என்னை யாரும் ஆட்டுவிக்க முடியாது ! - சஜித் பிரேமதாச

அரசியலில் நான் ஒரு பொம்மையல்ல. எந்தச் சக்தியாலும் என்னை ஆட்டுவிக்க முடியாது எனத் தெரிவித்திருக்கும் புதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, மக்கள் எதிர்பார்ப்புகளுக்கு மட்டுமே நான் தலை சாய்ப்பேன் எனவும் குறிப்பிட்டார்.  

மலையக தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் உட்பட அவர்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்றுக்கொடுக்கும் விடயத்தில் தொழிலாளர் பக்கம் சார்ந்து நின்றே தீர்வுகாண்பேன் எனவும் அவர் வலியுறுத்திக் கூறினார். 

கேகாலை மாவட்டத்தின் தெரணியகல பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையிலேயே சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு பேசினார். இங்குத் தொடர்ந்து உரையாற்றும்போது கூறியதாவது,  

நான் இணைந்திருப்பது நாட்டு மக்களுடனாகும். ஒரு குடும்பத்தைப் போஷிக்க நாம் இணைய முடியாது நாடும், மக்களுமே எனக்கு முக்கியம். இனவாதத்துக்கும், போதை விற்பனைக்கும் நாம் துணைபோக முடியாது. போதைப் பாவனையை முற்றாக ஒழிக்கும் பாரிய பொறுப்பை நான் சுமத்திருக்கின்றேன். இளைய சமுதாயத்தை இந்தப் படுகுழியிலிருந்து மீட்டெடுக்க வேண்டியுள்ளது.  

கல்விக்கு முன்னுரிமை கொடுப்பேன். சகல பாடசாலை மாணவர்களுக்கும் பகலுணவும் இரண்டு சீருடைகளும் பெற்றுக்கொடுக்க திட்டமிட்டுள்ளேன். அன்று கிழிந்த சீருடையுடன் பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளைக் கண்ட எனது தந்தை பாடசாலை மாணவர்கள் 43 இலட்சம் பேருக்கும் இலவச சீருடையையும், மதிய போசனத்தையும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தார். எதிர்த்தரப்பினர் ஆட்சிக்கு வந்தபோது அந்த மதிய போசனத்தை இல்லாதொழித்தார்கள். அப்படியானவர்கள் தான் பிள்ளைகளை தூக்கிக் கொஞ்சகிறார்கள். போலித்தனமான நாடகங்களை அரங்கேற்றி மக்களின் வாக்குகளைக் கொள்ளையடிக்க முனைகின்றனர். எனது தந்தை ஒரு சீருடையை தான் பெற்றுத்தந்தார். நவம்பர் 16இல் நான் ஜனாதிபதியாக பதவியேற்றதும் இரண்டு சீருடைகளையும் இலவச மதிய சாப்பாட்டையும் விரைவாக வழங்க நடவடிக்கை எடுப்பேன்.  

வசதி படைத்தவர்களின் பிள்ளைகளுக்கு ஒருவிதமாகவும் ஏழைப் பிள்ளைகளுக்கு மற்றொரு விதமாகவும் அகப்பையை பாவிக்க முடியாது. சரிசமமாக அனைவருக்கும் இவற்றைப் பெற்றுக்கொடுப்பேன்.  

நான் அரசியல் கைப்பொம்மையாக இருக்கப்போவதில்ல. என்னை யாரும் ஆட்டுவிக்க இடமளியேன். நான் இந்தப் பயணத்தை ஆரம்பித்தது நாட்டு மக்களுக்காகவே. மனித நேயமே எனக்கு முக்கியம். இனம், மதம் மொழி கடந்து எல்லோரும் இலங்கையர் என்ற இலட்சியத்துடன் தான் நான் செயற்படுவேன் எனவும் அவர் தெரிவித்தார். 

எம். ஏ. எம். நிலாம்    

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்