கல்முனை பிரதேச செய்லக பிரச்சினையை முஸ்லிம் தரப்புடனும் பேசிவிட்டே முடிவெடுக்க வேண்டும்
Posted by aljazeeralanka.com on January 31, 2020 in Kalmunai | Comments : 0
கல்முனை பிரதேச செய்லக பிரச்சினையை முஸ்லிம் தரப்புடனும் பேசிவிட்டே முடிவெடுக்க வேண்டும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் மௌலவி அவர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் நேரடியாக தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் கருணாவின் கருத்துக்கு பதிலளித்து பேசும்போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த சகோதர கட்சிகளுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்குமிடையிலான சந்திப்பு இன்று (30) அலரி மாளிகையில் நடை பெற்றது. இதன் போது 40 சிறு கட்சிகளின் தலைவர்கள், செயலாளர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பேசிய கருணா அம்மான் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நோக்கி நாம் கேட்பது ஒன்றே ஒன்றுதான் அதனை செய்து தந்தால் போதும். அதுதான் கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்துதல். அதை மட்டும் செய்து தந்தால் போதும் என்றார். இதன் போது உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தனது கருத்தை முன்வைக்கையில்
நாம் 2005ம் ஆண்டு முதல் கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கே ஆதரவாக செயற்படுகின்றோம். முழு முஸ்லிம் சமூகமும் ஒரு பக்கம் நிற்கும் நாம் மஹிந்தவுக்கு ஆதரவாக செயற்பட்டமையால் எம்மை முஸ்லிம் சமூக துரோகியாக கூட பார்த்தார்கள். என்னளவு முஸ்லிம் சமூகத்தில் யாரும் ஏச்சு வாங்காத அளவு நான் ஏச்சுக்கள் வாங்கியுள்ளேன். ஆனாலும் இந்த நாட்டின் சிறந்த தலைவராக மஹிந்த உள்ளார் என்ற உண்மையை சொல்லி வருகிறோம்.
கல்முனை பிரச்சினை பற்றி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கருணா தனது கருத்தை இங்கு தெரிவித்திருந்தார். கல்முனை விடயத்தில் தமிழ் மக்களுக்கும் பிரச்சினை உள்ளது, முஸ்லிம் மக்களுக்கும் பிரச்சினை உள்ளது. இது விடயத்தில் ஒரு தரப்பின் கருத்தை மட்டும் வைத்து தீர்வுக்கு வர முடியாது.
ஆகவே தமிழ் தரப்பு முஸ்லிம் தரப்பு என்ற இரு தரப்பின் கருத்துக்களையும் ஆராய்ந்த பின் நீதியான தீர்வை நீங்கள் தருவீர்கள் என்பதே எமது கோரிக்கை என முபாறக் மௌலவி தெரிவித்தார்.
மேற்படி பிரதமருடனான சந்திப்பில் முஸ்லிம் கட்சிகள் என்ற வகையில் உலமா கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் ஸாஹித் முபாறக், சமாதான கூட்டமைப்பின் தலைவர் முன்னாள் அமைச்சர்களான ஹசனலி, பசீர் சேகு தாவூத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment