BREAKING NEWS

வியூகம்தான் தேர்தல் ஒன்றில் வெற்றிக்கான அடிப்படையாகும் - பசீர் சேகு தாவூத்


பொதுஜன பெரமுனவின்  ஜனாதிபதித் தேர்லுக்கான மூலோபாயத்தின் மையப்புள்ளி சிங்கள பவுத்த பெரும்பான்மை வாக்குகளையும், சிங்கள சிறுபான்மை கிறிஸ்தவ வாக்குகளையும் மிகப் பெரும்பான்மையாக பெற்றுக்கொள்வது என்ற அடிப்படையிலேயே அமைந்திருந்தது.இதற்கேற்றவகையில் கட்சி நிறுவுனரும்,வியூக வகுப்பாளருமான பசில் ராஜபக்ச நீண்ட காலத்துக்கு முன்பிருந்தே மேற்சொன்ன இரண்டு சமூகங்களின் சாதாரண மக்கள் மத்தியில் தீவிர பிரச்சாரத்தை முடுக்கிவிட்டிருந்தார்.

ஜனாதிபதி கோட்டபாய அவரது "கணக்கின் அடிப்படையில்" ஓய்வூதியம் பெறும் இராணுவ பெருந்தகைகள், அரசாங்க நிர்வாக அலுவலர்களாக இருந்தோர் மற்றும் பெருவணிகர்களை இணைத்து அவர்களை அமைப்பாக்கம் செய்து நிறுவனமயப்படுத்துவதனூடாக ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சார வேலைத்திட்டத்தை நீண்ட காலத்துக்கு முன்னரே ஆரம்பித்திருந்தார்.எலிய, வியத்மக ஆகிய அமைப்புகள் மேற்சொன்ன வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக அமைக்கப்பட்டனவாகும்.

மஹிந்த ராஜபக்ச, மக்களுக்கு தனது முகத்தைக்காட்டியும்,சாமானியருடன் கைளைக் குலுக்கியும் பொதுமக்கள் தொடர்பாடலை பேணி வந்தார். தான் முன்னர் செய்த அபிவிருத்தி மற்றும் யுத்த வெற்றி ஆகியவற்றையும் மஹிந்த லாவகமாக சந்தைப்படுத்தினார்.

தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் காலம் தாழ்த்தியே வடகிழக்கு தமிழ் மக்களிடமும் முஸ்லிம் மக்களிடமும் பெரமுன பிரச்சாரத்தை தொடங்கியது.வடகிழக்கில் உரிமை பற்றி வெற்று வாய்ச் சவடால் விடும் அரசியல்வாதிகளின் கூச்சல் தமது சிங்களப் பெரும்பான்மை வாக்குகளை அள்ளும் வியூகத்துக்கு பாதகமாக அமைந்துவிடக் கூடாது என்பதில் பசில் கவனமாக இருந்தார். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ்,தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய தமிழ் முஸ்லிம் கட்சிகளின் சஜித் சார்பான "சவடால்" மேடைப் பேச்சுகள் தெற்கில் பெரமுனவின் வாக்குகளை அதிகரிக்க உதவும் என்றும் பெரமுன வியூகிகள் நம்பினர். இவ்விடத்தில் ஒன்றைச் சொல்லவேண்டும், அதாவது; தமிழ் தேசியக் கூட்டமைப்பு காலம் தாழ்த்தி சஜித்துக்கான ஆதரவை வெளியிட்டமை பெரமுனவின் வியூகத்தை ஒத்ததாகும். இவர்களுக்கு இந்த ஆலோசனையை பக்கத்து வீட்டாரே வழங்கியிருப்பர் என்ற சந்தேகம் எவருக்காவது எழுமாயின் அது நியாயமானதேயாகும்.

சிங்களப் பெரும்பான்மை மக்களில் மிகப் பெரும்பான்மையினர் கோட்டாவுக்கு வாக்களிப்பது என்ற தீர்மானத்தை எடுத்தபின்னர் தேர்தலுக்கு பத்து நாட்களே இருக்கையில்தான் பெரமுன வடகிழக்கில் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியது.பசில் ராஜபக்ச இறுதி வாரத்திலேதான் கிழக்கில் சூறாவளிச் சுற்றுப் பயணம் செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இப்பிரதேசங்களில் கிடைக்கும் தமிழ் பேசுவோரின் வாக்குகள் அனைத்தும் "இலாபத்தில் கிடைக்கும் மேலதிகமே" என்று அவர்கள் கணக்கிட்டிருந்தனர். இக்காலத்தில் தங்களுக்கு ஆதரவான தமிழ் பேசும் அரசியல்வாதிகளின் வாய்ச்சவடால்கள் சிங்கள வாக்குகளை இறுதிக் கட்டத்தில் பாதிக்காது என்பது பசில் போன்றோரின் நம்பிக்கையாக இருந்தது. "சிங்களவர்கள் தீர்மானம் எடுத்துவிட்டால் மாறமாட்டார்கள்" என்பது அவர்களது இரத்தத்தில் எழுதப்பட்ட விதி என்பதை அவர்கள் சரியாகவே கணக்கிட்டிருந்தனர். இந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் ஐக்கிய சமாதான கூட்டமைப்புடன் தேர்தலுக்கு 15 நாட்கள் இருக்கையில் பெரமுன ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது.நான் பசில் ராஜபக்சவுடனும் கோட்டபாயவுடனும் பேசிய தருணங்களிலெல்லாம் வடகிழக்கில் நேரகாலத்தோடு பிரச்சாரத்தை தொடங்கினால் 30 வீத வாக்குகளைப் பெறலாம் என்று கூறினேன். இந்த எனது கூற்றுக்கு அவர்கள் இருவரும் "ஒண நே அபிட தியன்ன சந்த அதி" தேவையில்லை,நமக்கு இருக்கும் வாக்குகள்  போதுமானது என்று கூறினார்கள்.

ஆனால், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஜனாதிபதித் தேர்தலில் பெரமுன உபயோகித்த வியூகத்தை பிரதியீடு செய்ய முடியாது. நாடாளுமன்றத் தேர்தல் ஒரு கட்சி ஒரு வேட்பாளரை போட்டிக்கு நிறுத்தி வெல்வதற்கு முயலும் நாடுதழுவிய தேர்தலல்ல. மாறாக ஒரு கட்சி நூற்றுக்கணக்கானோரை வேட்பாளர்களாக நிறுத்தி போட்டியிட்டு பெரும்பான்மையான உறுப்பினர்களை பெறுவதற்காக போட்டியிடும் மாவட்டம் மற்றும் தொகுதி வாரியானது என்பதனால் வியூகத்தை அக்கட்சி மாற்றியாகவேண்டும்.

பெரமுன முஸ்லிம் கட்சித் தலைவர்களையும்,அவர்களின் எதேச்சாதிகார தலைமையில் இயங்கும் கட்சிகளையும் புறம் தள்ளலாம். ஆனால்; முஸ்லிம் மக்களை புறந்தள்ள முடியாது. தேர்தலின் போதும், தேர்தலின் பின்னும் முஸ்லிம்களும், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பெரமுனவுக்கு அவசியப்படும் எதார்த்தத்தை அவர்கள் புரித்துகொள்ள முடியாதவர்களல்ல.

வடகிழக்குக்கு வெளியில் 80 இற்கு மேற்பட்ட தொகுதிகளில் உள்ள முஸ்லிம்களின் சிறு அளவிலான வாக்குகள்; தொகுதியில் எந்தக் கட்சி வெற்றி பெறும் என்று தீர்மானிக்கும் வல்லமையுடன் திகழ்கின்றன. ஆனால், முஸ்லிம்கள் ஒரு தரப்புடன் மட்டும் பேசுவதும்,ஒரே பக்கம் கிடந்து உழல்வதும் அரசியல் சமூக கலாச்சார மோதல்கள் தீவிரமடைந்திருக்கும் சமகால சூழலுக்கு உகந்ததல்ல.பாதுகாப்பானதுமல்ல. கலாச்சார மற்றும் மத முரண்கள் என்று வந்துவிட்டால், இஸ்லாம் மற்றைய அனைத்து கலாச்சார மற்றும் மதங்களின் உலகு தழுவிய பொது எதிரியாக காட்டப்பட்டுள்ளமையை கருத்தில் கொண்டு இலங்கை முஸ்லிம்கள் அரசியல் முடிவு எடுப்பது காலத்தின் கட்டாயமாகும்.

மக்கள் சக்தியே மகத்தானதாகும்.இந்த மகோன்னத சக்தியை முஸ்லிம் தலைவர்கள் தமது மட்டற்ற சக்தியாக காட்டி தனித்துவம் என்ற பெயரில் தனிப்பட்ட ரீதியாக இலாபமடைவதை தொடர்ந்து அனுமதிக்கும் மடமையை இனிமேலும் மக்கள் செய்தால் முஸ்லிம்களின் எதிர்காலம் சூனியமாகிவிடும்.

புதிய ஜனாதிபதியும் மக்கள் சக்தியை மதித்தே ஆகவேண்டும். இச்சக்தி அவரிடம் மட்டுமல்ல ஆயிரக்கணக்கான தலைவர்களிடம் பங்கிடப்பட்டு கிடக்கிறது.இப்பங்கீடு நாடாளுமன்ற தேர்தலில்தான் சரியாகப் புலப்படும்.

மேலும், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் 19 ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்வதற்காக ஜனாதிபதி விரும்பினாலும் பிரதமர் மஹிந்த உட்பட புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் விரும்பமாட்டார்கள். ஏனெனில் நாடாளுமன்ற அதிகாரம் பறிபோவது உறுப்பினர்களை வெற்று டப்பாக்களாக்கிவிடும் என்பதை அவர்கள் அறிவர்.

ஆயினும்; 19 ஆவது அரசமைப்பு திருத்தம் மூலம் ஜனாதிபதி பல நிறைவேற்று அதிகார நலன்களை இழந்திருந்தாலும், இன்றைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்கள் முன்னாள் இராணுவ அதிகாரி என்ற வகையில் அவரது "ஆணைகளின் விளைபயன்களும் இயலுமையும்" முன்னைய ஜனாதிபதியின் ஆணைகளை விடவும் கூடிய ஆதிக்கம் செலுத்தக்கூடியதாக இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. இவ்விளைபயனும்,இயலுமையும் எவ்வளவு காலத்துக்கு செல்லுபடியாகும் என்பதை காலமே தீர்மானிக்கும். இனி, தான் அரசியல்வாதிதான் என்பதை இவர் விரைவில் உணர்வார். இதனை உணராமல் முன்னாள் பல்கலைக்கழக பேராசிரியர்களையும்,நிர்வாகிகளையும், இராணுவ உயரதிகாரிகளையும் தனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அரசியல்வாதிகளைவிடவும் உயரத்தில் தூக்கி வைப்பாராக இருந்தால் அரசியல்வாதிகளை ஜனாதிபதி இழந்துவிடும் நிலமை தோன்றக் கூடும். இந்நிலை அவரது உறுதியான இருப்புக்கு பேராபத்தானதாகும்.

இலங்கை அரசியலில் தோன்றியிருக்கும் இந்த புதிய வகை மாதிரியை முஸ்லிம்கள் உன்னிப்பாக அவதானித்து தமது எதிர்கால சமூக அரசியலைச் செய்தல் வேண்டும். பூஞ்சணம் கட்டிப் போய் கிடந்து தோல்வியில் முனகும் பழைய அரசியல் போக்குகளை தூக்கி வீசிவிட்டு, புதிய வியூகத்தை உருவாக்கி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்.
Basheer Segu Davood

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar