தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 13 போலி வேட்பாளர்கள் தொடர்பில் முக்கியமான தீர்மானம்

தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று புதன்கிழமை பத்து மணிக்கு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் அவசர சந்திப்புக்கு அழைப்பு விடுத்திருக்கின்றார். 

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 35 வேட்பாளர்களில் 13 வேட்பாளர்கள் தொடர்பில் முக்கியமான தீர்மானமொன்றை எடுப்பது தொடர்பில் இக்கூட்டத்தில் வேட்பாளர்களுடன் கலந்துரையாடவிருப்பதாக அவர் தெரிவித்தார். 

ஜனாதிபதித் தேர்தலில் இந்த 13 வேட்பாளர்களும் பிரதான வேட்பாளர்கள் இருவருக்கு ஆதரவு தேடும் வகையில் செயற்படுவதாக அறிய வந்துள்ள நிலையிலேயே இந்த 13 போலி (டம்மி) வேட்பாளர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக ஆணைக்குழுத் தலைவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதித் தேர்தல் சட்ட விதிகளின்படி ஒரு வேட்பாளர் மற்றொரு வேட்பாளருக்காக பகிரங்கமாகவோ, மறைமுகமாகவோ ஆதரவு தேட முடியாது. அவ்வாறு நடந்துகொள்வது தண்டிக்கப்படக்கூடிய குற்றமாகும். தேர்தல் விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இன்று நடைபெறும் கூட்டத்துக்கு 35 வேட்பாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் கட்சிகள் சார்பில் போட்டியிடும் பிரதான வேட்பாளர் சிலர் தமது பிரதிநிதிகளையே அனுப்பலாம். 

ஆனால், மேலே குறிப்பிடப்பட்ட 13 வேட்பாளர்களும் இன்றைய சந்திப்பில் அவசியம் கலந்துகொள்ள வேண்டுமென கேட்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரம் தெரிவித்தது.

இவர்களில் 7 பேர் ஒரு வேட்பாளருக்கும் ஆறு பேர் மற்ற வேட்பாளருக்குமாக ஆதரவு திரட்டி வருகின்றனர்.

இந்தப் போலி வேட்பாளர்களைக் களமிறக்கியது கூட பிரதான வேட்பாளர்கள் தான் அதற்குக் காரணம். வாக்களிப்பு நிலையங்களில் தமது சார்பில் பிரதிநிதிகளை அதிகரித்துக் கொள்வதற்காகும். 

ஆனால் இதனால் ஏற்படக்கூடிய பின் விளைவுகள் குறித்து பிரதான வேட்பாளர்களும், கட்சிகளும் எண்ணிப்பார்க்கத் தவறியுள்ளதாக ஆணைக்குழுத் தலைவர் விசனம் தெரிவித்தார்.

- எம்.ஏ.எம். நிலாம்

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்