கிழக்கு மாகாணத்தின் ஆறாவதும், முதலாவது பெண் ஆளுநருமான அனுராதா ஜஹம்பத் அம்பாறை மாவட்டத்திற்கான முதலாவது விஜயமொன்றை நேற்றுமுன்தினம் (14) மேற்கொண்டார்.
இவ்விஜயத்தின் போது மாவட்ட செயலத்திற்கு சென்ற அவர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் தலைமையிலான அரச அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடினார்.
இச்சந்திப்பில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் எம்.ஏ.எம்.றியாஸ் உள்ளிட்ட பிரதேச செயலாளர்களும் மாவட்ட செயலக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இதன்போது மாவட்டத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன், பல்வேறு பிரதேசங்களுக்கும் சென்று பார்வையிட்டார்.
விசேடமாக மாவட்டத்தின் அனர்த்த நிலை, காட்டு யானைகளுக்கும் மக்களுக்கும் இடையிலான மோதல்கள், விவசாயிகளின் தேவைப்பாடுகள், மாவட்ட செயலகம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள், பெண் தலைமைத்துவம் தாங்கும் குடும்பங்களுக்கான உதவிகளை பெற்றுக்கொடுத்தல், எதிர்காலத்தில் மாவட்டத்தில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் தெரிவித்தார்.
மேலும் மாவட்டத்தில் இன, மத பேதமின்றி சகல மக்களுக்கும் சமத்துவமான சேவை வழங்கப்படும் என அவர் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார். இதேநேரம் அம்பாறை மாவட்டத்திலுள்ள தீகவாபி உள்ளிட்ட பல புனித பிரதேசங்களுக்கும் அவர் சென்று பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment