‘விக்கி லீக்ஸ்’ நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் சிறையிலேயே இறக்கக்கூடும் : 60 மருத்துவர்கள் கடிதம்

லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ‘விக்கி லீக்ஸ்’ நிறுவனர் அசாஞ்சேவுக்கு தீவிர சிகிச்சை தேவை என்று 60 இக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இணைந்து இங்கிலாந்து உள்துறை செயலர் ப்ரீத்தி படேல் மற்றும் மறைமுக உள்துறை செயலர் டயான் அபோட் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அவருக்கு அவசர மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படாவிட்டால் அவர் சிறையிலேயே இறக்கக்கூடும் என மருத்துவர்கள் திறந்த கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

இங்கிலாந்து உள்துறை செயலர் ப்ரீத்தி படேல் மற்றும் மறைமுக உள்துறை செயலர் டயான் அபோட் ஆகியோருக்கு எழுதப்பட்ட இந்த கடிதத்தை விக்கிலீக்ஸ் திங்கட்கிழமை விநியோகித்துள்ளதாக ஹில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் இராணுவ ரகசியங்கள் தொடர்பான ஆவணங்களை வெளியிட்டு உலகமெங்கும் பிரபலமானவர், ‘விக்கி லீக்ஸ்’ நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே. 

இந்த விவகாரத்தில் ஜூலியன் அசாஞ்சேவை கைது செய்ய அமெரிக்கா தீவிரம் காட்டியது. இதற்கிடையே சுவீடன் நாட்டில் இவருக்கு எதிராக 2 பெண்கள் பாலியல் புகார்களை கூறினார்கள்.

இதனால் நாடு கடத்தும் சூழ்நிலை உருவானதால் கடந்த 2012ம் ஆண்டு அவர், லண்டனில் உள்ள ஈக்குவடார் நாட்டு தூதரகத்தில் தஞ்சம் அடைந்தார். 

7 ஆண்டுகளுக்கு பிறகு அசாஞ்சேவுக்கான அடைக்கலத்தை ஈக்குவடார் அரசு திடீரென வாபஸ் பெற்றதால் கடந்த ஏப்ரல் மாதம் அவர் லண்டன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். 

ஜாமீன் நிபந்தனையை மீறிய குற்றச்சாட்டில் 50 வாரம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, லண்டனின் புறநகரில் உள்ள பெல்மர்ஷ் சிறையில் அசாஞ்சே அடைக்கப்பட்டு உள்ளார். அங்கு அவர் தனிமை சிறையில் வைக்கப்பட்டு உள்ளதால் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து உள்ளது.

இந்த நிலையில் அசாஞ்சேவின் உடல் நிலை தொடர்பாக 60 இக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இணைந்து இங்கிலாந்து உள்துறை செயலர் ப்ரீத்தி படேல் மற்றும் மறைமுக உள்துறை செயலர் டயான் அபோட் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளனர். 

அந்த கடிதத்தில், “அசாஞ்சே, மனச்சோர்வு உள்ளிட்ட உளவியல் பிரச்சினைகளாலும், பல் மற்றும் தோள்பட்டை தொடர்பான நோய்களாலும் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உடனடியாக ஒரு பல்கலைக்கழக மருத்துவமனையில் முழுமையான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவுஸ்திரேலியாவை சேர்ந்த மருத்துவர் லிசா ஜான்சன் கூறுகையில், “சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள அசாஞ்சே மருத்துவ ரீதியாக தகுதியானவரா என்பதை தீர்மானிக்க ஒரு சுதந்திரமாக மருத்துவ மதிப்பீடு தேவை” என கூறினார்.

தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அசாஞ்சே, அவை அனைத்தும் அரசியல் நோக்கம் கொண்டவை என குற்றம் சாட்டியுள்ளார்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்