BREAKING NEWS

மீள்குடியேற்றம் மற்றும் தீர்வு முயற்சிகள் தொடர்பில் எதுவுமே குறிப்பிடப்படவில்லை”பாராளுமன்றில் ரிஷாட்!

ஊடகப்பிரிவு

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்குடியேற்றம் உட்பட நிரந்தரமான தீர்வு முயற்சிகள் குறித்து, ஜனாதிபதியின் அக்கிராசன உரையில் குறிப்பிடப்படாமை வேதனையளிப்பதாகத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், முஸ்லிம்கள் குறித்த சரத் பொன்சேகாவின் உரை கண்டனத்துக்குரியது எனவும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் அக்கிராசன உரை தொடர்பில், பாராளுமன்றத்தில் இன்று (08) உரையாற்றிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர்  ரிஷாட் பதியுதீன் மேலும் கூறியதாவது,

“ஜனாதிபதியின் அக்கிராசன உரையிலே சொல்லப்பட்ட நல்ல விடயங்களை நாங்கள் வரவேற்கின்றோம். நானும் எனது கட்சியும் எமது பாராளுமன்ற உறுப்பினர்களும் நல்ல விடயங்களுக்கு ஆதரவு தருவோம். வீண்விரயங்களைக் குறைக்கின்ற, அரச நிறுவனங்களுக்கு திடீர் விஜயம் மேற்கொள்கின்ற ஜனாதிபதியின் செயற்பாடு ஆரோக்கியம் அளிக்கின்றது. அத்துடன், பாதுகாப்பு அதிகாரிகளைக் குறைக்கின்ற செயற்பாடும் நல்லதே. “அழகான இலங்கை. சுத்தமான நாடு” என்ற தொனிப்பொருளிலான செயற்பாடுகளும் நல்லதே.

அதேபோன்று, சிறுபான்மைச் சமுதாயத்தையும் சிறுபான்மைக் கட்சிகளையும் பிழையாக நோக்கும் கண்ணோட்டத்தைக் கண்டிக்கின்றோம். சிறு கட்சிகளை வெளியேற்றும் சிந்தனை, இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்கும் செயல்பாடு என்பதை ஜனாதிபதிக்கு சொல்லி வைக்க விரும்புகின்றேன்.

அதுமாத்திரமின்றி, அவரது உரையிலே நீண்டகாலமாக யுத்தத்துக்கு முகங்கொடுத்து, துன்பத்திலிருக்கும் வடக்கு, கிழக்கு மக்களின் மீள்குடியேற்றம் குறித்தோ அல்லது அவர்களுக்கான நிரந்தரத் தீர்வு குறித்தோ எதுவுமே குறிப்பிடப்படவில்லை. திம்பு தொடக்கம், தொடர்ச்சியாக எத்தனையோ பேச்சுவார்த்தைகள் தீர்வு தொடர்பில் இடம்பெற்றிருந்த போதும் அதைப்பற்றி ஒருவார்த்தை தானும் குறிப்பிடப்படாமை வேதனை தருகின்றது. அத்துடன், பொத்துவில் தொடக்கம் யாழ்ப்பாணம் மற்றும் மறிச்சுக்கட்டி வரை உள்ள காணிப் பிரச்சினைகள் பற்றியும் கூறப்படவில்லை.

தற்போது, தேசியகீதம் தமிழில் பாடப்படக் கூடாதென்று அமைச்சர் ஒருவர் கூறியுள்ளமை வேதனையளிக்கின்றது. நாங்கள் பாடசாலை காலத்தில் தமிழ் மொழியிலேயே தேசிய கீதத்தை இசைத்தோம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். இவ்வாறான சம்பவங்கள் 1956 ஆம் ஆண்டை நோக்கி, இந்த நாட்டை பின்நோக்கிச் செலுத்துகின்றதா? என்று சிறுபான்மைச் சமூகம் எண்ணத் தோன்றுகின்றது. இதுகுறித்த தெளிவைத் தர வேண்டும்.

அத்துடன், “இஸ்லாமிய அடிப்படைவாதம், இஸ்லாமிய அடிப்படைவாதம்” என நிரந்தரமாக முத்திரை குத்திப் பேசப்படுகின்றது. “இஸ்லாமிய அடிப்படைவாதம்” என்று ஒன்று கிடையாது. இஸ்லாமிய மார்க்கம் “அடிப்படைவாதத்தை” முற்றாக நிராகரிக்கின்றது. எவனோ ஒருவன் செய்த குற்றத்துக்காக இஸ்லாமியர்களை தூசிப்பது கண்டிக்கத்தக்கது. இந்த குற்றச்செயலுடன் சம்பந்தப்பட்டவர்களை நாங்கள் காட்டிக்கொடுத்திருக்கின்றோம். அவர்களை அழித்தொழிப்பதற்கு முழுமையாக உதவியுள்ளோம்.

பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, “புலனாய்வுப்பிரிவு தலைமை அதிகாரியாக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட்டமை தவறு” என கூறியிருக்கின்றார். “சஹ்ரான்” என்ற ஒரு கயவன் செய்த அந்தக் கொடிய செயலுக்காக, நாட்டிலுள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் கேவலப்படுத்துவது கவலை தருகின்றது. இவ்வாறான சிந்தனை மாற்றப்படல் வேண்டும். நாடு பிளவுபடக் கூடாது எனவும் பயங்கரவாதம் தலையெடுக்கக் கூடாதெனவும் நாட்டின் இறைமை பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் செயற்பட்ட ஒரு சமூகத்தின் மீது வீண்பழி சுமத்தப்படுகின்றது.

வைத்தியர் ஷாபியின் விடயத்தில் மீண்டும் அநீதி இழைக்கப்படுகின்றது. அவர் தொடர்பிலான விசாரணைகள் முடிவடைந்த பின்னரும் மீண்டும், அவர் விசாரிக்கப்பட வேண்டுமென குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கோருவது எந்த வகையில் நியாயமானது? குற்றமிழைத்தால் தண்டிக்கப்பட வேண்டுமேயொழிய, இஸ்லாமியர் என்பதற்காக அவர் தண்டிக்கப்படக் கூடாது.

அண்மையில், நெலுந்தெனிய, உடுகும்புற பிரதேசத்தில் அமைந்துள்ள பள்ளிவாசலுக்கு முன்னால் புத்தர் சிலை ஒன்றை வைத்துள்ளார்கள். அது உடனடியாக அகற்றப்படல் வேண்டும்.” என்றார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar