அந்தஸ்த்துடன் வாழ வழிசமைக்கக்கூடிய நாட்டின் தலைமைத்துவமும், அரசாங்கமும் மக்கள் பிரதிநிதிகளான நாங்கள் அனைவரும் தொடர்ந்து மக்களது மேம்பாட்டுக்காக செயற்பட வேண்டும் என்பதே மக்களது அபிலாசையாகவும் பிரார்த்தனையாகவும் உள்ளது.

இவ்வாறு கடந்த பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர் அனைத்து பிரதேச சமூக மக்களையும் பேதங்கள் அற்றமுறையில் அரவணைத்து செயற்படுவதுதான் ஆரோக்கியமான அரசியல் கலாச்சாரத்திற்கும், ஜனநாயக விழுமியங்களை பாதுகாப்பதற்கும் எதிர்கால இலங்கையில் சமாதான சகவாழ்வினை மேம்படுத்தும் வகையில் நாட்டின் தலைமை செயற்பட வேண்டுமென எதிர்பார்க்கின்றார்களே தவிர அரசியலுக்காக நாட்டை தென்பகுதியில் வேறாகவும், வட பகுதி வேறாகவும், கிழக்கு வேறாகவும், மலையகம் வேறாகவும், துருவப்படுத்தக்கூடிய நிலையினை ஏற்படுத்தக் கூடாது, இவ்வாறான துருவப்படுத்தல் செயற்பாடுகள் மூலமாக சிறுபான்மை கட்சிகள் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மக்களை வேண்டுமென்றே விரக்தி நிலைக்கு இட்டுச்சென்று தீவிரவாதத்தை ஊக்கப்படுத்துகின்ற இத்துருவப்படுத்தலை ஒருநாளும் நாட்டுப்பற்றுள்ள எமது மக்கள் எவரும் ஏற்றுக்கொள்ள தயாரில்லை என்பதை இச்சபையிலே கூறிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

இறைவனால் வழங்கப்பட்டிருக்கின்ற இயற்கை வளங்களும், பல இன, பல மத, பல மொழி பேசுகின்ற கலாச்சாரமும் நாகரீகமும் நிறைந்த வளம்மிக்க எமது நாட்டினை மேலும் மேம்படுத்தி அந்த அடையாளங்களுடன் அனைத்து மக்களையும் பாதுகாப்பது அனைவரது கடமையும் அதிலும் குறிப்பாக நாட்டின் தலைவராக, ஒரு சிறந்த ஜனாதிபதியாக நல்லதொரு அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கக் கூடிய ஆளுமை மிக்க திடகாத்திரமான ஜனாதிபதிக்குறிய தலைமைத்துவப் பண்புகளைக்கொண்ட எமது புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அவர்களுக்கும் நாட்டின் நன்மைக்காக ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கும் கடமைப்பாடு உள்ளது.

ஜனநாயக ரீதியிலான ஒருங்கினைந்த இலங்கை ராஜ்ஜியத்தை வெற்றிகரமாக நிலைநாட்டுவதற்கும் இந்த நாட்டின் அத்தனை மக்களதும் பாதுகாப்புக்கும் எமது நாட்டின் இறையான்மைக்கும் பன்மைத்துவமான இலங்கையின் நிலைப்பாட்டை ஒற்றையாட்சியினூடாக பாதுகாப்பதற்கும் அத்தியாவசியமாக எதிர்பார்ப்பது, நல்லினக்கத்தை உறுதிப்படுத்தி செயற்படுத்துவதேயன்றி வேறு எதனாலும் சுபீட்சத்தை கட்டியெழுப்ப முடியாது என்பதுதான் நாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களது அபிலாசையும் எதிர்பார்ப்புமாகும்.

எனவேதான் அடுத்த தேர்தல்களை வென்றெடுப்பதற்கு நல்லினக்கத்தை ஏற்படுத்தக் கூடிய அங்கிகாரத்தைத்தான் மக்கள் மத்தியில் பெறவேண்டும் என்பது வெறும் தேர்தலை வெற்றிகொள்ளும் அரசியல் நகர்வாக இல்லாது அடுத்த சந்ததியினரது வளமான எதிர்காலத்தை இலக்காக கொண்டதாகவூம் அமைதி சுபீட்சத்தை நோக்கியதாகவும் நகர்வுகள் அமையவேண்டும்.

இதற்காக தேர்தல் மறுசீரமைப்பை விட மக்கள் ஆணைபெற்ற ஜனாதிபதி அவர்களது நல்லினக்கத்துக்கான சமிக்ஞைகளும் செயற்பாடுகளும்தான் இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமாக மாற்றக்கூடிய நல்லதொரு நிலையைப் பெற்றுத்தரும் என்பதை உங்களுக்கு இங்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

ஊழல் மோசடியற்ற மக்களை மையமாகக் கொண்டு பொருளாதாரத்தை கட்டியெழுப்பி அனைத்து வளங்களும் சமமாக பகிரப்பட்டு வறுமை ஒழிக்கப்பட்டு வாழ்க்கை சுமைகள் குறைக்கப்பட்டு சட்டம் ஒழுங்கு பேணப்படுவதுடன் நாட்டின் பண்டையகால பௌத்த தத்துவத்தினூடாக கருணையுடன் தங்களது மக்களைப் பார்ப்பது போன்று ஏனைய மதங்களான இந்து, இஸ்லாமிய, கிறிஸ்த்தவ சமூகங்களையும் அவர்களது மத வழிபாடுகளையூம் கலாச்சாரங்களையும் பேனக்கூடிய பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கூடிய சமாந்திரமான செயற்பாட்டையே உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்.

பொருளாதார மற்றும் கல்வி முன்னேற்ற செயற்பாடுகளோடு எமது நாட்டின் மிகப்பெரும் பலமாகவுள்ள எதிகால சந்ததியினரை மனித வள மேம்பாட்டின் ஊடாக அவர்களை ஒவ்வொரு துறைகளிலும் நிபுணத்துவமிக்கவர்களாக ஆக்கக்கூடியவகையில் வழிநடாத்தல் செய்யக்கூடிய வகையில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புக்களையூம், வசதிகளையும் பயிற்சிகளையும் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் தொழில் நுட்பக்கல்லூரிகள் ஊடாக வழங்குகின்ற ஆளுமை உள்ள தலைவர்களாக நாம் ஒவ்வொருவரும் திகழ வேண்டும்.

எந்த ஒரு சமுதாய இளைஞர்களும் ஒடுக்கவோ, ஒதுக்கவோ படாது பல்கலைக்கழக அனுமதிகளும் வசதிவாய்ப்புக்களும் தாராளமாக அளிக்கப்படுகின்ற நிலையிலேயே எதிர்காலத்தில் அனைவரும் இலங்கையர் என்ற அடிப்படையில் நாட்டின் வளர்ச்சிக்கு அவர்களின் பங்களிப்பு அர்ப்பணிப்புடன் இருக்கும்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar