BREAKING NEWS

இந்திய ஹெலிகொப்டரைப் பயன்படுத்தி பிரச்சாரத்தை ஆரம்பித்தார் தலைவர்.

கல்முனை ரெஸ்ட் கவுஸ் கேம்பில் புள்ளட்புரூப் ஜெக்கட்டுடன் தலைவர் அஷ்ரஃப்

 ஜேயாரை கிழக்கு 5 முஸ்லிம் எம்.பிக்கள் சந்தித்த போது ஜே.ஆர் அவர்களிடம், தான் இந்திய அரசுடன் இனப்பிரச்சினை சம்பந்தமாக சகல விடயங்களையும் பேசி வருகின்றேன். இவ் விடயத்தில் நீங்கள் ஒத்துழைக்க வேண்டும். முஸ்லிம் பிரச்சினை குறித்து தான் கவனத்திற் கொள்வதாகவும் கூறியிருந்தார்.

இதில் கலந்து கொண்ட ஓரிரு முஸ்லிம் எம்.பிக்கள் ஒப்பந்தத்தில் முஸ்லிம்களின் அபிலாசைகளும் உள்ளடக்கப்பட வேண்டும் என்று கூறிய போது, அவ்வாறு என்னால் எதுவும் கூற முடியாது. நீங்கள் எனக்கும் கட்சிக்கும் கட்டுப்பட வேண்டும் என்று ஆக்ரோஷமாக கூறியதோடு, 1977 பொதுத் தேர்தல் முடிந்த கையோடு அன்றிருந்த ஐ.தே.க எம.பிக்களிடம் திகதியிடப்படாத இராஜினாமாக் கடிதத்தைப் பெற்ற விடயத்தை ஜே.ஆர் சுட்டிக் காட்டியபொழுது எம்.பிக்கள் அதிர்ச்சியுற்றனர். இதனால் ஜே.ஆர் அவர்களை முஸ்லிம்கள் விடயத்தில் ஒரு தீர்வினைப் பெற்றுத்தர முடியாத நிலைக்குத் தள்ளி திருப்பி அனுப்பியிருந்தார்.

பேச்சு தோல்வியில் முடிந்தாலும், அது பற்றி சமூகத்திற்குள் வந்து ஜே.ஆர் இன் கடும் போக்கு பற்றி பேசாது முஸ்லிம்களுக்கு அநீதி நடக்காது என்று பசப்பு வார்த்தைகளை கூறி சமாளித்து விட்டனர் அந்த எம்.பீக்கள்.

இருந்தும் தலைவர் அஷரப் அவர்கள் எச்சரிக்கையுடன் செயற்படத் தொடங்கினார். கட்சியை பாஷவிலாவில் அரசியல் இயக்கமாக பதிவு செய்த கையோடு நிந்தவூரில் தற்போதைய கட்சியின் செயலாளர் நாயகம் ஹசனலி அவர்களின் வீட்டில் முதன் முதலாக அம்பாறை மாவட்ட சமூக ஆர்வலர்களை அழைத்திருந்தார் தலைவர்.

அதில் கல்முனையைச் சேர்ந்த மர்ஹூம் டாக்டர் ஜெமீல், மர்ஹூம் சேகு இப்றாகீம் மௌலவி, எனது சகோதரர் அமீர் அலி, சம்மாந்துறை மர்ஹூம் மன்சூர்  (முன்னாள் மாகாண சபை உறுப்பினர்), புகாரி மௌலவி, சாய்ந்தமருது நிஜாமுதீன் (முன்னாள் பிரதியமைச்சர்), முழக்கம் அப்துல் மஜீத், அட்டாளைச்சேனை அபூசாலி, மருதமுனை மருதூர்க்கனி,  அபுல் கலாம், ஒலுவில் போஸ்ட் மாஸ்டர் என இன்னும் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

இதில் தலைவர் அவர்கள் முஸ்லிம் காங்கிரஸின் நடவடிக்கை, இலங்கை இந்திய அரசுகளினால் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்படவுள்ளதையும் விரிவாக எடுத்துக்கூறினார்.

அதில் கலந்து கொண்ட சிலர் தனிக்கட்சி பிரகடனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த போதும் பெரும்பான்மையானோர் முஸ்லிம்களுக்கான தனிக்கட்சி அவசியத்தை வலியுறுத்தினர்.

1988 ஆம் ஆண்டு முற்பகுதியில் இந்திய அரசின் சார்பாக பேச்சில் கலந்து கொண்ட ரொமேஷ பண்டாரி, பார்த்தசாரதி போன்றவர்களுக்கு தலைவர்  கிழக்கில் இரண்டு மாகாண சபைகள் உருவாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மகஜர்களை அனுப்பியிருந்தார்.

இவ்வாறு தலைவர் கடுமையாக முயற்சி செய்த போதும், இலங்கை - இந்திய அரசுகள், வடகிழக்கு முஸ்லிம்களின்; அபிலாசைகள் எதையும் கருத்தில் எடுத்ததாக தெரியவில்லை.

இருந்தும் தலைவர் தனது பக்கம் முஸ்லிம்கள் இருக்கின்றார்கள் என்ற மக்கள் ஆணையைப் பெறுவதற்கான ஒரு வாய்ப்பு அப்போது கிட்டியது.

ஜே.ஆர் அரசு 1987 ஏப்ரல் இறுதிப்பகுதியில் உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பு மனுக்களைக் கோரியது. அதில் தலைவர் முஸ்லிம் காங்கிரஸை பதிவு செய்யப்படாவிட்டாலும், சுயேட்சையாக தராசு சின்னத்தில் கிழக்கில் சகல உள்ளூராட்சி சபைகளுக்கும் வேட்பு மனுக்களைக் கொடுத்திருந்தார்.

இதில் கல்முனை பிரதேச சபை சார்பாக சட்டத்தரணி நிஜாமுதீன், ஏ.எம்.நசீர் உட்பட 25 பேர் போட்டியிட்டனர். மறுபக்கம் கல்முனை எம்.பி மன்சூரின் சார்பில் பலமான வேட்பாளர் குழு இறக்கப்பட்டது.

கல்முனையில் தலைவர் முதன் முதலாக தேர்தலில் வென்றேயாக வேண்டும் என்ற உத்வேகத்துடன் கடுமையாக கட்சிப்பணிகளை முடுக்கி விட்டிருந்தார்.

முக்கியமாக குறிப்பிட்டுக் கூற வேண்டும். தலைவர் கல்முனைக்கு கட்சியைக் கொண்டு வந்த பொழுது அந்தக் காலத்தில் இளைஞர்களை அங்கத்தவர்களாகக் கொண்ட ஐந்து பொது அமைப்புக்கள் பக்கபலமாக இருந்தன.

இக்பால் சனசமூக இயக்கம் சகோதரர் பீ.ஆர்.ரசீத் தலைமையில் இயங்கியது. அவரும் அவரது அங்கத்தவர்களும் முதலாவதாக தலைவரை அழைத்து வந்து மேடை அமைத்துக் கொடுத்து உள்ளூராட்சித் தேர்தலுக்கான பிரசாரக் கூட்டத்தை நடத்தினர்.

அப்போது நான் சாதாரண தர மாணவன். அந்தக் கூட்டத்தில் நானும் கலந்து கொண்டு  தலைவரின் ஆக்ரோசமான பேச்சை மட்டுல்லாமல், கலந்து கொண்டவர்கள் தலைவரிடம் கேள்விகளை கேட்டும் அதற்கு தலைவர் பதில்களையும் வழங்கிய வித்தியாசமான பிரச்சாரத்தையும் கண்டேன்.

 அதில் பல பேர் நீங்கள் வென்றால் தொழில் தருவீர்களா? ஊரை அபிவிருத்தி செய்வீர்களா? எனக் கேட்டனர்.

அதற்கு தலைவர்  கண்டிப்பான முறையில் தொழிலும் தர மாட்டேன், அபிவிருத்தியும் செய்ய மாட்டேன். ஆனால், சமுகத்தின் உரிமைகளைப் பெற்றுத் தருவேன். எனது கட்சி ஒரு விடுதலை இயக்கம். பட்டம், பதவிகளை பெறுவதற்காக அமைக்கப்பட்ட மாமுல் அரசியல் கட்சி அல்ல. எவ்வாறு தமிழ் இளைஞர்கள் படிப்பு பட்டங்களை எல்லாம் துறந்து விட்டுப் போராடுகின்றார்களா அதே போன்று முஸ்லிம் இளைஞர்களும் தியாக மனப்பான்மையுடன் தன்னுடன் இணைய வேண்டும் என அறைகூவல் விடுத்தார்.

இதையடுத்து கல்முனையில் இயங்கி வந்த இன்னும் சில அமைப்புக்களும் தலைவருடன் இணைந்து செயற்பட முன்வந்தன.

சகோதரர் மாஹிர் தலைமையிலான அமைப்பினரும், மர்ஹும் சமீம் தலைமையிலான இஸ்புல் இஸ்லாம் அமைப்பினரும்  ஆதரவு கொடுக்க முன்வந்தனர். இதனால் கல்முனை மற்றும் சாய்ந்தமருதுப் பகுதிகளில் தலைவரின் செல்வாக்கு அதிகரிக்கத் தொடங்கியது.

இவ்வாறு ஒவ்வொரு பிரதேசமாக தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த வேளையில் கட்சியின் செல்வாக்கு கடுமையாக உயர்வதைக் கண்ட விடுதலைப் புலிகளின் மட்டு, அம்பாறைப் பொறுப்பாளர் பிரான்ஸிஸ் வேட்பாளர்களை அச்சுறுத்தி மரண தண்டனை கடிதங்களை அனுப்பினர்.

அவ்வாறு மரண தண்டனை கடிதம் பெற்றவர்களில் முழக்கம் மஜீதும் ஒருவர்.

இவ்வாறு அதிக செல்வாக்கு நிலவுவதைக் கண்ட அரச புலனாய்வுப் பிரிவு அந்த செல்வாக்குக் குறித்து ஜே.ஆர் இற்கு தெரியப்படுத்தியது. எனவே, தேர்தல் நடந்து முஸ்லிம் காங்கிரஸ் மக்கள் ஆணையைப் பெற்றால் முஸ்லிம் காங்கிரஸை விட்டு விட்டு இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்ய முடியாது என்பதை உணர்ந்த ஜே.ஆர் அரசு உடனடியாக தேர்தலை ஒத்தி வைக்கும் தீர்மானத்தை எடுத்தது மட்டுமல்லாமல் 1987 ஜூலை 29 இல் திடீரென்று இந்தியாவுடன் ஒப்பந்தம் புரிவதற்கும் நாள் குறித்தது. இது இலங்கை சிங்கள முஸ்லிம் மக்களுக்கு பெரும் அதிர்சியாக மாறியது.

ஜே.ஆர் அரசில் இருந்த பிரதமர் பிரேமதாச, பாதுகாப்பு அமைச்சர் லலித் போன்றோர் கடுமையாக எதிர்த்தனர். ஜே.வி.பி நாடுபூராகவும் இதற்கு எதிராக வன்செயலில் இறங்கியது.

சுதந்திர கட்சி தலைவி சிறிமாவும் கடுமையாக எதிர்த்தார்.

இதேபோன்று தலைவர் அஷரபும்  முஸ்லிம்களின் அபிலாசைகள் உள்ளடக்கப்படாத இந்த ஒப்பந்தத்தை எதிர்த்ததுடன் இதற்கு எதிராக போராடப் போவதாகவும் அறிவித்திருந்தார்.

இறுதியில் ஜே.ஆர் நாடு பூராகவும் ஊரடங்கை அமுல்படுத்தி விட்டு இந்தியப் பிரதமர் ராஜிவை கொழும்புக்கு வரவழைத்து ஜுலை 29 இல் ஒப்பந்தம் கைச்சாத்திட்டார்.

ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட அன்று நாடுபூராகவும் வன்செயல்கள் வெடித்தன. இதில் மிகவும் அநீதி இழைக்கப்பட்ட சமூகமாக முஸ்லிம் சமூகம் மாறியது.

கிழக்கில் அன்று 35 வீதமாக இருந்த முஸ்லிம்கள்  கிழக்குடன் வடக்கு பலவந்தமாக இணைக்கப்பட்டதன் காரணமாக 17 வீதமாக மாற்றப்பட்டனர்.

இதனால் வடகிழக்கில் முஸ்லிம்கள் சிறுபான்மையினமாக்கப்பட்டதுடன் அவர்களது அரசியல் முகவரியும் இல்லாமல் செய்யப்பட்டது.


இந்த ஒப்பந்தத்துக்கு எதிராக முஸ்லிம் இளைஞர்களும் கிளர்ந்தெழுந்தனர். அன்று வடகிழக்கில் இருந்த 5 முஸ்லிம் எம்.பிக்களுக்கும் எதிராக கோஷம் இட்டனர். அந்த எம்.பிக்களும் குறித்த ஒப்பந்தம் 13ஆவது திருத்தச் சட்டமாக  நாடாளுமன்றம் வந்த போது ஆதரவாக வாக்களித்தமை முஸ்லிம்களால் மன்னிக்க முடியாத குற்றமாக பார்க்கப்பட்டது.

இதனால், தலைவர் அவர்கள் சீற்றம் அடைந்து அந்த எம்.பிக்களை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினார். வடகிழக்கு முஸ்லிம்கள் அனைவரும் ஐ.தே.க, இ .சு.க. வை விட்டு முஸ்லிம் காங்கிரஸில் அணிதிரண்டனர்.

உண்மையில் அது சமாதான ஒப்பந்தமாக சொல்லப்பட்டாலும் குறிப்பாக புலிகள் இதனை முழு மனதுடன் ஏற்கவில்லை. பிரபாகரன் இதற்கு எதிராக சுதுமலையில் வெளிப்படையாக பேசியதை மறுக்க முடியாது.

அதேபோன்று ஒப்பந்தம் நடந்து 3 மாதங்களின் பின் புலிகளுக்கும் இந்திய இராணுவத்திற்கும் மோதல் ஏற்படத் தொடங்கியது.

அமைதி காக்க வந்த இந்திய அமைதிப் படையினர் புலிகளுடன் மோதினர். இதனால் புலிகளினாலும், இந்தியப் படைகளினாலும் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டதுடன் பல முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். பல முஸ்லிம்களின் சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

உண்மையில் இந்த ஒப்பந்தம் அமைதிக்குப் பதிலாக வன்செயலை உருவாக்கியது என்பதை இதன் மூலம் காணலாம்.

இவ்வாறு இந்திய இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையில் யுத்தம் தொடர்ந்து கொண்டிருக்க வடகிழக்குக்கு வெளியே இந்த ஒப்பந்தத்தின் காரணமாக மாகாண சபையை உருவாக்க ஆரம்பித்தது ஜே.ஆர் அரசு.

இதற்கிடையில் தலைவர் கட்சியின் ஏழாவது மாநாட்டை கொழும்பு மேமன் மண்டபத்தில் நடாத்தினார். இந்த மாநாட்டில்  கட்சியின் தவிசாளராக சேகு இஸ்ஸதீனும், பொதுச் செயலாளராக பரிஸ்டர் உஸ்மானும் தெரிவு செய்யப்பட்டனர்.

இதன் பின்பு கட்சியை தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யும் நடவடிக்கையை தலைவர் தீவிரமாக இறங்கினார். அதன்படி 1988.02.11 ஆம் திகதி முஸ்லிம் காங்கிரஸ் பதிவு செய்யப்பட்ட கட்சியாக ஆணையாளரால் அங்கீகரிக்கப்பட்டு பிரகடனப்படுத்தப்பட்டது. இவ்வாறு கட்சி பதிவு செய்யப்பட்டதன் பின்னர், ஜே.ஆர் அரசு 1988 ஏப்ரல் 22 ஆம் திகதி ஊவா, மத்தி, வடமேல் மாகாண சபைகளுக்கு தேர்தலை நடாத்த தயாரானது.

இத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுவதா இல்லையா எனற வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டு ஈற்றில் மக்கள் ஆணையைப் பெற்று அதனை சர்வதேசத்திற்கு காட்டுவதென முடிவெடுக்கப்பட்டது.

ஏப்ரலில் நடந்த இத் தேர்தலில் ஊவா மாகாணத்திலிருந்து சித்தீக் ஹாஜியாரும், வட மேல் மாகாணத்திலிருந்து புத்தளம் இல்யாஸ் அவர்களும், குருநாகலில் ரசூல் ஹாஜி அவர்களும், மத்திய மாகாணத்திலிருந்து சட்டத்தரணி பாறுக், உபைதுல்லாஹ் மற்றும் மாத்தளை அத்ஹம் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

மேலும் ஜூன் மாதத்தில் நடைபெற்ற மேல் மாகாணத் தேர்தலில் கொழும்பு மஜீத் மௌலவி, சுகைப் ஏ.காதர், பரிஸ்டர் உஸ்மான், நஸீர் ஹாஜி, அப்துல் காதர், அனீஸ் ஷரீப் ஆகிய மொத்தம் 12 பேர் தெரிவு செய்யப்பட்டனர்.

வடக்கு கிழக்குக்கு வெளியிலுள்ள இந்த வெற்றி வடகிழக்கில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கிழக்கைச் சேர்ந்த அஷரப் என்ற இளைஞர் (39 வயது) வடக்கு கிழக்குக்கு வெளிய 12 உறுப்பினர்களையும் சுமார் 3 இலட்சம் வாக்குகளையும் பெற்றதன் மூலம் வடகிழக்கிலுள்ள முஸ்லிம்கள் தலைவரை ஒரு ஹீரோவாக பார்க்கத்  தொடங்கினர்.

இதுவரை கிழக்கைச் சேர்ந்த எவரும் சாதிக்காத ஒன்றை தலைவர் அஷரப் நிறைவேற்றியுள்ளார் என்றும், வழமையாக முஸ்லிம்களின் தலைவராக கொழும்பைச் சேர்ந்தவர் தான் வருவார். ஆனால், முதன் முதலாக கிழக்கைச் சேர்ந்தவர் முஸ்லிம்களின் தலைவராக உருவாகியிருக்கிறார் என கிழக்கு முஸ்லிம்கள் பெருமை அடைந்தனர்.

இந்த மக்கள் ஆதரவை வைத்து இலங்கை இந்திய ஒப்பந்தத்தை கடுமையாக விமர்சித்து ஜே.ஆர் மற்றும் இந்திய அரசுகளுக்கு எழுத்து மூலம் தலைவர் மகஜர்களை அனுப்பியிருந்தார்.

இதனால் அன்றிருந்த இலங்கைக்கான இந்திய தூதுவர் டிக்சித் தலைவரின் வீடு தேடி வந்து இந்திய அரசு உங்களுடன் பேசத் தயார் என்ற செய்தியைக் கூறினார்.

அதேபோன்று அன்றிருந்த பிரதமர் பிரேமதாஸா தலைவரின் செல்வாக்கைக் கண்டு தனது தூதுவர்களை அனுப்பியிருந்தார்.

அப்போது எதிர்க்கட்சி, ஜே.ஆர் அரசை வீழ்த்த பலமான கூட்டமைப்பை ஏற்பாடு செய்து கொண்டிருந்த சிறிமாவும் அந்தக் கூட்டமைப்பில் இணையுமாறு  தலைவருக்கு பகிரங்கமாக அழைப்பு விடுத்தார்.

இதனால் தலைவரின் முக்கியத்துவம் தேசிய அரசியலில் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது.

இந்த நிலையில், வடகிழக்கில் இருந்த விடுதலை அமைப்புக்கள் அடிக்கடி முஸ்லிம் பிரதசங்களில் வன்செயல்களில் ஈடுபட்டன. முஸ்லிம்கள் பலர் கொல்லப்பட்டனர். பதட்டமும் பீதியும் ஆரம்பித்தது.

குறிப்பாக சம்மாந்துறை, கல்முனை, மூதூர், காத்தான்குடி, அக்கரைப்பற்று, ஏறாவுர் போன்ற முஸ்லிம் பகுதிகளில் பெரும் கலவரம் ஏற்பட்டது. மேலும் விடுதலை அமைப்புக்கள் அச்சம் கொண்டு தலைவரை வளர விடக்கூடாது என்று கங்கணம் கட்டினர்.

எனினும், தலைவரை பாதுகாப்பதற்கு இலங்கை அரசு எந்த உதவிகளையும் செய்யவில்லை. மாறாக இந்திய அரசு சில பாதுகாப்பு உதவிகளை செய்ய முன்வந்த போதும் தலைவர் அதனை நிராகரித்து விட்டார்.

இதற்கிடையில் இலங்கை  இந்திய அரசுகள் இணைந்து வடகிழக்கு மாகாண சபைத் தேர்தலை 1988 நவம்பரில் நடாத்த முடிவெடுத்தது. ஆனால் அத் தேர்தலில் பங்கு பற்றுவதற்கு புலிகள் ஏனைய அரசியல் கட்சிகளுக்கு தடைவிதித்து மரண அச்சுறுத்தலும் விடுத்திருந்தனர்.

இது இந்திய அரசுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. தேர்தலில் பங்குபற்றுவதற்கு அன்று ஈ.பி.ஆர்.எல்.எப், யு.என்.பி முன்வந்திருந்தன. ஆனால் முஸ்லிம் சமூகத்தின் கட்சியான முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பத்தில் பங்கு பற்றுவதில்லை என்ற முடிவில் இருந்தது.

இருந்தும் முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடம் இது சம்பந்தமாக கூடி அதிலுள்ள சாதக பாதகங்களை ஆராய்ந்தது. அதில் பெரும்பாண்மையினர் வட-கிழக்கில் எமக்குள்ள செல்வாக்கை சர்வதேசத்துக்கு காட்ட வேண்டும். போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர்  இலங்கை இந்திய ஒப்பந்தத்தை எதிர்த்து சபைகளை பகிஸ்கரிப்போம் என்ற முடிவுக்கு வந்தனர்.

இருந்தும் புலிகளின் மரண அச்சுறுத்தல் கடிதங்கள் கட்சியின் உயர் பீடத்தில் உள்ளோருக்கு அனுப்பப்பட்டது. இதனால் கட்சியிலுள்ளவர்கள் போட்டியிட அச்சமடைந்தனர்.

இதனால் தலைவர் மாற்று வழியாக கொழும்பைச் சேர்ந்தவர்களை பட்டியலில் நிரப்பி விட்டு அவர்களது இலக்கங்களை தேர்தல் நெருங்கும் போது கிழக்கைச் சேர்ந்த உண்மையான வேட்பாளர்களுக்கு வழங்கி தேர்தல் நடவடிக்கையை முடுக்கி விட்டிருந்தார்.
அதற்கமைய முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கின் 3 மாவட்டங்களிலும்  போட்டியிட்டது. வடக்கில் போட்டியிடவில்லை. மறுபக்கம், தலைவர் கிழக்கில் பொதுக் கூட்டங்களை நடாத்த முடியாதளவுக்கு புலிகளின் அச்சுறுத்தல் நிலவியது.

வேட்பாளர்களான மர்ஹூம் அலி உதுமான், மர்ஹூம் மன்சூர், தற்போதைய அமைச்சர் அதாவுல்லாஹ், தற்போதைய பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ், தற்போதைய முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஹசனலி எம்.பி, பொத்துவில் மர்ஹூம் அஸீஸ், மர்ஹூம் மருதூர்க்கனி, முனாஸ் காரியப்பர், அட்டாளைச்சேனை பதுர்தீன், நிஜாமுதீன், கல்முனை நஸீர், முழக்கம் மஜீத், சென்றல் கேம்ப் ஆதம்பாவா, மர்ஹூம் முகைதீன் அப்துல் காதர், ஏறாவூர் ரூபி முகைதீன், திருமலை ஜவாத் மரைக்கார்,  ஜமால்தீன் என இன்னும் பலர் போட்டியிட்டனர்.

எனினும் தலைவருக்கு அச்சுறுத்தல் தொடர்ந்ததால் இந்திய தூதுவர் டிக்சித், கட்சி என்பதற்கு அப்பால் கிழக்கில் ஜனநாயத்தை பாதுகாக்கும் பொருட்டு தலைவருக்கு பாதுகாப்பு மற்றும் ஹெலிகொப்டர் வசதிகளை வழங்க முன்வந்து அதனை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டிய போது தலைவர் அதனை ஏற்றுக் கொண்டார்.

பின்னர், இந்திய ஹெலிகொப்டரைப் பயன்படுத்தி பிரச்சாரத்தை ஆரம்பித்தார் தலைவர்.

குறிப்பாக 1988 ஒக்டோபர், நவம்பர் காலத்தில் இரவில் அவ்வப்போது மின்சாரம் தடைப்பட்டதனால் கடும் பீதியும் இருள் சூழ்ந்த நிலைமையும் காணப்பட்டது.

குறிப்பாக கல்முனைப் பகுதியில் கூட்டம் நடத்த முடியாதளவுக்கு பீதி நிலவியது. இதனை அறிந்த தலைவர் எனது சகோதரர் அமீர் அலியுடன் தொடர்பு கொண்டு கல்முனையில் கூட்டம் நடத்துவது குறித்து ஆலாசனை நடாத்தினார்.

அப்போது எனது சகோதரர், மேடை போட்டு கூட்டம் நடத்தும் அளவுக்கு பாதுகாப்பு இல்லை. இருக்கும் ஒரே வழி கல்முனைக்குடி ஜூம்ஆ பள்ளிக்கு வந்து உரையாற்றி ஆதரவு கேட்பது தான் என்ற ஆலோசனையை தலைவருக்கு கூறினார்.

அதற்கு தலைவர் பள்ளி நிர்வாகம் அனுமதி தருமா? என கேட்டார்.

எனது வாப்பா தான் தலைவர். எனவே, அவரை சமாதானப்படுத்தி பேசிவிட்டு தொடர்பு கொள்கிறேன் என தலைவருக்கு பதிலளித்தார் எனது சகோதரர் அமீர் அலி.

இது சம்பந்தமாக சகோதரர் அமீர் அலி வாப்பாவுடன் பேசிய போது,  ஆரம்பத்தில் எனது தந்தை அதாவது 80,82 காலப்பகுதியில் தலைவரின் தனிக்கட்சி விடயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த போதிலும் 1987 இலங்கை - இந்திய ஒப்பந்தம் காரணமாக முஸ்லிம் சமூகம் அடிமைப்படுத்தப்பட்ட பிற்பாடு முழுமையான முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளராக மாறினார்.

1988 ஆரம்பப் பகுதியில் கட்சியை பதிவதற்கு தலைவர் நிதியினை வாப்பாவிடம் பெறுவதற்காக ஒலுவில் போஸ்ட் மாஸ்டர் அனுப்பியிருந்தார். அப்போது வாப்பா கட்சியின் பதிவிற்கான நிதியை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, அந்த அடிப்படையில் கட்சியின் பற்று காரணமாக எனது சகோதரர், தலைவர் பள்ளிக்கு வந்து பேச வேண்டும் என்ற விடயத்தை கூறிய போது, வாப்பா மறுக்காமல் இது சமூகப் போராட்டம் என்று கருதி தலைவர் பேசுவதற்கு இடம் வழங்க இணங்கினார். எனினும் நம்பிக்கையாளர் சபையைக் கூட்டி இது குறித்து கதைத்து தலைவருக்கு முடிவை அறிவிப்போம்  என்று எனது சகோதரனிடம் எனது வாப்பா கூறினார்.

நம்பிக்கையாளர் சபைக்கூட்டத்தில் இது தொடர்பில் ஆராய்ந்த போது 24 பேரில் 18 பேர் அனுமதி கொடுக்க முடியாதென எதிர்த்தனர். அவர்கள் அனைவரும் மன்சூர் எம்.பியின் ஆதரவாளர்கள்.

பள்ளித் தலைவரான எனது வாப்பாவும், செயலாளரான ஜப்பார் ஹாஜியாரும், பொருளாளர் மஜீத் முதலாளியும் தலைவரை பேச அனுமதிக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் கூட்டத்தை முடித்தனர். ஈற்றில் வாப்பா, தலைவர் அஷரபை தொடர்பு கொண்டு ''தம்பி எல்லாத்துக்கும் நான் இருக்கிறேன். தைரியமா பள்ளிக்கு வந்து பேசுங்கள் என்று கூறினார்.

முஸ்லிம் காங்கிரசுக்கு இலங்கையில் பள்ளிவாசலில் அரசியல் பிரச்சாரம் செய்வதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்த முதல் பள்ளிவாசலாக கல்முனைக்குடி ஜூம்ஆ பள்ளிவாசல் அமைந்தது. இதற்கு எனது தந்தை காரணமாக இருந்ததை இட்டு நான் பெருமை அடைகின்றேன்.

மேலும் எனது வாப்பாவின் தைரியம் தலைவருக்கு உற்சாகத்தை ஊட்டியது. இதனைத் தொடந்து தலைவர் 1988 நவம்பர் மாதத்தில் ஒரு நாள் ஹெலியில் கல்முனை ரெஸ்ட் ஹவுஸ் கேம்ப் இல் வந்து இறங்கினார்.

அப்பொழுது தலைவர் தனது உடம்பில் குண்டு துளைக்காத ஜக்கெட்டை அணிந்திருந்தார். அதற்குக் காரணம் அந்த நேரத்தில் அந்த அளவு மரண அச்சுறுத்தல் இருந்தது. அன்றைய தினம் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருள் சூழ்ந்திருந்தது.

எனது சகோதரர் அமீர் அலி, தனது காரில் தலைவரை ஏற்றி இந்திய பாதுகாப்பு படைகளின் வாகனம் பின்தொடர கல்முனைக்குடி ஜூம்ஆ பள்ளிக்கு அழைத்து வந்திருந்தார். அப்போது கூடி நின்ற பல்லாயிரக்கணக்கான மக்கள் வீரத்தளபதியை காண்பது போன்று தலைவரைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

இஷத் தொழுகை முடிந்த கையோடு எனது வாப்பாவின் தலைமையில் கூட்டம் ஆரம்பமானது.  பல்லாயிரக் கணக்கானோர் கூட்டத்தில் பங்குபற்றினர். ஏற்கனவே எதிர்ப்புத் தெரிவித்த  18 நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்களும் மக்களின் ஆவேசம், ஆதரவைக் கண்டு மௌனமாகினர்.

தலைவர் மிக ஆக்ரோஷமான முறையில் முஸ்லிம் சமூகத்திற்கு  நடந்த அநீதிகளைப் பற்றியும்,  ஆபத்தான சூழ்நிலைகளைப் பற்றியும் ஒரு மணி நேரம் பேசினார்.

அவர் பேசிய பொழுது, எனக்கும் இப்போது நல்ல ஞாபகம் - ஒரு இராணுவ தளபதி போன்று அவர் பேசிய பேச்சு கிழக்கில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை கட்சியின் பால் அணிதிரட்டியது.

இதனைத் தொடர்ந்து தேர்தல் தினத்திற்கு எஞ்சியிருந்த காலத்தில் நடந்த சம்பவங்கள், தேர்தல் முடிவுகள், தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் விபரங்களை அடுத்த பதிவில் எதிர்பாருங்கள்.

Mohamed Harees MP

மேற்ப‌டி ஹ‌ரீஸ் எம் பியின் க‌ருத்தின் மூல‌ம்  முஸ்லிம் காங்கிர‌சின் வ‌ர‌லாற்றை உண்ர‌லாம். முஸ்லிம் காங்கிர‌ஸ் ப‌ற்றி ப‌ல‌ரும் க‌ற்ப‌னைக‌ளால் எழுதும் போது இது 99 வீத‌ம் உண்மையாக‌ உள்ள‌து. ஆனால் மு. காவின் வ‌ள‌ர்ச்சிக்காக‌ த‌ன‌து த‌ந்தையும் த‌ன‌ய‌னுமே பெரும் பாடுப‌ட்ட‌து போல் எழுதியுள்ள‌மை எவ‌ரும் த‌ம் த‌ர‌ப்பை ம‌ட்டுமே பெரிதாக‌ காண்ப‌ர் என்ப‌தையும் காட்டுகிற‌து. ஹ‌ரீஸ் எம் பியின் த‌ந்தையும் த‌ன‌ய‌னும் அஷ்ர‌புக்கு உத‌வின‌ர் என்ப‌தை ம‌றுப்ப‌த‌ற்கில்லை. ஆனாலும் அது மு. கா வேறு மாகாண‌ங்க‌ளில் வென்று த‌லைவ‌ருக்கு ம‌வுசு வ‌ந்த‌த‌ன் பின்ன‌ர்தான்.  ஆனால் த‌லைவ‌ர் க‌ட்சியை ப‌தியு முன்பே இது உருப்ப‌டுமா என்று யாருக்கும் விள‌ங்காத‌ நிலையில் க‌ல்முனையில் முன் வ‌ந்த‌ ப‌ல‌ ஆர‌ம்ப‌கால‌ தியாகிக‌ளின் பெய‌ர்க‌ளை காண‌வில்லை. நிசார் லோய‌ர், வை எல் எஸ், மு. காவுக்காக‌ ப‌த்திரிகைக‌ளில் துணிச்ச‌லாக‌ எழுதிய‌ க‌ல்முனை முபாற‌க், ஜ‌வாத் போன்றோரின் பெய‌ர்க‌ளை காண‌வில்லை.

அத்துட‌ன் இன்னும் சில‌ ப‌டிப்பினைக‌ளை காண‌லாம். ஹ‌ரீசின் ஆக்க‌த்தில் சொல்ல‌ப்ப‌ட்டுள்ளோரில் ப‌ல‌ர் இப்பொது முஸ்லிம் காங்கிர‌சில் இல்லை. இது ஏன்? யாரின் த‌வ‌று.? அஷ்ர‌ப் கால‌த்திலேயே சில‌ர் வில‌கின‌ர்? ஏன்? அஷ்ர‌ப் பாதை த‌வ‌றி விட்டார் என்ப‌தாலா? அத‌ன் பின் ஹ‌க்கீம் வ‌ந்த‌ பின் ஹ‌ரீஸ் கூட‌ மு. காவை விட்டு வில‌கினார். ஏன்? அதே ஹ‌க்கீமை மீண்டும் த‌லைவ‌ராக‌ ஏற்றுக்கொண்ட‌து ஏன்?  இத‌ற்கான‌ ப‌தில்க‌ள் ச‌மூக‌த்துக்கு தேவை.

க‌ட்சி தொழில்க‌ளையோ அபிவிருத்தியையோ பெற்றுத்த‌ராது, உரிமைக‌ளை பெற்றுத்த‌ருவோம் என்ற‌ த‌லைவ‌ரின் வாக்கு என்ன‌வாயிற்று? இன்று வ‌ரை அக்க‌ட்சி பெற்றுத்த‌ந்த‌ உரிமைக‌ள் என்ன‌?
உண்மையில் அர‌ச‌ சார்பு க‌ட்சிக‌ளை அபிவிருத்திக்கு என் விட்டு விட்டு மு. கா உரிமைக‌ளுக்காக‌ செய‌ற்ப‌டும் க‌ட்சியாக‌ ம‌ட்டுமே செய‌ற்ப‌ட்டிருக்க‌லாம். ஆனால் ஒரு க‌ட்சியும் இருக்காம‌ல் த‌ம் க‌ட்சி ம‌ட்டுமே இருக்க‌ வேண்டும் என‌ நினைத்த‌த‌ன் கார‌ண‌மாக‌ உரிமைக‌ளை அக்க‌ட்சியால் பெற‌ முடியாம‌ல் போய் விட்ட‌து.

ம‌க்க‌ள் வாக்குக‌ள் மூல‌மே கிழ‌க்கை சேர்ந்த‌ ஒருவ‌ரால் நாட்டில் த‌லைமைத்துவ‌த்தை பெற‌ முடிந்த‌து என்ப‌து த‌லைவ‌ரின் சாத‌னை. இப்போது அத்த‌லைமை கிழ‌க்குக்கு வெளியில் போன‌தால் கிழ‌க்குக்கு ம‌ட்டும‌ல்ல‌ முழு இல‌ங்கைக்கும் சாப‌க்கேடாகி விட்ட‌து என்ப‌தை ஏன் ஹ‌ரீஸ் போன்றோரால் சொல்ல‌ முடிய‌வில்லை. மு. காவின் கிழ‌கு த‌லைமைத்துவ‌ம் என்ப‌து கூட‌ கிழ‌க்கு முஸ்லிம்க‌ளின‌தும் ஏனைய‌ முஸ்லிம்க‌ளின‌தும் உரிமைதான். கார‌ண‌ம் கிழ‌க்கு த‌லைமையே ச‌ரியான‌, த‌குதியான‌ த‌குதி என்ப‌தை வெளிமாகாண‌ முஸ்லிம்க‌ளும் புரிந்துள்ள‌ன‌ர்.

க‌ட்சியின் வ‌ள‌ர்ச்சிக்காக‌ பாடுப‌ட்ட‌ க‌ல்முனை சேகு இப்ராகீம் மௌல‌வி, டொக்ட‌ர் ஜ‌மீல் போன்றோர் க‌டைசி கால‌த்தில் க‌ட்சியில் திருப்தியின்றி ஓர‌மாகிய‌து ஏன்?
உண்மையில் ச‌ம்மாந்துறை புகாரி மௌல‌வி தேசிய‌ ப‌ட்டிய‌ல் எம் பி ஆக‌ வேண்டிய‌வ‌ர். அவ‌ரை ஹ‌க்கீம் ஓர‌ம் க‌ட்டிய‌து ஏன்.?
20 வ‌ருட‌மாக‌ த‌லைவ‌ராக‌ இருக்கும் ஹ‌க்கீமை ஏன் இன்ன‌மும் நீக்க‌ கிழ‌க்கு போராளிக‌ளால் இன்ன‌மும் முடிய‌வில்லை?
க‌ட்சிக்காக‌ உயிரை கொடுத்து பாடுப‌ட்ட‌ க‌ல்முனையிலேயே க‌ட்சியின் த‌லைமைய‌க‌த்தை நிறுவ‌ முடியாம‌ல் போன‌து ஏன்?

இவ்வாறான‌ கேள்விக‌ளுக்கு ப‌தில் உண்டு. அவ‌ற்றை சொன்னால் ப‌ல‌ரும் ஏற்க‌ மாட்டார்க‌ள்.
Kalmunai Mubarak

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar