கடந்த தேர்தலில் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியது போன்று இம்முறை வழங்க முடியாது - நிபந்தனையுடன் பேரம் பேசித்தான் ஆதரவு வழங்க வேண்டும் - சிவசக்தி ஆனந்தன்

ஜனாதிபதித் தேர்தலில் நிபந்தனையுடன் பேரம் பேசித்தான் ஆதரவு வழங்க வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஓன்றின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக ஐந்து தமிழ் கட்சிகளும் இணைந்து எடுத்த 13 தீர்மானங்களையும் ஏற்க முடியாது என பிரதான மூன்று வேட்பாளர்களும் தெரிவித்துள்ளார்கள். 

எங்களைப் பொறுத்தவரை வடக்கு, கிழக்கிலும், வடக்கு கிழக்குக்கு வெளியேயும், ஒட்டுமொத்த தமிழ் மக்களுடைய வாக்கு அவர்களுக்கு தேவையாகவிருந்தால் அவர்கள் இந்த கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். 

வெறுமனே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியது போன்று இம்முறை வழங்க முடியாது.

கடந்த 2015 ஆம் ஆண்டு நிபந்தனையற்ற ஆதரவை இரண்டு தேசியக் கட்சிகளும் இணைந்திருந்த தேசிய அரசாங்கத்திற்கு வழங்கியதன் ஊடாக அரசியல் தீர்வு விடயம் மற்றும் ஏனைய விடங்களிலும் இந்த அரசாங்கம் ஒரு நம்பிக்கையையும், நல்லெண்ணத்தையும் காட்டவில்லை.

இந்த அரசாங்கத்தின் காலத்திலும் பௌத்தமயமாக்கல், சிங்கள குடியேற்றம், வடக்கு பகுதிக்கு வெளியே இருந்து கொண்டு வரப்பட்ட சிங்களவர்கள் மற்றும் இஸ்லாமியாத்களை வேலைக்கு அமர்தியமை போன்றன தொடர்ந்துள்ளது. 

குறிப்பாக அண்மையில் திறந்து வைக்கப்பட்ட யாழ்ப்பாண விமான நிலையத்திற்கு 95க்கு மேற்பட்ட சிங்களவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

சஜித் பிரேமதாசவின் கீழ் உள்ள தொல்லியல் திணைக்களம் எங்களுடைய நிலங்களை சுவீகரிக்கிறது. ஆகவே இரண்டு பிரதான கட்சிகளும் தமிழ் மக்களையும், அவர்களது பிரதிநிதிகளையும், நாம் கொடுத்த நிபந்தனையற்ற ஆதரவையும் புறந்தள்ளியிருக்கிறார்கள். ஆகவே இந்த தேர்தலில் நிபந்தனையுடன் பேரம் பேசி தான் எமது ஆதரவை வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

-newsview

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்