முஸ்லிம் மக்களுக்கு சகல சேவைகளையும் நானே செய்துள்ளேன். ஆனால் வாக்குகள் மட்டும் ஹக்கீமுக்கும் ஹலீமுக்கும் சென்றுள்ளன. இது ஏன் என்று எனக்கு விளங்கவில்லை. - மகிந்தானந்த அளுத்கமகே

முஸ்லிம்களுக்கு முஸ்லிம் அமைச்சர்ளைவிட சிங்கள அமைச்சர்களே அதிகளவு சேவை புரிந்துள்ளதாக தெரிவித்த முன்னாள் அமைச்சரும் கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான மகிந்தானந்த அளுத்கமகே பொதுஜன பெரமுன வேட்பாளர் கோத்தபாய ராஜபக் ஷவுக்கு 25 சதவீத முஸ்லிம்கள் வாக்களித்தாலே போதுமானது. அவர் வெற்றிபெற்றுவிடுவார் என்றும் குறிப்பிட்டார்.

கம்பளையில் இடம்பெற்ற பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

கண்டி மாவட்டத்திலுள்ள 13   தேர்தல் தொகுதிகளையும் சேர்ந்த ஸ்ரீ.ல.சு. க மற்றும்  பொதுஜன பெரமுன என்பவற்றினது அமைப்பாளர்கள்,  உள்ளூராட்சி சபை தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களினது ஒன்றுகூடல் வைபவம் ஒன்று கம்பளை நகர சபை பிரதித் தலைவர் எம்.எல்.எம் புர்கான் தலைமையில் நடைபெற்றது.

இதில் வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, முன்னாள் அமைச்சர்களான   எஸ்.பி. திசாநாயக்க,  மஹிந்தானந்த அளுத்கமகே, பாராளுமன்ற அங்கத்தவர்களான ஆனந்த அளுத்கமகே, அனுராதா ஜயரத்ன உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

சிங்களவர்களிடம் இனவாதம் இல்லை. முஸ்லிம்களிடமே இனவாதம் உள்ளது. அமைச்சர் ஹலீம், அமைச்சர் கபீர் ஹாசிம் போன்றவர்கள் வெற்றி பெறுவது சிங்கள வாக்குகளினால் ஆகும். கண்டி மாவட்டத்தில் பைசர் முஸ்தபாவை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்று மஹிந்த ராஜபக் ஷ 2010இல் என்னிடம் கூறினார்.  அதன்படி அவருக்கு 15000ற்கும் மேற்பட்ட விருப்பு வாக்குகளைப் பெற்றுக்கொள்ள  நான் உதவிசெய்தேன். எனது வாக்காளர்கள் எனக்கு வாக்களித்து விட்டு அதில் ஒரு விருப்பு வாக்கை பைசர் முஸ்தபாவிற்கு வழங்கினர். அதனால் அவர் வெற்றிபெற முடிந்தது. 

நாவலப்பிட்டி தொகுதியை எடுத்துக்கொண்டால் முஸ்லிம் மக்களுக்கு சகல சேவைகளையும்  நானே செய்துள்ளேன். ஆனால் வாக்குகள் மட்டும் ஹக்கீமுக்கும் ஹலீமுக்கும் சென்றுள்ளன. இது ஏன் என்று  எனக்கு விளங்கவில்லை. 2010ஆம் ஆண்டு முஸ்லிம்களில் 60 சதவீதத்தினர் மஹிந்த ராஜபக் ஷவிற்கு வாக்களித்தனர். 2015இல் 10 சதவீதமே மஹிந்த ராஜபக் ஷவிற்கு வாக்களித்தனர். அதன் பின் வந்த பாராளுமன்றத் தேர்தலிலும் அதேவீதம் 10 சதவீதம்கூட முஸ்லிம்களிடமிருந்து எமக்கு கிடைக்கவில்லை.

உயர் கல்வி அமைச்சராக உள்ள ரவூப் ஹக்கீமால் கண்டியில் ஒரு பாடசாலைகூட அமைக்க முடியவில்லை. இன்று முஸ்லிம்களின் வியாபாரம் வீழ்ந்துள்ளது. ஆனால் வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் பல கோடிகளை திருடியுள்ளார். நாடு முழுவதும் பொதுபலசேனா கூட்டம் நடத்தியது. நாவலப்பிட்டியில் நடத்த நான் அனுமதிக்கவில்லை. மஹிந்த ராஜபக் ஷ அரபு நாடுகளின் நண்பர். அரபு நாடுகளின் உதவி மூலம் நிறைய உதவி செய்துள்ளார். பேருவளை சம்பவத்தை வைத்து எமக்குத் திட்டுகின்றனர். ஐதே.க. ஆட்சிக்கு வந்தால் அது செய்வோம். இது செய்வோம் என்றனர். நான்கரை வருடம் சென்றும் என்ன செய்தார்கள்.

மஹிந்த ராஜபக் ஷ யுத்தம் நடக்கும்போது பிரித்தானியர் இட்ட கட்டளையை  ஏற்கவில்லை. நான் சுதந்திரமான இறைமைகொண்ட நாட்டின் தலைவன். யாருக்கும் அடி பணியமாட்டேன் என்றார். அன்றே மேற்குலகு அவருக்கு எதிரான திட்டத்தை உருவாக்கியது. பேருவளை சம்பவம் சில ஐ.தே.க. அமைச்சர்களுடன் தொடர்புபட்டது.   எனவேதான் ஐ.தே.க.  வழக்காடவில்லை. நாம் அடிதடிப்பட்டாலும் சண்டை பிடித்தாலும் எமக்கு என்று ஒரு நாடு இருக்க வேண்டும். எனவே முதலில் அதனை உறுதிசெய்ய வேண்டும் என்றார்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்