ஒரு வார காலம் சகல விதமான கூட்டங்களும் தடை - பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் கடமையில்

எட்டாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் பிரசாரங்கள் யாவும் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்துள்ள நிலையில் இன்றிலிருந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஒரு வார காலம் வரை சகல விதமான கூட்டங்களும் தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்தது.

இந்த அமைதி காலப்பகுதியில் ஊர்வலம் செல்வது, பிரசாரம் செய்வது, கூட்டம் நடத்துவது, வீடு வீடாக சென்று பிரசாரம் செய்வது, அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளதோடு இதனை மீறுவோர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். 

எனவே சட்டத்திற்கு உட்பட்டு நடக்குமாறு சகல கட்சிகள் மற்றும் வேட்பாளர்களை கோருவதுடன் சகல சட்டமீறல்களையும் பொலிஸார் வீடியோ பதிவு செய்ய இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

பொலிஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடக மாநாட்டில் மேலும் கூறியதாவது, ஜனாதிபதியை தெரிவு செய்வது தொடர்பான சட்டத்தின் பிரகாரம் அமைதி காலத்தில் கூட்டங்கள் நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. மக்களுக்கு சுயமாக சிந்தித்து வாக்களிக்கவும் அமைதியை பேணவும் இந்த அமைதி காலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை மீறுவோருக்கு சிறைத் தண்டனை விதிக்க முடியும்.

அரசியல் கட்சிகளுக்கு 4 வகையான அலுவலகங்களை வைத்திருக்க அனுமதி உள்ளது. ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்தில் ஒரு பிரதான அலுவலகத்தை வைத்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு அவ்வாறான அலுவலகங்கனை நவம்பர் 17 நள்ளிரவு வரையே வைத்திருக்கலாம்.

ஒவ்வொரு வாக்குச் சாவடியையும் அடிப்படையாக கொண்டு அமைக்கப்படும் அலுவலகங்களை இன்று (14) நள்ளிரவு வரை மாத்திரமே பயன்படுத்த முடியும். 160 தேர்தல் தொகுதிகளுக்கும் தலா ஒன்று வீதம் பேணக்கூடிய அலுவலகங்களை நவம்பர் 17 வரை திறந்திருக்க முடியும்.

வேட்பாளர்களின் வீடுகளிலும் அவரால் அதிகாரமளிக்கப்பட்டவர்களின் வீடுகளிலும் என 22 தேர்தல் மாவட்டங்களிலும் அலுவலகங்கள் ஆரம்பிக்க சட்டத்தில் அனுமதி உள்ளது. இவற்றை எதிர்வரும் 15 முதல் 17 ஆம் திகதி நள்ளிரவு வரையே வைத்திருக்க முடியும்.

தேர்தல் தினத்தில் இந்த அலுவலகங்களை பயன்படுத்தி பிரசாரம் செய்ய முடியாது. வாக்குச் சாவடிக்கு ஒன்றாக அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலகங்கள், வாக்குச்சாவடியில் இருந்து 500மீட்டருக்குள் இருந்தால் அவற்றில் இருக்கும் பதாதைகளை அகற்றவோ மறைக்கவோ வேண்டும்.

சுமார் 60 ஆயிரத்துக்கும் அதிகமான பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் நாடு முழுவதும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் பாரிய வன்முறைகள் எதுவும் இடம்பெறவில்லை. 

தேர்தல் செயற்பாடுகள் யாவும் இதுவரை சுமுகமாக முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. விசேட தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக 9 பிரதிப் பொலிஸ் மா அதிபர்களை கடமையில் ஈடுபடுத்த பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. 

இவர்கள் கிளிநொச்சி, மன்னார், முல்லைதீவு, மட்டக்களப்பு, மாத்தறை, பொலன்னறுவை, கேகாலை, மாத்தளை, மொணராகலை ஆகிய மாவட்டங்களில் சேவையில் ஈடுபடுத்தப்படுவர்.

- பாரூக் ஷிஹாம்

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்