கால்வாயைத் திறந்துவிடுமாறு கோரி காத்தான்குடியில் ஆர்ப்பாட்டம்

சட்ட விரோதமாக குளம் அமைத்து வெள்ளநீர் வடிந்தோடுவதை தடுத்துள்ளமையை கண்டித்து காத்தான்குடியில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இடம்பெற்றுள்ளது.

மண்முனைப் பற்று பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஆரையம்பதி கிழக்கு பகுதியில் குளம் அமைத்து காத்தான்குடி வெள்ள நீர் வடிந்தோடுவதை தடுத்துள்ளமையை கண்டித்தும் வெள்ள நீரை வடிந்தோடச் செய்ய குளத்தை அகற்றி தோனாக்கால்வாயை திறந்து விடுமாறு வலியுறுத்தியும் இன்று (06.12.2019) வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையின் பின்னர் காத்தான்குடியில் ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது.

ஜும்ஆத் தொழுகைக்குப் பின்னர் ஒன்று திரண்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்ட பேரணியாக காத்தான்குடி பிரதேச செயலகம் வரை சென்றனர். இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பேரணியின் இறுதியில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கான மகஜர் ஒன்றை காத்தான்குடி பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் திருமதி ஜாயிதா ஜலால்தீனிடம் காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் கையளித்தார்.

சீரற்ற கால நிலையினால் 5000க்கு மேற்பட்ட குடும்பங்கள் காத்தான்குடியில் பாதிக்கப்பட்டு உறவினர்கள் நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர். வெள்ள அனர்த்தத்தினால் காத்தான்குடி புதிய காத்தான்குடி பிரதேசங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதேபோன்று ஆரையம்பதி பிரதேசமும் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மண்முனைப் பற்று பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஆரையம்பதி கிழக்கு பகுதியில் தனியாருக்குச் சொந்தமான காணியில் குளம் அமைத்து காத்தான்குடி வெள்ள நீர் வடிந்தோடுவதை தடுத்துள்ளனர் இதனை திறந்து விடுவதன் மூலம் காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி பிரதேசங்களின் வெள்ள நீர் வடிந்தோடும். இதனை நாங்கள் வலியுறுத்துவதுடன் மேற்படி குளத்தை அகற்றி அந்த தோணா வாய்க்காலினூடாக வெள்ள நீரை வடிந்தோடச் செய்ய வேண்டும் என காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் இந்த ஆர்ப்பாட்ட பேரணியின் போது கருத்து தெரிவித்தார்.
இந்த தோணாவாய்க்காலினூடாகவே தொடர்ந்து பாரம்பரியமாக வெள்ள நீர் வடிந்தோடுவது வழக்கமாகும். தனியாருக்குச் சொந்தமான நிலத்தை தோண்டி குளமாக்கியுள்ளதால் காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி பகுதியில் உள்ள மக்கள் பெரும் ஆபத்தை எதிர்நோக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர், காத்தான்குடி பிரதேச செயலாளர், பாதுகாப்பு பிரிவினர் போன்ற அதிகாரிகளுக்கு அறிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவும் காத்தான்குடி நகரசபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.

இதனை வெளிப்படுத்தும் வகையிலேயே இந்த ஆர்ப்பாட்ட பேரணியை நடாத்த வேண்டி ஏற்பட்டதாகவும் தவிசாளர் அஸ்பர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டோர் குளத்தை அகற்றி வெள்ள நீரை வடிந்தோடச் செய்து பொதுமக்களை பாதுகாக்குமாறு கோசங்களை எழுப்பி சுலோகங்களையும் தாங்கியிருந்தனர்.

மேற்படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் இயற்கையாக ஓடும் வழியை மறித்து ஊரை வெள்ளக் காடாக்காதே, நீதி வேண்டும் நீதி வேண்டும் ஏழைகளுக்கு நீதி வேண்டும், வழி விடு வழி விடு மழை நீர் வழிந்தோட வழி விடு, காலாதி காலமாக நீர் வழிந்தோடும் இயற்கைத் தோணாவை மூடாதே, விவசாயம் வேளாண்மை இல்லாத இடத்தில் குளம் எதற்கு, சட்ட விரோத குளம் கட்டி எங்கள் வீடுகளை மூழ்கடிக்காதே போன்ற பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதியில் பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்ததோடு ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற நேரத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும், இராணுவத்தினரும் காத்தான்குடி பிரதேசத்தில் காணப்பட்டனர்.

Comments

popular posts

மைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.

சாய்ந்த‌ம‌ருதுக்கான‌ ச‌பையை பெறும் மிக‌ இல‌குவான‌ ச‌ந்த‌ர்ப்ப‌ம் இருந்தும் இப்போது ஒப்பாரி வைப்ப‌தில் ப‌ல‌னில்லை.

சஜித் தலைமையிலான அரசியல் கூட்டணி அமைக்கும் முயற்சி ஒத்திவைப்பு !