சஜித் பிரேமதாச வெற்றி பெற்றாலும் அல்லது கோட்டாபய ராஜபக்ஷ வென்றாலும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இல்லாமல் அடுத்த கட்டத்திற்கு நகர முடியாது. -தவம்

முஸ்லிம் காங்கிரஸ் இல்லாமல் அமைக்கப்படுகின்ற ஆட்சி ஒரு நாளுமே எல்லா சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்திய ஒரு அரசாங்கமாக அமையாது என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் தெரிவித்தார். 

சஜித் பிரேமதாசவை ஆதரித்து அக்கரைப்பற்றில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில், முஸ்லிம் காங்கிரஸ் இல்லாத ஆட்சி முழுமை பெறாது என்பதனையும் ஈஸ்டர் குண்டு வெடிப்புக்கு பிறகு எமது கட்சியினுடைய உறுப்பினர்களும் அதனுடைய தலைமையும் இராஜினாம செய்த போது பிரதமரே ஆடிப்போனார். 

சுதந்திரத்திற்கு பிறகு முஸ்லிம்கள் இல்லாத இலங்கையினுடைய ஒரு அமைச்சரவையாக மாறியிருந்தது. இது இலங்கைக்கு வெளிநாடுகளில் மிகப்பெரும் அவப்பெயராக அமைந்துவிடும் என்று பிரதமர் மாத்திரமல்லாமல் பௌத்த பீடங்கள் எல்லாமே ஆடிப்போனது. 

அமைச்சுப் பதவிகளை மீண்டும் எடுக்க வேண்டும் என்றார்கள். இதுதான் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ். இவை முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாத ஒரு ஆட்சியாக உலக நாடுகளால் பார்க்கப்படும். 

56 முஸ்லிம் நாடுகளைக் கொண்ட இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பினால் பார்க்கப்படும். இலங்கைக்கு இலவசமாக நிதி உதவி செய்கின்ற நாடுகள் அரபு நாடுகள் மாத்திரம்தான். ஏனைய நாடுகள் கடன் மாத்திரம்தான் வழங்குகின்றது. 

இந்த நிலையில் சஜித் பிரேமதாச வெற்றி பெற்றாலும் அல்லது கோட்டாபய ராஜபக்ஷ வென்றாலும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இல்லாமல் அடுத்த கட்டத்திற்கு நகர முடியாது.

நாம் ஐக்கிய தேசியக் கட்சியில் இருக்கின்ற காரணத்தினால் அதன் ஆட்சி தொடரும் என்கின்ற காரணத்தினால் அவர்கள் அரசாங்கத்தை தக்கவைக்க பெரும்பான்மை பெறுவதற்கு நாங்கள் வேண்டும். 

கோட்டா வென்றாலும் 113 ஆசனங்களை தங்களோடு எடுப்பதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியினதும், சிறிலங்கா பொதுஜன பெரமுனவிலும் இருக்கின்ற ஒட்டுமொத்த பாராளுமன்ற உறுப்பினர்களையும் சேர்த்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இல்லாமல் ஒரு ஆட்சியை நிறுவ முடியாது. 

யார் வென்றாலும் யார் தோற்றாலும் அரசியல் என்று பார்க்கின்றபோது முஸ்லிம் காங்கிரசிற்கு எந்தப் பிரச்சினையும் வராது. நாங்கள் கோட்டாபயவை எதிர்த்து நிற்கவேண்டிய தேவை என்ன? அப்படி எதிர்த்து நிற்க வேண்டிய தேவை ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது. 

முஸ்லிம் கருவில் பிறகு பிறக்கப் போகின்ற பிள்ளைகளில் தொடங்கி இன்று வீட்டிற்குள்ளே முடங்கி வயது முதிர்ந்த நமது தாய்மார்கள், பெரியவர்கள், இளைஞர்கள், பெண்கள் எல்லோரையும் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி பயங்கரவாதிகளாக பார்க்க வைத்திருக்கிறார்களே அந்த அதர்மத்திற்கு எதிராகவே எதிர்த்து நிற்கிறோம்.

முஸ்லிம்கள் பல இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள். இனவாதம் பேசாத இந்த அரசாங்கத்தில் இந்த நி​லைமை என்றால் நமது அக்கரைப்பற்று மக்கள் கோட்டாவிற்கு போடுகின்ற வாக்குகளால் ஆட்சிபீடம் ஏறினால் நமது நிலமை எப்படி இருக்கும் என்பதனை யோசித்துப் பாருங்கள்.

அளுத்கம, பேருவளை, திகன, அம்பாறை திட்டமிட்டு தாக்கப்பட்டது என்றால் மஹிந்த ஆட்சியிலும் அவ்வாறே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இரண்டையும் திட்டமிட்டது ஒரே ஆளாகத்தான் இருக்கும் என ஊகிக்க முடிகிறது என்றார். 

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்