அடுத்தகட்ட நகர்வு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேசி அதில் எடுக்கப்படும் தீர்மானத்தை மக்களுக்கு அறிவிப்பேன்- இரா சம்பந்தன்

புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச பதவியேற்றுள்ள நிலையில், தமிழர் நலன் சார்ந்த எமது செயற்பாடுகளின் அடுத்தகட்ட நகர்வு தொடர்பில் அறிவிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இது தொடர்பில் பேசுவேன். அந்தப் பேச்சில் எடுக்கப்படும் தீர்மானத்தை மக்களுக்கு நான் அறிவிப்பேன்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இலங்கையின் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச பதவியேற்றுள்ளார். எனவே, தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும்? என்று அதன் தலைவர் இரா.சம்பந்தனிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது “வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் அனைவரும் ஓரணியில் நிற்கின்றார்கள் என்பதையும், அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்கின்றார்கள் என்பதையும் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் பெறுபேறுகள் வெளியுலகுக்கு எடுத்துக்காட்டியுள்ளன.

எமது கோரிக்கையின் பிரகாரம் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் சஜித் பிரேமதாஸவை ஆதரித்தார்கள். அதனால்தான் அவர் தமிழர் தாயகத்தில் பெருமளவு வாக்குகளைப் பெற்றார். எமது கோரிக்கைக்கு மதிப்பளித்துச் செயற்பட்ட தமிழ் மக்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

வடக்கு, கிழக்கின் நிலைமை இவ்வாறாக இருந்தவேளை தெற்கின் நிலைமை எவரும் எதிர்பாராத விதமாக அமைந்துள்ளது. அங்குள்ள 60 வீதமான பெரும்பான்மை இன மக்கள் கோட்டாபய ராஜபக்சவையே ஆதரித்துள்ளார்கள். அதனால்தான் அவர் இந்தத் தேர்தலில் வெற்றியடைந்துள்ளார்; சாதனை படைத்துள்ளார். அவருக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இந்த நாட்டில் தேசிய இனப்பிரச்சினைக்கு இன்னமும் அரசியல் தீர்வு கிடைக்காதபடியால் தமிழ் மக்களின் மனநிலையும், பெரும்பான்மை இன மக்களின் மனநிலையும் வேறுபட்டதாக உள்ளன. இதை இந்தத் தேர்தல் முடிவுகள் எடுத்தியம்பியுள்ளன.

எவர் ஆட்சியமைத்தாலும் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவேண்டும் என்பதே எமது பிரதான கோரிக்கையாகவும், தமிழர் நலன் சார்ந்த எமது செயற்பாடுகளின் பிரதான இலக்காகவும் இருக்கின்றது. இது புதிய ஜனாதிபதி கோட்டாபயவுக்கும் தெரிந்த விடயம். ஆனால், அந்தத் தீர்வை எந்த வழியில் நாம் பெற வேண்டும் என்பதே இப்போதுள்ள கேள்வி.

இந்தநிலையில், அரசியல் தீர்வு உள்ளிட்ட தமிழர் நலன் சார்ந்த எமது செயற்பாடுகளின் அடுத்தகட்ட நகர்வு தொடர்பில் அறிவிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இது தொடர்பில் பேசுவேன். அந்தப் பேச்சில் எடுக்கப்படும் தீர்மானத்தை மக்களுக்கு நான் அறிவிப்பேன்” – என்றார்.

நன்றி
Newsview

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்