மாற்றுச் சிந்தனையோடு செயற்படுங்கள் தமிழ் ஊடகங்களிடம் பிரதமர் வேண்டுகோள் - அரசுக்கும் தமிழ் மக்களுக்குமிடையில் இடைவெளியை ஏற்படுத்த வேண்டாம்

தமிழ் மக்களும் அரசாங்கமும் ஒன்றிணைந்து எதிர்கால அரசியல் மற்றும் அபிவிருத்தி வேலைத் திட்டங்களை முன்னெடுக்க தமிழ் ஊடகங்கள் உதவி செய்ய முன்வர வேண்டுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பகிரங்கமாக கோரிக்கை விடுத்தார்.

தமிழ் மக்களுக்கும் அரசுக்குமிடையே இடைவெளியை ஏற்படுத்தாது இரு தரப்பும் அரசியல் தீர்வு மற்றும் அபிவிருத்தி வேலைத் திட்டங்களில் ஒற்றுமையுடனும் புரிந்துணர்வுடனும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி சமமாக இணைந்து செயற்படுவதற்கு இனிவரும் காலங்களிலாவது பணியாற்ற தமிழ் ஊடகங்கள் முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

கடந்த 30 வருட காலமாக இவ்விரு தரப்பினருக்குமிடையே இருந்து வருகின்ற இடைவெளியை இல்லாமல் செய்து எதிர்கால நலன் கருதி நல்லதொரு மாற்றுச் சிந்தனையை உருவாக்க தமிழ் ஊடகங்கள் தம்மை இன்றிலிருந்தே தயார்ப்படுத்தி பணியாற்ற முன்வர வேண்டும் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமிழ் ஊடகங்களின் பிரதானிகளிடம் கோரிக்கை விடுத்தார்.

நேற்று காலை அலரி மாளிகையில் தமிழ் ஊடகங்களின் பிரதானிகளை சந்தித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வடக்கு, கிழக்கு மக்களையும் அரசாங்கத்தையும் மோதவிடும் செயற்பாடுகளில் தமிழ் ஊடகங்கள் இனியும் ஈடுபடக்கூடாது. 
இதனையே நான் யுத்தம் முடிவடைந்த காலத்திலிருந்து தமிழ் ஊடகங்களிடம் வினயமாக கேட்டு வருகின்றேன். ஆனால் அது நிறுத்தப்பட்டதாக தெரியவில்லை. எனவே இனிவரும் காலத்திலாவது தமிழ் ஊடகங்கள் இதனை நல்ல முறையில் செய்யும் என நான் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றேன்.

ஆகவே தமிழ் மக்களும் அரசாங்கமும் ஒன்றிணைந்து எதிர்கால அரசியல் மற்றும் அபிவிருத்தி வேலைத் திட்டங்களை முன்னெடுக்க தமிழ் ஊடகங்கள் உதவி செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியாவே எம் முன்னாலுள்ள சிறந்த மார்க்கம் என்று நேற்று கூட தமிழ் ஊடகங்களில் கருத்துக்கள் வெளியிடப்பட்டதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. 

ஆனால் எமக்கான அரசியல் தீர்வு எம்மிடமே இருக்கின்றது. இலங்கை அரசாங்கத்தின் ஊடாக நல்லதொரு தீர்வை தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுக்க இன்றைய எமது அரசாங்கம் முனைப்புடன் பணியாற்றி வருகின்றது.
எனவே தமிழ் ஊடகங்கள் இத்தகு நல்ல கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அரசாங்கத்திற்கும் தமிழ் மக்களுக்குமிடையே நல்லுறவை ஏற்படுத்தி ஒரு உறவுப்பாலமாக இருந்து வரவேண்டும்.

அரசாங்கத்தின் தவறுகளை நிச்சயமாக சுட்டிக்காட்டி விமர்சனம் செய்கின்ற அதேவேளை அரசாங்கம் செய்கின்ற நல்ல வேலைத் திட்டங்களுக்கும் உறுதுணையாக இருந்து தமிழ் மக்களுக்கு அந்த செய்தி சென்றடைய தமிழ் ஊடகங்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும்.

கடந்த காலங்களை மறந்து இரு தரப்பிற்குமிடையே பிரிவினையை அல்லது இடைவெளியை ஏற்படுத்தாது தமிழ் பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்பட தமிழ் ஊடகங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். அதேபோன்று அரசியல் தீர்வு ஒன்றை காண வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாக இருந்து வருகின்றது.

அது குறித்த நல்ல பல கருத்துக்கள் கலந்துரையாடல்கள் மூலமாக பரிமாறப்படுகின்றன. அவை குறித்த நல்ல விடயங்களை தமிழ் மக்களுக்கு தமிழ் ஊடகங்கள் எடுத்துரைக்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.
கடந்த தேர்தலில் வடக்கு, கிழக்கில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மக்களே தமது வாக்குகளை எமது ஜனாதிபதி வேட்பாளருக்கு அளித்திருந்த போதிலும் வடக்கு, கிழக்கில் எமது அபிவிருத்தி எவ்விதத்திலும் குறைவடைய நாம் செய்த தில்லை.

வடக்குக்கு ஒரு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக டக்ளஸ் தேவானந்தாவை நியமித்து அபிவிருத்தி வேலைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றோம். 

யார் வாக்களித்தாலும் வாக்களிக்காது விட்டாலும் முழு நாட்டு மக்களுக்கும் இந்த அரசாங்கத்தின் சேவை குறைவில்லாது தொடரும். ஒரு சந்தர்ப்பத்திலும் வடக்கு, கிழக்கு மக்களை நாம் கைவிடமாட்டோம். அதில் எவரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்றையதினம் தெரிவித்தார்.

தமிழ் மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே இடைவெளியை ஏற்படுத்தாது இரு தரப்பும் அரசியல் தீர்வு மற்றும் அபிவிருத்தி வேலைத் திட்டங்களில் ஒற்றுமையுடனும், புரிந்துணர்வுடனும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி சமாந்தரமாக இணைந்து செயற்படுவதற்கு இனிவரும் காலங்களிலாவது பணியாற்ற தமிழ் ஊடகங்கள் முன்வர வேண்டும்.
அந்த வகையில் கடந்த 30 வருட காலமாக இந்த இரு தரப்பினருக்கும் இடையே இருந்து வருகின்ற இடைவெளியை இல்லாமல் செய்து எதிர்கால நலன் கருதிய நல்லதொரு மாற்றுச் சிந்தனையை உருவாக்க தமிழ் ஊடகங்கள் தம்மை இன்றிலிருந்தே தயார்படுத்தி பணியாற்ற முன்வர வேண்டும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமிழ் ஊடகங்களின் பிரதானிகளிடம் பகிரங்கமாக கோரிக்கை விடுத்தார்.

இச்சந்திப்பில் பிரதமருடன் அமைச்சர்களான பந்துல குணவர்தன, டக்லஸ் தேவானந்தா, ஆறுமுகம் தொண்டமான், சி. பி ரத்னாயக்க, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே கெஹெலிய ரம்புக்வெல ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து மிக நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் இதற்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை என்பது உண்மையே. இதற்கு பிரதான காரணமாக கைதிகளில் பலர் பாரிய குற்றங்களைப் புரிந்தவர்களாக காணப்படுவதாக கூறப்படுகிறது.

எனவே இது தொடர்பாக நீதி அமைச்சிடம் முழுமையான விரிவான அறிக்கை ஒன்றை கோரியுள்ளோம். அந்த அறிக்கை கிடைக்கப் பெற்றதும் இது குறித்து தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
நேற்று அலரி மாளிகையில் நடைபெற்ற ஊடக பிரதானிகள் உடனான சந்திப்பின் போது எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நீதி அமைச்சினால் வழங்கப்படுகின்ற அறிக்கையின் பிரகாரம் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து ஆராயப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள சிலர் மீது பாரதூரமான மனிதப் படுகொலை உட்பட்ட குற்றங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இருந்தாலும் நாங்கள் அதனை ஆராய்வோம்.

அத்துடன் மிக நீண்டகாலமாக விசாரணைகள் எதுவும் நடைபெறாது தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளின் விசாரணைகளை துரிதப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்