இனவாதிகள் சுதந்திரமாக நடமாடக்கூடிய நிலைமை நல்லாட்சிலே காணப்பட்டது - எம்.எஸ் சுபைர்

மஹிந்த ராஜபக்ஷ குடும்பம் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி பிரச்சாரங்களை மேற்கொண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசினால் அவர்களின் எந்தவொரு குற்றச்சாட்டுக்களையும் நிருபிக்க முடியவில்லை என கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளருமான எம்.எஸ்.சுபையிர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து, வாழைச்சேனையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், கடந்த 2015ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ அரசை தோற்கடிப்பதற்காக மஹிந்த குடும்பம் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி, அவர்களை கைது செய்து சிறையில் அடைப்போம் எனக்கூறி, ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் இறுதியில் அவர்களின் எந்தவொரு குற்றச்சாட்டுக்களையும் நிருபிக்க முடியவில்லை. அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நிருபிக்கப்படாமையினால் அவர்கள் நிரபராதிகள் என்பதனை நல்லாட்சியின் செயற்பாடுகள் ஊடாக உணர முடிகிறது.

குறிப்பாக, கடந்த ஆட்சியில் நிதி மோசடி, கொலை, கொள்ளை, இனவாதம் என பல்வேறு குற்றச்சாட்டுக்கள் மஹிந்த குடும்பம் மீது சுமத்தப்பட்டது. அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மலைபோல் நம்பி நாட்டு மக்கள் நல்லாட்சிக்கு வாக்களித்தனர். சிறுபான்மை மக்களே நல்லாட்சினை ஏற்படுத்துவதற்கு பெரும் பங்களிப்புக்களைச் செய்தனர். ஆனால் இறுதியில் ஒன்றுமே இடம்பெற்றதாகத் தெரியவில்லை. மஹிந்த குடும்பத்தின் குற்றச்சாட்டுக்களை நிருபித்து, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு கையாளாகாதவர்கள் மீண்டும் அதே குற்றச்சாட்டுக்களை சுமத்தி இந்தத் தேர்தலிலும் வெற்றி பெறலாம் என நினைக்கின்றனர்.

நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை கிடப்பில் போட்டு, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காது, மாற்றமாக செயற்பட்டவர்கள் மீண்டும் மஹிந்த குடும்பம் மீது போலிக்குற்றச்சாட்டுக்களை சுமத்தி மக்களை ஏமாற்ற முனைவது வேடிக்கையாகவுள்ளது. எனவே இவர்கள் குறித்து மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். எந்தக் குற்றச்சாட்டுக்களை சுமத்திக்கொண்டு ஆட்சியைக் கைப்பற்றினார்களோ, அவர்களது நல்லாட்சியிலேதான் அதிகமான இனவாத செயற்பாடுகள் இடம்பெற்றன.

குறிப்பாக இனவாதிகள் சுதந்திரமாக நடமாடக்கூடிய நிலைமைகள் நல்லாட்சிலே காணப்பட்டது. கடந்த ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக மறைந்திருந்து செயற்பட்ட இனவாதிகள் நல்லாட்சியில் வெளிப்படையாக களத்தில் இறங்கி அட்டகாசங்கள் புரிந்தனர். இவ்வாறான கொடூரமான சம்பவங்கள் நல்லாட்சியிலே அரங்கேற்றப்பட்டது. இவைகளை நாம் ஒருபோம் மறந்துவிட முடியாது. எனவே இவர்கள் இந்தத் தேர்தலில் வெற்றிபெறுதென்பது பகல் கனவாகும்.

நாட்டு மக்கள் மீதும் நாட்டினுடைய பொருளாதாரம் மீதும் அக்கரையற்ற நல்லாட்சியிலேதான் பெரும் கொள்கைளும், ஊழல்களும் இடம்பெற்றது. இந்த நாட்டில் பெரும் ஊழலாக கருதப்படும் மத்திய வங்கி கொள்ளைச் சம்பவமானது நாட்டு மக்களின் மனங்களில் ஆழப்பதிந்துள்ளது. அதே போன்றுதான் போதைவஸ்து வியாபார ஸ்தலமாக இந்த நாடு மாறியிருக்கிறது. இவ்வாறான அனைத்து குற்றச்சாட்டுக்களுக்கும் நல்லாட்சியைக் கொண்டுவந்த ஐக்கிய தேசிய கட்சியே பொறுப்பாகும்.

குறிப்பாக நல்லாட்சியில் இனவாதிகளினால் சிதைக்கப்பட்ட முஸ்லிம்களுடைய பொருளாதாரம் மீளக்கட்டியெழுப்பப்படவில்லை. உடைக்கப்பட்ட அம்பாரை பள்ளிவாசல் இன்னும் புனரமைக்கப்படவில்லை. சிறுபான்மை மக்களுடைய நலன் விடயத்தில் ஐக்கிய தேசிய கட்சியும், நல்லாட்சி அரசும் ஆர்வம் காட்டவில்லை. இனவாதிகளை திருப்திப்படுத்துவதிலே அந்த அரசு குறியாய் இருந்து செயற்பட்டது.

இனவாதகளினால் உடைக்கப்பட்ட அம்பாரை பள்ளிவாசல் மற்றும் அதன் சுற்றுமதியில் ஆகியவற்றை தேர்தலுக்கு முன்னர் முடிந்தால் புனரமைத்துக் காட்டுங்கள் என சஜீத் பிரேமதாசவிடம் சவால் விடுகின்றேன். குறிப்பாக முஸ்லிம்கள் மீது இந்த நாட்டில் இனவாத செயற்பாடுகள் உச்சம் அடைந்திருந்த போது வாய் திறந்து ஒரு வார்த்தையேனும் பேசாத சஜீத் பிரேமதாச இன்று முஸ்லிம்களுக்காக அனுதாபம் பேசுவது தேர்தல் நாடகமாகும். எனவே அவர் குறித்து மக்கள் மிகத்தெளிவாக இருக்க வேண்டும்.

கடந்த 30 வருட கால யுத்தத்தினை முடிவுக்கு கொண்டுவந்து நாட்டில் பாரிய அபிவிருத்திப் பணிகளை செய்து, நாட்டினுடைய பொருளாதாரத்தினைக் கட்டியெழுப்பி, நாட்டு மக்கள் சந்தோசமாகவும், நிம்மதியாகவும் வாழ்வதற்குரிய அச்சமற்ற சூழலை ஏற்படுத்திய மஹிந்தவுக்கு நன்றி செலுத்தும் வகையில் முஸ்லிம்கள் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களித்து அவரின் வெற்றியின் பங்காளர்காக மாற வேண்டும் என்றார்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்